எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் உங்களனைவரையும் வரவேற்கிறேன். இன்றைய நாட்களில் சேம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து இடங்களிலும் கிரிக்கெட்டுக்கான சூழல் நிலவி வருகிறது. கிரிக்கெட்டில் சதம் அடிப்பதில் இருக்கும் புளகாங்கிதம் என்ன என்பதை நாம் அனைவருமே நன்கறிவோம். ஆனால் இன்று நான் உங்களனைவரிடத்திலும் கிரிக்கெட்டைப் பற்றியல்ல, பாரதம் விண்வெளியில் சதம் அடித்திருப்பதைப் பற்றி உரையாட இருக்கிறேன். கடந்த மாதம் தான் இஸ்ரோ விண்ணில் செலுத்திய 100ஆவது செயற்கைக்கோளின் சாட்சியாக தேசமே இருந்தது. இது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல, மாறாக அன்றாடம் புதிய உச்சங்களைத் ஸ்பரிசிக்கும் நமது உறுதிப்பாட்டையும் அடையாளப்படுத்துகிறது. நமது விண்வெளிப்பயணப் பயணம் மிக எளிய முறையிலே தான் தொடங்கியது. இதிலே ஒவ்வோர் அடியிலும் சவால்கள் இருந்தன. ஆனால், நமது விஞ்ஞானிகள் வெற்றிக்கொடியை நாட்டியபடி தொடர்ந்து முன்னேறினார்கள். காலப்போக்கில் விண்வெளியின் இந்தப் பாய்ச்சலில் நமது வெற்றிகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகத் தொடங்கியது. ஏவுகலன் அமைப்பதாகட்டும், சந்திரயானின் வெற்றியாகட்டும், மங்கல்யானாகட்டும், ஆதித்ய எல்-1 அல்லது ஒரே ஒரு ஏவுகலன் மூலமாக, ஒரே முறையில், 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் வரலாறுகாணா செயல்பாடாகட்டும், இஸ்ரோவின் வெற்றித்தொடர் மிகவும் பெரியது. கடந்த பத்தாண்டுகளில் சுமார் 460 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றிலே மற்ற நாடுகளின் பல செயற்கைக்கோள்களும் அடங்கும். அண்மை ஆண்டுகளின் ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், விண்வெளி விஞ்ஞானிகள் கொண்ட நமது குழுவிலே பெண்சக்தியின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதுதான். இன்று விண்வெளித்துறை நமது இளைஞர்களுக்கு விருப்பமான ஒன்றாக ஆகியிருக்கிறது என்பது மிகுந்த உவகையை எனக்கு அளிக்கிறது. சில ஆண்டுகள் முன்பு வரை இந்தத் துறையில் ஸ்டார்ட் அப் குறித்தோ, தனியார் துறையின் விண்வெளி நிறுவனங்களின் எண்ணிக்கை பல நூற்றுக்கணக்காகும் என்றோ யார் தான் நினைத்தார்கள்!! வாழ்க்கையை விறுவிறுப்பான, சுவாரசியமான வகையில் அனுபவிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு, விண்வெளித்துறை ஒரு மிகச் சிறப்பான தேர்வாக ஆகி வருகிறது.
நண்பர்களே, இன்னும் சில நாட்களில் நாம் தேசிய அறிவியல் தினத்தைக் கொண்டாட இருக்கிறோம். நமது குழந்தைகளுடைய, இளைஞர்களுடைய அறிவியல் மீதான ஆர்வமும், நாட்டமும் மிகுந்த முக்கியமான விஷயமாகும். இது தொடர்பாக என்னிடம் ஒரு கருத்து இருக்கிறது; இதை நீங்கள் ‘One Day as a Scientist’ – விஞ்ஞானியாக ஒரு நாள் என்று கூறலாம். அதாவது, நீங்கள் ஒரு நாள் பொழுதை ஒரு அறிவியலாராக வாழ்ந்து பார்க்கவேண்டும். நீங்கள் உங்கள் வசதிக்கேற்ப, உங்கள் விருப்பத்திற்கேற்ப, எந்த நாளை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த நாளன்று நீங்கள் ஏதோ ஒரு ஆய்வுக்கூடம், கோளரங்கம் அல்லது விண்வெளி மையம் போன்ற இடங்களுக்குக் கண்டிப்பாகச் சென்று வாருங்கள். இதனால் அறிவியல் மீதான உங்களுடைய ஆர்வம் மேலும் அதிகரிக்கும். விண்வெளி, அறிவியல் ஆகியவற்றைப் போலவே மேலும் ஒரு துறையில் பாரதம் விரைவாகத் தனது பலத்தை அடையாளப்படுத்திக் கொண்டுவருகிறது என்றால் அது தான் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு. தற்போது தான் நான் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஒரு பெரிய மாநாட்டிலே பங்கெடுக்க பாரீஸ் நகரம் சென்றிருந்தேன். இந்தத் துறையில் பாரதம் கண்டிருக்கும் முன்னேற்றம் குறித்து அங்கே உலகமே நன்கு பாராட்டியது. நமது தேசத்தவர்கள் இன்று செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை எந்த எந்தத் துறைகளில் செய்து வருகிறார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டுகளையும் அங்கே காண முடிந்தது. எடுத்துக்காட்டாக, தெலங்காணாவில் ஆதிலாபாதின் அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் தோடாஸம் கைலாஷ் அவர்கள். டிஜிட்டல் முறையில் பாடல்கள்-இசையிலே அவருக்கு இருக்கும் நாட்டம் நமது பல பழங்குடியின மொழிகளைக் காப்பாற்றுவதிலே மிகவும் மகத்துவமான பணியைச் செய்து வருகிறது. செயற்கை நுண்ணறிவுக் கருவிகளின் துணையோடு கோலாமீ மொழியில் பாடலை மெட்டமைத்து அற்புதமாகச் செயல்பட்டிருக்கிறார். கோலாமீ மொழியைத் தவிரவும் கூட மேலும் பல மொழிகளில் பாடல்களைத் தயாரித்தளிப்பதிலே செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வருகிறார் இவர். சமூக ஊடகத்தில் இவருடைய பாடல்கள் நமது பழங்குடியின சகோதர சகோதரிகளுக்கு மிகவும் விருப்பமானவையாக இருக்கின்றன. விண்வெளித் துறையாகட்டும், செயற்கை நுண்ணறிவுத் துறையாகட்டும், நமது இளைஞர்களின் அதிகரித்துவரும் பங்கெடுப்பு ஒரு புதிய புரட்சிக்குப் பிறப்பளித்து வருகிறது. புதிய புதிய தொழில்நுட்பங்களை ஏற்பதிலும், கையாள்வதிலும் பாரதநாட்டவர் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.
எனதருமை நாட்டுமக்களே, அடுத்த மாதம் மார்ச் 8ஆம் தேதியன்று நாம் சர்வதேச பெண்கள் தினத்தைக் கொண்டாட இருக்கிறோம். இது நமது பெண்சக்தியைப் போற்றும் ஒரு சிறப்பான சந்தர்ப்பம் ஆகும். தேவி மகாத்மியத்திலே,
வித்யா: சமஸ்தா: தவ தேவி பேதா:
ஸ்த்ரிய: சமஸ்தா: சகலா ஜகத்ஸு
என்று கூறப்பட்டிருக்கிறது. அதாவது, அனைத்துக் கல்விகளும், தேவியின் பல்வேறு ரூபங்களின் வெளிப்பாடுகள், பேருலகின் அனைத்து பெண்சக்திகளும் கூட தேவியின் வடிவங்களே. நமது கலாச்சாரத்தில் பெண்களுக்கு மரியாதை செலுத்துவது தலையாயதாகக் கருதப்படுகிறது. தேசத்தின் தாய்மை சக்தியானது நமது சுதந்திரப் போராட்டம் மற்றும் அரசியலமைப்புச் சட்ட அமைப்பிலும் கூட பெரிய பங்களிப்பை அளித்திருக்கிறது. அரசியல் நிர்ணய சபையில் நமது தேசக்கொடியை அமைத்தளிக்கும் வேளையிலே ஹம்ஸா மெஹ்தா அவர்கள் கூறியதை நான் அவருடைய குரலிலேயே உங்களனைவரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
குரல் குறியீடு –
” மாட்சிமை பொருந்திய இந்த மன்றத்தின் உச்சியில் பறக்கும் இந்த முதல் கொடி, இந்தியப் பெண்களின் பரிசாக இருப்பது என்பது சாலப் பொருத்தமானது. நாம் காவி நிறத்தை அணிந்தோம், நாம் போராடினோம், அவதிப்பட்டோம், தேசத்தின் விடுதலைக்காக தியாகங்கள் புரிந்தோம். நாம் இன்று நமது இலக்கை எட்டியிருக்கிறோம். நமது சுதந்திரத்தின் இந்த அடையாளத்தை அளிப்பதன் மூலம் நாம் மீண்டும் ஒருமுறை தேசத்திற்கு நமது சேவைகளை அளிக்கிறோம். மகத்தானதொரு இந்தியாவை உருவாக்கவும், நாடுகளுக்கிடையே தலையாய நாடாக நமது நாடு உருவாக்கப்படுவதற்கும் நாங்கள் மீண்டுமொருமுறை அர்ப்பணிக்கிறோம். நாம் அடைந்திருக்கும் சுதந்திரத்தைப் பேணிப் பாதுகாக்கும் உயர்வான நோக்கத்திற்காகப் பாடுபடவும் எங்களை நாங்கள் அர்ப்பணிக்கிறோம்.
நண்பர்களே, ஹன்ஸா மெஹ்தா அவர்கள், நமது தேசியக் கொடியை அமைப்பது தொடங்கி, அதற்காகத் தியாகங்கள் புரிந்த நாட்டின் அனைத்துப் பெண்களின் பங்களிப்பை முன்வைத்திருக்கிறார். நமது மூவண்ணக் கொடியில் காவி நிறத்திலிருந்தும் கூட இந்த உணர்வு உயிர்ப்படைகிறது என்று இவர் கருதுகிறார். நமது பெண்சக்தி, பாரத நாட்டை சக்தி படைத்ததாக, வளமானதாக ஆக்குவதிலே மதிக்கமுடியாத பங்களிப்பை அளிக்கும் என்று அவர் தன் நம்பிக்கையை வெளிப்படுத்தினார். இன்று அவருடைய கூற்று மெய்ப்பட்டிருக்கிறது. நீங்கள் எந்த ஒரு துறையை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள், பெண்களின் பங்களிப்பு எத்தனை பரவலானதாக இருக்கிறது என்பதைக் காண இயலும். நண்பர்களே, இந்த முறை பெண்கள் தினத்தன்று நான் ஒரு முன்னெடுப்பைச் செய்ய இருக்கிறேன், இதை நமது பெண்சக்திக்கு அர்ப்பணிப்பாகச் செய்ய இருக்கிறேன். இந்த சிறப்பான சந்தர்ப்பத்திலே, என்னுடைய சமூக ஊடகக் கணக்கான எக்ஸ், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில், உத்வேகம் தரும் தேசத்தின் சில பெண்களுக்கு ஒரு நாளை அர்ப்பணிக்க இருக்கிறேன். இப்படிப்பட்ட பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள், புதுமைகள் படைத்திருக்கிறார்கள், பல்வேறு துறைகளில் தங்களுடைய தனித்துவ அடையாளங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். மார்ச் மாதம் 8ஆம் தேதியன்று இவர்கள் தங்களுடைய பணிகள், அனுபவங்களை நாட்டுமக்களோடு பகிர்ந்து கொள்வார்கள். தளம் வேண்டுமானால் என்னுடையதாக இருக்கலாம், ஆனால் அங்கே அவர்களுடைய அனுபவங்கள், அவர்கள் எதிர்கொண்ட சவால்கள், அவர்கள் படைத்த சாதனைகள் பற்றியே பேச்சு இருக்கும். இந்தச் சந்தர்ப்பம் உங்களுக்கும் வாய்க்க வேண்டும் என்று நீங்களும் விரும்பினால், நமோ செயலியில் உருவாக்கப்பட்டிருக்கும் சிறப்பான மன்றம் வாயிலாக, இந்தச் செயல்பாட்டில் அங்கம் வகிக்கலாம், என்னுடைய எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து உலகம் முழுக்கவும், உங்களுடைய கருத்தைக் கொண்டு சேர்க்கலாம். வாருங்கள், இந்த முறை பெண்கள் தினத்தன்று நாமனைவரும் இணைந்து மகத்தான பெண்சக்தியைக் கொண்டாடுவோம், அதற்கு மரியாதை செலுத்துவோம், அதை வணங்குவோம்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, உங்களில் பலர் உத்தராக்கண்டில் நடந்த நமது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் சுவாரசியத்தை ரசித்திருப்பீர்கள். நாடெங்கிலும் இருந்து 11,000த்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் இதிலே அருமையான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்கள். இந்த ஏற்பாடு, தேவபூமியின் புதிய வடிவத்தைப் படம் பிடித்துக் காட்டியது. உத்தராகண்ட் இப்போது தேசத்தின் பலமான விளையாட்டுத்துறைச் சக்தியாக உருவாகிவருகிறது. உத்தராகண்டின் விளையாட்டு வீரர்களும் கூட அருமையாகத் தங்கள் திறமைகளை வெளிக்காட்டினார்கள். இந்த முறை உத்தராகண்ட் 7ஆவது இடத்தைப் பிடித்தது. இது விளையாட்டின் ஆற்றல், தனிநபர்களும் சமூகங்களும் இணைந்து மாநிலத்திற்கே புத்துயிர் ஊட்டியிருக்கிறார்கள். இதனால், எங்கே வருங்காலத் தலைமுறையினர் அகத்தூண்டுதல் பெறுகிறார்களோ, அங்கே எதிலும் சிறந்து விளங்குவது என்ற கலாச்சாரத்திற்கும் ஊக்கம் கிடைக்கிறது.
நண்பர்களே, இன்று நாடெங்கிலும் இந்த விளையாட்டுக்களின் சில நினைவில் கொள்ளத்தக்க செயல்பாடுகள் குறித்து நிறைவாகப் பேசப்படுகின்றது. இந்த விளையாட்டுக்களில் மிக அதிக அளவில் தங்கப் பதக்கங்களை வென்ற படைவீரர்கள் அணிக்கு என்னுடைய பலப்பல பாராட்டுக்கள். தேசிய விளையாட்டுக்களில் பங்கெடுக்கும் ஒவ்வோர் விளையாட்டு வீரரையும் நான் பாராட்டுகிறேன். நமது பல விளையாட்டு வீரர்களும், கேலோ இந்தியா இயக்கத்தின் வரப்பிரசாதம். ஹிமாச்சல் பிரதேசத்தின் சாவன் பர்வால், மகாராஷ்டிரத்தின் கிரண் மாத்ரே, தேஜஸ் சிரஸே அல்லது ஆந்திரத்தின் ஜோதி யாராஜி, ஸப்னே ஆகியோர் தேசத்தின் புதிய நம்பிக்கை நட்சத்திரங்கள். உத்தர பிரதேசத்தின் ஈட்டி எறிதல் வீரர் சச்சின் யாதவ், ஹரியாணாவின் உயரத் தாண்டும் வீரர் பூஜா, கர்நாடகத்தின் நீச்சல் வீரர் தினிதி தேசிந்து ஆகியோர் நாட்டுமக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டார்கள். இவர்கள் மூன்று தேசிய விருதுகளை ஏற்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்கள். இந்த முறை தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வளர் இளம் பருவ வெற்றியாளர்களின் எண்ணிக்கை மலைப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. 15 வயதேயான துப்பாக்கிச் சுடும் போட்டியாளர் கோவின் ஏண்டனி, உத்தர பிரதேசத்தின் இரும்புக் குண்டு எறிதல் போட்டி வீரர், 16 வயதேயான அனுஷ்கா யாதவ், மத்திய பிரதேசத்தின் 19 வயது நிரம்பிய கழியூன்றி உயரத் தாண்டும் போட்டியின் வீரர் குமார் மீணா ஆகியோர், பாரதத்தின் விளையாட்டுக் கலாச்சாரத்தின் எதிர்காலம் மிகவும் திறமைமிகு தலைமுறையினரின் கைகளில் இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறார்கள். தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து முயல்பவர்கள் கண்டிப்பாக வெல்கிறார்கள் என்பதை உத்தராக்கண்டில் நடந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் நம்மால் காண முடிந்தது. சுகவாசியான யாரும் வெற்றியாளர்களாக ஆவதில்லை. நமது இளைய விளையாட்டு வீரர்களின் மனவுறுதியும், ஒழுங்குமுறையும் பாரதத்தை விரைவாக உலக அளவிலான விளையாட்டுச் சக்திபீடமாக ஆக்கி வருவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
என் கனிவுநிறை நாட்டுமக்களே, தேஹ்ராதூனில் நடந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவின் போது ஒரு மிகவும் முக்கியமான விஷயத்தை நான் முன்னெடுத்தேன். இது தேசத்தில் ஒரு புதிய விவாதப் பொருளானது. அதாவது உடற்பருமன். உடலுறுதிப்பாடும், ஆரோக்கியமும் உடைய ஒரு தேசமாக ஆக, நாம் உடற்பருமன் பிரச்சினையை எதிர்கொண்டாக வேண்டும். இன்று எட்டில் ஒருவர், உடற்பருமன் பிரச்சினையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடந்த ஆண்டுகளில் உடற்பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி இருக்கிறது என்றாலும், இதைவிடக் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், குழந்தைகளிடமும் இந்த உடற்பருமன் பிரச்சினை நான்கு மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதுதான். உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி, 2022ஆண்டில், உலகெங்கிலும் சுமார் இரண்டரை கோடி மக்கள் அதிக எடை கொண்டவர்களாக இருக்கின்றார்கள். அதாவது தேவைக்கதிகமாக உடல் எடை உடையவர்களாக இருக்கிறார்கள். இந்தப் புள்ளிவிபரம் மிகவும் கடுமையான ஒன்று, நம் அனைவரையும் ஆழச் சிந்திக்க வைப்பது, ஏன் இப்படி இருக்கிறது என்று ஆராயச் செய்கிறது. அதிக உடல் எடை அதாவது உடற்பருமன் பல வகையான பிரச்சினைகளுக்கு, நோய்களுக்கு வித்திடுகிறது. நாமனைவரும் இணைந்து சின்னச்சின்ன முயற்சிகள் மூலமாக இந்தச் சவாலை எதிர்கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக ஒரு வழிமுறையை ஆலோசனையாக அப்போது நான் கூறினேன் அல்லவா? உண்ணும் உணவில் பத்து சதவீதம் எண்ணையைக் குறைத்துக் கொள்வது. ஒவ்வோரு மாதமும் பத்து சதவீதம் எண்ணையை நான் குறைப்பேன் என்று தீர்மானியுங்கள். உணவு எண்ணையை வாங்கும் போது பத்து சதவீதம் குறைவாக வாங்குவது என்று நீங்கள் தீர்மானியுங்கள். உடற்பருமனைக் குறைக்கும் திசையில் இது மிக முக்கியமான அடியெடுப்பாக இருக்கும். மனதின் குரலில் இந்த விஷயம் குறித்து ஒரு சிறப்பான செய்தியை நான் உங்களிடத்தில் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். தொடக்கத்தில் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்டா அவர்களோடு நாம் உரையாடலாம், இவர் தாமே கூட உடற்பருமனோடு போராடி வெற்றி பெற்றிருக்கிறார்.
குரல் குறியீடு –
அனைவருக்கும் வணக்கம். நான் நீரஜ் சோப்டா உங்களனைவருக்கும் தெரிவிக்க விரும்புவது என்னென்னா, நமது மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், மனதின் குரலில் இந்த முறை உடற்பருமன் குறித்து பேசியிருக்கிறாங்க, இது நம்ம தேசத்தில மிக முக்கியமான ஒரு பிரச்சினை. ஏதோ ஒரு வகையில இந்தப் பிரச்சினையால நானும் பாதிக்கப்பட்டவன் தான். ஏன்னா தொடக்கத்தில களமிறங்கத் தொடங்கிய காலத்தில, நான் கணிசமான உடற்பருமனோட இருந்தேன். ஆனா பயிற்சி தொடங்கிய பிறகு நல்ல உணவை நான் உண்ணத் தொடங்கினேன், என்னோட உடல் ஆரோக்கியத்திலும் மேம்பாடு காணப்படத் தொடங்கிச்சு, அதன் பிறகு நான் ஒரு துறைசார் வல்லமையுடைய விளையாட்டு வீரரா ஆன பிறகும் கூட எனக்கு கணிசமா இது உதவிகரமா இருந்திச்சு. மேலும் பெற்றோருக்கு நான் ஒண்ணு கூற விரும்புறேன் – நீங்களும் கூட திறந்தவெளி விளையாட்டுக்களில ஏதாவது ஒன்றில ஈடுபடணும், உங்க குழந்தைகளையும் உங்களோட கூட்டிச் செல்லுங்க, ஒரு நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை வளர்த்துக் கொள்ளுங்க, நல்லா சாப்பிடுங்க, உங்க உடலுக்கு ஒரு மணி நேரமோ, அல்லது எத்தனை நேரம் அளிக்க முடியுமோ, அப்போ உடற்பயிற்சி செய்யுங்க. மேலும் ஒரு விஷயம். இப்போ தான் நம்ம பிரதமர் அவர்கள் சொன்னாரு, உண்ணும் உணவில பயன்படுத்தும் எண்ணெயில பத்து சதவீதம் குறையுங்கன்னாரு. ஏன்னா, பலமுறை நாம எண்ணெயில பொரிச்ச பதார்த்தங்களை உண்பதால உடற்பருமனை இது அதிகரிக்கச் செய்யுது. ஆகையால இந்த உணவுகளிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள், உங்க உடல்நலனில கவனம் செலுத்துங்க அப்படீன்னு நான் உங்ககிட்ட கேட்டுக்கறேன். நிறைவா, நாம எல்லாரும் ஒன்றிணைஞ்சு நம்ம தேசத்தை சிகரங்களுக்குக் கொண்டு செல்வோம் அப்படீன்னு உங்க எல்லார் கிட்டயும் கேட்டுக்கறேன். நன்றி.
நீரஜ் அவர்களே, உங்களுக்கு பலப்பல நன்றிகள். புகழ்மிக்க விளையாட்டு வீரர் நிகித் ஜரீன் அவர்களும் கூட இந்த விஷயம் குறித்துப் பேசியிருக்கிறார்.
குரல் குறியீடு –
ஹை, என்னோட பேர் நிகத் ஜரீன், நான் ரெண்டு முறை உலகக் குத்துச்சண்டைப் போட்டி வெற்றியாளர். நம்ம பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் மனதின் குரலில உடற்பருமன் தொடர்பா சொன்னாரில்லையா, இது ஒரு தேசியப் பிரச்சினையா நான் பார்க்கறேன், நாம நம்ம உடல் ஆரோக்கியத்தை தீவிரமான வகையில அணுகணும். ஏன்னா உடற்பருமன் எத்தனை விரைவா பரவிட்டு வருதுன்னு பார்த்தா, இதை நாம தடுத்தே ஆகணுங்கறதும், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றக்கூடிய முயற்சியில ஈடுபடணுங்கறதும் நமக்கு விளங்கும். ஒரு விளையாட்டு வீரர்ங்கற முறையில, ஆரோக்கியமான சீரான உணவை பின்பற்ற முயற்சி செய்யறேன், ஏன்னா நான் தவறுதலா கூட ஆரோக்கியமில்லா உணவை எடுத்துக்கிட்டாலோ, எண்ணெய் அதிகம் இருக்கற உணவை எடுத்துக்கிட்டாலோ என் செயல்பாட்டுல இது பாதிப்பை ஏற்படுத்துது, குத்துச்சண்டைக் களத்தில விரைவாகவே நான் களைச்சுப் போயிடறேன். ஆகையால எத்தனை முடியுதோ அந்த அளவுக்கு உணவு எண்ணெய் போன்ற வஸ்துக்களைக் குறைவாவே உண்றேன், அதுக்கு பதிலா ஆரோக்கியமான சீரான உணவைப் பின்பற்றுறேன், தினசரி உடல்ரீதியான செயல்பாடுகள்ல ஈடுபடுறேன், இதன் காரணமாத் தான் நான் உடலுறுதியோட இருக்கேன். அன்றாட வேலைக்குப் போறவங்க, பொதுமக்கள் எல்லாம்னு எல்லாருமே உடல் ஆரோக்கியம் தொடர்பா கவனத்தைச் செலுத்தணும், ஏதோவொரு உடல்ரீதியான செயல்பாட்டில ஈடுபடணும், இதன் காரணமா மாரடைப்பு, புற்றுநோய் போன்ற நோய்கள் நம்மை அண்டாம, நம்மை உடலுறுதியோட வச்சுக்க முடியும்ங்கறது தான் என் கருத்து. ஏன்னா நாம உடலுறுதியோட இருந்தா, இந்தியாவும் உடலுறுதியோட இருக்கும்.
நிகத் அவர்கள் உண்மையிலேயே சில அருமையான விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். வாருங்கள் இப்போது நாம் டாக்டர் தேவி ஷெட்டி அவர்கள் கூறுவதைக் கேட்போம். இவர் மிகவும் மதிப்புமிக்க ஒரு மருத்துவர் என்பதூ உங்களனைவருக்கும் நன்கு தெரியும், இவர் இந்த விஷயம் குறித்துத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
குரல் குறியீடு –
மிகவும் பிரபலமான தன்னுடைய மனதின் குரல் நிகழ்ச்சியில உடற்பருமன் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியமைக்காக நான் நமது மதிப்புமிக்க பிரதமருக்கு என் நன்றிகளைத் தெரிவிச்சுக்கறேன். உடற்பருமன் அப்படீங்கறது இன்னைக்கு ஒரு மேலோட்டமான பிரச்சினையில்லை; இது மருத்துவரீதியா ரொம்ப ஆபத்தான பிரச்சனை. இன்னைக்கு இந்தியாவோட பெரும்பாலான இளைஞர்கள் உடற்பருமன் உடையவர்களா இருக்காங்க. இன்னைக்கு உடற்பருமனுக்கான முக்கியமான காரணம்னு பார்த்தா, அவங்க எடுத்துக்கற உணவோட தரம், குறிப்பா அதிகப்படியான மாவுச்சத்து அதாவது அரிசி, சப்பாத்தி, சர்க்கரை, அதிக அளவு எண்ணெய் உட்கொள்வது. உடற்பருமன், பெரிய மருத்துவப் பிரச்சினைகளான இருதய நோய், உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு அதிகமுடைய கல்லீரல் அப்படீன்னு இன்னும் பல சிக்கல்களுக்கு வழி வகுக்குது. ஆகையால இளைஞர்களுக்கு என்னோட பரிந்துரை என்னென்னா, உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்க, உங்க உணவைத் திட்டமிட்டு உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்க, ரொம்ப ரொம்ப சுறுசுறுப்பா இருங்க, உங்க உடல் எடையில கவனமா இருங்க அப்படீங்கறது தான். மீண்டும் ஒருமுறை நான் உங்க எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான எதிர்காலம், நல்ல அதிர்ஷ்டம், கடவுளோட நல்லாசிகளை வேண்டிக்கறேன்.
நண்பர்களே, உணவு எண்ணெயின் குறைவான பயன்பாடும், உடற்பருமனை எதிர்கொள்வதும் என்னுடைய விருப்பத் தேர்வு மட்டுமல்ல, குடும்பத்தினருக்கான நம்முடைய கடமையும் ஆகும். உணவுகளில் ….
PART II ………..
…எண்ணெயை அதிகம் பயன்படுத்துவதால் இருதய நோய், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற ஏராளமான நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நமது உணவுகளில் சின்னச்சின்ன மாறுதல்களைச் செய்வதன் மூலமாக, நாம் நமது எதிர்காலத்தை பலமானதாகவும், உடல்உறுதியானதாகவும், நோயற்றதாகவும் ஆக்க முடியும். ஆகையால் நாம் இனியும் காலம் தாழ்த்தாமல், இந்தத் திசையில் முயற்சிகளை மேற்கொள்வோம், இதை நமது வாழ்க்கையில் கடைப்பிடிக்கத் தொடங்குவோம். இன்றைய மனதின் குரலின் இந்தப் பதிவிற்குப் பிறகு, பத்து பேர்களிடம் வேண்டிக் கொள்கிறேன், சவாலை முன்வைக்கிறேன், நீங்கள் உங்களுடைய உணவுகளிலே எண்ணெயின் பயன்பாட்டை பத்து சதவீதம் குறைத்துக் கொள்ள முடியுமா? கூடவே, நீங்களும் உங்கள் பங்குக்கு இன்னும் பத்து நபர்களிடம் இப்படி ஒரு சவாலை விடுக்க முடியுமா என்றும் கேட்டுக் கொள்கிறேன். இதனால் உடற்பருமனோடு போராட பேருதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
ஆசியக்கண்டச் சிங்கம், ஹன்குல், பிக்மி ஹாக்ஸ், சிங்கவால் குரங்கு ஆகியவற்றில் இருக்கும் ஒற்றுமை என்ன தெரியுமா நண்பர்களே? பதில் என்னவென்றால், இவற்றில் ஏதும் உலகில் வேறு எங்குமே காணப்படாது, நமது தேசத்தில் மட்டுமே காணப்படும். உண்மையிலேயே தாவரங்களாகட்டும், உயிரினங்களாகட்டும் – ஒரு மிகப்பெரிய துடிப்புடைய உயிரினச் சூழலமைப்பு நம்மிடத்தில் இருக்கிறது. இந்த வன விலங்குகள், நமது வரலாறு மற்றும் கலாச்சாரத்தோடு ஒன்றிக் கலந்தவை. பல உயிரினங்கள் நமது தெய்வங்களின் வாகனங்களாகவும் இருக்கின்றன. மத்திய பாரதத்தின் பல பழங்குடியினத்தவர் பாகேஷ்வரை வழிபாடு செய்கின்றார்கள். மகாராஷ்டிரத்தில் வாகோபா வழிபாட்டுப் பாரம்பரியம் நிலவி வருகிறது. பகவான் ஐயப்பனுக்கும் புலிக்கும் இருக்கும் உறவு மிகவும் ஆழமானது. சுந்தர்வனக் காடுகளில் போன்பீபிக்கு பூஜையும் அர்ச்சனைகளும் செய்யப்படுகின்றன, இந்த தேவியின் வாகனம் புலி. நம்முடைய கர்நாடகத்தின் ஹுலி வேஷா, தமிழ்நாட்டின் புலியாட்டம் மற்றும் கேரளத்தின் புலிக்களி போன்ற பல கலாச்சார நடனங்கள் இருக்கின்றன, இவை இயற்கை மற்றும் வன உயிரினங்களோடு நம்மை இணைக்கின்றன. வன உயிரினப் பாதுகாப்போடு தொடர்புடைய பல பணிகளில் மிக உற்சாகத்தோடு பங்களிப்பை நல்கிவரும் நமது பழங்குடியின சகோதர சகோதரிகளுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன். கர்நாடகத்தின் பிஆர்டி புலிகள் சரணாலயத்தின் புலிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதற்கான மிகப்பெரிய பாராட்டு என்றால், சோலிகா பழங்குடியினத்தவருக்கே சாரும். இவர்கள் தாம் புலிகளை வழிபட்டு வருபவர்கள். இவர்கள் காரணமாக இந்தப் பகுதியில் விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமிடையேயான பிணக்குகள் இல்லை என்றே சொல்லும் அளவுக்கு நிலவுகிறது. குஜராத்திலும் கூட மனிதர்கள் கிர் பகுதியின் ஆசிய சிங்கங்களைப் பாதுகாத்துப் பராமரிப்பதில் மகத்துவமான பங்களிப்பை அளித்து வருகிறார்கள். இயற்கையோடு இசைவான வாழ்வு என்றால் எப்படி இருக்கும் என்பதை இவர்கள் உலகிற்கு பறைசாற்றியிருக்கிறார்கள். நண்பர்களே, இந்த முயற்சிகளின் காரணமாக கடந்த பல்லாண்டுகளாகவே, புலி, சிறுத்தை, ஆசிய சிங்கங்கள், காண்டாமிருகங்கள் மற்றும் சருகுமான் போன்றவற்றின் எண்ணிக்கை விரைவாக வளர்ந்திருப்பதோடு, பாரதத்தில் வன உயிரினங்களின் பன்முகத்தன்மை எத்தனை அழகானது என்பதையும் நாம் கருத்தில் இருத்துவது பொருத்தமானது. ஆசியக்கண்ட சிங்கங்கள் தேசத்தின் மேற்கு பாகத்தில் காணக்கிடைக்கின்றன, புலிகளோ கிழக்குப் பகுதியில், மத்திய மற்றும் தென்பகுதியில் இருக்கின்றன, காண்டாமிருகங்கள் வடகிழக்குப் பகுதியில் வசிக்கின்றன. பாரத நாட்டின் அனைத்துப் பகுதிகளும் இயற்கையிடம் புரிதலோடு இருப்பதோடு, வன உயிரினப் பாதுகாப்புக்கும் உறுதி சேர்க்கின்றன. அனுராதா ராவ் அவர்கள் பற்றி என்னிடம் கூறப்பட்டிருக்கிறது. இவருடைய பல தலைமுறைகள் அந்தமான் நிகோபார் தீவுகளில் வசித்து வருகின்றனர். அனுராதா அவர்கள் சிறுவயதிலேயே விலங்குகள் நலனுக்காக தன்னையே அர்ப்பணித்திருக்கிறார். மூன்று பத்தாண்டுகளாக இவர் மான்கள் மற்றும் மயில்களின் பாதுகாப்பைத் தனது வாழ்க்கைக் குறிக்கோளாகவே ஆக்கியிருக்கிறார். இங்கே இருப்போர் இவரை ‘Deer Woman’ – மான் பெண் என்றே அழைக்கிறார்கள். அடுத்த மாதம் நாம் வன உயிரினப் பாதுகாப்போடு தொடர்புடைய மனிதர்களுக்கு நம்பிக்கை அளிப்போம் என்று உங்களிடம் வேண்டிக் கொள்கிறேன். இந்தத் துறையில் இப்போது பல ஸ்டார்ட் அப்புகளும் உருவாகி வருகின்றன என்பது எனக்கு நிறைவை அளிக்கும் விஷயம்.
நண்பர்களே, இது பத்தாம்-பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளுக்கான காலம். நம்முடைய இளம் நண்பர்கள், அதாவது தேர்வு வீரர்களுக்கு, அவர்கள் எதிர்நோக்கும் தேர்வுகளின் பொருட்டு பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் எந்தவிதமான அழுத்தமும் இல்லாமல், ஆக்கப்பூர்வமான உணர்வோடு, உங்கள் தேர்வுகளை எழுதுங்கள். ஒவ்வோர் ஆண்டும் பரீக்ஷா பே சர்ச்சா – தேர்வுகளை எதிர்கொள்வோம் நிகழ்ச்சியில் நாம் நமது தேர்வெழுதும் வீரர்களுக்குத் தேர்வுகளோடு தொடர்புடைய பலப்பல விஷயங்கள் குறித்து விவாதிக்கிறோம். இப்போது இந்த நிகழ்ச்சி நன்கு நிலைபெற்ற ஒரு வடிவம் பெற்று விட்டது என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இதிலே புதியபுதிய வல்லுநர்களும் இணைந்து வருகிறார்கள். இந்த ஆண்டு தேர்வுகளை எதிர்கொள்வோம் நிகழ்ச்சிக்கு ஒரு புதிய வடிவம் ஏற்பாடு தரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. வல்லுநர்களோடு கூடவே, எட்டு பல்வேறு பகுதிகளும் இடம் பெற்றன. ஒட்டுமொத்த தேர்வுகள் தொடங்கி, உடல்நலப் பராமரிப்பு மற்றும் மனநலம், உணவு போன்ற விஷயங்களும் இதில் இடம் பெற்றன. கடந்த ஆண்டுகளில் சிறந்து விளங்கியவர்களும் தங்கள் கருத்துக்கள்-அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். பல இளைஞர்கள், அவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் என இந்த முறை எனக்குப் பலர் கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். இந்த வடிவம் அவர்களுக்கு மிகவும் பிடித்திருப்பதாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஏனென்றால் இதிலே ஒவ்வொரு விஷயம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டன. இன்ஸ்டாகிராமிலும் கூட நமது இளைய நண்பர்கள், இந்த பகுதிகளை அதிக எண்ணிக்கையில் பார்த்திருக்கிறார்கள். உங்களில் பலர் இந்த நிகழ்ச்சியை தில்லியின் சுந்தரி நர்ஸரியில் அமைத்திருப்பதை விரும்பியிருக்கிறீர்கள். தேர்வுகளை எதிர்கொள்வோம் நிகழ்ச்சியின் இந்தப் பகுதிகளை இதுவரை பார்க்காத நமது இளைய நண்பர்கள், கண்டிப்பாக இவற்றைப் பாருங்கள். இந்த பகுதிகள் அனைத்தையுமே நமோ செயலியில் உங்களால் காண முடியும். மீண்டும் ஒருமுறை தேர்வுகளை எதிர்கொள்ளவிருக்கும் நமது வீரர்களுக்கான நான் அளிக்க விரும்பும் செய்தி என்னவென்றால், சந்தோஷமாக இருங்கள், அழுத்தமேதும் இல்லாமல் இருங்கள் என்பது தான்.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் இந்தக் குரல், இந்த முறை என்னோடு இம்மட்டே. அடுத்த மாதம், மீண்டும் புதிய விஷயங்களோடு நாம் இணைவோம், மனதின் குரலை ஒலிக்கச் செய்வோம். நீங்கள் உங்கள் கடிதங்களைத் தொடர்ந்து எழுதி வாருங்கள், உங்கள் செய்திகளை அனுப்பி வாருங்கள். ஆரோக்கியமாக இருங்கள், ஆனந்தமாக இருங்கள். பலப்பல நன்றிகள். வணக்கம்.
*****
AD/KV
#MannKiBaat has begun. Tune in! https://t.co/xHcnF6maX4
— PMO India (@PMOIndia) February 23, 2025
Last month, we witnessed @isro's 100th launch, reflecting India's resolve to reach new heights in space science every day. #MannKiBaat pic.twitter.com/XYnASFYuEi
— PMO India (@PMOIndia) February 23, 2025
Spend a day experiencing life as a scientist, urges PM @narendramodi during #MannKiBaat pic.twitter.com/YU7OXplfZ8
— PMO India (@PMOIndia) February 23, 2025
India is rapidly making its mark in Artificial Intelligence. Here is a unique effort from Telangana. #MannKiBaat pic.twitter.com/UZ0el0OBJc
— PMO India (@PMOIndia) February 23, 2025
A special initiative for Nari Shakti. #MannKiBaat pic.twitter.com/hTtHKgEWd2
— PMO India (@PMOIndia) February 23, 2025
India is moving rapidly towards becoming a global sporting powerhouse. #MannKiBaat pic.twitter.com/HoeAt5uHK6
— PMO India (@PMOIndia) February 23, 2025
Let's fight obesity. #MannKiBaat pic.twitter.com/9ETtAvyaMl
— PMO India (@PMOIndia) February 23, 2025
India has a vibrant ecosystem of wildlife. #MannKiBaat pic.twitter.com/o5E6A2sqmU
— PMO India (@PMOIndia) February 23, 2025
A century is a popular term in cricketing parlance but we began today’s #MannKiBaat with a century not on the playing field but in space…
— Narendra Modi (@narendramodi) February 23, 2025
Lauded ISRO’s special milestone on their 100th launch. pic.twitter.com/N97oSa63KU
How about ‘One Day as a Scientist’…where youngsters spend a day at a research lab, planetarium or space centre and deepen their connect with science? #MannKiBaat pic.twitter.com/wx0skFNHry
— Narendra Modi (@narendramodi) February 23, 2025
Highlighted an inspiring effort from Adilabad, Telangana of how AI can be used to preserve and popularise India’s cultural diversity. #MannKiBaat pic.twitter.com/52ADlv39hA
— Narendra Modi (@narendramodi) February 23, 2025
A social media takeover on 8th March as a tribute to our Nari Shakti! Here are the details… #MannKiBaat pic.twitter.com/dhzaeLrd8Q
— Narendra Modi (@narendramodi) February 23, 2025
India’s sporting talent was on display yet again at the National Games in Uttarakhand! #MannKiBaat pic.twitter.com/nh2rT0RMJ6
— Narendra Modi (@narendramodi) February 23, 2025
Let’s preserve and celebrate India’s rich wildlife diversity! Shared a few aspects relating to this during #MannKiBaat. pic.twitter.com/7Ez3NtnF6X
— Narendra Modi (@narendramodi) February 23, 2025