பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் பணிகளை செயல்படுத்துவதற்கு அனைத்து அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (CMRS) ஒன்றை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. “மெட்ரோ ரயில்வே (செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு) சட்டம், 2002”-ல் கூறியுள்ளவாறு இந்த அலுவலகம் ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உருவாக்கப்படும்.
தற்போதுள்ள இரண்டு ரயில்வே பாதுகாப்பு ஆணையர்களுக்கு (CRS-கள்) கூடுதலாக இரண்டு வட்டங்களின் பொறுப்புகளை ஒப்படைக்கவும் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. தங்களுக்கு இப்போதுள்ள செயல்பாட்டு வரம்புக்கு உள்பட்டு அவர்கள் தங்கள் அதிகாரத்தைச் செலுத்துவார்கள். இந்த வட்டங்கள் புதுடெல்லி CMRS, -யின் செயல்பாட்டு வரம்பின் கீழ் வராது.
மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பதவி, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தில் HAG-யில் (சம்பள நிலை 15) வரும். வட்டார அலுவலகம் (ஒன்றுக்கு) ஆண்டு சம்பள செலவினம் ரூ. 59,39,040 என மதிப்பிடப்பட்டுள்ளது. அலுவலகத்தை உருவாக்கும் ஆரம்ப செலவுக்கு அப்பாற்பட்டு இது இருக்கும். வட்டார அலுவலகத்துக்கு ஆண்டுக்கான செலவினம் ரூ. 7,50,000 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
பதவிகளை உருவாக்கும்போது, பயணிகள் பாதுகாப்பு மற்றும் தற்போதுள்ள மற்றும் பின்னர் வரக் கூடிய பல்வேறு மெட்ரோ ரயில் திட்டங்களில் மெட்ரோ ரயில் தொடர்பான விஷயங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும். சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் “மெட்ரோ ரயில்வே (செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு) சட்டம், 2002”-ல் கூறியுள்ள அம்சங்களின்படி இது இருக்கும்.
அமலாக்க அணுகுமுறை மற்றும் இலக்குகள் :
மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பதவி, இந்திய ரயில்வே பொறியாளர் சேவைகள் (IRSE, IRSEE, IRSSE, RSME) & IRTS அலுவலர் பட்டியல் தொகுப்பில் இருந்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் மூலம் நிரப்பப்படும். ரயில்வே அமைச்சகத்திடம் இருந்து, விருப்பம் தெரிவிக்கும் அதிகாரிகளை முன்மொழிதல் அடிப்படையில் UPSC-யுடன் ஆலோசித்து, தொடக்கத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் ஆணையாளருக்கான பணியாளர் தேர்வு விதிகளின்படி இது அமையும். பதவிகளை நிரப்புவதற்கான நடைமுறைகள் இரண்டு மாத காலத்துக்குள் தொடங்கப்படும்.
மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு துணை ஆணையர்கள் (Dy.CMRS) மற்றும் ஆதரவு அலுவலர் பதவிகளை உருவாக்குவதற்கான முன்மொழிவு நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையிடம் வைக்கப்படும். அதன் ஒப்புதல் கிடைத்தவுடன், பதவிகளை உருவாக்குவதற்கான உத்தரவுகள் உடனடியாக வெளியிடப்படும்.
பின்னணி :
(மத்திய அரசின்) சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் செயல்படும் ரயில்வே பாதுகாப்பு ஆணையம், ரயில் பயணம் மற்றும் ரயில் சேவை செயல்பாட்டில் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களைக் கையாள்கிறது. ரயில்வே சட்டம் 1989-ன் படி சில சட்டபூர்வ செயல்பாடுகளும் அதற்கு உள்ளது. இந்தச் செயல்பாடுகள் ஆய்வு செய்தல், புலனாய்வு செய்தல், ஆலோசனை கூறுதல் என்ற வகையில் இருக்கும். ரயில்வே சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சில விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆணையம் செயல்படுகிறது. இதற்கான செயல்பாட்டு அறிவுறுத்தல்கள் அவ்வப்போது பிறப்பிக்கப்படுகின்றன. பயணிகள் போக்குவரத்துக்குப் புதிதாக ரயில்வே சேவை தொடங்கப்பட்டாலும், பயணிகள் போக்குவரத்தைக் கையாள்வதற்கு எல்லா வகைகளிலும் அது பாதுகாப்பாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது ஆணையத்தின் மிக முக்கியமான பணியாகும். குறுகிய பாதையை அகலப் பாதையாக மாற்றுதல், இரட்டை வழித்தடங்கள் உருவாக்குதல், தற்போதுள்ள பாதைகளை மின்மயமாக்குதல் போன்ற மற்ற பணிகளுக்கும் இது பொருந்தும். மோசமான ரயில் விபத்துகள் பற்றி இந்த ஆணையம் சட்டபூர்வ விசாரணை நடத்தி, இந்திய ரயில்வேயில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு பரிந்துரைகளை அளிக்கும்.
பயணிகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் மோக்கத்திலும், பாதுகாப்பு சான்றளிப்பில் ஒரேமாதிரி நிலை இருப்பதை உறுதி செய்வதற்கும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் “மெட்ரோ ரயில்வே (செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு) சட்டம், 2002”- உருவாக்கியபோது, மெட்ரோ ரயில்வேயை பொருத்தவரை இதேபோன்ற செயல்பாடுகளை மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையருக்கும் (CMRS) ஒதுக்கியது. நிர்வாக ரீதியில் CMRS, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் ரயில்வே பாதுகாப்பு முதன்மை ஆணையரின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பார்.
****