பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் தேசிய உருக்கு கொள்கைக்கு (2017) ஒப்புதல் அளிக்கப்ப்டடது.
புதிய உருக்கு கொள்கை உருக்காலைகளத் தொழிலுக்கு உத்வேகம் அளிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் நீண்டகாலத் தொலைநோக்குப் பார்வைக்கு உயிரூட்டும் வகையில் புதிய உருக்கு கொள்கை அமைந்துள்ளது. இதன்படி உள்நாட்டு உலோகப் பயன்பாட்டை அதிகரித்து, உயர்தரமான உருக்கு உற்பத்தியை உறுதி செய்யும் வகையில் இது வகை செய்யும். அத்துடன் உருக்குத் தொழில் துறையில் புதிய தொழில்நுட்ப மேம்பாட்டை உருவாக்குவதும் உலகளாவிய போட்டித் திறன் மேம்படுத்தவும் இது வழி செய்யும்.
என்.எஸ்.பி. 2017 (NSP 2017) எனப்படும் தேசிய உருக்கு கொள்கையின் முக்கிய அம்சங்கள்:
1. சிறு, குறு, நடுத்தர உருக்கு உற்பத்தி நிறுவனங்களும் மத்திய அரசு பொதுத் துறை உருக்கு நிறுவனங்களும் உருக்கு உற்பத்தியில், தன்னிறைவை அடைய வழிகாட்டுவது, துணைபுரிவது.
2. திறன்களை மேம்படுத்த போதிய ஊக்கத்தை அளித்தல்
3. உருக்கு உற்பத்தி ஆலைகளின் செயல்திறனை உலகத் தரமான வகையில் மேம்படுத்துவது
4. உற்பத்திச் செலவைத் திறம்படக் கையாளுவது
5. உற்பத்திக்குத் தேவையான இரும்புத் தாது, நிலக்கரி, இயற்கை வாயு ஆகியவை உள்நாட்டிலேயே கிடைக்கும் வகையில் செய்வது,
6. அந்நிய முதலீட்டுக்கு வகை செய்வது,
7. கச்சாப் பொருள்களின் இருப்பு
8. உள்நாட்டு உருக்குத் தேவையை அதிகரிப்பது
இக்கொள்கையின் மூலம் 30 கோடி டன் கச்சா எஃகிலிருந்து 25.5 கோடி டன் உற்பத்தி செய்ய வகை செய்யப்படும். தற்போது தனி நபருக்கான இரும்புப் பயன்பாடு 61 கிலோவாக இருக்கிறது. இதை 2030-31ம் ஆண்டில் தனி நபர் நுகர்வுக்கு 158 கிலோ அளவு என உயர்த்தவும் இந்தக் கொள்கை வழிவகுக்கும். உள்நாட்டில் வாகனத்துக்குத் தேவையான உயர் ரக இரும்பு, மின்சாரத் தேவைக்கான இரும்பு, கலப்பு உலோக இரும்புப் பொருட்கள் ஆகிய தேவைகளை உள்நாட்டு உற்பத்தி மூலமே பூர்த்தி செய்யவும் இக்கொள்கை வழிசெய்யும். தற்போது 85 சதவீதமாக இருக்கும் சுத்தமான நிலக்கரி இறக்குமதியை 2030-31ம் ஆண்டில் 65 சதவீதமாகக் குறைக்க உதவும் வகையில் உள்நாட்டிலேயே போதிய நிலக்கரி இருப்பை அதிகரிக்கும் இக்கொள்கை வழிசெய்யும்.
புதிய எஃகுக் கொள்கையின் சில முக்கிய அம்சங்கள்
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் இரும்பு உருக்குத் தொழில் வேகமாக அதிகரித்துள்ளது. தற்போது உலக அளவில் உருக்கு இரும்பு உற்பத்தியில் நம் நாடு மூன்றாவது மிகப் பெரிய நாடாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீத பங்களிப்பைச் செலுத்திவருகிறது. 2016-17ம் ஆண்டில் மொத்த உற்பத்தி 10 கோடி டன் என்ற அளவை இந்தியா விஞ்சிவிட்டது.
2017ம் ஆண்டுக்கான புதிய உருக்கு கொள்கையின்படி 2030ம் ஆண்டில் இந்தியாவின் உருக்கு இரும்பு தயாரிப்புத் திறனை 30 கோடி டன்னாக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2030-31ம் ஆண்டில் கூடுதலாக ரூ. 10 லட்சம் கோடி முதலீடு கிடைக்கும்.
மிகப் பெரிய அளவுக்கு உருக்கு இரும்பின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் இந்தக் கொள்கை வகை செய்யும். அதன்படி கட்டுமானம், ஆட்டோமொபைல், வீட்டுவசதி ஆகிய துறைகளில் அதிக பயன்பாடு அதிகரிக்கும். தற்போது தனிநபருக்கான இரும்புப் பயன்பாடு 60 கிலோ என்பதை 2030ம் ஆண்டில் 160 கிலோவாக உயர்த்தவும் இது வழிவகுக்கும்.
சிறு, குறு, நடுத்தர தொழில்களின் திறன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில்களில் மின்சக்தி சேமிப்பு நுட்பங்களைக் கையாளவும் இக்கொள்கை வகை செய்யும். இதன்மூலம் ஒட்டுமொத்த உற்பத்தித் திறன் அதிகரிக்கும், எரிசக்திப் பயன்பாட்டைக் குறைக்கும்.
இரும்பு ஆய்வு அபிவிருத்திக்கு வகை செய்வதற்காக, இரும்பு உருக்கு அமைச்கம் இந்திய இரும்பு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப இயக்கம் (SRTMI) அமைக்க இருக்கிறது. எஃகு-இரும்புத் துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து தொழிற்சாலை, அரசு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி ஆய்வகங்கள், கல்வி நிறுவனங்கள் இணைத்து ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் திட்டத்தை முடுக்கிவிடுவதற்கு இது முன்முயற்சியாக அமையும்.
புதிய உருக்கு கொள்கையின் மூலம் இரும்புத் தாது, எரிதிறனுள்ள நிலக்கரி, எரிதிறனற்ற நிலக்கரி இயற்கை வாயு ஆகிய மூலப் பொருட்கள் மலிவான விலைக்குக் கிடைப்பதை அமைச்சகம் உறுதி செய்யும்.
தேசிய புதிய உருக்கு கொள்கையை (2017) வெளியிடுவதன் மூலம் உள்நாட்டு இரும்பு உற்பத்திக்கும் ஊக்கமளிக்கும் சூழலை உருவாக்க ஆலைகள் முடுக்கிவிடப்படும். தொழில் நிறுவனங்கள் மேம்பட்ட தொழில்நுட்ப உதவியுடனும் உலக அளவிலான போட்டித் திறனை உயர்த்தியும் எதிர்காலத்தில் இரும்புப் பயன்பாட்டின் தேவை எந்த அளவு அதிகரிக்கும் என்பது ஊகித்து அதற்கேற்ப உற்பத்தி அமைவது இக்கொள்கையின் மூலம் உறுதி செய்யப்படும். சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுடன் தேவைக்கு ஏற்ப இதற்கான வழிவகையை மத்திய இரும்பு-உருக்கு அமைச்சகம் செய்யும்.
பின்னணி:
நவீன உலகில் இரும்பு முக்கிய பங்கினை வகிக்கிறது. அத்துடன் எந்தத் தொழில் பொருளாதாரத்திற்கும் முதுகெலும்பாக அமைந்திருக்கிறது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் கட்டுமானம், கட்டடவேலைகள், மின்சாரம், விண்வெளித் தொழில், தொழிற்சாலை இயந்திரப் பயன்பாடு முதல் சாதாரண மனிதர்களின் தேவை வரையில் இரும்பின் விரிவான பயன்பாடு நாட்டில் மிக முக்கியத்துவம் பெற்றுவிட்டது. இந்திய உருக்கு இரும்புத் துறை கடந்த சில ஆண்டுகளாக அதிவேகமாக உயர்ந்துள்ளது. உலக அளவில் மூன்றாவது பெரிய இரும்பு உற்பத்தி நாடாக இந்தியா திகழ்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம் பங்கினை இரும்பு உற்பத்தி அளிக்கிறது. 5 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 20 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் இத்தொழில் வேலைவாய்ப்பு அளிக்கிறது.
இதுபோன்ற வலுவான கொள்கையின் ஆதரவுடன் இதுபோல் வளங்களைத் தோண்டிப் பயன்படுத்துவது வளர்ச்சிக்குச் சரியான பாதையை வகுக்கும். தற்போதைய நிலையில் இரும்பு உருக்கின் முக்கியத்துவம் உணரப்பட்ட நிலையில் வலுவான உறுதியான கொள்கை தேவைப்படுகிறது என்பதால் தேசிய உருக்கு கொள்கை (2017) உடனடியாகக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்திய உருக்குத் தொழிலின் திறமையான நீடித்த வளர்ச்சிக்காகத் திட்டம் வகுத்து, அன்றைய பொருளாதார ஒழுங்கமைவின் மூலம் போதிய ஆதாயங்கள் கிடைப்பதற்கும் வழிவகைகள் இதற்கு முந்தைய தேசிய உருக்கு கொள்கை (2005) மூலம் காணப்பட்டாலும்
இந்தியாவிலும் உலகிலும் அண்மையில் இரும்புப் பொருள் சந்தையில் தேவை, விநியோகம் ஆகிய இரண்டிலும் உருவாகிவரும் முன்னேற்றங்களை உள்வாங்கிக் கொள்ள வேண்டியிருப்பதால், புதிய உருக்கு கொள்கை தேவைப்படுவதாயிற்று.
****