நமோ புத்தயா!
தாய்லாந்தில் நடைபெறும் இந்த சம்வாத் (விவாத உரையாடல்) பதிப்பில் உங்கள் அனைவருடனும் இணைவது பெரும் கௌரவமாகும். இந்தியா, ஜப்பான் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த பல புகழ்பெற்ற நிறுவனங்கள், தனிநபர்கள் இந்த நிகழ்வை சாத்தியமாக்க பாடுபடுகின்றனர். அவர்கள் அனைவரையும், அவர்களின் முயற்சிகளுக்காக நான் பாராட்டுகிறேன், மேலும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
எனது நண்பர் திரு ஷின்சோ அபேவை நினைவுகூர இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன். 2015-ம் ஆண்டில், சம்வாத் பற்றிய யோசனை அவருடனான எனது உரையாடல்களிலிருந்து வெளிப்பட்டது. அப்போதிருந்து, சம்வாத் நிகழ்வு பல்வேறு நாடுகளில் நடைபெற்று, விவாதம், உரையாடல் மற்றும் ஆழமான புரிதலை வளர்த்துள்ளது.
நண்பர்களே,
இந்த சம்வாத் பதிப்பு தாய்லாந்தில் நடைபெறுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். தாய்லாந்து ஒரு வளமான கலாச்சாரம், வரலாறு மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இது ஆசியாவின் பகிரப்பட்ட தத்துவ மற்றும் ஆன்மீக மரபுகளுக்கு ஒரு அழகான எடுத்துக்காட்டாக நிற்கிறது.
நண்பர்களே,
இந்தியாவும், தாய்லாந்தும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான கலாச்சார உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. ராமாயணமும் ராமகீதமும் நம்மை இணைக்கின்றன. பகவான் புத்தர் மீதான நமது பகிரப்பட்ட மரியாதை நம்மை ஒன்றிணைக்கிறது. கடந்த ஆண்டு, பகவான் புத்தரின் புனித நினைவுச்சின்னங்களைத் தாய்லாந்திற்கு அனுப்பியபோது, கோடிக்கணக்கான பக்தர்கள் தங்கள் மரியாதையைச் செலுத்தினர். நமது நாடுகளும் பல துறைகளில் துடிப்பான கூட்டாண்மையைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்தியாவின் ‘கிழக்கு நோக்கிச் செயல்படுங்கள்‘ கொள்கையும், தாய்லாந்தின் ‘மேற்கு நோக்கிச் செயல்படுங்கள்‘ கொள்கையும் ஒன்றையொன்று பூர்த்தி செய்து, பரஸ்பர முன்னேற்றத்தையும், செழிப்பையும் ஊக்குவிக்கின்றன. இந்த மாநாடு நமது நட்பில் மற்றொரு வெற்றிகரமான அத்தியாயத்தைக் குறிக்கிறது.
நண்பர்களே,
சம்வாத்-ன் கருப்பொருள் ஆசிய நூற்றாண்டைப் பற்றிப் பேசுகிறது. மக்கள் இந்த வார்த்தையைப் பயன்படுத்தும்போது, அது பெரும்பாலும் ஆசியாவின் பொருளாதார எழுச்சியைக் குறிக்கின்றது இருப்பினும், இந்த மாநாடு ஆசிய நூற்றாண்டு என்பது பொருளாதார மதிப்பைப் பற்றியது மட்டுமல்ல, சமூக மதிப்புகளைப் பற்றியது என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. பகவான் புத்தரின் போதனைகள் அமைதியான மற்றும் முற்போக்கான சகாப்தத்தை உருவாக்குவதில் உலகை வழிநடத்தும். மனிதனை மையமாகக் கொண்ட எதிர்காலத்தை நோக்கி நம்மை வழிநடத்தும் சக்தியை அவரது ஞானம் கொண்டுள்ளது.
நண்பர்களே,
சம்வாத்-ன் முக்கிய கருப்பொருள்களில் ஒன்று மோதல் தவிர்ப்பு. பெரும்பாலும், நமது பாதை மட்டுமே சரியானது, மற்ற அனைத்தும் தவறானவை என்ற நம்பிக்கையிலிருந்துதான் மோதல்கள் எழுகின்றன. பகவான் புத்தர் இந்தப் பிரச்சினையில் உள்முக அறிவை வழங்குகிறார்:
சிலர் தங்கள் சொந்த கருத்துக்களைப் பற்றிக் கொண்டு, ஒரு பக்கத்தை மட்டுமே உண்மையாகப் பார்த்து வாதிடுகிறார்கள். ஆனால் ஒரே பிரச்சினையில் பல கண்ணோட்டங்கள் இருக்கலாம்.
உண்மையை வெவ்வேறு ஆடிகள் மூலம் பார்க்க முடியும் என்பதை நாம் ஒப்புக் கொள்ளும்போது, நாம் மோதலைத் தவிர்க்கலாம்.
நண்பர்களே,
மோதலின் மற்றொரு காரணம், மற்றவர்களை நம்மிடமிருந்து அடிப்படையில் வேறுபட்டதாகக் கருதுவதாகும். வேறுபாடுகள் தூரத்திற்கு வழிவகுக்கும், தூரம் முரண்பாடாக மாறக்கூடும். இதை எதிர்கொள்ள, தம்மபதத்தின் ஒரு வசனம் உதவும்: அனைவரும் வலி மற்றும் மரணத்தைக் கண்டு அஞ்சுகின்றனர். மற்றவர்களை நம்மைப் போலவே அங்கீகரிப்பதன் மூலம், எந்தத் தீங்கும் அல்லது வன்முறையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். இந்த வார்த்தைகளைப் பின்பற்றினால், மோதல்களைத் தவிர்க்கலாம்.
நண்பர்களே,
உலகின் பல பிரச்சினைகள் சமநிலையான அணுகுமுறையை விட தீவிர நிலைப்பாடுகளை எடுப்பதில் இருந்துதான் உருவாகின்றன. தீவிரக் கருத்துக்கள், மோதல்கள், சுற்றுச்சூழல் நெருக்கடிகள் மற்றும் மன அழுத்தம் தொடர்பான சுகாதாரப் பிரச்சினைகள் ஆகியவற்றுக்கு வழிவகுக்கிறது. இத்தகைய சவால்களுக்கான தீர்வு பகவான் புத்தரின் போதனைகளில் உள்ளது. அவர் நம்மை நடுநிலைப் பாதையைப் பின்பற்றவும், தீவிரங்களைத் தவிர்க்கவும் வலியுறுத்தினார். மிதமான கொள்கை இன்றும் பொருத்தமானதாக உள்ளது. உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் சிறப்பான வழிகாட்டுதலை வழங்குகிறது.
நண்பர்களே,
இன்று, மோதல்கள் மக்கள் மற்றும் நாடுகளுக்கு அப்பாலும் நீண்டுள்ளன – மனிதகுலம் இயற்கையுடன் மோதல் போக்கை அதிகரித்து வருகிறது. இது நமது கிரகத்தை அச்சுறுத்தும் ஒரு சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது. இந்த சவாலுக்கான பதில், தர்மத்தின் கொள்கைகளில் வேரூன்றிய ஆசியாவின் பகிரப்பட்ட மரபுகளில் உள்ளது. இந்து மதம், பௌத்தம், ஷின்டோயிசம் மற்றும் பிற ஆசிய மரபுகள் இயற்கையுடன் இணக்கமாக வாழ நமக்குக் கற்பிக்கின்றன. நாம் இயற்கையிலிருந்து தனித்தனியாக நம்மைப் பார்க்கவில்லை, ஆனால் அதன் ஒரு பகுதியாகவே பார்க்கிறோம். மகாத்மா காந்தி பரிந்துரைத்த அறங்காவலர் என்ற கருத்தை நாங்கள் நம்புகிறோம். இன்று முன்னேற்றத்திற்காக இயற்கை வளங்களைப் பயன்படுத்தும் போது, எதிர்கால சந்ததியினருக்கான நமது பொறுப்பையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த அணுகுமுறை வளங்கள் பேராசைக்காக அல்ல, வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படுவதற்குத்தான் என்பதை உறுதி செய்கிறது.
நண்பர்களே,
நான் மேற்கு இந்தியாவில் உள்ள ஒரு சிறிய நகரமான வாட்நகரைச் சேர்ந்தவன், அது ஒரு காலத்தில் புத்த மதக் கல்வியின் சிறந்த இடமாக இருந்தது. இந்திய நாடாளுமன்றத்தில், நான் சாரநாத்தை உள்ளடக்கிய வாரணாசியை பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். பகவான் புத்தர் தனது முதல் சொற்பொழிவை நிகழ்த்திய புனித இடம் சாரநாத் ஆகும். பகவான் புத்தருடன் தொடர்புடைய இடங்கள் எனது பயணத்தை வடிவமைத்திருப்பது ஒரு அழகான தற்செயல் நிகழ்வாகும்.
நண்பர்களே,
பகவான் புத்தர் மீதான நமது மரியாதை நமது அரசின் கொள்கைகளில் பிரதிபலிக்கிறது. புத்த மதச் சுற்றுலாவின் ஒரு பகுதியாக, முக்கியமான புத்த மதத் தலங்களை இணைக்கும் சுற்றுலா உள்கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்தச் சுற்றுப் பயணத்தை எளிதாக்குவதற்காக ‘புத்த பூர்ணிமா எக்ஸ்பிரஸ்‘ சிறப்பு ரயில் தொடங்கப்பட்டுள்ளது. குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தின் திறப்பு விழா சர்வதேச புத்த மத யாத்ரீகர்களுக்கு பயனளிக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகும். சமீபத்தில், புத்த கயாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு மேம்பாட்டு முயற்சிகளை நாங்கள் அறிவித்துள்ளோம். நான் பகவான் புத்தரின் பூமியான இந்தியாவைப் பார்வையிட உலகம் முழுவதிலுமிருந்து யாத்ரீகர்கள், அறிஞர்கள் மற்றும் துறவிகளை அழைக்கிறோம்.
நண்பர்களே,
நாளந்தா மகாவிஹாரா வரலாற்றில் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மோதல் சக்திகளால் அழிக்கப்பட்டது. ஆனால், இப்போது அதை கற்றல் மையமாக மீட்டெடுப்பதன் மூலம் நமது மீள்தன்மையைக் காட்டியுள்ளோம். பகவான் புத்தரின் ஆசீர்வாதத்துடன், நாளந்தா பல்கலைக்கழகம் அதன் முந்தைய மகிமையை மீண்டும் பெறும் என்று நான் நம்புகிறேன். பகவான் புத்தர் தனது போதனைகளை வழங்கிய மொழியான பாலியை மேம்படுத்துவதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாலி எங்கள் அரசால் ஒரு பாரம்பரிய செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் இலக்கியங்களைப் பாதுகாப்பதை உறுதி செய்கிறது. கூடுதலாக, பண்டைய கையெழுத்துப் பிரதிகளை அடையாளம் கண்டு பட்டியலிடுவதற்கான ஞான பாரதம் இயக்கத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். இது புத்த மத அறிஞர்களின் நலனுக்காக ஆவணப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவிக்கிறது.
நண்பர்களே,
கடந்த பத்தாண்டுகளில், பகவான் புத்தரின் போதனைகளை ஊக்குவிக்க பல நாடுகளுடன் நாங்கள் ஒத்துழைத்துள்ளோம். சமீபத்தில், ‘ஆசியாவை வலுப்படுத்துவதில் புத்த தர்மத்தின் பங்கு‘ என்ற தலைப்பில் இந்தியாவில் முதல் ஆசிய புத்த உச்சி மாநாடு நடைபெற்றது. முன்னதாக, இந்தியா முதல் உலகளாவிய புத்த உச்சி மாநாட்டை நடத்தியது. நேபாளத்தின் லும்பினியில் உள்ள இந்திய சர்வதேச புத்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மையத்திற்கு அடிக்கல் நாட்டிய பெருமை எனக்கு கிடைத்தது. லும்பினி அருங்காட்சியகத்தின் கட்டுமானத்திற்கும் இந்தியா பங்களித்துள்ளது. மேலும், மங்கோலிய கஞ்சூரில் உள்ள 108 தொகுதிகளைக் கொண்ட பகவான் புத்தரின் ‘சுருக்கமான கட்டளைகள்‘ இந்தியாவில் மறுபதிப்பு செய்யப்பட்டு மங்கோலியாவில் உள்ள மடங்களுக்கு விநியோகிக்கப்பட்டன. பல நாடுகளில் உள்ள நினைவுச்சின்னங்களைப் பாதுகாப்பதில் எங்கள் முயற்சிகள், பகவான் புத்தரின் மரபுக்கான எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகின்றன.
நண்பர்களே,
சம்வாத்தின் இந்தப் பதிப்பு பல்வேறு மதத் தலைவர்களை ஒன்றிணைத்து ஒரு மத வட்டமேசை மாநாட்டை நடத்துவது ஊக்கமளிக்கிறது. இந்த மேடையில் இருந்து மதிப்புமிக்க நுண்ணறிவுகள் வெளிப்படும். இது மிகவும் இணக்கமான உலகத்தை வடிவமைக்கும் என்று நான் நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை, இந்த மாநாட்டை நடத்துகின்ற தாய்லாந்து மக்களுக்கும், அரசிற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உன்னதமான பணியை முன்னெடுத்துச் செல்ல இங்கு கூடியிருக்கும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்பு நிறைந்த சகாப்தத்தை நோக்கி தர்மத்தின் ஒளி தொடர்ந்து நம்மை வழிநடத்தட்டும்.
***
(Release ID: 2103073)
TS/PKV/AG/KR
Sharing my remarks during SAMVAD programme being organised in Thailand. https://t.co/ysOtGlslbI
— Narendra Modi (@narendramodi) February 14, 2025