ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் இடையே, பிரிக்ஸ் அமைப்பில் உள்ள 5 நாடுகளின் தலைவர்கள் சாதாரண முறையில் சந்தித்துப் பேசினர். சீனாவின் ஜியாமென் நகரில் செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ள 9-வது பிரிக்ஸ் மாநாட்டின் முன்னோட்டமாக இந்தக் கூட்டம் நடைபெற்றது. பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களை வரவேற்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாக சீன அதிபர் ஜி தெரிவித்தார்.
ஜியாமென் நகரில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மற்றும் அதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய விவகாரங்கள் குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
பிரதமர் திரு.நரேந்திர மோடி பேசும்போது, பிரிக்ஸ் அமைப்பு வலுவான குரலில் ஒலித்து வருவதாக குறிப்பிட்டார். தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் சர்வதேசப் பொருளாதாரத்துக்கு தலைமையாக இருப்பதை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார். தீவிரவாதத்துக்கு நிதியளிப்பது, தீவிரவாத அமைப்புகளின் கிளைகள், புகலிடங்கள், தீவிரவாதிகளை ஆதரிப்பவர்கள் மற்றும் ஊக்குவிப்பவர்களுக்கு ஜி20 அமைப்பு, ஒருங்கிணைந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி உள்ளிட்ட இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுவரும் சீர்திருத்தங்களைக் குறிப்பிட்ட பிரதமர், சர்வதேசப் பொருளாதாரத்தை நிலையாக மீட்டெடுப்பதற்கு ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார். தற்காப்பு நடவடிக்கைகள், குறிப்பாக வர்த்தகம் செய்தல், அறிவுப்புலமை மற்றும் தொழில் நிபுணர்கள் நகர்வு ஆகிய விவகாரங்களில் நாடுகள் தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பாரீஸ் உடன்பாட்டை முழுமையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் செயல்படுத்துவதில் இந்தியா உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், வானிலை மாற்றத்தை எதிர்கொள்வதில், இதனை சர்வதேச அளவில் அமல்படுத்த வேண்டியது அவசியம் என்று பிரதமர் விவரித்தார். பிரிக்ஸ் தர மதிப்பீட்டு அமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆப்பிரிக்காவின் வளர்ச்சிக்காக ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். நாடுகளுக்கு இடையே மக்கள் பரிமாற்றங்கள் மிகப்பெரும் அளவில் இருக்க வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார்.
அதிபர் ஜி தலைமையில் பிரிக்ஸ் அமைப்பின் செயல்பாடுகளுக்கு பிரதமர் வரவேற்புத் தெரிவித்தார். மேலும், ஜியாமென் நகரில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாடு சிறப்பாக அமைவதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
பிரதமரின் கருத்தைத் தொடர்ந்து உடனடியாக கூட்டத்தை முடித்துவைத்த அதிபர் ஜி, தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் வலிமையான உறுதிப்பாட்டுக்கு வரவேற்பு தெரிவித்தார். இந்தியாவின் தலைமையின் கீழும், 2016-ம் ஆண்டில் கோவா-வில் நடைபெற்ற மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படியும், பிரிக்ஸ் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதை வரவேற்றார். பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் இந்தியாவின் வெற்றிக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். மேலும், மிகப்பெரிய வெற்றிகளை இந்தியா பெறவும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.