Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

திரு. எச்.டி.தேவே கவுடா

ஜூன் 1, 1996 - ஏப்ரல் 21, 1997 | ஜனதா தளம்

திரு. எச்.டி.தேவே கவுடா


சமூக – பொருளாதார வளர்ச்சிக்கான வீரப் போராளியும், இந்தியாவின் வளமான பண்பாட்டுப் பாரம்பரியத்தின் ஆதரவாளருமான திரு எச்.டி.தேவே கவுடா, கர்நாடகாவின் ஹசன் மாவட்டம், ஹோலேனரசிபுரா தாலுகாவின் ஹரதனஹள்ளி கிராமத்தில் 1933ம் ஆண்டு மே 18ம் தேதி பிறந்தார்.
சிவில் இன்ஜினியரிங் பட்டயப்படிப்பு படித்த தேவே கவுடா, தனது 20வது வயதிலேயே தீவிர அரசியலில் அடியெடுத்து வைத்தார். 1953ல் படிப்பை முடித்ததும் காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டார். 1962ம் ஆண்டு வரை கட்சியின் சாதாரண உறுப்பினராகவேப் பணியாற்றி வந்தார். நடுத்தர விவசாயக் குடும்பப் பின்னணியில் வந்த இவர், விவசாயிகள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் இன்னல்கள், சிரமங்களை அறிந்தவர். எனவே தனது இளமைக் காலத்திலேயே, ஏழை விவசாயிகளுக்காகவும், வறுமையில் வாடுகின்ற, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்காகவும் போராட முடிவெடுத்தார்.
ஜனநாயக அமைப்பின் அடித்தளத்திலிருந்து அடியெடுத்து வைத்து, அரசியலில் படிப்படியாக உச்சத்தைத் தொட்டார் திரு. கவுடா. ஆஞ்சநேயா கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகப் பதவி வகித்து மக்களுக்கு சேவையாற்றிய போது மக்களின் மனதில் இடம் பிடித்தார். பின்னர் ஹோலேனரசிபுராவின் தாலுகா மேம்பாட்டு வாரிய உறுப்பினராகப் பதவி வகித்தார்.
சமத்துவமின்மை நிலவும் சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வந்து, சிறந்த மாநிலமாக்கும் கனவை கண்டவர் தேவே கவுடா. இதன் மூலம் தனது 28வது வயதில் சுயேச்சையாகப் போட்டியிட்ட அவர், 1962ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். அவையில் மக்கள் பிரச்னைகளை முன்வைத்து, திறமையாகப் பேசியதால் மூத்த உறுப்பினர்கள் உட்பட அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். இதன் பின்னர் ஹோலேனரசிபுரா தொகுதி இவரை தொடர்ச்சியாக மூன்று முறை சட்டசபைக்கு அனுப்பி வைத்தது. கர்நாடகாவின் 4வது (1967-71), 5வது (1972-77), 6வது (1978-83) சட்டசபைத் தேர்தலில் தேவே கவுடா வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.
சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக 1972ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 1976ம் ஆண்டு மார்ச் வரையிலும், பின்னர் 1976ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 1977ம் ஆண்டு டிசம்பர் வரையிலும் செயல்பட்டுள்ளார்.
கர்நாடகாவின் 6வது சட்டசபையின் போது 1982ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி தேவே கவுடா தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், 7வது மற்றும் 8வது சட்டசபையின் போது அவர் பொதுப்பணி மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக பதவி வகித்தார். நீர்பாசனத் துறை அமைச்சராக இவர் இருந்த போது, கர்நாடகாவில் ஏராளமான நீர்பாசன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. பின்னர், 1987ம் ஆண்டு நீர்ப்பாசனத் திட்டத்துக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், இதைக் கண்டித்து தேவே கவுடா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
1975-76ம் ஆண்டு, எமர்ஜென்சி நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்த கால கட்டத்தில், சுதந்திரம் மற்றும் சம உரிமைக்காகப் போராடியதால் அதிகாரத்தின் கோபத்திற்கு ஆளானார் தேவே கவுடா. இதனால் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். தற்காலிகச் சிறை வாழ்க்கையில் கிடைத்த ஓய்வில் நிறைய புத்தகங்களை படித்து தனது அரசியல் அறிவை மேலும் வளர்த்துக் கொண்டார். அப்போது ஏராளமான அரசியல் பிரபலங்களும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களை சந்திக்கும் வாய்ப்பு தேவே கவுடாவுக்கு கிடைத்தது. இதன் மூலம் சிறையிலிருந்து வெளியில் வந்த அவர் மேம்பட்ட அரசியல் தலைவராக உருவெடுக்கத் தொடங்கினார்.
1991ம் ஆண்டு ஹசன் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலத்தின் பிரச்னைகளை, குறிப்பாக விவசாயிகள் படும் துன்பங்களை, நாடாளுமன்றத்தின் முன் வைத்தார். இதன் மூலம் விவசாய மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றார். அதேசமயம், நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைபிடித்த சிறந்த அரசியல்வாதியாக இருந்ததால் அவையிலும் தேவே கவுடாவுக்கு நன்மதிப்பு கூடியது.
தேவே கவுடா ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவராக 1994ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1994ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் ஜனதா தள ஆட்சி மலர்ந்த சமயத்தில் கட்சியை முன்நின்று வழிநடத்திச் சென்றவர் தேவே கவுடா. 1994ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி இவர் ஜனதா தளக் கட்சி எம்எல்ஏக்களின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். ராம்நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தேவே கவுடா, கர்நாடகாவின் 14வது முதல்வராகப் பதவி ஏற்றார்.
தனது நீண்ட அரசியல் அனுபவம் காரணமாகவும், வலிமையான அடித்தளம், நேரான பாதை உள்ளிட்ட கொள்கைகளாலும் மாநிலத்தின் பல்வேறு பிரச்னைகளையும் சமாளித்து வெற்றி கண்டார். இவரது அரசியல் சாதுர்யத்தை சோதிக்கும் விதமாக ஹூப்ளியில் ஈத்கா மைதான கலவரப் பிரச்னை உருவெடுத்தது. சிறுபான்மை இனத்தவர்களுக்குச் சொந்தமான இந்த மைதானத்தில் அரசியல் சதி நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தை நேர்த்தியாகக் கையாண்ட தேவே கவுடா, பிரச்னைக்கு சுமூகமானத் தீர்வு கண்டு அமைதிபடுத்தினார்.
1995 ஜனவரியில், தேவே கவுடா சர்வதேச பொருளாதார நிபுணர்களின் கூட்டத்தில் பங்கேற்க சுவிட்சர்லாந்து பயணம் மேற்கொண்டார். அந்தப் பயணத்திலும், பின்னர் ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் மேற்கொண்ட பயணத்திலும் தேவே கவுடா செய்த சாதனைகளே அவர் ஒரு அர்ப்பணிப்பான அரசியல் தலைவர் என்பதற்கான சான்றாக அமைந்தன. சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தின் மூலம் மாநிலத்துக்கு ஏராளமான அந்நிய முதலீடுகளை பெற்றுத் தந்து தான் ஒரு சிறந்த தொழில் புத்திக்கூர்மை உள்ள தலைவர் என்பதையும் நிரூபித்து காட்டினார்.
தன்னைச் சுற்றியுள்ள மக்களுக்குத் தேவையானவற்றை செய்துதரும் போது மகிழ்ச்சி அடைவதே தனது அரசியல் கொள்கை எனக் கூறுபவர் தேவே கவுடா.
1989ம் ஆண்டு கர்நாடகாவில் ஜனதாக் கட்சி மிக மோசமானத் தோல்வியைச் சந்தித்தது. போட்டியிட்ட 222 தொகுதிகளில் வெறும் 2ல் மட்டுமே வென்றது. தேவேகவுடா தனது அரசியல் வாழ்க்கையில் முதல் முறையாக போட்டியிட்ட 2 தொகுதியிலும் தோல்வியை தழுவினார். அதிலிருந்து மீண்டும் அணியை பலப்படுத்துவதற்கான முயற்சியில் களமிறங்கினார்.
படுதோல்வியானது, இழந்த மரியாதையையும், மதிப்பையும் மீண்டும் பெறக் கூடிய கூர்தீட்டப்பட்ட எண்ணத்தைக் கடனாகக் கொடுத்தது. மேலும் தனது அரசியல் பாணியையும் அவர் மறுஆய்வு செய்யத் தூண்டியது. இதன் விளைவாக அவர் கர்நாடகாவில் மட்டுமல்ல தில்லியிலும் நிறைய அரசியல் நண்பர்களை உருவாக்கிக் கொண்டார். அதே சமயம், சிறு சிறு அரசியல் சண்டைகளும் எதிரிகளும் ஒருபுறம் இருந்தனர். தேவே கவுடா எளிமையான வாழ்க்கைச் சூழல் பின்னணியில் வந்தாலும், ஏழைக் குடும்பத்தினராக இருந்த போதிலும், அவரது எண்ணங்களும், கொள்கைகளும் உறுதியானதும், செயல்திறன் மிக்கவையாகவும் உள்ளன.
அரசியலுக்கு வருவதற்கு முன் தேவே கவுடா ஒப்பந்த அடிப்படையில் சிறு அரசு பணிகளை செய்து கொடுத்துள்ளார். 7 ஆண்டுகள் சுயேச்சையாகவே இருந்த இவர், கட்சி அரசியலை வெளியில் இருந்த படி கற்றுக் கொண்டுள்ளார். அந்த சமயத்தில் எம்எல்ஏக்கள் நூலகத்தில் எப்போதுமே தேவே கவுடா பத்திரிகைகளிலும், புத்தகங்களிலும் மூழ்கியபடி படித்துக் கொண்டிருப்பார். இதன் மூலம் பல்வேறு விஷயங்களை அறிந்து, தேர்ந்த அரசியல் தலைவரான இவருக்கு, 1967ல் சட்டசபைத் தேர்தலில் 2வது முறையாக கிடைத்த வெற்றியும், 1969ம் ஆண்டு காங்கிரஸ் பிளவும் திருப்புமுனையாக அமைந்தன.
காங்கிரஸ் பிரிந்த பின், நிஜலிங்கப்பா தலைமையில் அமைந்த காங்கிரஸ் (அமைப்பு) கட்சியில் இணைந்தார். இந்தக் கட்சி பின்னாளில் ஆட்சிக்கு வந்தது. 1971ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது, காங்கிரஸ் (அ) கட்சியிலிருந்து பிரிந்து வந்த தேவே கவுடா, இந்திரா காந்தி அலையை எதிர்த்துப் பேசி, தேசியத் தலைவராக உருவெடுத்தார்.
டோடி கவுடா, தேவம்மா தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் தேவே கவுடா. எப்போதுத் தன்னுடைய விவசாய பின்புலத்தை நினைத்து பெருமைப்படுபவர். இவரது மனைவி பெயர் சென்னம்மா. இவர்களுக்கு 4 மகன்கள் 2 மகள்கள் உள்ளனர். இவரது ஒரு மகன் கர்நாடகாவில் எம்எல்ஏவாகவும் மற்றொரு மகன் மக்களவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலக் கட்சிகளை ஒன்றிணைத்து காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத 3வது கூட்டணியை உருவாக்க தேவே கவுடா தலைமையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
தனது கர்நாடக மாநில முதல்வர் பதவியை கடந்த 1996ம் ஆண்டு மே 30ம் தேதி ராஜினாமா செய்த தேவே கவுடா இந்தியாவின் 11வது பிரதமராகப் பதவி ஏற்றார்.