Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

6 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு டிஜிட்டல் கல்வி புகட்ட பிரதம மந்திரி கிராமீன் டிஜிட்டல் சாக்‌ஷர்தா அபியான் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்


6 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு டிஜிட்டல் கல்வி அளிக்கும் நோக்கம் கொண்ட பிரதம மந்திரி கிராமின் டிஜிட்டல் சாக்‌ஷர்தா அபியான் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2019 மார்ச் மாதத்திற்குள் இந்திய கிராமப்புறங்களில் டிஜிட்டல் கல்வியைப் புகட்டுவதற்காக இந்த திட்டத்துக்கு ரூ. 2,351.38 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் 2016-17 உரையில் நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பையொட்டி இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த டிஜிட்டல் கல்வித் திட்டம் உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் கல்வித் திட்டங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 2016-17 நிதியாண்டில் 25 லட்சம் பேருக்கும், 2017-18 நிதியாண்டில் 275 லட்சம் பேருக்கும், 2018-19 நிதியாண்டில் 300 லட்சம் பேருக்கும் பயிற்சி அளிக்கப்படும். பூகோள அடிப்படையில் சமநிலையை உறுதிப்படுத்த நாட்டில் உள்ள 2,50,000 கிராமப் பஞ்சாயத்துக்களும் சுமார் 200-300 பேரை இதற்காக பதிவு செய்யவேண்டும்.

டிஜிட்டல் கல்வி பெற்றவர்களால், கணிணிகள்/டிஜிட்டல் கருவிகள் (டேப்லெட்கள், ஸ்மார்ட் ஃபோன்கள் போன்றவை) இயக்குவதுடன், மின்னஞ்சல்களை அனுப்புதல் மற்றும் பெறுதல், இணையதளத்தை இயக்குதல், அரசு சேவைகளை அணுகுதல், தகவல்களைத் தேடுதல், ரொக்கமற்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள முடியும் என்பதால் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவர்களால் தேச வளர்ச்சியில் பங்கேற்க முடியும்.

இந்தத் திட்டம் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒட்டுமொத்த மேற்பார்வையின் கீழ் நியமிக்கப்பட்ட மாநில நடைமுறைப்படுத்தும் முகமைகள், மாநில இ-நிர்வாக அமைப்பு உள்ளிட்டவைகளின் மூலம் மாநில/யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படும்.

பின்னணி:

2014ல் மேகொள்ளப்பட்ட கல்வி பற்றிய 71வது என்.எண்.எஸ்.ஓ. ஆய்வின்படி, 6 சதவிகித கிராமப்புற வீடுகளில் மட்டுமே கணிணி உள்ளது தெரியவந்துள்ளது. 15 கோடிக்கும் மேற்பட்ட கிராமப்புற வீடுகளில் (16.85 கிராமப்புற வீடுகளில் 94 சதவிகிதம்) கணிணி இல்லை என்பதுடன் இந்த வீடுகளில் உள்ள குறிப்பிடத்தகக எண்ணிக்கையிலானவர்கள் டிஜிட்டல் கல்வி அறிவு இன்றி உள்ளனர். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மேகொள்ளப்பட்டுள்ள இந்த பிரதம மந்திரி கிராமின் டிஜிட்டல் சாக்‌ஷர்தா அபியான் திட்டம் கிராமப்புறங்களில் உள்ள 6 கோடி வீடுகளுக்கு டிஜிட்டல் கல்வி அளிப்பதை நோக்கமாகக் கொண்டது. இது குடிமக்களுக்கு கணிணி/டிஜிட்டல் அணுகல் கருவிகளை இயக்கி தகவல், அறிவாற்றல் மற்றும் திறன்களை அணுகும் வாய்ப்பை அளித்து அவர்களை அதிகாரம் பெற்றவர்களாக ஆக்கும்.

மொபைல் ஃபோன்களைப் பயன்படுத்தி குறைந்த ரொக்க பரிவர்த்தணைகளுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருவதால், இந்தப் பயிற்சி உள்ளடக்கத்தில் டிஜிட்டல் வாலெட்கள், மொபைல் பேங்கிங், ஒருங்கிணைந்த கட்டண முறை, கட்டமைக்கப்படாத துணை சேவைத் தரவு, மற்றும் ஆதார் சார்ந்த கட்டண முறை உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

*****