Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2025 தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2025 தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்


மத்தியப் பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் படேல் அவர்களே, முதலமைச்சர் திரு மோகன் யாதவ் அவர்களே, மற்ற மதிப்புக்குரிய பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!

நான் இங்கு வரத் தாமதமானதற்கு முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தாமதம் ஏற்பட்டது ஏனென்றால் நான் நேற்று இங்கு வந்தபோது, இன்று, 10 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் இருப்பதை உணர்ந்தேன். நான் ஆளுநர் மாளிகையை  விட்டு புறப்படும் நேரமும் அவர்களின்  தேர்வுகள் நடக்கும் நேரமும் ஒன்றாக இருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக சாலைகள் மூடப்பட்டால், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதில் சிரமங்களைச் சந்திக்க நேரிடும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படக்கூடாது என்பதற்காக, அனைத்து மாணவர்களும் தேர்வு மையங்களுக்கு வந்துவிட்டார்களா என்பதை உறுதி செய்த பின்னரே ஆளுநர் மாளிகையிலிருந்து புறப்பட முடிவு செய்தேன். எனவே, நான் வேண்டுமென்றே எனது புறப்பாட்டை 15-20 நிமிடங்கள் தாமதப்படுத்தினேன்.   இது உங்கள் அனைவருக்கும் சிரமங்களை ஏற்படுத்தியிருக்கும். எனவே, உங்கள் அனைவரிடமும் மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

நண்பர்களே,

ராஜா போஜின் இந்தப் புனித நகரத்திற்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் நான் பெருமைப்படுகிறேன். பல்வேறு தொழில்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த பலர் இங்கு கூடியுள்ளனர். வளர்ச்சியடைந்த மத்தியப் பிரதேசம் என்பதிலிருந்து  வளர்ச்சியடைந்த இந்தியா வரையிலான பயணத்தில் இன்றைய நிகழ்வு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்த மகத்தான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள முதலமைச்சர்  மோகன் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

மத்தியப்பிரதேசம் மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவின் ஐந்தாவது பெரிய மாநிலமாகும். இது விவசாயத்தில் சிறந்த மாநிலங்களில் ஒன்றாகும். கனிம வளத்தில் முதல் ஐந்து மாநிலங்களில் ஒன்றாகும். உயிர் கொடுக்கும் அன்னை நர்மதாவால் ஆசீர்வதிக்கப்பட்டது மத்தியப் பிரதேசம். மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் நாட்டின் முதல் ஐந்து மாநிலங்களில் ஒன்றாக மாறுவதற்கான அனைத்து ஆற்றல்களையும் சாத்தியக்கூறுகளையும் இந்த மாநிலம் கொண்டுள்ளது.

நண்பர்களே,

கடந்த 20 ஆண்டுகளில், மக்களின் ஆதரவுடன், மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாஜக அரசு நல்லாட்சியில் கவனம் செலுத்தியுள்ளது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு, முதலீட்டாளர்கள் இங்கு முதலீடு செய்யதா தயங்கினர். ஆனால் இன்று, மத்தியப் பிரதேசம் நாட்டின் சிறந்த முதலீட்டு இலக்குகளில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இன்று, இந்தியாவின் மின்சார வாகன புரட்சி ஏற்பட்டுள்ள முன்னணி மாநிலங்களில் ஒன்றாக மத்தியப் பிரதேசம் உள்ளது. ஜனவரி 2025 இல் மாநிலத்தில் ஏறத்தாழ 2 லட்சம் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது சுமார் 90% வளர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது. புதிய உற்பத்தித் துறைகளுக்கு கவர்ச்சிகரமான இடமாக மத்தியப் பிரதேசம் வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை இது காட்டுகிறது. இந்த ஆண்டை தொழில் மற்றும் வேலைவாய்ப்பு ஆண்டாக அறிவித்ததற்காக மோகன் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

மத்தியப்பிரதேசம் இன்று, சுமார் 31,000 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட மின்சார உபரி மாநிலமாக உள்ளது, இதில் 30% சுத்தமான எரிசக்தி ஆதாரங்களில் இருந்து வருகிறது. ரேவா சூரிய பூங்கா நாட்டின் மிகப்பெரிய சூரிய பூங்காக்களில் ஒன்றாகும். சமீபத்தில், ஓம்கரேஷ்வரில் ஒரு மிதக்கும் சூரிய சக்தி ஆலை திறக்கப்பட்டது. கூடுதலாக, பினா சுத்திகரிப்பு பெட்ரோ கெமிக்கல் வளாகத்தில் அரசாங்கம் 50,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது, இது மத்தியப் பிரதேசத்தை பெட்ரோ ரசாயனங்களுக்கான மையமாக நிறுவ உதவும். வளர்ந்து வரும் இந்த உள்கட்டமைப்பை ஆதரிக்க, மத்தியப் பிரதேச அரசு நவீன கொள்கைகள் மற்றும் சிறப்பு தொழில்துறை உள்கட்டமைப்புகளைஏற்படுத்தி வருகிறது. மாநிலத்தில் ஏற்கனவே 300 க்கும் மேற்பட்ட தொழில்துறை மண்டலங்கள் உள்ளன, மேலும் பிதாம்பூர், ரத்லம் மற்றும் தேவாஸில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பெரிய முதலீட்டு மண்டலங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதன் பொருள் என்னவென்றால், அனைத்து முதலீட்டாளர்களுக்கும், மத்தியப் பிரதேசம் அதிக வருமானத்திற்கான மகத்தான வாய்ப்புகளை வழங்குகிறது.

நண்பர்களே,

மத்தியப் பிரதேசத்தில் இரட்டை என்ஜின் அரசு அமைந்த பிறகு, வளர்ச்சியின் வேகமும் இரட்டிப்பாகியுள்ளது. மாநிலம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு எம்.பி.யுடன் தோளோடு தோள் நின்று பணியாற்றி வருகிறது. தேர்தலின் போது, நாங்கள் எங்கள் மூன்றாவது பதவிக்காலத்தில் மூன்று மடங்கு வேகமாக பணியாற்றுவோம் என்று நான் கூறியிருந்தேன். 2025 ஆம் ஆண்டின் முதல் 50 நாட்களில் இந்த வேகத்தை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இந்த மாதம், எங்கள் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில், பாரதத்தின் வளர்ச்சிக்கான ஒவ்வொரு கிரியா ஊக்கியையும் நாங்கள் உற்சாகப்படுத்தியுள்ளோம்.

இந்தியாவின் ஜவுளித் தொழில் லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. ஜவுளித்துறையில் வலுவான பாரம்பரியம், திறமையான தொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் உணர்வை பாரத் கொண்டுள்ளது. குறிப்பாக, மத்தியப் பிரதேசம் பாரதத்தின் பருத்தி தலைநகராகக் கருதப்படுகிறது. பாரதத்தின் இயற்கை பருத்தி விநியோகத்தில் சுமார் 25 சதவீதம் மத்திய பிரதேசத்தில் இருந்து வருகிறது. நாட்டிலேயே மல்பரி பட்டு உற்பத்தியில் இந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இங்குள்ள புகழ்பெற்ற சாந்தேரி மற்றும் மகேஸ்வரி புடவைகள் மிகவும் பிரபலமானவை மற்றும் அவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளன. இந்தத் துறையில் நீங்கள் செய்யும் முதலீடு, மத்தியப் பிரதேசத்தின் ஜவுளித் துறை உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்த கணிசமாக உதவும்.

நண்பர்களே,

பாரம்பரிய ஜவுளிகள் தவிர, பாரத் புதிய வழிகளையும் ஆராய்ந்து வருகிறது. தொழில்நுட்ப ஜவுளிகள் பிரிவின் கீழ் வரும் வேளாண் ஜவுளிகள், மருத்துவ ஜவுளிகள் மற்றும் புவி ஜவுளிகளை நாங்கள் ஊக்குவித்து வருகிறோம். இதற்காக ஒரு தேசிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது, பட்ஜெட்டில் அதற்கான சலுகைகளை நாங்கள் வழங்கியுள்ளோம்.

“இதுதான் நேரம், சரியான நேரம்.” மத்தியப் பிரதேசத்தில் முதலீடு செய்யவும், முதலீடுகளை விரிவுபடுத்தவும் இதுவே சரியான நேரம் என்று நான் செங்கோட்டையில் இருந்து கூறினேன். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி.

***

TS/SMB/KV/KR