Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாரம்பரிய மருத்துவ முறைகள் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம், பாரம்பரிய மருத்துவ முறைகள் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்தில் இந்தியக் குடியரசு அரசின் ஆயுஷ் (AYUSH) அமைச்சகத்துக்கும், இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு அரசின் சுகாதாரம், சத்துணவு மற்றும் உள்நாட்டு மருத்துவ அமைச்சகத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கையெழுத்திட உத்தேசிக்கப்பட்டுள்ள இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், இரு நாடுகளிலும் பாரம்பரிய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்தில் இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதாக இருக்கும். இரு நாடுகளின் கலாச்சார பாரம்பரியத்தைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இரு நாடுகளுக்கும் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

இதில் கூடுதல் நிதிச் செலவுகள் எதுவும் கிடையாது. ஆராய்ச்சி, பயிற்சி வகுப்புகள், மாநாடுகள் / கூட்டங்கள் நடத்துவதற்குத் தேவையான நிதி ஆதாரங்கள், ஆயுஷ் அமைச்சகத்தில் தற்போதுள்ள திட்டங்கள் மற்றும் தற்போது ஒதுக்கிய நிதியில் இருந்து செலவிடப்படும்.

இரு நாடுகளுக்கும் இடையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானவுடனே இதந் செயல்பாடுகள் தொடங்கிவிடும். கையெழுத்திடப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படும் வரையறைகளின்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான செயல்பாடுகள் இருக்கும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்பாட்டில் உள்ள காலம் வரையில், இது தொடர்ச்சியாக முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கும்.


பின்னணி :

மிகவும் வளர்ச்சியடைந்துள்ள பாரம்பரிய மருத்துவ முறைகளைக் கொண்டதாக இந்தியா உள்ளது. சுகாதாரத் துறையில் உலக அளவில் அபரிமிதமான வாய்ப்புகளைக் கொண்ட மூலிகைகளும் இதில் அடங்கும். பாரம்பரிய மருத்துவத்தில் இலங்கையும் நீண்டநெடிய வரலாறு கொண்டிருக்கிறது. ஆயுர்வேதம், சித்தா, யுனானி, யோகா & இயற்கை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகியவை இலங்கையில் உள்ள முக்கியமான பாரம்பரிய உடல்நலம் பேணும் முறைகளாக உள்ளன. ஆயுர்வேதம், சித்தா மற்றும் யுனானி மருத்துவ முறைகளில் இரு நாடுகளுமே பொதுவான கலாச்சாரத்தைக் கொண்டுள்ளன. சொல்லப்போனால், இரு நாடுகளிலும் பெருமளவிலான மூலிகைகள் உள்ளன. குறிப்பாக, இரு நாடுகளிலும் ஒரே மாதிரியான தட்பவெப்ப நிலை நிலவும் காரணத்தால், வெப்ப மண்டலப் பகுதிகளில் ஏராளமான மூலிகைகள் கிடைக்கின்றன.

இந்தியாவும், இலங்கையும் பல்வேறுபட்ட கலாச்சார, வரலாற்று, மொழி மற்றும் இலக்கிய ஒப்புமைகளைக் கொண்டுள்ளன. இரு நாடுகளின் கலாச்சார மற்றும் நாகரிக பாரம்பரியங்களும், தங்கள் குடிமக்களுடன் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள தொடர்புகளும், இரு நாடுகளிலும் பன்முகத்தன்மை கொண்ட பங்களிப்பு மற்றும் நல்லிணக்கமான இருதரப்பு உறவுகளுக்கு அடித்தளமாக உள்ளன.

இந்திய மருத்துவ முறைகளை உலக அளவில் பரப்புவது என்ற கட்டளையின் ஒரு பகுதியாக, 11 நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ள ஆயுஷ் அமைச்சகம் செயல்திறன்மிக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளது. சீன குடியரசின் பாரம்பரிய சீன மருத்துவ அரசுத் துறை (SATCM); மலேசிய அரசாங்கம்; டிரினிடாட் & டொபாகோ குடியரசு அரசின் சுகாதாரத் துறை; ஹங்கேரி அரசின் மனித வள அமைச்சகம்; வங்கதேச குடியரசு அரசின் சுகாதாரம் & குடும்ப நலத் துறை அமைச்சகம்; நேபாள அரசின் சுகாதாரம் மற்றும் மக்கள் தொகை அமைச்சகம்; மோரிஷஸ் அரசின் சுகாதாரம் மற்றும் தரமான வாழ்கைத் துறை; மங்கோலிய அரசின் சுகாதாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம்; துர்க்மினிஸ்தான் அரசின் சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை அமைச்சகம்; மியான்மர் அரசின் சுகாதாரம் & விளையாட்டு அமைச்சகம் மற்றும் பாரம்பரிய மருத்துவத் துறையில் ஒத்துழைப்பு குறித்து ஜெர்மனி குடியரசின் மத்திய சுகாதார அமைச்சகத்துடன் விருப்பம் தெரிவிக்கும் கூட்டுப் பிரகடனம் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.

*****