திரு. இந்தர் குமார் குஜ்ரால்
இந்தியாவின் 12வது பிரதமராக கடந்த 1997ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி இந்தர் குமார் குஜ்ரால் பதவி ஏற்றார். திரு. அவ்தார் நரைன் குஜ்ரால், திருமதி புஷ்பா குஜ்ரால் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் ஐ.கே.குஜ்ரால். இவர், எம்.ஏ., பி.காம்., பி.எச்டி. மற்றும் டி.லிட். (ஹானரிஸ் காஸா) பட்டங்களைப் பயின்றுள்ளார். 1919ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி மேற்கு பஞ்சாப்பில் உள்ள ஜீலம் நகரில் (தற்போது இது பாகிஸ்தானில் உள்ளது) பிறந்தார். இவரும், திருமதி ஷீலா குஜ்ராலும் கடந்த 1945ம் ஆண்டு மே 26ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
விடுதலைப் போராட்ட தியாகிகள் குடும்பத்தில் பிறந்தவராவார் குஜ்ரால். இவரது பெற்றோர் பஞ்சாப்பில் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இளம் பருவத்திலேயே, தனது 11வது வயதிலேயே, 1931ல், இந்திய நாட்டின் விடுதலைக்காக போராட்டத்தில் குதித்தவர். ஜீலம் நகரில் இளம் சிறுவர்கள் அமைப்பை வழிநடத்திச் சென்றதற்காக காவல்துறையால் கைது செய்யப்பட்டு, தடியடிக்கு ஆளானவர். 1942ல் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்திலும் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளார்.
பிரதமர் பதவி ஏற்பதற்கு முன்பாக 1996ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி வெளியுறவுத் துறை அமைச்சராகவும், 1996ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி கூடுதலாக நீர்வளத் துறை அமைச்சகப் பொறுப்பையும் குஜ்ரால் ஏற்றுள்ளார். அதற்கு முன், 1989-1990 காலகட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். 1976-1980ல் சோவியத் ஒன்றியத்துக்கான (ரஷ்யா) இந்தியத் தூதராக (கேபினட் அந்தஸ்து) பணியாற்றி உள்ளார். இதுதவிர, 1967-1976 வரை, தகவல் தொடர்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை, தகவல்-ஒலிபரப்பு, தகவல் தொடர்புத் துறை, கட்டுமானம்-வீட்டு வசதித்துறை, மீண்டும் தகவல்-ஒலிபரப்புத்துறை, திட்டமிடல் துறைகளில் அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வகித்த பதவிகள்:
1996 ஜூனிலிருந்து மாநிலங்களவைத் தலைவர், 1993-1996 ஏப்ரல் வரை வர்த்தகம் மற்றும் ஜவுளித் துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர், 1996 ஏப்ரல் வரை வெளியுறவுத் துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர், 1964-1976, 1989-1991 வரையிலும் நாடாளுமன்ற உறுப்பினர், பீகாரில் இருந்து 1992ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்வானார், மாநிலங்களவையின் மனுக்கள் குழு, பொது நிதிக் குழு, சட்ட விதிகள் குழு உறுப்பினர், மாநிலங்களவையின் துணை நிலை கூட்டக்குழு, பொது நோக்கங்களுக்கான குழு, வெளியுறவுத் துறையின் நிலைக்குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
பிற முக்கிய அலுவலகப் பொறுப்புகள்:
தெற்காசிய ஒத்துழைப்புக்கான இந்திய சபையின் தலைவர், முதலீட்டுநிதி நிர்வாக்க் குழு உறுப்பினர், ராணுவக் கல்வி மற்றும் பகுப்பாய்வு நிறுவனத் தலைவர், உருது மொழி ஊக்குவிப்புக் குழுத் தலைவர் (குஜ்ரால் கமிட்டி), 1959-1964ல் தில்லி மாநகராட்சிக் கவுன்சில் துணைத் தலைவர், லாகூர் மாணவர் பேரவைத் தலைவர், பஞ்சாப் மாணவர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், தில்லி, ஸ்ரீநகர், கல்கத்தாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஐக்கிய முன்னணி கூட்டத்தின் செய்தித் தொடர்பாளர்.
சர்வதேசப் பிரதிநிதிக்குழு பொறுப்புகள்:
ஐநா பொதுச்சபையின் இந்தியப் பிரதிநிதிகள் குழுத் தலைவர் – 1996; ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடரின் இந்தியப் பிரதிநிதிகள் குழுத் தலைவர், ஜெனீவா, 1995; ஐநா பொதுச்சபையின் இந்தியப் பிரதிநிதிகள் குழுத் தலைவர் – 1990; ஐ.நா பொருளாதார வளர்ச்சிக்கான சிறப்புக் கூட்டத்தொடரின் இந்தியப் பிரதிநிதிகள் குழுத் தலைவர் – 1990; ஐநாவுக்கான இந்தியப் பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினர் 1995 மற்றும் 1994; கல்வி மற்றும் சுற்றுச்சூழலுக்கான யுனெஸ்கோ மாநாட்டு இந்தியப் பிரதிநிதிகள் குழுத் தலைவர் 1977; யுனெஸ்கோ கூட்டத் தொடரின் இந்தியப் பிரதிநிதிகள் குழுவின் மாற்றுத் தலைவர் 1970, 1972, 1974; யுனெஸ்கோவின் ‘மனிதனும் புதிய தகவல்தொடர்பு முறைகளும்’ கருத்தரங்கின் தலைவர், பாரீஸ் 1973; நாடாளுமன்றங்களுக்கு இடையேயான அமைப்பின் மாநாட்டுப் பிரதிநிதி, புக்கரெஸ்ட், 1995; காமன்வெல்த் நாடாளுமன்ற சங்க மாநாட்டுப் பிரதிநிதி, கனடா, 1994; நாடாளுமன்றங்களுக்கு இடையேயான அமைப்பின் கூட்டம்-பிரதிநிதி, கான்பெரா (ஆஸ்திரேலியா), 1967; சுற்றுச்சூழலுக்கான ஐநா கூட்டத் தொடரில் இந்தியப் பிரதிநிதிக்குழுவின் மாற்றுத் தலைவர், ஸ்டாக்ஹோம், 1974; காபோன், கேமரூன், காங்கோ, சாத் மற்றும் மத்திய ஆப்ரிக்க குடியரசுக்கான இந்திய சிறப்புத் தூதர் 1975; மலாவி குடியரசு துவக்க விழாவில் முதல் இந்திய சிறப்புத் தூதர் 1966; பல்கேரியாவின் இந்திய சிறப்புத் தூதர் 1961; இந்திய குடியரசுத் தலைவரின் அரசுமுறைப் பயணமாக ஸ்ரீலங்கா, பூடான், எகிப்து, சூடான் நாடுகளுக்குச் சென்றபோது, அவருடன் பயணம் செய்யும் அமைச்சராக; இந்திய தெற்காசிய ஒத்துழைப்பிற்கான இந்தியக் கவுன்சில் தலைவர்; ஆசிய ரோட்டரி கருத்தரங்கின் இணைத் தலைவர் 1961.
சமூக அமைப்புகளில் பங்கு:
நாரி நிகேதன் டிரஸ்ட், மற்றும் ஏ.என்.குஜ்ரால் நினைவுப் பள்ளி, ஜலந்தர் (பஞ்சாப்) தலைவர்; இந்தியா-பாகிஸ்தான் நட்புறவுச் சங்கத் தலைவர், தில்லி நாடகக் கலை நிறுவனத் தலைவர்; லோக் கல்யாண் சமிதியின் துணைத் தலைவர்; தில்லி ரோட்டரி கிளப் தலைவர் 1960; ஆசிய ரோட்டரி மாநாட்டின் இணைத் தலைவர் 1961.
சிறப்புப் பண்புகள்:
தேசிய சர்வதேச விவகாரங்கள் மற்றும் நாடகக்கலை குறித்து எழுதும் கருத்து தெரிவிக்கும் திறமை கொண்டவர் குஜ்ரால்.