Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வனவிலங்குகளுக்கான தேசிய வாரியத்தின் 7-வது கூட்டம் மார்ச் 3-ம் தேதி கிர் நகரில் பிரதமர் தலைமையில் நடைபெற்றது

வனவிலங்குகளுக்கான தேசிய வாரியத்தின் 7-வது கூட்டம் மார்ச் 3-ம்  தேதி கிர் நகரில் பிரதமர் தலைமையில் நடைபெற்றது


குஜராத்தில் உள்ள கிர் தேசியப் பூங்காவை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். அங்கு தேசிய வனஉயிரின வாரியத்தின் 7-வது கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் வனவிலங்கு பாதுகாப்பிற்காக மத்திய அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு முயற்சிகளை தேசிய வனஉயிரின வாரியம் மதிப்பாய்வு செய்தது. புதிய பாதுகாக்கப்பட்ட பகுதிகளை உருவாக்குவதில் படைக்கப்பட்டுள்ள சாதனைகள் மற்றும் புலிகள் சரணாலயம், யானைகள், பனிச்சிறுத்தைகள் பாதுகாப்புத் திட்டம், போன்ற முதன்மையான திட்டங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. டால்பின்கள் மற்றும் ஆசிய சிங்கங்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள், சர்வதேச அளவில் சிறுத்தை பாதுகாப்புக்கான கூட்டமைப்பை உருவாக்குவது குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தின் போது, நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது ஆற்று டால்பின் கணக்கெடுப்பு அறிக்கையைப் பிரதமர் வெளியிட்டார். இந்த அறிக்கையின்படி மொத்தம் 6,327 ஆற்று டால்பின்கள் உள்ளதாக  மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த முன்னோடி முயற்சியில் எட்டு மாநிலங்களில் உள்ள 28 நதிகளில் உள்ள டால்பின்களை  கணக்கெடுக்கும் பணியும் அடங்கும். 3150 மனித நாட்கள், 8,500 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவிற்கு இந்தக் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. டால்பின்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடத்திலும் அதைத் தொடர்ந்து பீகார், மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களும் உள்ளன.

டால்பின்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள உள்ளூர் மக்கள் மற்றும் கிராமவாசிகளை இந்தக் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்துவதன் வாயிலாக டால்பின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அவர்களிடையே ஏற்படுத்த முடியும் என்று பிரதமர் வலியுறுத்தினார். டால்பின் வாழ்விடப் பகுதிகளில் பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் சென்று பார்வையிட ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுறுத்தினார்.

வனஉயிரின ஆரோக்கியம், நோய் மேலாண்மை தொடர்பான பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைப்பதன் வாயிலாக நிர்வாக மையமாகச் செயல்படும் ஜூனாகட்டில் வனவிலங்குகளுக்கான தேசிய பரிந்துரை மையத்தை அமைப்பதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படுகிறது.இந்தக் கணக்கெடுப்பு கடைசியாக  2020-ம் ஆண்டில் நடத்தப்பட்டது. 2025-ம் ஆண்டில் நடத்தப்படும் 16-வது சுற்று சிங்கங்கள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் தற்போது தொடங்குகியுள்ளதாகப் பிரதமர் அறிவித்தார்.

ஆசிய சிங்கங்கள் தற்போது பர்டா வனவிலங்கு சரணாலயத்தை இயற்கைச் சூழலுடன் வசிப்பிடமாகக் கொண்டுள்ளதை கருத்தில் கொண்டு, அவற்றுக்கான இரைகள் கிடைக்கச் செய்வது, பிற வாழ்விட மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பர்டாவில் சிங்கங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று பிரதமர் அறிவித்தார். வனவிலங்கு வாழ்விடங்களின் மேம்பாடு, பாதுகாப்புக்கான வழிமுறையாக சூழல் அமைப்பு சுற்றுலாவிற்கான  முக்கியத்துவத்தை அவர் சுட்டிக் காட்டினார். எனவே, சூழல் அமைப்பிற்கான சுற்றுலாவை எளிதாக்கும் வகையில், போக்குவரத்து இணைப்பு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மனிதர்-வன உயிரின மோதல்களைத் திறம்பட நிர்வகிப்பதற்கு ஏதுவாக, கோவையில் உள்ள சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில் உள்ள (சாக்கோன்) இந்திய வனவிலங்கு நிறுவன வளாகத்தில் சீர்மிகு மையம் ஒன்று அமைக்கப்படும் என்ற அறிவிப்பைப் பிரதமர் வெளியிட்டார். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் விரைவாக நடவடிக்கை எடுக்கும் வகையில், அது சார்ந்த குழுக்கள் மேம்பட்ட தொழில்நுட்பம், கண்காணிப்புக் கருவிகள், முன்கூட்டியே எச்சரிக்கை செய்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு இந்த மையம் ஆதரவளிக்கும். மனிதர்-வனவிலங்கு மோதல் ஏற்படும் பகுதிகளில் கண்காணிப்பு, ஊடுருவலைக் கண்டறிவதற்கான  அமைப்புகளைப் பரிந்துரைத்தல், மோதல் தணிப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்த களப் பயிற்சியாளர்களுக்கு  திறனை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

காட்டுத்தீ மற்றும் மனிதர்-விலங்கு மோதல்கள் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள தொலையுணர்வு, புவிசார் வரைபடம், செயற்கை நுண்ணறிவு, எந்திர கற்றல் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். மனிதர்-வனவிலங்கு மோதலின் சவாலை எதிர்கொள்ள பாஸ்கராச்சார்யா தேசிய விண்வெளி பயன்பாட்டு நிறுவனத்தோடு  இந்திய வனவிலங்கு நிறுவனம் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் ஆலோசனை தெரிவித்தார்.

காட்டுத்தீ பரவல் குறித்த கண்காணிப்பு, மேலாண்மையை மேம்படுத்துவதற்கு குறிப்பாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளில், முன்கூட்டியே கணித்தல், கண்டறிதல், தடுத்தல், கட்டுப்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்காக டேராடூனில் உள்ள இந்திய வன நில அளவை அமைப்பானது பாஸ்கராச்சார்யா தேசிய விண்வெளி பயன்பாடுகள் மற்றும் புவி-தரவு நிறுவனத்தோடு இணைந்து விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.

மத்தியப்பிரதேசத்தில் உள்ள காந்திசாகர் சரணாலயம் மற்றும் குஜராத்தில் உள்ள பன்னி புல்சமவெளி உள்ளிட்ட பிற பகுதிகளுக்கும் சிறுத்தைகள் அறிமுகம் செய்யப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார்.

புலிகள் காப்பகங்களுக்கு வெளியே புலிகளைப் பாதுகாப்பதை மையமாகக் கொண்ட ஒரு திட்டத்தையும் பிரதமர் அறிவித்தார். உள்ளூர் சமூகங்களுடன் சகவாழ்வை இந்த காப்பிடத்துக்கு வெளியில் உறுதி செய்வதன் மூலம் வனப்பகுதிகளில் மனிதர்-புலி மற்றும் பிற சக-வேட்டையாடும் மோதல்களைத் தடுப்பதற்கான முயற்சிகளை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

கரியால் எனப்படும்  மீன் உண்ணும் முதலை இனங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், புதிய திட்டங்கள் தொடங்கப்படுவதாகவும் அறிவித்தார்.

கான மயில் பறவையினங்களைப் பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார். அவற்றைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, தேசிய அளவிலான கானமயில் பாதுகாப்பு செயல் திட்டத்தையும் அவர் அறிவித்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், ஆராய்ச்சி, மேம்பாட்டுப் பணிகளுக்காக வனங்கள் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பு மேலாண்மை தொடர்பான இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் பாரம்பரிய அறிவு மற்றும் கையெழுத்துப் பிரதிகளைச் சேகரிக்குமாறு வாரியம், சுற்றுச்சூழல் அமைச்சகத்தை பிரதமர் கேட்டுக் கொண்டார். வனவிலங்கு பாதுகாப்புக்கான உத்திகள், எதிர்கால நடவடிக்கைகளுக்கான செயல்திட்டங்களை வகுப்பது குறித்து ஆலோசனை வழங்கிய பிரதமர் பிரதமர், இந்திய கரடி, கரியால் முதலை, கானமயில் போன்ற அரியவகை வனவிலங்குகளின் பாதுகாப்பு, மேம்பாட்டில் பணியாற்ற பல்வேறு பணிக்குழுக்களை அமைக்குமாறும்  கேட்டுக் கொண்டார்.

சிங்கம், சிறுத்தை இனங்களின் பாதுகாப்புக்கு கிர் நதித் திட்டம் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தப் பாரம்பரிய அறிவை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பிற தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களில் பயன்படுத்த ஆவணப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இடம் பெயரும் வன உயிரினங்கள் பாதுகாப்பு தொடர்பான ஐ.நா. சபை மாநாட்டின் கீழ் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் பிரதமர் ஆலோசனை தெரிவித்தார்.

இயற்கைப் பாதுகாப்பில், குறிப்பாக சமூக காப்பகங்களை உருவாக்குவதன் மூலம் உள்ளூர் சமுதாயத்தினர் தீவிரமாகப் பங்கேற்பதை பிரதமர் பாராட்டினார். கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவில் சமூக காப்பகங்களின் எண்ணிக்கை ஆறு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. வனவிலங்கு பாதுகாப்பில் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

கால்நடை சுகாதார மேலாண்மையில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடிய வனப்பகுதிகளில் உள்ள மூலிகைகள்  ஆராய்ச்சி, ஆவணப்படுத்துதல் குறித்தும் பிரதமர் ஆலோசனை வழங்கினார். உலக அளவில் கால்நடை சுகாதார மேலாண்மைக்கு தாவரம் சார்ந்த மருத்துவ முறைகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, முன்கள வனப் பணியாளர்களின் இயக்கத்தை மேம்படுத்துவதற்காக இருசக்கர வாகனங்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கிர் வனப்பகுதியில் உள்ள களப்பணியாளர்கள், சூழல் வழிகாட்டிகள், கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் அவர் கலந்துரையாடினார்.

—-

TS/SV/KPG/DL