Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தலைவர்களின் அறிக்கை: ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் திருமதி உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய யூனியனின் ஆணையர்களின் இந்தியப் பயணம் (பிப்ரவரி 27-28, 2025)

தலைவர்களின் அறிக்கை: ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் திருமதி உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய யூனியனின் ஆணையர்களின் இந்தியப் பயணம் (பிப்ரவரி 27-28, 2025)


பிரதமர் திரு நரேந்திர மோடியும், ஐரோப்பிய ஆணையத்தின்  தலைவர் திருமதி உர்சுலா வான் டெர் லேயனும் ஐரோப்பிய யூனியனுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நல்லுறவானது இருநாட்டு மக்கள் நலனுக்கும் மற்றும் உலக நலனுக்கான பலன்களை அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 20 ஆண்டுக்கால இந்திய – ஐரோப்பிய யூனியனின் ராஜாங்க கூட்டாண்மை மற்றும் 30 ஆண்டுக்கும் மேலான இந்திய – ஐரோப்பிய யூனியன் கூட்டுறவு ஒப்பந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் தங்கள் நட்புறவை மேலும் வலுப்படுத்துவதென முடிவு செய்துள்ளனர்.

ஐரோப்பிய ஆணையத்தின்  தலைவர் திருமதி வான் டெர் லேயன் தனது ஆணையர்கள் குழுவிற்கு தலைமையேற்று அவர்களுடன் 2025 பிப்ரவரி 27-28 ஆகிய தேதிகளில் இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.  ஐரோப்பிய யூனியனில் இல்லாத நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாக இந்தப் பயணம் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். 

இரண்டு பெரிய ஜனநாயக அமைப்புகளின் பன்முகத்தன்மையுடன் கூடிய சமூகங்களில் சந்தை வாய்ப்புகளை மேம்படுத்தவும் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி, பொருளாதார வளர்ச்சி, நீடித்த ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில்  இணைந்து செயல்படுவது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளன. 

ஐநா-வின் விதிமுறைகளுக்கு ஏற்ப ஜனநாயக நடைமுறைகள், மற்றும் சர்வதேச விதிகள் ஆகியவற்றுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளன. இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் இணைந்து செயல்படுவதென இருநாட்டுத் தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். உலக அளவிலான விவகாரங்களில் இணைந்து செயல்படுவது குறித்தும் இரு நாடுகளிடையேயான நீடித்த வளர்ச்சியை உறுதி செய்வது குறித்தும் பரஸ்பரம் நாடுகளிடையே பொருளாதார முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

வர்த்தகம், விநியோகச் சங்கிலிகள், முதலீடு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்பு, திறன் மேம்பாடு, டிஜிட்டல் பரிவர்த்தனைகள், பசுமைத் தொழில்துறையில்  மாற்றங்கள், விண்வெளி, புவிசார் துறைகளின் வளர்ச்சி, பாதுகாப்பு, மக்கள் தொடர்பு போன்ற பல்வேறு துறைகளில் இந்திய – ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் தலைவர்கள் வலியுறுத்தினர். பருவநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவு நிர்வாகம், வளர்ச்சி நிதி, ஒன்றையொன்று சார்ந்திருக்கும் நிலை, பயங்கரவாதம் உள்ளிட்ட பொதுவான விவகாரங்களில் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் எடுத்துரைத்தனர்.

இந்தப் பயணத்தின்போது நடைபெற்ற இந்திய-ஐரோப்பிய யூனியனின் வர்த்தகம், தொழில்நுட்பக் குழுமத்தின் இரண்டாவது அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இருதலைவர்களும் வரவேற்றுள்ளனர். வர்த்தகம், தொழில்நுட்பம், பசுமை மாற்றம் ஆகியவற்றில் உத்திசார் நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய யூனியன்- இந்தியா நாடுகளின் அமைச்சர்கள் நிலயைில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பின் வெளியிடப்பட்ட முக்கிய  முடிவுகளை அவர்கள் வரவேற்றுள்ளனர்.

இருநாட்டுத் தலைவர்களின் கூட்டறிக்கை:

1. வளர்ந்து வரும் இந்திய – ஐரோப்பிய நாடுகளிடையேயான வர்த்தக மற்றும் பொருளாதார நல்லுறவுகளின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, சமநிலையிலான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைக்கான  குழுக்களை அமைத்தல், சந்தை வாயப்புகளை மேம்படுத்துதல், வர்த்தகத் தடைகளை அகற்றுதல், நம்பகத்தன்மையை மேம்படுத்துதல் போன்ற அம்சங்களில் இக்குழு பரஸ்பரம் தங்களது கருத்துக்கள் குறித்து விவாதிக்க உதவுமாறு தலைவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். முதலீட்டு பாதுகாப்பு, புவியியல் குறியீடுகள் குறித்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் அவர்கள் முடிவு செய்தனர்.

பொருளாதார பாதுகாப்பு, விநியோகச் சங்கிலி, சந்தை வாய்ப்புகள், வர்த்தகத் தடைகள், குறைமின்கடத்தி உற்பத்திக்கான சூழல் அமைப்புகளை வலுப்படுத்துதல், நீடித்த செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம், உயர் செயல்திறன் கொண்ட கணினி, 6-ம் தலைமுறை அலைக்கற்றைப் பயன்பாடு, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, தொழில்துறை போன்றவற்றில்  கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. பசுமை மற்றும் தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பங்களுக்கான கூட்டு ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் ஆகிய துறைகளில் விளைவு சார்ந்த ஒத்துழைப்பை வடிவமைக்க இந்திய-ஐரோப்பிய நாடுகள் ஒப்புக் கொண்டன. வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பகா குழுமத்திற்கு உரிய அறிவுரைகளை வழங்குதல், மின்சார வாகனங்களின் உற்பத்தி, கடல் பகுதிகளில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்து பசுமை / புதுப்பிக்கத்தக்க ஹைட்ரஜன் உற்பத்திக்காக மறுசுழற்சி செய்வது உட்பட அது சார்ந்த துறைகளில் இணைந்து செயல்படுவதற்கான சூழல் அமைப்பை மேம்படுத்துதல், செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலிகளை ஊக்குவித்தல், திறன் பரிமாற்றம், மாணவர்கள், இளம் தொழில் வல்லுநர்களிடையே குறைமின்கடத்தி தொடர்பான திறன்களை வளர்த்தல் போன்றவற்றில் இணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அவர்கள் வரவேற்றனர். 6-ம் தலைமுறை அலைக்கற்றைக்கான கூட்டமைப்பு மற்றும் அது சார்ந்த நவீன தொழில்நுட்பத்திற்கான கட்டமைப்புகள், ஆகியவற்றுக்கு இடையே பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதன் மூலம் விநியோகச் சங்கிலிகளை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தூய்மை எரிசக்தி, பருவநிலை மாற்றம், குடிநீர், நவீன  நகரமயமாக்கல், பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளில் இந்திய-ஐரோப்பிய நாடுகளிடையே ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டது. தூய்மை ஹைட்ரஜன் உற்பத்தி, கடல் காற்று, சூரிய சக்தி, நீடித்த நகர்ப்புற இயக்கம், விமானப் போக்குவரத்து மற்றும் ரயில்வே போன்ற குறிப்பிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் ஒப்புக் கொள்ளப்பட்டன. இந்திய-ஐரோப்பிய ஒன்றிய பசுமை ஹைட்ரஜன் மன்றம் மற்றும் கடல்சார் காற்றாலை எரிசக்தி குறித்த வர்த்தக உச்சிமாநாட்டை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

பரஸ்பர முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்கான எதிர்கால கூட்டு உத்திசார் செயல்திட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில், ஐரோப்பிய யூனியன் ஆணையர்களுக்கும் இந்திய அமைச்சர்களுக்கும் இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது அடையாளம் காணப்பட்ட ஒத்துழைப்புக்கான புதிய குறிப்பிட்ட பகுதிகளை உருவாக்குதல்.

புதுதில்லியில் நடைபெற்ற ஜி-20 தலைவர்களின் உச்சிமாநாட்டின் போது அறிவிக்கப்பட்ட இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடத்தை (IMEC) நடைமுறைப்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது, சர்வதேச சூரியசக்தி கூட்டணி (ISA), பேரிடர் தடுப்பு உள்கட்டமைப்புக்கான கூட்டணி (CDRI), தொழில்துறை மாற்றத்திற்கான தலைமைக் குழு (LeadIT 2.0), உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி ஆகியவற்றின் கட்டமைப்பில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துதல்.

உயர்கல்வி, ஆராய்ச்சி, சுற்றுலா, கலாச்சாரம், விளையாட்டு மற்றும் இளைஞர்களுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்தி, அத்தகைய பரிமாற்றங்களை மேம்படுத்துவதற்கான சூழலை உருவாக்குதல். இந்தியாவின் வளர்ந்து வரும் மனித மூலதனத்தைக் கருத்தில் கொண்டும், ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளின் மக்கள் தொகை விவரம், தொழிலாளர் சந்தை தேவைகளை கணக்கில் எடுத்துக்கொண்டும், திறமையான தொழிலாளர்கள், தொழில் வல்லுநர்கள் உள்ள பகுதிகளில் சட்டபூர்வ, பாதுகாப்பான இடப்பெயர்வை ஊக்குவித்தல்.

சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட சுதந்திரமான, திறந்த, அமைதியான மற்றும் வளமான இந்திய-பசிபிக் பகுதியை ஊக்குவிப்பது, இறையாண்மைக்கு பரஸ்பரம் மரியாதை அளித்தல், பிராந்திய அமைப்புகளின் அடிப்படையிலான பிரச்சினைகளுக்கு அமைதியான தீர்வு காண்பது ஆகியவற்றுக்கான தங்களது அர்ப்பணிப்பை தலைவர்கள் மீண்டும் உறுதி செய்தனர். இந்தோ-பசிபிக் பெருங்கடல் முன்முயற்சியில் (IPOI) ஐரோப்பிய யூனியன் இணைந்ததை இந்தியா வரவேற்றது. ஆப்பிரிக்கா, இந்தோ-பசிபிக் உட்பட முத்தரப்பு ஒத்துழைப்பை ஆராய இரு தரப்பினரும் உறுதியளித்தனர்.

இந்திய கடற்படைக்கும், ஐரோப்பிய யூனியன் கடல்சார் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் இடையேயான கூட்டுப் பயிற்சிகள், ஒத்துழைப்பு உட்பட பாதுகாப்புச் சூழலில் ஒத்துழைப்பு வளர்ந்து வருவது குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். ஐரோப்பிய யூனியனின் நிரந்தர கட்டமைப்பு ஒத்துழைப்பு (பெஸ்கோ) திட்டத்தின் கீழ் செயல்படும் திட்டங்களில் சேரவும், தகவல் பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவும் இந்தியா ஆர்வம் காட்டுவதை ஐரோப்பிய யூனியன் தரப்பு வரவேற்றது. பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை ஆராயவும் தலைவர்கள் உறுதியளித்தனர். வர்த்தகம், கடல்வழி தகவல் தொடர்புகளை பாதுகாத்தல், அச்சுறுத்தல்களை முறியடித்து கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட சர்வதேச அமைதிக்கான  தங்களது உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர். எல்லை தாண்டிய பயங்கரவாதம், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்தல் உள்ளிட்டவற்றை எதிர்த்துப் போராடுவதில் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர்.

இரு தலைவர்களும் மத்திய கிழக்கு நிலைமை, உக்ரைன் போர் உட்பட முக்கிய சர்வதேச, பிராந்திய பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தனர். சர்வதேசச் சட்டம், ஐநா சாசனத்தின் கொள்கைகள், பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவற்றின் அடிப்படையில் உக்ரைனில் நியாயமான,நீடித்த அமைதிக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்தனர். சர்வதேசச் சட்டங்களுக்கு இணங்க, அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் அமைதியுடனும் பாதுகாப்புடனும் இஸ்ரேலும் பாலஸ்தீனமும் தீர்வை எட்டுவதற்கான தொலைநோக்கு பார்வைக்கான தங்களது உறுதிப்பாட்டையும் அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.

 

விவாதங்களின் ஆக்கப்பூர்வமான, தொலைநோக்குப் பார்வையை இரு தலைவர்களும் அங்கீகரித்து கீழ்க்காணும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒப்புக் கொண்டனர்:

I.          தடையற்ற வர்த்தக உடன்படிக்கையை இந்த வருட இறுதிக்குள் முடிவுக்கு கொண்டு வருவதைத் துரிதப்படுத்த வேண்டும்

II.         புதிய முன்முயற்சிகள், திட்டங்களில் இருந்து வாய்ப்புகளை கண்டறிவதற்காக பாதுகாப்பு தொழில்துறை மற்றும் கொள்கைகளில் மேலும் கவனம் செலுத்துவது.

III.        ஐ.எம்.இ.சி முன்முயற்சி குறித்து மதிப்பீடு செய்ய பங்குதாரர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்துவது

IV.        பகிரப்பட்ட மதிப்பீடு, ஒருங்கிணைப்பு மற்றும் இயங்குதன்மையை ஊக்குவிக்கும் நோக்கில் கடல்சார் கள விழிப்புணர்வில் ஈடுபடுதல்.

V.         குறைக்கடத்திகள் மற்றும் பிற முக்கிய தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை ஆழப்படுத்த வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலின் (டிடிசி) அடுத்த கூட்டத்தை விரைவில் கூட்டுதல்

VI.        பசுமை ஹைட்ரஜனில் கவனம் செலுத்தி, அரசுகளுக்கும் தொழில்துறைக்கும் இடையே பசுமை எரிசக்தி குறித்த உரையாடலை மேம்படுத்துதல்

VII.       முத்தரப்பு ஒத்துழைப்புத் திட்டங்கள் உட்பட இந்தோ-பசிபிக் பகுதியில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்

VIII.      பேரிடர் மேலாண்மையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், தயார்நிலை, எதிர்வினை திறன், ஒருங்கிணைப்புக்கான கொள்கை, தொழில்நுட்ப அளவிலான ஈடுபாடு உட்பட பொருத்தமான ஏற்பாடுகளை உருவாக்குதல்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த பயணம், உறவுகளின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்த இரு தலைவர்களும், இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான உத்திசார் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தவும், ஆழப்படுத்தவும் தங்களது கடப்பாட்டை மீண்டும் உறுதி செய்தனர். பரஸ்பரம் வசதியான நேரத்தில் இந்தியாவில் நடைபெறவுள்ள அடுத்த இந்திய ஐரோப்பிய யூனியன் உச்சிமாநாட்டை அவர்கள் எதிர்நோக்கியிருப்பதாகவும், அந்த சந்தர்ப்பத்தில் புதிய கூட்டு உத்திசார் செயல்திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அவர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். பிரதமர் திரு நரேந்திர மோடியின் அன்பான விருந்தோம்பலுக்கு ஐரோப்பிய யூனியன் தலைவர் வொன் டெர் லேயன் நன்றி தெரிவித்தார்.

*****

TS/SV/PLM/KPG/RJ/DL