Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்


புதுதில்லியில் இன்று டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த மையத்திற்கான அடிக்கல்லை அவர் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் இந்த மையம் டாக்டர் அம்பேத்கரின் போதனைகள் மற்றும் தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்துவதில் முக்கியப் பங்கு அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

சமூக பொருளாதார மாற்றத்திற்கான டாக்டர் அம்பேத்கர் மையம் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக திகழ்கிறது எனக் குறிப்பிட்ட பிரதமர், சமூக பொருளாதார விவகாரங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளில் இந்த மையம் முக்கியத்துவம் அளிக்கும் என்றார். இந்த மையம் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் சமூக பொருளாதாரம் தொடர்பான விவகாரங்களில் சிந்தனை அமைப்பாக செயல்படும் என்றார்.

சிந்தனைத் தலைவர்கள் மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள் வெவ்வேறு தருணங்களில் நமது நாட்டின் எதிர்கால பயண திசையை வடிவமைத்துள்ளனர் என்று பிரதமர் கூறினார். தேசத்தை உருவாக்குவதற்கு தனது பங்களிப்பை அளித்த பாபா சாகேப்புக்கு இந்த நாடு கடன் பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். அவரது சிந்தனைகள் மற்றும் தொலைநோக்கு பார்வை குறித்து அதிக அளவிலான மக்கள் குறிப்பாக இளைஞர்கள் படிக்க வேண்டும் என்று அவர் கூறினார். அதற்காகவே டாக்டர் அம்பேத்கருடன் தொடர்புடைய முக்கியமான இடங்கள் வழிபாட்டுத் தலங்களாக உருவாக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த வகையில் அவர் தில்லியில் உள்ள அலிப்பூர், மத்திய பிரதேசத்தில் உள்ள மோ, மும்பையில் உள்ள இந்து மில், நாக்பூரில் உள்ள தீக்‌ஷா பூமி, மற்றும் லண்டனில் உள்ள இல்லம் ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார். பஞ்சதீர்த் எனப்படும் இந்த இடங்கள் இன்றைய தலைமுறை டாக்டர் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்துவதற்கான இடங்கள் என அவர் கூறினார். டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான பீம் செயலி டாக்டர் அம்பேத்கரின் பொருளாதார தொலைநோக்கு பார்வைக்கான மத்திய அரசின் அஞ்சலி.

1946 டிசம்பரில் அரசியல் நிர்ணய சபையில் டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய உரையை குறிப்பிட்ட பிரதமர், தாம் எதிர்கொண்ட போராட்டங்களையும் மீறி டாக்டர் அம்பேத்கர் இந்த நாடு தனது பிரச்சனைகளில் இருந்து வெளிவர ஊக்கம் அளிக்கும் தொலைநோக்கு பார்வையை டாக்டர் அம்பேத்கர் கொண்டிருந்தார் என தெரிவித்தார். டாக்டர் அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வையை நாம் இன்னும் நிறைவேற்றாமல் இருப்பதாக அவர் தெரிவித்தார். சமூக பின்னடைவுகளை போக்குவதற்கான திறன் இன்றைய தலைமுறையினருக்கு உள்ளது என அவர் கூறினார்.

நமது அரசியல் ஜனநாயகம் சமூக ஜனநாயகமாக்க வேண்டும் என்ற அம்பேத்கரின் வார்த்தைகளை அவர் நினைவுகூர்ந்தார். கடந்த மூன்று அல்லது மூன்றரை ஆண்டுகளாக சமூக ஜனநாயகம் என்ற அவரது தொலைநோக்கு பார்வையை நிறைவேற்ற அரசு செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக ஜன் தன் திட்டம், உஜ்வாலா திட்டம், ஸ்வச் பாரத் இயக்கம், காப்பீட்டு திட்டங்கள், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம், மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சவுபாக்கியா திட்டம் போன்ற பல திட்டங்களை அவர் குறிப்பிட்டார். திட்டங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிப்பதற்கான ஒவ்வொரு முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது என்று குறிப்பிட்ட அவர் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையம் இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்றார். மண் ஆரோக்கிய அட்டைகள், மிஷன் இந்திரதனுஷ் விநியோகம் பற்றி விரிவாக குறிப்பிட்ட அவர் கிராமப்புறங்களை மின்மயமாக்கும் திட்டங்களும் விரைவாக நடைமுறைப்படுத்தப்படுவதாகக் கூறினார். சுய வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் பற்றியும் பிரதமர் குறிப்பிட்டார்.

புதிய இந்தியாவுக்கான தனது அழைப்பு, டாக்டர் அம்பேத்கர் கனவு கண்ட, அனைவருக்கும் சம வாய்ப்புகள் மற்றும் உரிமைகள் கொண்ட, சாதியின் பெயரால் ஒடுக்கப்படுவது அற்ற மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியால் முன்னேற்றம் தரும் இந்தியா தான் என்றார். பாபா சாகேப் அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வையை அடைவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், அதனை 2022ம் ஆண்டில் நாம் அடைய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

*****