கிராமப்புறப் பகுதிகளில் பொருளாதார, சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்தி அப்பகுதிகளை மாற்றுவதற்கான ஷ்யாமா பிரசாத் முகர்ஜி நவீன கிராமங்கள் இயக்கத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ரூ.5142,08 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றில் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் உள்ள கிராமங்களின் தொகுப்பிற்கு அனைத்தும் உள்ளடக்கிய மேம்பாட்டை அளிப்பதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். இதுபோன்ற கிராமங்களில் பொருளாதார செயல்பாடுகள், திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் மற்றும் கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் செயல்திட்டங்கள் உருவாக்கப்படும். நவீன கிராமங்கள் இயக்கத்தின் மூலம் மேம்பாடு அடைந்த கிராமங்களின் தொகுப்பு உருவாகும்.
இந்த ஒருங்கிணைந்த கிராமங்களில் இடங்கள் வரையறுக்கப்படும் மனைகள் திட்டமிடப்பட்டு பிரிக்கப்படும். இவை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மூலம் முறையாக அறிவிக்கப்படும் (மத்திய, மாநில அரசுகளின் நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கான திட்டத்தில் வீடு கட்டும் சட்டத்தின்படி) இந்த திட்டங்கள் மாவட்ட மற்றும் நகர பெருந்திட்டங்களுடன் இறுதியில் ஒன்றிணைக்கப்படும்.
மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் தயாரிக்கும் திட்டத்தின்படி மாநில அரசுகள் இந்த தொகுப்பு கிராமங்களை கண்டறிந்து அவற்றை செயல்படுத்த வேண்டும். அடுத்தடுத்து உள்ள கிராம பஞ்சாயத்துகள் இத்திட்டத்திற்கு தெரிந்தெடுக்கப்படும். இவற்றின் மக்கள்தொகை சமவெளிகள் மற்றும் கடலோரப் பகுதிகள் ஆகியவற்றில் 25000 முதல் 50000 மக்களைக்கொண்டதாக இருக்க வேண்டும். பாலைவனப் பகுதி, மலைப்பகுதி மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் 5000 முதல் 15000 வரையிலான மக்கள்தொகை இருக்க வேண்டும். பழங்குடியினர் வாழும் பகுதி மற்றும் அப்பிரிவினர் இல்லாத மாவட்டங்கள் ஆகியவை தனித்தனியே தெரிவு செய்யப்படும். இதுபோன்ற தொகுப்பு கிராமங்கள் அனைத்தும் நிர்வாக அளவில் கிராம பஞ்சாயத்துகளாக இருக்கும்.
இந்த தொகுப்பு கிராமங்களை தெரிவு செய்வதற்கு மத்திய கிரமப்புற மேம்பாட்டு அமைச்சகம் நடைமுறை ஒன்றை புகுத்தியுள்ளது. மாவட்டம், துணை மாவட்டம் மற்றும் கிராமம் ஆகியவை முறையாக ஆய்வு செய்யப்பட்டு அப்பகுதிகளில் உள்ள மக்கள்தொகை, பொருளாதாரம், சுற்றுலா மற்றும் ஆன்மிக முக்கியத்தும் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றினால் உள்ள தாக்கங்கள் ஆய்வு செய்யப்படும். இதை தொடர்ந்து அமைச்சகம் மாநிலங்களில் உள்ள மாவட்டங்கள் அல்லது துணை மாவட்டங்கள் இதற்கு தகுதியானவை என்பதை மாநிலங்களுக்கு அளிக்கும். மாநில அரசுகள் பின்னர் ஒருங்கிணைந்த தெரிந்தெடுத்து திட்டத்தை செயல்படுத்தும்.
அடுத்த 3 ஆண்டுகளில் நாட்டில் இதுபோன்ற 300 நவீன கிராமப்புறப் பகுதிகள் இந்த இயக்கத்தின் மூலம் உருவாக்கப்படும். இதற்கான நிதி ஒதுக்கீடு, பல்வேறு திட்டங்களின் மூலம் இதுபோன்ற நவீன கிராமங்களுக்கு அளிக்கப்படும். ஷ்யாமா பிரசாத் முகர்ஜி நவீன கிராமங்கள் இயக்கம் மேலும் 30 சதவீதம் நிதியை ஒவ்வொரு ஒருங்கிணைந்த கிராமங்களுக்கு கூடுதலாக அளிக்கும். இது மத்திய அரசின் பங்காக திட்ட இடைவெளி நிதியம் மூலம் அளிக்கப்பட்டு நவீன கிராமப்புறப் பகுதிகள் உருவாகும்.
இங்கு இக்கிராமங்களில் உயர்ந்த அளவு மேம்பாட்டை உறுதி செய்யும் வகையில் பதினான்கு பிரிவுகள் ஆலோசிக்கப்பட்டுள்ளது. பொருளாதார செயல்பாட்டை ஊக்குவிக்க திறன் மேம்பாட்டு பயிற்சி, வேளாண் பதப்படுத்துதல் / வேளாண் சேவைகள் / சேமிப்பு மற்றும் கிடங்கு, டிஜிட்டல் நூலகம், சுகாதாரம், குழாய்கள் மூலம் குடிநீர் வழங்குதல், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை, கிராமம் தெருக்கள் மற்றும் வடிகால்கள் அமைத்தல், தெரு விளக்குகள், மக்களின் உடல் நலத்தை பாதுகாக்க மருத்துவநிலையம், பள்ளி மற்றும் உயர் கல்விக்கான வசதிகளை மேம்படுத்துதல், கிராமங்களுக்கு இடையே சாலை இணைப்பு, மக்களுக்கான சேவை மையங்கள் – இந்த மையங்களில் மின்னணு முறையில் சேவைகளை அளித்தல் / மக்களுக்கான போக்குவரத்து வசதி, எல்.பி.ஜி எரிவாயு இணைப்புகளை அளித்தல் ஆகியவை ஆகும்.
தொகுப்பு கிராமங்களுக்காக செயல்திட்டத்தை மாநில அரசுகள் தயாரிக்கும். இந்த செயல்திட்டத்தின் மூலம் மத்திய அரசு இந்த இயக்கத்தில் கூறப்பட்ட உத்திகள் செயல்படுத்தப்படும். மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் ஆகியவற்றின் திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த நவீன கிராமங்களுக்கு திட்ட இடைவெளி நிதியம் அளிக்கப்படும்.
திட்ட இடைவெளி நிதியத்துடன் இயக்கம் வெற்றிகரமாக செயல்பட மாநில அரசுகளுக்கும் தேவையான அளவு நிதி ஒதுக்கீடு அளிக்கப்படும். இதன் மூலம் திட்ட வளர்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் அமைப்புகளை உருவாக்குதல் ஆகியவை மாநில அளவில் செயல்படுத்தப்படும்.
இந்த இயக்கம் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட தேவையான அமைப்புகள் மாநில மற்றும் மத்திய அளவில் உருவாக்கப்படும். ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் திறன் மேம்பாடு ஆகிய வசதிகளை உருவாக்க இந்த இயக்கத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இத்திட்டத்தின் மூலம் மண்டல அளவில் தொகுப்பு வளர்ச்சி பெற்ற நவீன கிராமங்கள் உருவாகும். இதனால் கிராமப்புறங்கள் மற்றும் நகர்புறங்களில் ஒரே சமயத்தில் பயனடையும். கிராமப்புறங்களை வலுவாக்குதல், மற்றும் நகர்புறங்களில் உள்ள சுமையை குறைத்தல், ஆகிய இரண்டு நோக்கங்கள் இதனால் நிறைவேறும். ஆகவே, நாட்டில் மண்டல அளவிலான வளர்ச்சியும் மேம்பாடும் சரியான அளவு ஏற்படும்.