Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தெற்காசிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்காக தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் காணொலிக் காட்சியின் மூலம் பாரதப் பிரதமர் ஆற்றிய தொடக்க உரை

தெற்காசிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்காக தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் காணொலிக் காட்சியின் மூலம் பாரதப் பிரதமர் ஆற்றிய தொடக்க உரை


 ஆப்கானிஸ்தான் அதிபர் மேதகு அஷ்ரப் கனி அவர்களே,

வங்க தேசத்தின் பிரதமர் மேதகு ஷேக் ஹசீனா அவர்களே,

பூட்டான் பிரதமர் மேதகு ட்ஷெரிங் டோப்காய் அவர்களே,

மாலத் தீவுகளின் அதிபர் மேதகு அப்துல்லா யேமன் அவர்களே,

நேபாளத்தின் பிரதம மந்திரி மேதகு புஷ்ப கமல் தாஹல் அவர்களே,

இலங்கை அதிபர் மேதகு மைத்ரிபால ஸ்ரீசேன அவர்களே,

சகோதரர்களே, சகோதரிகளே,

வணக்கம்.

இன்று தெற்காசிய நாடுகளுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும். முன்னுதாரணம் ஏதும் இல்லா நாளாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியா ஒரு வாக்குறுதியை அளித்திருந்தது. தெற்காசிய நாடுகளில் வாழும் சகோதர சகோதரிகளின் வளம் மற்றும் வளர்ச்சிக்காக மேம்பட்ட விண்வெளித் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவது என்பதுதான் அந்த வாக்குறுதியாகும்.

அது தெற்காசிய நாடுகளின் செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டதன் மூலம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நமது கூட்டிணைவை மேலும் மேம்படுத்தும் பயணத்தைத் தொடங்கியுள்ளோம். விண்ணில் உயர்ந்த இடத்தில் இருக்கும் தெற்காசிய ஒற்றுமையின் சின்னமாகத் திகழும் நிலையின் மூலம் நமது மண்டலத்தில் வாழும் 150 கோடி பேரின் பொருளாதார முன்னேற்றத்துக்கான விருப்பங்களை நிறைவேற்றுவோம்.

மேதகு தலைவர்களே,

இந்த செயற்கைக்கோளைச் செலுத்துவதைக் கொண்டாடுவதில் இணைந்திருக்கும் ஆப்கானிஸ்தான், வங்க தேசம், பூட்டான், நேபாளம், மாலத்தீவுகள் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் சக தலைவர்களுக்கு நான் மிகுந்த நன்றியுடையவனாக இருக்கிறேன்.

உங்களது அரசுகள் வலுவான, மதிப்புள்ள ஆதரவை அளித்ததை நான் மிகவும் வரவேற்கிறேன். இல்லாவிட்டால், இந்தத் திட்டம் வெற்றிகரமாக சாத்தியம் ஆகியிருக்காது. நாம் ஒன்றிணைந்திருப்பது நமது நாடுகளின் மக்களுடைய தேவைகளுக்கே முன்னுரிமை தருவது என்ற நமது அசைக்கமுடியாத தீர்மானத்தின் அடையாளமாக அமைந்துள்ளது.

நமது குடிமக்களின் ஒட்டுமொத்த விருப்பங்கள் எல்லாம் ஒத்துழைப்புக்காக நம்மை இணைக்குமே அல்லாமல் முரண்பாடுகளுக்காக அல்ல. வளர்ச்சிக்காக அன்றி அழிவுக்காக அல்ல. வளர்ச்சிக்காகத்தானே அல்லாமல் வறுமைக்காக அல்ல என்பதைக் காட்டுகிறது.

மேதகு தலைவர்களே,

தெற்காசிய மண்டலத்தில் இது (கூட்டாகச் செயற்கைக்கோளைச் செலுத்துவது) முதன்முறையாகும். இதன் மூலம், ஆப்கானிஸ்தான், வங்க தேசம், பூட்டான், மாலத்தீவுகள், நேபாளம், இலங்கை, இந்தியா நாடுகள் இணைந்து சாதனை படைக்கும். இதன் மூலம் தொலைவில் இருப்போருக்கும் திறமான தகவல் பரிமாற்றம், சிறந்த ஆளுகை, சிறந்த வங்கி செயல்பாடு, சிறந்த கல்வி கிடைக்கும். வானிலை நிலைமைகளைக் கணிக்கவும், வளங்களைத் திறமையாகக் கண்டறியவும் இயலும். மக்களையும் மேலிடத்தில் இருப்போரையும் இணைக்கும். அத்துடன் தொலைநிலை மருத்துவம் மூலம் மருத்துவ சேவைகள் வழங்க இயலும். இயற்கைச் சீற்றம் ஏற்பட நேர்ந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க உதவும். இந்த மண்டலத்தில் விண்வெளித் தொழில்நுட்பம் மக்களின் வாழ்க்கையைத் தொடும். நாடுகளின் பொதுவான சேவைகளுடன், தனிப்பட்ட தேவைகள், முன்னுரிமைகளுக்கான சேவைகளையும் இந்த செயற்கைக்கோள் வழங்கும்.

இந்தக் குறிக்கோளை அடைவதன் மூலம் இந்தியாவின் விண்வெளி அறிவியல் சகோதரர்களை, குறிப்பாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தை (இஸ்ரோ) பாராட்டுகிறேன்.

தெற்காசிய செயற்கைக்கோளைத் தயாரிப்பதில் இஸ்ரோ நிறுவனத்தின் குழு முன்னணியில் இருந்திருக்கிறது.

மேதகு தலைவர்களே,

நமது நாடுகளின் மக்களின் அமைதி, வளர்ச்சி மேம்பாடு, அமைதி ஆகியவற்றைக் காப்பதுதான் நம் முன்னுள்ள முக்கியமான சவால்கள் ஆகும்.  மேலும், நாம் கைகோப்பதன் மூலமும் அறிவார்ந்த விஷயங்கள், தொழில்நுட்பம் ஆகியவற்றின் பலன்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலமும் நமது வளத்தையும் வளர்ச்சியையும் விரைவுபடுத்த இயலும் என்று கருதுகிறேன். இதில் நீங்கள் அனைவரும் பங்கேற்றதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கூட்டான வெற்றிக்காக மீண்டும் பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி, மிகுந்த நன்றி!

 

***