Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்

பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்


 

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம், கர்ஹா கிராமத்தில் பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (23.02.2025) அடிக்கல் நாட்டினார். குறுகிய காலத்தில் இரண்டாவது முறையாக பண்டேல்கண்ட் பகுதிக்கு வந்தது தமது அதிர்ஷ்டம் என்று குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, ஆன்மிக மையமான பாகேஷ்வர் தாம் விரைவில் ஒரு சுகாதார மையமாகவும் மாறும் என்றார். பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் 10 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் என்றும், முதல் கட்டத்தில் 100 படுக்கை வசதிகள் தயாராக இருக்கும் என்றும் அவர் கூறினார். இந்த உன்னதமான பணிக்காக திரு தீரேந்திர சாஸ்திரியைப் பாராட்டிய பிரதமர், பண்டேல்கண்ட் மக்களுக்குத் தமது வாழ்துக்களைத் தெரிவித்தார்.

இப்போதெல்லாம் மதத்தை கேலி செய்து, மக்களைப் பிரிக்கும் அரசியல் தலைவர்கள் சிலர் உள்ளனர் என்று பிரதமர் குறிப்பிட்டார். சில நேரங்களில், தேசத்தையும் மதத்தையும் பலவீனப்படுத்த வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்தும் அத்தகைய நபர்களுக்கு ஆதரவு கிடைக்கிறது என்று அவர் மேலும் கூறினார். இந்து மதத்தை வெறுக்கும் மக்கள் நீண்ட காலமாக பல்வேறு வடிவங்களில் இருந்து வருகின்றனர் என்று அவர் கூறினார். நமது நம்பிக்கைகள், பாரம்பரியங்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்த அம்சங்கள் நமது கலாச்சாரம், கொள்கைகள் மீதான தாக்குதல்கள் என்று குறிப்பிட்டார். இத்தகைய நபர்கள் நமது பண்டிகைகள், பழக்கவழக்கங்கள், சடங்குகளை குறிவைக்கிறார்கள் எனவும், நமது மதம், கலாச்சாரத்தின் உள்ளார்ந்த முற்போக்கான தன்மையை இழிவுபடுத்தவும் துணிகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். நமது சமூகத்தைப் பிளவுபடுத்தி அதன் ஒற்றுமையை உடைக்க வேண்டும் என்ற அவர்களின் செயல் திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி சுட்டிக் காட்டினார். இந்தச் சூழலில், நீண்ட காலமாக நாட்டில் ஒற்றுமை என்ற மந்திரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் திரு தீரேந்திர சாஸ்திரியின் முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார். புற்றுநோய் நிறுவனத்தை நிறுவுவதன் மூலம் சமூகம், மனிதகுலத்தின் நலனுக்காக திரு தீரேந்திர சாஸ்திரி மற்றொரு உறுதிமொழியை எடுத்துள்ளதாக திரு நரேந்திர மோடி கூறினார். இதன் விளைவாக, பாகேஷ்வர் தாமில் பக்தி, ஆரோக்கியமான வாழ்க்கை ஆகிய இரண்டும் ஆசீர்வாதங்களுடன் இப்போது கிடைக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

“நமது கோயில்கள், மடாலயங்கள், புனிதத் தலங்கள் வழிபாட்டு மையங்களாகவும், அறிவியல், சமூக சிந்தனைக்கான மையங்களாகவும் இரட்டை பங்களிப்பைக் கொண்டுள்ளன” என்று கூறிய பிரதமர், நமது ஞானிகள் நமக்கு ஆயுர்வேதம், யோகா அறிவியலை வழங்கியுள்ளதாகவும், அவை இப்போது உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார். பிறருக்குச் சேவை செய்வதும், அவர்களின் துயர் துடைப்பதுமே உண்மையான மதம் என்று அவர் தெரிவித்தார். “நாராயணனில் நரன்”, “எல்லா உயிர்களிலும் சிவன்” என்ற உணர்வுகளுடன் அனைத்து உயிர்களுக்கும் சேவை செய்யும் நமது பாரம்பரியத்தைப் பிரதமர் எடுத்துரைத்தார். கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்று, புனித நீராடி, துறவிகளின் ஆசீர்வாதங்களைப் பெறும் மகா கும்பமேளா குறித்த பரவலான விவாதங்கள் நடைபெற்று வருவதைக் குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, இதை “ஒற்றுமைக்கான மகா கும்பமேளா” என்று பாராட்டியதுடன், அனைத்து தூய்மைப் பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகளின் அர்ப்பணிப்பு மிக்க சேவைக்கு நன்றி தெரிவித்தார். மகா கும்பமேளாவுக்கு மத்தியில், ‘நேத்ர மகா கும்பமேளா’ நடத்தப்பட்டாலும், அது அதிக கவனத்தை ஈர்க்கவில்லை என்றும், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட கண் பரிசோதனைகள் நடத்தப்பட்டிருப்பதாகவும், சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு இலவச மருந்துகளும் கண்ணாடிகளும் வழங்கப்பட்டிருப்பதாகவும், சுமார் 16,000 நோயாளிகள் கண்புரை, பிற அறுவை சிகிச்சைகளுக்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். மகா கும்பமேளாவில், நமது ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், தன்னார்வலர்கள் தன்னலமின்றி பங்கேற்று வழங்கி வரும் எண்ணற்ற சுகாதார சேவை தொடர்பான முன்முயற்சிகளை பிரதமர் பாராட்டினார். கும்பமேளாவில் பங்கேற்றவர்கள் இந்த முயற்சிகளை பாராட்டியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியா முழுவதும் பெரிய மருத்துவமனைகளை நடத்துவதில் மத நிறுவனங்களின் பங்கை பிரதமர் சுட்டிக் காட்டினார். பல சுகாதார, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் மத அறக்கட்டளைகளால் நிர்வகிக்கப்பட்டு, கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு சிகிச்சையையும் சேவையையும் வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார். கடவுள் ராமருடன் தொடர்புடைய பண்டேல்கண்டில் உள்ள புனித யாத்திரை தலமான சித்ரகூட், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கு சேவை செய்வதற்கான முக்கிய மையமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். ஆரோக்கியத்தின் ஆசீர்வாதங்களை வழங்குவதன் மூலம் இந்த புகழ்பெற்ற பாரம்பரியத்திற்கு பாகேஷ்வர் தாம் புதிய அத்தியாயத்தை சேர்ப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, மகாசிவராத்திரி அன்று, 251 மகள்களுக்கு வெகுஜன திருமண விழா நடைபெறும் என்று அவர் அறிவித்தார். இந்த உன்னதமான முன்முயற்சிக்காக பாகேஷ்வர் தாம் அமைப்பைப் பாராட்டிய பிரதமர், எதிர்காலத்தில் அழகான வாழ்க்கை வாழ புதுமணத் தம்பதிகள், மகள்கள் அனைவருக்கும் தமது மனமார்ந்த பாராட்டுகளையும் ஆசிகளையும் தெரிவித்தார்.

மகிழ்ச்சி, வெற்றியை அடைவதற்கு நமது உடலும் ஆரோக்கியமும் முதன்மையான வழிகள் என்று பிரதமர் வலியுறுத்தினார். சேவை செய்வதற்கான வாய்ப்பை நாடு தமக்கு வழங்கியபோது, “அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்” என்ற மந்திரத்தை அரசின் தீர்மானமாக தாம் ஆக்கிக் கொண்டதாக பிரதமர் குறிப்பிட்டார். அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்பதன் முக்கிய அடித்தளம் அனைவருக்கும் சுகாதாரம் என்றும் பொருள்படும் என அவர் தெரிவித்தார். பல்வேறு நிலைகளில் நோய்களை தடுப்பதன் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் கட்டப்பட்டதைக் குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, கழிப்பறைகள் கட்டப்படுவதால் சுகாதாரமற்ற சூழலால் ஏற்படும் நோய்கள் குறைந்துள்ளன என்றார். கழிப்பறை வசதி உள்ள வீடுகள் மருத்துவச் செலவுகளுக்காக ஆயிரக்கணக்கான ரூபாய்களை மிச்சப்படுத்தியுள்ளதாக ஆய்வு ஒன்றைக் குறிப்பிட்டு அவர் மேற்கோள் காட்டினார்.

2014-ம் ஆண்டில் தமது அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, நாட்டில் உள்ள ஏழைகள் நோயை விட சிகிச்சைக்கான செலவு குறித்து அதிகம் அஞ்சினர் என்று குறிப்பிட்ட பிரதமர், ஒரு குடும்பத்தில் கடுமையான நோய் ஏற்பட்டால், அது ஒட்டுமொத்த குடும்பத்தையும் நெருக்கடியில் ஆழ்த்தும் என்று சுட்டிக்காட்டினார். தாமும் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த நபர் என்றும், இதுபோன்ற கஷ்டங்களைக் கண்டதாகவும், சிகிச்சைக்கான செலவைக் குறைக்கவும், மக்களுக்கு அதிக பணத்தை மிச்சப்படுத்தவும் தீர்மானித்ததாகவும் அவர் கூறினார். அரசு திட்டங்களில் ஏழை எவரும் விடுபடக் கூடாது என்பதை உறுதி செய்வதில் தமது உறுதிப்பாட்டை வலியுறுத்திய திரு நரேந்திர மோடி, மருத்துவச் செலவுகளின் சுமையை குறைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், ஆயுஷ்மான் அட்டை மூலம் ஒவ்வொரு ஏழை நபருக்கும் ரூ. 5 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்க முடியும் என்பதையும் எடுத்துரைத்தார்.

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு இலவச சிகிச்சைக்காக ஆயுஷ்மான் அட்டைகள் தற்போது வழங்கப்படுவதாகத் தெரிவித்த திரு நரேந்திர மோடி, இந்த அட்டைகளை எந்த கட்டணமும் இல்லாமல் இணையதளம் மூலம் பெறலாம் என்று கூறினார். ஆயுஷ்மான் அட்டைக்கு யாரும் பணம் செலுத்த வேண்டாம் என்று அவர் தெரிவித்தார். யாராவது பணம் கேட்டால் புகார் தெரிவிக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டார். பல சிகிச்சைகளுக்கு மருத்துவமனையில் அனுமதி தேவையில்லை என்றும், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை வீட்டிலேயே எடுத்துக் கொள்ளலாம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். மருந்துகளின் விலையைக் குறைக்க, நாடு முழுவதும் 14,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தக மையங்கள் திறக்கப்பட்டு, மலிவு விலையில் மருந்துகள் வழங்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார். சிறுநீரக நோய்க்குத் தொடர்ச்சியான டயாலிசிஸ் தேவைப்படுவது மற்றொரு குறிப்பிடத்தக்க சுகாதார பிரச்சினை என்றும், 700-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 1,500-க்கும் மேற்பட்ட டயாலிசிஸ் மையங்கள் திறக்கப்பட்டு, இலவச டயாலிசிஸ் சேவைகள் வழங்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார். ஒவ்வொருவரும் தங்களுக்கு அறிமுகமானவர்களிடையே அரசின் இந்தத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், இதன் பலன்களை யாரும் தவறவிடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

“புற்றுநோய் எல்லா இடங்களிலும் ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினையாக மாறியுள்ளது எனவும், புற்றுநோய்க்கு எதிரான போரில் அரசு, சமூகம், துறவிகள் ஆகிய அனைவரும் ஒன்றுபட்டுள்ளனர் என்றும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். ஒருவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டால், அவரது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் சிரமங்களை பிரதமர் குறிப்பிட்டார். முன்கூட்டியே நோய் கண்டறிதல் இல்லாதது, பல நோய்களுக்கு வீட்டு வைத்தியத்தை நம்பியிருக்கும் போக்கு ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார். இதன் விளைவாக நிலைமை மோசமடையும் போது தாமதமாக நோய் கண்டறியப்படுகிறது என அவர் தெரிவித்தார். தில்லி, மும்பை ஆகிய இடங்களில் உள்ள சிகிச்சை மையங்களைப் பற்றி மட்டுமே பலருக்குத் தெரியும் என்பதால், புற்றுநோய் கண்டறியப்பட்டவுடன் குடும்பங்களைப் பீடித்துள்ள பயம், குழப்பத்தை பிரதமர் குறிப்பிட்டார். புற்றுநோயை எதிர்த்துப் போராட இந்த ஆண்டு பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் உட்பட, இந்த சவால்களை எதிர்கொள்ள அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளை அவர் விளக்கினார். புற்றுநோய் மருந்துகளை மிகவும் மலிவு விலையில் வழங்குவதில் அரசு உறுதிபூண்டுள்ளதாகவும், அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் புற்றுநோய் தினப் பராமரிப்பு மையங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த மையங்கள் நோய் கண்டறிதல், ஓய்வு, பராமரிப்பு சேவைகளை வழங்கும் என அவர் தெரிவித்தார். மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையங்களும், உள்ளூர் பகுதிகளில் மருத்துவ மையங்களும் திறக்கப்படுவதையும் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார்.

புற்றுநோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், புற்றுநோய் பரவி விட்டால் அதை எதிர்த்துப் போராடுவது கடினமாகிவிடும் என்றார். முன்கூட்டியே கண்டறிவது மிகவும் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார். 30 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களையும் பரிசோதனை செய்வதற்கான தற்போதைய இயக்கத்தை அவர் எடுத்துரைத்தார். மேலும் அனைவரும் இதில் பங்கேற்கவும், அலட்சியத்தைத் தவிர்க்கவும் வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக புற்றுநோய் பரிசோதனை செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். புற்றுநோய் பற்றிய துல்லியமான தகவல்களின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டிய திரு நரேந்திர மோடி, இது ஒரு தொற்று நோய் அல்ல என்றும், தொடுவதன் மூலம் பரவாது என்றும் குறிப்பிட்டார். பீடி, சிகரெட், குட்கா, புகையிலை, மசாலாப் பொருட்களைப் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என்று சுட்டிக்காட்டியதுடன் இந்த பொருட்களிலிருந்து விலகி இருக்குமாறு அவர் அறிவுறுத்தினார். ஒவ்வொருவரும் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும், எந்தவொரு அலட்சியத்தையும் தவிர்க்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மக்களுக்கு சேவை செய்வதில் தமது அர்ப்பணிப்பை வலியுறுத்திய பிரதமர், இதற்கு முன்பு சத்தர்பூருக்கு பயணம் மேற்கொண்டபோது, இங்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டியதை நினைவு கூர்ந்தார். பல்வேறு அரசுகள், தலைவர்கள் பண்டேல்கண்டுக்கு வருகை தந்த போதிலும் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ரூ. 45,000 கோடி கென்-பெட்வா இணைப்புத் திட்டம் இப்போது செயல்படுத்தப்பட்டதை அவர் எடுத்துரைத்தார். இந்தப் பிராந்தியத்தில் தொடர்ந்து நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை சுட்டிக்காட்டிய திரு நரேந்திர மோடி, முந்தைய அரசுகள் ஏதேனும் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா என்று கேள்வி எழுப்பினார். மக்களின் ஆசீர்வாதங்களைப் பெற்ற பின்னர் பணிகள் தொடங்கப்பட்டன என்று அவர் கூறினார். குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதில் ஏற்பட்டுள்ள துரித முன்னேற்றத்தை அவர் சுட்டிக் காட்டினார். ஜல் ஜீவன் இயக்கம்,  இல்லம் தோறும் குடிநீர் குழாய் இணைப்புத் திட்டங்களின் கீழ், பண்டேல்கண்ட் முழுவதும் உள்ள கிராமங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார். விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தவிர்க்கவும், அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் நடந்து வரும் முயற்சிகளையும் அவர் எடுத்துரைத்தார். இந்த அரசு இரவும் பகலும் அயராது உழைத்து வருவதாக அவர் கூறினார்.

பண்டேல்கண்ட் பகுதியின் வளத்திற்கு பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு நரேந்திர மோடி, லட்சாதிபதி சகோதரிகள், ட்ரோன் சகோதரிகள் போன்ற முன்முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டது குறித்து குறிப்பிட்டார். 3 கோடி பெண்களை லட்சாதிபதி சகோதரிகளாக மாற்றும் இலக்கை சுட்டிக்காட்டினார். ட்ரோன்களை இயக்க பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், அவை உரம் தெளிப்பதற்கும் விவசாயத்திற்கு உதவுவதற்கும் பயன்படுத்தப்படும் என்றும் அவர் எடுத்துரைத்தார். இந்த முயற்சிகள் பண்டேல்கண்ட் பகுதியை விரைவாக வளத்தை நோக்கி கொண்டு செல்லும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

துல்லியமான நில அளவீடு, உறுதியான நிலப் பதிவுகளை வழங்குவதற்கு ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் கிராமங்களில் ட்ரோன் தொழில்நுட்பம் குறிப்பிடத்தக்க அளவில் பயன்படுத்தப்படுவதை பிரதமர் விளக்கினார். மத்தியப் பிரதேசத்தில் இந்த முயற்சி வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டதைக் குறிப்பிட்ட பிரதமர், இங்கு மக்கள் தற்போது இந்த ஆவணங்களைப் பயன்படுத்தி வங்கிகளிடமிருந்து எளிதாகக் கடன்களைப் பெற்று, அவற்றை வர்த்தகத்திற்குப் பயன்படுத்தி, அதன் மூலம் வருமானத்தை அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டார்.

பண்டேல்கண்ட் பகுதி வளர்ச்சியின் புதிய உச்சங்களை எட்டுவதற்கு மத்திய, மாநில அரசுகள் அயராத முயற்சிகளை மேற்கொண்டு வருவதை அவர் குறிப்பிட்டார். பண்டேல்கண்ட் வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து பயணிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், அனைவருக்கும் தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துத் தமது உரையை நிறைவு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் சகன்பாய் படேல், மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு மோகன் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னணி:

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டம் கர்ஹா கிராமத்தில் பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறந்த சுகாதார சேவைகளை உறுதி செய்வதற்காக கட்டப்பட்டு வருகிறது. ரூ. 200 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள புற்றுநோய் மருத்துவமனை ஏழை புற்றுநோயாளிகளுக்கு இலவச சிகிச்சையை வழங்கும். மேலும் அதிநவீன இயந்திரங்கள், சிறப்பு மருத்துவர்களை இது கொண்டிருக்கும்.

*******

PLM/KV