பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் குழு இந்திய வர்த்தக பணியில் 1989 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் பணியில் சேர்ந்த அலுவலர்களுக்குத் தனிப்பட்ட முறையில் முதுநிலை நிர்வாக அந்தஸ்திலான (SAG) பணி உயர்வு அளிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, முதுநிலை நிர்வாக அலுவலர் பணியிடங்களில் எப்போதெல்லாம் காலியிடம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இந்த அலுவலர்கள் அப்பணிக்காக அமர்த்தப்படுவர். இது ஒரு முறை மட்டும் தளர்த்தப்பட்டு வழங்கப்படும் பணி உயர்வாகும். இதன்படி, அலுவலர்கள் முதுநிலை நிர்வாக அலுவலர் நிலைக்கு (SAG) உயர்வு பெறுவர். அவர்கள் ஓய்வு பெறும்போது, தற்போது வகித்து வரும் இளநிலை நிர்வாக அலுவலர் நிலையிலான (JAG) பணியிடங்கள் தொடர்ந்து நீடிக்கும். அத்துடன், அனுமதிக்கப்பட்ட முதுநிலை நிர்வாக அலுவலர் நிலை (SAG) பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும்போது இந்த அலுவலர்கள் அப்பணியில் அமர்த்தப்படுவர்.
இந்த ஒப்புதல் மூலம் இந்திய வர்த்தக சேவையின் மூத்த அலுவலர்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம். அத்துடன், வர்த்தகத் துறை மேம்பாடு, வர்த்தகப் பாதுகாப்பு ஆகியவற்றுக்காகப் பல்வேறு நிலைகளில் பணியாற்றியதால் பட்டறிவு பெற்ற அவர்களது திறனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் உதவும். இவ்வாறு வர்த்தக பணி மேம்படும்போது, இந்தியாவின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும். முதுநிலை நிர்வாக அந்தஸ்து பணி உயர்வுக்கு அனுமதி அளிப்பதன் மூலம் இந்த அலுவலர்கள் மத்திய பணியாளர் திட்டத்தின் கீழ் பட்டியலிடுதல் குழுவில் இடம்பெறவும் வகை செய்யும். பல்வேறு துறைகள், அமைச்சங்களில் இத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் மத்திய அரசு அலுவலர்கள் குழுவிலும் இடம்பெற வழியேற்படும்.
இந்தியாவின் சர்வதேச வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுக்கு அமைப்பு ரீதியான மேம்பாடு தேவைப்படுகிறது. அந்த தேவையை மத்திய குழுவின் “ஏ” பிரிவு சேவையாக உருவாக்கப்பட்ட இந்திய வர்த்தக பணிப் பிரிவு (Indian Trade Service) நிரப்பும்.
*****