2017-18 முதல் 2019-20 வரையான காலத்திற்கு கேலோ இந்தியா திட்டத்தை ரூ. 1756 கோடி செலவில் மாற்றி அமைப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனை அடுத்து இந்திய விளையாட்டு வரலாற்றில் முக்கிய தருணம் ஏற்பட்டுள்ளது. விளையாட்டை தனிநபர் மேம்பாடு, சமுதாய மேம்பாடு, பொருளாதார மேம்பாடு, தேசிய மேம்பாடு ஆகியவற்றிற்கான முக்கிய கருவியாக விளையாட்டை மாற்றி அமைப்பதை நோக்கமாகக் கொண்டது இந்த திட்டம்.
மாற்றியமைக்கப்பட்ட கேலோ இந்தியா திட்டம், அடிப்படை வசதி, சமூதாய விளையாட்டுகள், திறன் அடையாளம் காணுதல், மீச்சிறப்புக்கான பயிற்சி, போட்டி அமைப்புகள், விளையாட்டுப் பொருளாதாரம் உள்ளிட்ட மொத்த விளையாட்டு சுற்றுச்சூழலில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.
சிறப்பம்சங்கள்:
இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்களில் சில:
• முன் எப்போதும் இல்லாத இந்தியா முழுவதையும் இணைத்த விளையாட்டுக் கல்வி உதவித்தொகை திட்டம். இதன்படி ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட விளையாட்டுகளில் மிகத் திறமை வாய்ந்த 1000 இளம் விளையாட்டு வீரர்கள் கல்வி உதவித் தொகைப் பெறுவார்கள்.
• இந்த திட்டத்தில் தெரிவு செய்யப்படும் விளையாட்டு வீர்ர் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வீதம் 8 ஆண்டுகளுக்கு கல்வி உதவித் தொகை பெறுவார்கள்.
• இயற்கையாகத் திறன் பெற்ற இளைஞர்களுக்கு நீண்ட கால விளையாட்டு மேம்பாட்டுக்கு வழிவகை செய்யப்படுவது, இதுவே முதல் முறையாகும். இளைஞர்கள் போட்டி விளையாட்டுகளில் திறன் பெற்று உலக அளவில் போட்டியிட்டு வெற்றி பெறும் வீரர்கள் குழுவாக உருவாக இது உதவும்.
• இத்திட்டம், நாடெங்கும் விளையாட்டு திறன் மேம்பாட்டுக்கான 20 பல்கலைக்கழக மையங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது இதன் மூலம் விளையாட்டுத் திறன் கொண்ட இளைஞர்கள் இந்த திறனோடு கல்வி நிலையையும் மேம்படுத்தும் இரட்டிப்பு வாய்ப்பு கிடைக்கிறது.
• துடிப்புள்ள ஆரோக்கிய வாழ்க்கை முறை கொண்ட குடிமக்களை உருவாக்குவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
• இத்திட்டம் 10 முதல் 18 வயது வரை உள்ள 20 கோடி குழந்தைகள் சம்பந்தப்பட்ட, பெரிய அளவிலான உடல் தகுதி இயக்கத்தை உருவாக்கும். இதன்படி இந்த குழந்தைகளின் உடல் தகுதி அளவிடப்படுவதுடன் அவர்களது உடல் தகுதி தொடர்பான செயல்களுக்கு ஆதரவும் அளிக்கப்படும்.
தாக்கம்:
• விளையாட்டுகளால் ஏற்படும் பால்இன சமத்துவம், சமூக ரீதியில் அனைவரையும் உள்ளடக்கிய நிலைமை முற்றிலுமாக அங்கீகரிக்கப்படுகிறது. எனவே இந்த நோக்கங்களை அடைவதற்காக சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
• பாதிப்புக்குள்ளான, வாய்ப்புகளற்ற பகுதிகளில் வாழும் இளைஞர்களைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தி கொள்வதும் திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம் உபயோகமற்ற, சேதம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளிலிருந்து இளைஞர்களை திசை மாற்றி முக்கிய நீரோட்டத்தில் சேர்த்து தேச நிர்மாணத்தில் இணைக்கும்.
• பள்ளி, கல்லூரி நிலைகளில் மாணவர்களின் போட்டியிடும் தரங்களை உயர்த்த உதவும் இந்த திட்டம், அமைப்பு சார்ந்த விளையாட்டு போட்டிகளில் அதிக அளவு பங்கேற்கும் வாய்ப்பையும் கொண்டுவரும்.
• விளையாட்டு மேம்பாட்டின் அனைத்து அம்சங்களிலும் நவீன எளிதில் பயன்படுத்தக் கூடிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதும் இத்திட்டதில் அடங்கும். விளையாட்டுப் பயிற்சிகளை பரப்புவதற்கான மொபைல் செயலிகள் பயன்பாடு, திறன்களைக் கண்டுப்பிடிப்பதற்கான தேசிய விளையாட்டுகள் திறன் தேடுதல் வலைதளம், உள்நாட்டு விளையாட்டுக்கான கருத்துப் பரிமாற்ற வலைதளம், விளையாட்டு வசதிகளை கண்டுபிடித்துப் பயன்படுத்துவதற்கான GIS அடிப்படையிலான தகவல் அமைப்பு போன்றவை இத்தொழில்நுட்பங்களில் சில.
• “அனைவருக்கும் விளையாட்டுகள்” மற்றும் “மீச்சிறப்புக்கு விளையாட்டுகள்” ஆகியவற்றை மேம்படுத்துவதும் திட்டத்தின் நோக்கமாகும்.
*****