Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்வதேச சரக்கு போக்குவரத்துக்கான சுங்க உடன்படிக்கையை இந்தியா ஏற்றுக் கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், டி.ஐ.ஆர். உடன்படிக்கையின் கீழ், சர்வதேச சரக்கு போக்குவரத்துக்கான சுங்க உடன்படிக்கையை இந்தியா ஏற்றுக் கொள்வதற்கும், இதனை செயல்படுத்துவதற்கு தேவையான வழிமுறைகளை செய்து முடிப்பதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

இந்த உடன்படிக்கையின் மூலம், இந்திய வர்த்தகர்கள், சர்வதேச அளவில் ஒப்பந்தம் செய்துகொண்ட நபர்களுக்கு சரக்குகளை சாலை அல்லது பல வகையான போக்குவரத்து மூலம், வேகமாகவும், எளிதாகவும், நம்பத்தகுந்த வகையிலும், தடையில்லாமலும் கொண்டுசெல்ல முடியும்.

 

இந்த உடன்படிக்கையில் இணைவதன்மூலம், சுங்க கட்டுப்பாடுகளை இருதரப்பினரும் ஏற்றுக் கொள்கின்றனர். இதனால், சரக்குகளை கொண்டுசெல்லும்போது, எல்லைப் பகுதிகளில் ஆய்வு செய்ய வேண்டிய தேவையில்லை. மேலும், பொருட்களை பாதுகாப்பாக கொண்டுசெல்வதற்காக நபர்களை நியமிக்க வேண்டியதில்லை. சுங்கத்துறை ஒப்புதலை, உள்நாட்டு சுங்கத்துறை பகுதிகளில் மேற்கொள்ள முடியும். இதனால், கூட்ட நெரிசல் உள்ள எல்லை தாண்டும் பகுதிகள் மற்றும் துறைமுகங்களில் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை. டி.ஐ.ஆர். விதிமுறையின் கீழ், முத்திரைகள், சரக்கு பெட்டியின் வெளிப்புறப்பகுதி ஆகியவற்றை மட்டும் ஆய்வுசெய்து பொருட்களை கொண்டுசெல்ல அனுமதிக்கப்படுகிறது. இதனால், எல்லைப் பகுதியில் ஏற்படும் தாமதம் குறைகிறது. போக்குவரத்து மற்றும் பரிமாற்றச் செலவு குறைகிறது. இதன்மூலம், போட்டி அதிகரித்து, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறையில் வளர்ச்சி ஏற்படுகிறது.

 

இந்த உடன்படிக்கையின் நிபந்தனைகளின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட சரக்கு கொண்டுசெல்பவர்கள் மற்றும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. எனவே, பொருட்களை கொண்டுசெல்வதில் அதிக பாதுகாப்பு உறுதிசெய்யப்படும். சுங்கத் தீர்வைகள், வரிகள் மற்றும் பொருட்களை மாற்றுவதற்கான போக்குவரத்து ஆகியவை டிஐஆர் கார்னெட்டில் உறுதியளிக்கப்படுகிறது. எனவே, செல்லும் வழியில் இதுபோன்ற வரிகள் மற்றும் தீர்வைகளை செலுத்த வேண்டியதில்லை. சுங்க உறுதிமொழியாகவும் டிஐஆர் கார்னெட் செயல்படுகிறது. எனவே, சரக்குகள் கொண்டுசெல்லப்படும் பல்வேறு நாடுகளின் தேசிய சட்டங்களை திருப்திப்படுத்தும் வகையில், பல்வேறு உறுதிமொழிகளை அளிக்க வேண்டிய தேவையில்லை. டிஐஆர் உடன்படிக்கை, சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து முனையத்துக்கு சரக்குகளை கொண்டுசெல்வதற்கு வழிவகை செய்கிறது. இதன்மூலம், மத்திய ஆசிய குடியரசுகள் மற்றும் பிற காமன்வெல்த் நாடுகளுடன் வர்த்தகத்தை மேம்படுத்த முடியும். குறிப்பாக சபகர் துறைமுகம் போன்ற ஈரானில் உள்ள துறைமுகங்களை பயன்படுத்த முடியும்.

 

சர்வதேச உடன்படிக்கையில் இந்தியா இணைவதை மட்டுமே நோக்கமாக கொண்டிருப்பதால், இந்தப் பரிந்துரையால், இந்திய அரசுக்கு நேரடியாக எந்தவொரு நிதி பாதிப்பும் ஏற்படாது.

 

பின்னணி:

 

டி.ஐ.ஆர். கார்னெட் 1975 (டி.ஐ.ஆர். உடன்படிக்கை)யின் கீழ்  மேற்கொள்ளப்படும்,  சர்வதேச சரக்கு போக்குவரத்துக்கான சுங்க உடன்படிக்கை என்பது சர்வதேச போக்குவரத்து அமைப்பு. ஐரோப்பாவுக்கான ஐக்கிய நாடுகள் பொருளாதார ஆணையத்தின் ஆதரவுடன் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம், உடன்படிக்கையில் உள்ள நாடுகளுக்கு இடையே சரக்குகளை தடையில்லாமல் கொண்டுசெல்ல வழிவகை ஏற்படுகிறது. தற்போதைய நிலையில், இந்த உடன்படிக்கையில், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 70 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

***