Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வேளாண்மை, கிராமப்புற வளம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய காணொலிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்


 

வேளாண்மை, கிராமப்புற வளம் ஆகியவை குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய காணொலிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று (01.03.2025) உரையாற்றினார். பட்ஜெட்டுக்குப் பிந்தைய காணொலிக் கருத்தரங்கில் பங்கேற்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், இந்த கருத்தரங்கில் இணைந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, இந்த ஆண்டின் பட்ஜெட் அரசின் மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் முழு பட்ஜெட் என்பதை எடுத்துரைத்தார், இது கொள்கைகளின் தொடர்ச்சியையும் வளர்ச்சி அடைந்த பாரத்திற்கான பார்வையின் புதிய விரிவாக்கத்தையும் காட்டுகிறது என்று அவர் கூறினார். பட்ஜெட்டுக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட அனைவரிடமிருந்தும் மதிப்புமிக்க உள்ளீடுகள், ஆலோசனைகள் ஏற்கப்பட்டதாகவும் அவை மிகவும் உதவிகரமாக இருந்தன என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்த பட்ஜெட்டை மேலும் சிறப்பானதாக மாற்றுவதில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பங்கு மேலும் முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார்.

“வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய எங்கள் தீர்மானம் மிகவும் தெளிவாக உள்ளது எனவும் விவசாயிகள் வளமான, அதிகாரம் பெற்ற வகையிலான இந்தியாவை நாங்கள் உருவாக்குகிறோம்” என்றும் கூறிய திரு நரேந்திர மோடி, எந்தவொரு விவசாயியும் பின்தங்கி விடக்கூடாது என்பதை உறுதி செய்வதற்கும், ஒவ்வொரு விவசாயியையும் முன்னேற்றுவதற்கும் முயற்சி மேற்கொள்ளப்படுவதை எடுத்துரைத்தார். விவசாயம் வளர்ச்சியின் முதல் அம்சமாக கருதப்படுவதாகவும், விவசாயிகளுக்கு பெருமைக்குரிய இடத்தை அரசு அளிப்பதாகவும் அவர் கூறினார். “இந்தியா ஒரே நேரத்தில் இரண்டு முக்கிய இலக்குகளை நோக்கி செயல்பட்டு வருகிறது எனவும் விவசாயத் துறையின் வளர்ச்சி, கிராமங்களின் செழிப்பு” ஆகியவை அவை என்றும் அவர் கூறினார்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவி திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு சுமார் ரூ. 3.75 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்தத் தொகை 11 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப்பட்டுள்ளதாகவும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுவது கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறது என்று அவர் கூறினார். இந்தத் திட்டத்தின் பயன்கள் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளைச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக விவசாயிகளை மையமாகக் கொண்ட டிஜிட்டல் உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இடைத்தரகர்கள் அல்லது கசிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தவிர்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதுபோன்ற திட்டங்களின் வெற்றி, வல்லுநர்கள், தொலைநோக்கு கொண்ட தனிநபர்களின் ஆதரவு ஆகியவற்றின் மூலம் சாத்தியமாகும் என்று பிரதமர் கூறினார். அவர்களின் பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர், எந்தவொரு திட்டத்தையும் அவர்களின் உதவியுடன் முழு வலிமையுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படுத்த முடியும் என்று கூறினார். அவர்களது முயற்சிகளுக்கு பாராட்டுத் தெரிவித்த பிரதமர், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளை அமல்படுத்த அரசு தற்போது துரிதமாக செயல்பட்டு வருவதாகவும், அவர்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை கோருவதாகவும் கூறினார்.

இந்தியாவின் வேளாண் உற்பத்தி சாதனை அளவை எட்டியுள்ளது என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், 10-11 ஆண்டுகளுக்கு முன்பு வேளாண் உற்பத்தி சுமார் 265 மில்லியன் டன்னாக இருந்தது என்றும், அது தற்போது 330 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது என்றும் கூறினார். இதேபோல், தோட்டக்கலை உற்பத்தி 350 மில்லியன் டன்களைத் தாண்டியுள்ளது என்றார். விதை முதல் சந்தை வரையிலான அரசின் அணுகுமுறை, வேளாண் சீர்திருத்தங்கள், விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல், வலுவான மதிப்புச் சங்கிலி ஆகியவை இந்த வெற்றிக்கு காரணம் என்று அவர் கூறினார். நாட்டின் வேளாண் திறனை முழுமையாகப் பயன்படுத்தி, இன்னும் பெரிய இலக்குகளை அடைய வேண்டியதன் அவசியத்தை திரு நரேந்திர மோடி வலியுறுத்தினார். இந்த வகையில், குறைந்த உற்பத்தித் திறன் கொண்ட 100 விவசாய மாவட்டங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் வகையில் பட்ஜெட்டில் பிரதமரின் தன தன்ய கிரிஷி யோஜனா அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். ‘முன்னேற்றத்தை விரும்பும் மாவட்டங்கள்’ திட்டத்தின் மூலம் பல்வேறு வளர்ச்சி அளவுகோல்களில் நேர்மறையான பலன்கள் கிடைத்திருப்பதாகவும், ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு, ஆரோக்கியமான போட்டி ஆகியவற்றால் பயனடைவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த 100 மாவட்டங்களில் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவும் பிரதமரின் தன தன்ய கிரிஷி யோஜனா திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல, ஒவ்வொருவரும் இந்த மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட பலன்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சமீபத்திய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் நாட்டின் பருப்பு உற்பத்தியை அதிகரித்துள்ளன என்பதை விளக்கிய பிரதமர், இருப்பினும், உள்நாட்டு நுகர்வில் 20 சதவீதம் இன்னும் இறக்குமதியை நம்பியுள்ளது, இதனால் பருப்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கொண்டைக்கடலை, பாசிப்பயறு ஆகியவற்றில் இந்தியா தன்னிறைவு அடைந்துள்ள நிலையில், துவரம் பருப்பு, உளுந்து மற்றும் பருப்பு வகைகளின் உற்பத்தியை துரிதப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. பருப்பு உற்பத்தியை அதிகரிக்க, மேம்பட்ட விதைகளின் விநியோகத்தை பராமரிப்பது மற்றும் கலப்பின வகைகளை ஊக்குவிப்பது அவசியம் என்று கூறிய அவர், காலநிலை மாற்றம், சந்தை நிச்சயமற்ற தன்மை மற்றும் விலை ஏற்ற இறக்கங்கள் போன்ற சவால்களை எதிர்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

கடந்த பத்தாண்டுகளில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தனது உற்பத்தி பெருக்கத் திட்டத்தில் நவீன கருவிகளையும், அதிநவீன தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தியுள்ளது என்பதையும், இதன் விளைவாக 2014 முதல் 2024 வரை தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், தீவனம் மற்றும் கரும்பு உள்ளிட்ட 2,900 க்கும் மேற்பட்ட புதிய பயிர் வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்தப் புதிய ரகங்கள் விவசாயிகளுக்கு மலிவு விலையில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை  அவர் வலியுறுத்தினார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் அதிக மகசூல் தரும் விதைகளுக்கான தேசிய இயக்கம் அறிவிக்கப்பட்டிருப்பதையும் அவர் குறிப்பிட்டார். இந்த விதைகள் சிறு விவசாயிகளை சென்றடைவதை உறுதி செய்து, விதை சங்கிலியின் ஒரு பகுதியாக மாறுவதை உறுதி செய்வதில் தனியார் துறை பங்கேற்பாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இன்று மக்களிடையே ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட திரு மோடி, தோட்டக்கலை, பால்வளம், மீன்வளப் பொருட்கள் போன்ற துறைகளில் அதிகரித்து வரும் தேவையை எதிர்கொள்ள குறிப்பிடத்தக்க முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை சுட்டிக் காட்டினார். பழங்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், பீகாரில் மக்கானா வாரியத்தின் உருவாக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பல்வேறு வகையான ஊட்டச்சத்து உணவுகளை ஊக்குவிப்பதற்கான புதிய வழிகளைக் கண்டறியுமாறு அனைத்து பங்குதாரர்களையும் அவர் வலியுறுத்தினார், அவை நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் மற்றும் உலகச் சந்தையிலும் சென்றடைவதை உறுதி செய்தார்.

மதிப்புச் சங்கிலி, உள்கட்டமைப்பு மற்றும் மீன்வளத் துறையின் நவீனமயமாக்கல் ஆகியவற்றை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பிரதமரின்  மத்ஸ்ய சம்பதா திட்டம் 2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதை நினைவு கூர்ந்த பிரதமர், இந்த முயற்சி மீன்வளத் துறையில் உற்பத்தி, உற்பத்தித்திறன் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை ஆகியவற்றை மேம்படுத்தியுள்ளது என்றும், அதே நேரத்தில் இந்தத் துறையில் முதலீடுகள் பல்வேறு திட்டங்கள் மூலம் அதிகரித்துள்ளன, இதன் விளைவாக மீன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி இரட்டிப்பாகியுள்ளது என்றும் கூறினார். இந்திய பிரத்யேக பொருளாதார மண்டலம் மற்றும் திறந்த கடல்களில் நிலையான மீன்பிடியை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார், இந்த நோக்கத்திற்காக ஒரு திட்டம் தயாரிக்கப்படும். இந்தத் துறையில் எளிதாக வர்த்தகம் செய்வதை ஊக்குவிப்பதற்கான யோசனைகள் குறித்து விவாதம் செய்து, கூடிய விரைவில் அதற்கான பணிகளைத் தொடங்குமாறு சம்பந்தப்பட்டவர்களை திரு மோடி கேட்டுக் கொண்டார். பாரம்பரிய மீனவர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

“கிராமப்புற பொருளாதாரத்தை வளப்படுத்த எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது” என்று கூறிய பிரதமர், பிரதமரின் கிராமப்புற  வீட்டுவசதி திட்டத்தின்  கீழ், கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், சுவாமித்வா திட்டம் சொத்து உரிமையாளர்களுக்கு ‘உரிமைகளின் சாதனை’ வழங்கியுள்ளது என்றும் எடுத்துரைத்தார். சுய உதவிக் குழுக்களின் பொருளாதார வலிமை அதிகரித்துள்ளதாகவும், அவர்களுக்கு கூடுதல் ஆதரவு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டம் சிறு விவசாயிகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் பயனளித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்கும் இலக்கை மீண்டும் வலியுறுத்திய திரு மோடி, ஏற்கனவே 1.25 கோடி பெண்கள் லட்சாதிபதி சகோதரிகளாக  மாறியுள்ள நிலையில், கிராமப்புற வளம் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்காக இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவை எண்ணற்ற புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன என்று வலியுறுத்தினார். திறன் மற்றும் தொழில்நுட்பத்தில் முதலீடுகள் புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன என்றும் அவர் கூறினார். தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களை எவ்வாறு மேலும் சிறப்பானதாக மாற்றுவது என்பது குறித்து விவாதிக்குமாறு பிரதமர் ஒவ்வொருவரையும் கேட்டுக் கொண்டார். அவர்களின் ஆலோசனைகள் மற்றும் பங்களிப்புகள் மூலம் சாதகமான முடிவுகள் எட்டப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஒவ்வொருவரின் தீவிர பங்கேற்பும் கிராமங்களுக்கு அதிகாரம் அளித்து, கிராமப்புற குடும்பங்களை வளப்படுத்தும் என்று கூறி அவர் தமது உரையை நிறைவு செய்தார். பட்ஜெட்டின் திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதை உறுதி செய்ய இந்த வெபினார் உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். பட்ஜெட்டின் இலக்குகளை அடைய சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

***

PKV/PLM/KV