Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜஹான்-இ-குஸ்ரோ 2025 சூஃபி இசை விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்பு

ஜஹான்-இ-குஸ்ரோ 2025 சூஃபி இசை விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்பு


 

 

 

புதுதில்லியில் உள்ள சுந்தர் நர்சரியில் நடைபெற்ற ஜஹான்-இ-குஸ்ரோ 2025 சூஃபி இசை விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.

ஜஹான்-இ-குஸ்ரோ நிகழ்ச்சியில் திரண்டிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், ஹஸ்ரத் அமீர் குஸ்ரோவின் வளமான பாரம்பரியத்தில் மகிழ்ச்சி அடைவது இயற்கையானது என்று கூறினார். குஸ்ரோ மிகவும் விரும்பிய வசந்த காலத்தின் சாராம்சம் தில்லியில் ஜஹான்-இ-குஸ்ரோ நிகழ்ச்சியிலும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

ஜஹான்-இ-குஸ்ரோ போன்ற நிகழ்வுகள் நாட்டின் கலை, கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறிய திரு நரேந்திர மோடி, இவை அமைதியையும் அளிக்கின்றன என்று கூறினார். தற்போது 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்த நிகழ்வு மக்களின் இதயங்களில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது என்றும், இது ஒரு பெரிய சாதனையாக கருதப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். டாக்டர் கரண் சிங், முசாபர் அலி, மீரா அலி, அவருடன் இணைந்து பணியாற்றிய மற்றவர்களை பிரதமர் பாராட்டினார். ரூமி அறக்கட்டளை, ஜஹான்-இ-குஸ்ரோ ஆகியவற்றுடன் தொடர்புடைய அனைவரும் எதிர்காலத்தில் தொடர்ந்து வெற்றிபெற வேண்டும் என்று அவர் வாழ்த்தினார். ரமலான் புனித மாதம் நெருங்கி வரும் நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் தமது வாழ்த்துக்களை தெரிவித்தார். சுந்தர் நர்சரியை மேம்படுத்துவதில் கரீம் ஆகா கானின் பங்களிப்பு ஆசீர்வாதமாக இருந்ததை திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார்.

குஜராத்தின் சூஃபி பாரம்பரியத்தில் சர்கேஜ் ரோசாவின் குறிப்பிடத்தக்க பங்கு குறித்து பிரதமர் பேசினார். கடந்த காலங்களில், இந்த இடத்தின் நிலை மோசமடைந்தது என்று அவர் எடுத்துரைத்தார். ஆனால் முதலமைச்சராக, தாம் அதை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தியதாக அவர் குறிப்பிட்டார். சர்கேஜ் ரோசா நடத்திய கிருஷ்ண உத்சவ் கொண்டாட்டங்களில் ஏராளமானோர் கலந்து கொண்டதையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். சர்கேஜ் ரோசாவில் வருடாந்திர சூஃபி இசை விழாவில் தாம் தவறாமல் பங்கேற்றதாக திரு நரேந்திர மோடி கூறினார். சூஃபி இசை அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் ஒரு பகிரப்பட்ட பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது என அவர் குறிப்பிட்டார். நஸ்ரே கிருஷ்ணாவின் நிகழ்ச்சி இந்த பகிரப்பட்ட கலாச்சார பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கிறது என்று திரு நரேந்திர மோடி கூறினார்.

ஜஹான்-இ-குஸ்ரோ நிகழ்ச்சி இந்திய மண்ணை பிரதிபலிக்கும் தனித்துவமான தன்மையைக் கொண்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். ஹஸ்ரத் அமீர் குஸ்ரோ இந்தியாவை சொர்க்கத்துடன் ஒப்பிட்டதை நினைவு கூர்ந்த பிரதமர், நமது நாட்டை நாகரிகத்தின் தோட்டம் என்றும், இங்கு கலாச்சாரத்தின் ஒவ்வொரு அம்சமும் செழித்தோங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டதாகப் பிரதமர் கூறினார். இந்திய மண் ஒரு தனித்துவமான தன்மையைக் கொண்டுள்ளது எனவும் சூஃபி பாரம்பரியம் இங்கு வந்தபோது, அது இந்த நிலத்துடன் ஒரு தொடர்பைக் கண்டது என்றும் அவர் தெரிவித்தார். பாபா ஃபரீத்தின் ஆன்மீக போதனைகள், ஹஸ்ரத் நிஜாமுதீனின் கூட்டங்களால் தூண்டப்பட்ட அன்பு, ஹஸ்ரத் அமீர் குஸ்ரோவின் கவிதைகள் உருவாக்கிய புதிய நல்ல கருத்துகள் ஆகியவை இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தின் சாராம்சத்தை கூட்டாக உள்ளடக்கியுள்ளன என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

இந்தியாவில் சுஃபி பாரம்பரியத்தின் தனித்துவமான அடையாளத்தை எடுத்துரைத்த பிரதமர், இங்கு சுஃபி துறவிகள் வேதக் கொள்கைகளுடனும் பக்தி இசையுடனும் குர்ஆனின் போதனைகளை இணைத்தனர் என்றார். தமது சூஃபி பாடல்கள் மூலம் வேற்றுமையில் ஒற்றுமையை வெளிப்படுத்தியதற்காக ஹஸ்ரத் நிஜாமுதீன் அவுலியாவை பிரதமர் பாராட்டினார். ஜஹான்-இ-குஸ்ரோ தற்போது இந்த வளமான, அனைவரையும் உள்ளடக்கிய பாரம்பரியத்தின் நவீன பிரதிபலிப்பாக மாறியுள்ளது என்று திரு நரேந்திர மோடி கூறினார்.

எந்தவொரு நாட்டின் நாகரிகமும் கலாச்சாரமும் அதன் இசையிலும் பாடல்களிலும் இருந்து வலுப் பெறுகின்றன என்று திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். சூஃபியும் பாரம்பரிய இசை மரபுகளும் ஒன்றிணைந்தபோது, அவை அன்பு, பக்தி ஆகியவற்றின் புதிய வெளிப்பாடுகளைப் பெற்றெடுத்தன என அவர் கூறினார். இது ஹஸ்ரத் குஸ்ரோவின் கவ்வாலிகள், பாபா ஃபரீத்தின் வசனங்கள், புல்லா ஷா, மிர், கபீர், ரஹீம்,  ராஸ் கான் ஆகியோரின் கவிதைகளில் தெளிவாகத் தெரிகிறது என அவர் குறிப்பிட்டார். இந்த துறவிகளும், மறைஞானிகளும் பக்திக்கு புதிய பரிமாணத்தை அளித்துள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

 சூர்தாஸ், ரஹீம், ராஸ் கான் ஆகியோரைப் படித்தாலும் அல்லது ஹஸ்ரத் குஸ்ரோவின் பாடல்களைக் கேட்டாலும், இந்த வெளிப்பாடுகள் அனைத்தும் ஒரே ஆன்மிக அன்புக்கு இட்டுச் செல்கின்றன என்று அவர் கூறினார். அங்கு மனித வரம்புகள் கடக்கப்பட்டு, மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலான ஒற்றுமை உணரப்படுகிறது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். ராஸ் கான், முஸ்லிமாக இருந்தபோதிலும், கிருஷ்ணரின் மீது பக்தி கொண்டு இருந்தார் எனவும் இது அவரது கவிதைகளில் வெளிப்பட்டு, பக்தியின் உலகளாவிய தன்மையை பிரதிபலிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார். இந்த ஆழ்ந்த ஆன்மிக அன்பை இந்த நிகழ்ச்சி பிரதிபலிக்கிறது என்று திரு நரேந்திர மோடி கூறினார்.

சூஃபி பாரம்பரியம் மனிதர்களிடையே உள்ள ஆன்மிக இடைவெளியை குறைத்துள்ளது மட்டுமின்றி, நாடுகளுக்கு இடையேயான இடைவெளியையும் குறைத்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். 2015-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு தாம் சென்றதை நினைவு கூர்ந்த பிரதமர், எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் பால்க்கில் பிறந்த ரூமி குறித்து அங்கு தாம் உணர்ச்சிகரமாக பேசியதை நினைவு கூர்ந்தார். புவியியல் எல்லைகளைக் கடந்த ரூமியின் சிந்தனையை திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டார்: “நான் கிழக்கிலிருந்தோ அல்லது மேற்கிலிருந்தோ வரவில்லை. நான் கடலிலிருந்தோ அல்லது நிலத்திலிருந்தோ பிறக்கவில்லை. எனக்கு இடமில்லை. நான் எல்லா இடங்களிலும் இருக்கிறேன்.” என்ற இந்த தத்துவத்தை இந்தியாவின் பண்டைய நம்பிக்கையான “வசுதைவ குடும்பகம்” (உலகம் ஒரே குடும்பம்) என்பதுடன் இணைத்துப் பேசிய பிரதமர், இத்தகைய எண்ணங்களிலிருந்து வலு பெற்றதாக குறிப்பிட்டார். ஈரானில் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் இந்தியாவின் உலகளாவிய, உள்ளடக்கிய மாண்புகளை பிரதிபலிக்கும் வகையில் மிர்சா காலிப் எழுதிய ஒரு ஈரடி பாடலை படித்ததை திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார்.

‘துட்டி-இ-ஹிந்த்’ என்று பிரபலமாக அறியப்படும் ஹஸ்ரத் அமீர் குஸ்ரோ பற்றி திரு நரேந்திர மோடி பேசினார். குஸ்ரோ தமது படைப்புகளில், இந்தியாவின் மகத்துவத்தையும் வசீகரத்தையும் பாராட்டியதை அவர்  குறிப்பிட்டார். குஸ்ரோ தமது காலத்தில் இருந்த பெரிய நாடுகளை விட இந்தியா உயர்ந்தது என்று கருதினார் என்றும், சமஸ்கிருதத்தை உலகின் சிறந்த மொழி என்று கருதினார் என்றும் பிரதமர் கூறினார். குஸ்ரோ இந்தியர்களை உலகின் மிகச் சிறந்த அறிஞர்களை விட உயர்ந்தவர்கள் என்று மதித்தார் என்பதை திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். பூஜ்ஜியம், கணிதம், அறிவியல், தத்துவம் போன்றவை பற்றிய இந்தியாவின் அறிவு உலகின் பிற பகுதிகளுக்கு எவ்வாறு பரவியது என்றும், குறிப்பாக இந்திய கணிதம் எவ்வாறு அரேபியர்களை அடைந்தது என்றும் குஸ்ரோ பெருமிதம் கொண்டார் என பிரதமர் தெரிவித்தார். நீண்ட கால காலனி ஆதிக்கம், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பேரழிவுகள் இருந்தபோதிலும், ஹஸ்ரத் குஸ்ரோவின் எழுத்துகள் இந்தியாவின் வளமான கடந்த காலத்தைப் பாதுகாப்பதிலும், அதன் பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதிலும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தன என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 25 ஆண்டுகளாக இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை வெற்றிகரமாக ஊக்குவித்து வளப்படுத்தி வரும் ஜஹான்-இ-குஸ்ரோவின் முயற்சிகள் குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த முயற்சியை கால் நூற்றாண்டு காலம் தக்க வைத்துக் கொள்வது என்பது சிறிய சாதனை அல்ல என்பதை திரு நரேந்திர மோடி சுட்டிக் காட்டினார். இந்த கொண்டாட்டத்தை அனுபவிக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்ததோடு, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் தமது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

பின்னணி:

நாட்டின் பன்முக கலை, கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் பிரதமர் வலுவான ஆதரவாளராக இருந்து வருகிறார். இதற்கு ஏற்ப, சூஃபி இசை, கவிதை, நடனத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட சர்வதேச விழாவான ஜஹான்-இ-குஸ்ரோவில் அவர் பங்கேற்றார். அமீர் குஸ்ரோவின் மரபைக் கொண்டாட, இந்த நிகழ்வு உலகெங்கிலும் உள்ள கலைஞர்களை ஒன்றிணைக்கிறது. ரூமி அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்படும் இந்த விழா, புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரும் கலைஞருமான முசாபர் அலியால் 2001-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு அதன் 25 வது ஆண்டு விழாவை இது கொண்டாடுகிறது. இது 2025 பிப்ரவரி 28 முதல் மார்ச் 02 வரை நடைபெறுகிறது.

******  

PLM/KV