Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவிடத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்


பிரதமர் திரு. நரேந்திர மோடி, ராமேஸ்வரத்தில் பேக்கரும்பு என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் தேசிய நினைவிடத்தை நாளை (வியாழக்கிழமை) காலை 11.30 மணியளவில் திறந்து வைக்கிறார். டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் சமாதி அமைந்துள்ள இடத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ) வடிவமைத்து கட்டியுள்ள நினைவிடத்தில் பிரதமர் தேசிய கொடி ஏற்றுகிறார்.

நினைவிடத்தின் திறப்பு விழாவிற்குப்பின், டாக்டர் அப்துல் கலாமின் வெண்கலச் சிலையையும் பிரதமர் திறந்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து டாக்டர் கலாமின் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் டாக்டர் கலாமின் குடும்பத்தினரிடையே கலந்துரையாடுகிறார். அதன் பின் கலாமின் நினைவிடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை பிரதமர் பார்வையிடுகிறார்.

அதன் பின் “கலாம் சந்தேஷ் வாஹினி” என்ற பெயரிடப்பட்ட கண்காட்சிப் பேருந்தை பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். டாக்டர் கலாம் தொடர்புடைய காட்சிப் பொருட்கள் அடங்கிய இந்த பேருந்து பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று, டாக்டர் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15ந்தேதி தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையை வந்தடைகிறது.

பிரதமர் திரு. மோடி பின்னர் மண்டபம் பகுதிக்கு வருகை புரிகிறார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டத்திலும், டாக்டர் கலாமின் நினைவைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். நீலப் புரட்சித் திட்டத்தின் கீழ் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் இழுவலைப் படகுகள் வழங்கும் திட்டத்தின் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு கடிதங்களை வழங்குகிறார்.
ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தியா வரையிலான புதிய எக்ஸ்பிரஸ் ரெயிலையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பின்னர்  பசுமை ராமேஸ்வரம் திட்டத்தின் சுருக்கத்தை பிரதமர் வெளியிடுகிறார். அதன் பின் தேசிய நெடுஞ்சாலை 87ல் முகுந்தரையர் சத்திரம் முதல் அரிச்சல்முனை வரையிலான 9.5 கி.மீ. நீளமுள்ள இணைப்புச் சாலையை பிரதமர் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதைக் குறிக்கும் வகையில் கல்வெட்டினை திறந்து வைக்கிறார். அதன் பின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். அத்துடன் அவரது ராமேஸ்வரம் பயணம் நிறைவடைகிறது.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல் அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திருமதி நிர்மலா சீதாராமன், மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எம். வெங்கையா நாயுடு மற்றும் ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஏ. அன்வர் ராஜா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

 

கலாம் நினைவிடம் குறித்த பின்னணித் தகவல்கள்

 

மக்களின் குடியரசுத் தலைவராகப் போற்றப்படும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவிடம் அவரது இறுதி உறைவிடம் அமைந்துள்ள ராமேஸ்வரத்தின் பேக்கரும்பு என்ற இடத்தில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பதற்கு தயாராக இருக்கிறது. பிரதமர் இந்த தேசிய நினைவிடத்தை நாளை (வியாழக்கிழமை) திறந்து வைக்கிறார். இந்த நினைவிடம் அமைக்கப்படுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சரியாக ஒரு வருடம் முன்பாக அதாவது 2016 ஆம் ஆண்டு ஜூலை 27ந்தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஒரு வருடத்திற்குள் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு தேசிய கட்டிடங்களை மாதிரியாகக் கொண்டு இந்த நினைவிடம் வடிவமைக்கப்பட்டது. நினைவிடத்தின் முகப்புத் தோற்றம் புது தில்லியில உள்ள இந்தியா கேட் நினைவுச் சின்னம் போன்று தோற்றம் அளிக்கிறது. இரண்டு குவி மாடங்கள் குடியரசுத் தலைவர் மாளிகையை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

இந்த நினைவிடத்திற்கு நான்கு அரங்குகள் இடம்பெற்றுள்ளன. இவை டாக்டர் கலாமின் வாழ்க்கையை குறிப்பிடும் நான்கு கட்டங்களை நினைவு படுத்துகின்றன. முதல் அரங்கு அவரது குழந்தைப் பருவத்தையும் கல்வி கற்கும் பருவத்தையும் கவனிக்கிறது. இரண்டாவது அரங்கு அவரது குடியரசுத் தலைவர் பதவிக் காலத்தை குறிக்கிறது. இதில் அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை மற்றும் ஐ.நா. சபையில் ஆற்றிய உரை இடம்பெற்று இருக்கிறது. மூன்றாவது அரங்கு இஸ்ரோ மற்றும் டி.ஆர்.டி.ஓ. நாட்களைக் குறிப்பிடுகிறது. நான்காம் அரங்கு அவர் குடியரசுத் தலைவர் பதவி முடிந்தபின் ஷில்லாங்கில் உயிர் நீத்த காலம் வரையிலான காலகட்டத்தை குறிக்கிறது.

டாக்டர் கலாமின் உடைமைகளை காட்சிப்படுத்தும் தனிப்பகுதி இடம்பெற்றுள்ளது. அதில் அவர் பயன்படுத்திய ருத்ரவீணையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளத. அவர் சுகோய்-30 எம்.கே.ஐ. போர்விமானத்தில் பயணித்த போது அணிந்த ஜி-சூட் சிறப்பு உடை மற்றும் அவர் பெற்ற பல்வேறு விருதுகள் இடம்பெற்றுள்ளன. சுவர் ஓவியங்கள் மற்றும் பிற ஓவியங்களுக்காக 12 சுவர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த இடம் முழுவதும் டாக்டர் கலாமின் ஆளுமையை குறிக்கும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை குறிக்கும் வகையில் நிலப்பரப்பு அழகுபடுத்தப்பட்டுள்ளது.

நினைவிடம் முழவதும் 24 மணிநேரமும் கண்காணிப்பு கேமராக்களால் கண்காணிக்கப்படுகிறது. நெடுஞ்சாலையை பார்க்கும் வகையில் நினைவிடம் அமைந்திருந்தாலும் கண்காணிப்பு தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.

கேரளா தவிர பிற இடங்களில் இருந்து கட்டுமானப் பொருட்கள் ராமேஸ்வரத்திற்கு கொண்டுவரப்பட்டன. அழகிய வேலைப்பாடுகளாலான கதவுகள் தஞ்சாவூரில் செய்யப்பட்டன. சுவர்களில் பதிக்கப்பட்டுள்ள கற்கள் ஜெய்சல்மீர் மற்றும் ஆக்ராவில் இருந்து வரவழைக்கப்பட்டன. கல் தூண்கள் பெங்களூருவில் இருந்தும், பளிங்கு கற்கள் கர்நாடகத்தில் இருந்தும் வரவழைக்கப்பட்டன. சுவர் ஓவியங்கள் ஐதராபாத், சாந்திநிகேதன், கொல்கத்தா, ஆந்திர பிரதேசம் மற்றும் சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டன.

வருங்கால தலைமுறையினருக்கும் எழுச்சியூட்டும் வகையில் இந்த நினைவிடம் அமைந்திருக்கும்

*******