Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு மாநிலங்களவையில் பிரதமர் திரு நரேந்திர மோடி அளித்த பதிலுரையின் தமிழாக்கம்


மாண்புமிகு அவை தலைவர் அவர்களே,

குடியரசுத் தலைவரின் உரை இந்தியாவின் சாதனைகள், இந்தியாவிடமிருந்து உலகளாவிய எதிர்பார்ப்புகள் மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் சாமானிய மக்களின் நம்பிக்கையை உள்ளடக்கியது. குடியரசுத் தலைவரின் உரை ஊக்கமளிப்பதாகவும், தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், எதிர்காலப் பணிகளுக்கு வழிகாட்டுதலை வழங்குவதாகவும் இருந்தது இந்த உரைக்கு குடியரசுத் தலைவருக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.

மாண்புமிகு அவை தலைவர் அவர்களே,

70க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மதிப்புமிக்க எண்ணங்களால் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை வளப்படுத்தினர். இரு தரப்பிலிருந்தும் விவாதங்கள் நடந்தன. அனைவரும் தங்கள் புரிதலின் அடிப்படையில் குடியரசுத் தலைவரின் உரையை விளக்கினர். அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் பற்றி நிறைய கூறப்பட்டுள்ளது. 

மாண்புமிகு அவை தலைவர் அவர்களே,

2014 முதல் தொடர்ந்து இந்திய மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்ததற்காக நன்றி தெரிவிக்கிறேன். இது மக்களால் சோதிக்கப்பட்டு, புரிந்து கொள்ளப்பட்டு, ஆதரிக்கப்பட்டு வரும் நமது வளர்ச்சி மாதிரிக்கு ஒரு சான்றாகும். ‘முதலில் நாடு’ என்ற சொற்றொடர் அவர்களின் வளர்ச்சி மாதிரியைக் குறிக்கிறது. மேலும் இது அரசின் கொள்கைகள். திட்டங்கள், செயல்களில் எடுத்துக்காட்டாகக் காட்டப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு 5 – 6 தசாப்த கால நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மாற்று ஆட்சி, நிர்வாக மாதிரியின் தேவை இருக்கிறது. 2014 முதல் ஒரு புதிய வளர்ச்சி மாதிரியைக் காண நாடு ஒரு வாய்ப்பைப் பெற்றுள்ளது.

மாண்புமிகு அவை தலைவர் அவர்களே,

இந்தியாவில் உள்ள வளங்களை உகந்த முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வது எங்கள் தீவிர முயற்சியாகும். இந்தியாவின் நேரத்தை வீணாக்காமல், நாட்டின் வளர்ச்சிக்காகவும் மக்களின் நலனுக்காகவும் பயன்படுத்துவதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம். எனவே, நாங்கள் செறிவூட்டல் அணுகுமுறையை ஏற்றுக்கொண்டோம். திட்டங்களின் உண்மையான பயனாளிகளுக்கு 100% பலன்களை உறுதி செய்வதே இந்த அணுகுமுறையின் நோக்கம். கடந்த பத்தாண்டுகளில் அனைவரும் உயர்வோம் என்ற உண்மையான உணர்வு களத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சிகள் வளர்ச்சி, முன்னேற்றத்தின் வடிவத்தில் பலனளிக்க வழிவகுத்ததில் இப்போது அது தெளிவாகத் தெரிகிறது.

மாண்புமிகு அவை தலைவர் அவர்களே,

நாட்டில் இடஒதுக்கீடு என்ற பேச்சு எழுந்த போதெல்லாம், பிரச்சினையை வலுவான முறையில் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், நாட்டைப் பிளவுபடுத்துவதற்கும், பதற்றத்தை உருவாக்குவதற்கும், ஒருவருக்கொருவர் விரோதத்தை வளர்ப்பதற்கும் முறைகள் பின்பற்றப்பட்டன. நாடு சுதந்திரம் பெற்ற பிறகும் இதேபோன்ற அணுகுமுறைகள் பயன்படுத்தப்பட்டன. பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு எந்த பதற்றமோ அல்லது பற்றாக்குறையோ இல்லாமல் கிட்டத்தட்ட 10% இடஒதுக்கீட்டை வழங்கும் ஒரு மாதிரியை முதன்முறையாக எனது அரசு முன்வைத்தது. இந்த முடிவை எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகங்கள் வரவேற்றன. யாரும் எந்த அசௌகரியத்தையும் வெளிப்படுத்தவில்லை.

மாண்புமிகு அவை தலைவர் அவர்களே,

நாட்டில் முன்பு மாற்றுத்திறனாளிகள் உரிய கவனம் பெறவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை எனது அரசு விரிவுபடுத்தி, அவர்களுக்கான வசதிகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. சிறப்புத் திறன் கொண்ட தனிநபர்களின் நலனுக்காக ஏராளமான நலத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், திருநங்கைகளின் சட்ட உரிமைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் பல உள்ளன. வலுவான சட்ட நடவடிக்கைகள் மூலம் அவர்களின் உரிமைகளை உறுதி செய்வதற்கான உறுதிப்பாட்டுடன் அரசு செயல்படுகிறது.

மாண்புமிகு அவை தலைவர் அவர்களே,

இந்தியாவின் பெண்கள் சக்தியே முன்னேற்றத்திற்கு உந்துதல். பெண்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு கொள்கை வகுப்பில் ஒரு பகுதியாக மாறினால், அது நாட்டின் முன்னேற்றத்தை துரிதப்படுத்தும். அதனால்தான் புதிய நாடாளுமன்றத்தில் அரசின் முதல் முடிவு பெண்கள் சக்தியின் மரியாதைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. புதிய நாடாளுமன்றம் அதன் தோற்றத்திற்காக மட்டுமல்ல, பெண்கள் சக்திக்கு மரியாதை செலுத்தும் அதன் முதல் முடிவிற்காகவும் நினைவுகூரப்படும். புதிய நாடாளுமன்றத்தை பாராட்டுக்காக வித்தியாசமாகத் தொடங்கியிருக்கலாம். மாறாக, அது பெண்களின் மரியாதைக்காக அர்ப்பணிக்கப்பட்டது. பெண்கள் சக்தியின் ஆசியுடன் நாடாளுமன்றம் அதன் பணியைத் தொடங்கியுள்ளது.

மாண்புமிகு அவை தலைவர் அவர்களே,

முந்தைய அரசுகளால் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஒருபோதும் பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவராக கருதப்படவில்லை. ஆனால், நாட்டு மக்கள் எப்போதும் டாக்டர் அம்பேத்கரின் ஆன்மாவையும் கொள்கைகளையும் மதித்து வந்துள்ளனர். சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளின் இந்த மரியாதை காரணமாக, அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த அனைவரும் இப்போது “ஜெய் பீம்” என்று சொல்கின்றனர்.

மாண்புமிகு அவை தலைவர் அவர்களே,

எஸ்சி, எஸ்டி சமூகங்கள் எதிர்கொள்ளும் அடிப்படை சவால்களை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஆழமாகப் புரிந்துகொண்டார். அவர்களின் வலியையும் துன்பத்தையும் நேரில் அனுபவித்ததார். இந்த சமூகங்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான தெளிவான பாதையை டாக்டர் அம்பேத்கர் முன்வைத்தார். “இந்தியா ஒரு விவசாய நாடாக இருந்தாலும், விவசாயம் தலித்துகளுக்கு முக்கிய வாழ்வாதாரமாக இருக்க முடியாது” என்று டாக்டர் அம்பேத்கர் கூறினார்.  டாக்டர் அம்பேத்கர் இரண்டு காரணங்களை அடையாளம் கண்டார். முதலாவதாக, நிலம் வாங்க இயலாமை, இரண்டாவதாக, பணமிருந்தும் நிலம் வாங்க வாய்ப்புகள் இல்லாமை. தலித்துகள், பழங்குடியினர், விளிம்புநிலைக் குழுக்கள் எதிர்கொள்ளும் இந்த அநீதிக்கு தீர்வாக தொழில்மயமாக்கலை டாக்டர் அம்பேத்கர் வாதிட்டார். திறன் சார்ந்த வேலைகள் மற்றும் பொருளாதார சுயசார்புக்கான தொழில்முனைவோரை ஊக்குவிப்பதில் டாக்டர் அம்பேத்கர் நம்பிக்கை கொண்டிருந்தார். சுதந்திரத்திற்குப் பிறகு பல தசாப்தங்களாக டாக்டர் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வை கருதப்படவில்லை. முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டது. எஸ்சி, எஸ்டி சமூகங்களின் பொருளாதார கஷ்டங்களை நீக்குவதே டாக்டர் அம்பேத்கரின் நோக்கமாக இருந்தது.

மாண்புமிகு அவை தலைவர் அவர்களே,

2014-ம் ஆண்டில் பொறுப்பேற்ற எனது அரசாங்கம் திறன் மேம்பாடு, நிதி உள்ளடக்கம், தொழில்துறை வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்தது. கிராமங்களில் பரவியுள்ள, பாரம்பரிய கைவினைஞர்கள், கொல்லர்கள், குயவர்கள் போன்ற கைவினைஞர்களை இலக்காகக் கொண்ட பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் முறையாக, சமூகத்தின் இந்தப் பிரிவினருக்கு பயிற்சி, தொழில்நுட்ப மேம்பாடுகள், புதிய கருவிகள், வடிவமைப்பு உதவி, நிதி உதவி, சந்தை அணுகல் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் அவர்களுக்கான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புறக்கணிக்கப்பட்ட குழுவில் கவனம் செலுத்துவதற்காக எனது அரசு ஒரு சிறப்பு இயக்கத்தைத் தொடங்கியது.

மாண்புமிகு அவை தலைவர் அவர்களே,

“முதல் முறையாக தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும் எங்கள் அரசு முத்ரா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. மேலும் சமூகத்தின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியினர் தங்கள் தன்னம்பிக்கை கனவுகளை அடைய உதவும் வகையில் உத்தரவாதங்கள் இல்லாமல் கடன்களை வழங்கும் பெரிய அளவிலான இயக்கம் வெற்றியைக் கண்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, எந்த சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் அவர்களின் நிறுவனங்களை ஆதரிக்க ஒரு கோடி ரூபாய் வரை உத்தரவாதங்கள் இல்லாமல் கடன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு, இந்தத் திட்டத்திற்கான பட்ஜெட் இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது. முத்ரா திட்டத்தின் கீழ், விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்களும், பல பெண்களும் தங்கள் தொழில்களைத் தொடங்கியுள்ளனர். இது தங்களுக்கு வேலைவாய்ப்பைப் வழங்குவது மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்குகிறது. முத்ரா திட்டத்தின் மூலம் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் கனவை நிறைவேற்றி, ஒவ்வொரு கைவினைஞருக்கும், ஒவ்வொரு சமூகத்திற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு அவை தலைவர் அவர்களே,

ஏழைகள், விளிம்புநிலை மக்களின் நலனுக்கான எனது உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறேன். புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு இப்போது முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தற்போதைய பட்ஜெட் தோல், காலணித் தொழில்கள் போன்ற பல்வேறு சிறிய துறைகளைத் தொட்டுள்ளது.இதனால் ஏழைகள், விளிம்புநிலை சமூகங்கள் பயனடையும். விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த பலர் பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அரசு இந்தத் துறையில் கவனம் செலுத்தி, ஏழைக் குடும்பங்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை அரசு வழங்குகிறது. இதன் விளைவாக பொம்மை ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இது அவர்களின் வாழ்வாதாரத்திற்காக இந்தத் தொழிலை நம்பியிருக்கும் பின்தங்கிய சமூகங்களுக்கு பயனளிக்கிறது.

மாண்புமிகு அவை தலைவர் அவர்களே,

இந்தியாவில் மீனவ சமூகம் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கொண்டுள்ளது. மீனவர்களுக்கென ஒரு தனி அமைச்சகத்தை அரசு நிறுவியுள்ளது. கிசான் கிரெடிட் கார்டின் பலன்களை அவர்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது. மீன்வளத் துறைக்கு சுமார் ரு.40,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிகள் மீன் உற்பத்தி, ஏற்றுமதியை இரட்டிப்பாக்கியுள்ளன. இதனால் மக்களுக்கு நேரடி நன்மை கிடைக்கும்.

மாண்புமிகு அவை தலைவர் அவர்களே,

எல்லை கிராமங்கள் போன்ற குறிப்பிடத்தக்க பின்தங்கிய நிலையை எதிர்கொள்ளும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எங்கள் அரசு கவனம் செலுத்தியுள்ளது. எல்லை கிராமவாசிகள் முன்னுரிமை பெறுவதை உறுதி செய்வதன் மூலம், அரசால்  உளவியல் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.  சூரியனின் முதல், கடைசி கதிர்கள் தொடும் இந்தக் கிராமங்களுக்கு, குறிப்பிட்ட மேம்பாட்டுத் திட்டங்களுடன் “முதல் கிராமங்கள்” என்ற சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. மைனஸ் 15 டிகிரி போன்ற மோசமான சூழ்நிலைகளில் கூட, கிராம மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்காக, தொலைதூர கிராமங்களுக்கு அமைச்சர்கள் 24 மணி நேரம் தங்க அனுப்பப்பட்டனர். இந்த எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த கிராமத் தலைவர்கள் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தேசிய கொண்டாட்டங்களில் விருந்தினர்களாக அழைக்கப்படுகிறார்கள். நாட்டின் பாதுகாப்பிற்கான துடிப்பான கிராமங்கள் திட்டத்தில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்துகிறது.

மாண்புமிகு அவை தலைவர் அவர்களே,

குடியரசுத் தலைவரின் உரையில், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களிடமிருந்து உத்வேகம் பெறுமாறு வலியுறுத்தப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் உணர்வுகளிலிருந்து மரியாதையுடனும் உத்வேகத்துடனும் அரசு முன்னேறி வருவதில் குடியரசுத் தலைவர் திருப்தி தெரிவித்தார். பொது சிவில் சட்டம் தொடர்பாகச் சிலருக்கு அரசியல் ரீதியான ஆட்சேபனைகள் இருக்கலாம். ஆனால் அரசு இந்த தொலைநோக்குப் பார்வையை தைரியத்துடனும் அர்ப்பணிப்புடனும் நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளது.

மாண்புமிகு அவை தலைவர் அவர்களே,

அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களை மதிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர்களின் வார்த்தைகளிலிருந்து உத்வேகம் பெறுவதன் முக்கியத்துவத்தையும் உணர வேண்டும். சுதந்திரத்திற்குப் பிறகு உடனடியாக அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் உணர்வுகள் புறக்கணிக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்லாத ஒரு இடைக்கால ஏற்பாடு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செய்யும் வரை காத்திருக்காமல் அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்தது. ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதாகக் கூறிக் கொண்டு, அப்போதைய அரசால் பேச்சு சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டது. பத்திரிகைகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இது அரசியலமைப்பின் உணர்வை முழுமையாக அவமதிப்பதாகும்.

மாண்புமிகு அவை தலைவர் அவர்களே,

ஏழைகளுக்கு அதிகாரமளிப்பதும், அவர்களின் மேம்பாடும் தமது அரசின் ஆட்சிக் காலத்தில் இருந்ததைப் போல இவ்வளவு விரிவானதாக முன்பு இருந்ததில்லை. ஏழைகளுக்கு அதிகாரமளிப்பதையும், வறுமையை வெல்ல அவர்களைத் தூண்டுவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டங்களை அரசு வடிவமைத்துள்ளது. வாய்ப்பு வழங்கப்பட்டால், அவர்களால் எந்த சவாலையும் சமாளிக்க முடியும். இந்தத் திட்டங்கள், வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஏழைகள் தங்கள் திறனை நிரூபித்துள்ளனர். “அதிகாரமளிப்பதன் மூலம், 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து வெற்றிகரமாக மீண்டுள்ளனர். இது அரசுக்கு பெருமை சேர்க்கும் விஷயம். வறுமையிலிருந்து மீண்டவர்கள் கடின உழைப்பு, அரசின் மீதான நம்பிக்கை, திட்டங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அதைச் செய்துள்ளனர். இன்று அவர்கள் நாட்டில் ஒரு புதிய நடுத்தர வர்க்கத்தை உருவாக்கியுள்ளனர்.

மாண்புமிகு அவை தலைவர் அவர்களே,

புதிய நடுத்தர வர்க்கம், நடுத்தர வர்க்கத்திற்கு அரசின் வலுவான அர்ப்பணிப்பு உண்டு. அவர்களின் விருப்பங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு உந்து சக்தியாகவும், புதிய ஆற்றலையும், தேசிய வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளத்தையும் வழங்குகிறது.  தற்போதைய பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினரில் கணிசமான பகுதியினருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டில், வருமான வரி விலக்கு வரம்பு ரூ.2 லட்சம் வரை இருந்தது. ஆனால் இப்போது அது ரூ.12 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு வகுப்பைச் சேர்ந்த அல்லது சமூகத்தைச் சேர்ந்த 70 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர். நடுத்தர வர்க்கத்தில் உள்ள முதியவர்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகள் உள்ளன.

மாண்புமிகு அவை தலைவர் அவர்களே,

நாங்கள் கமக்களுக்காக நான்கு கோடி வீடுகளைக் கட்டியுள்ளோம். நகரங்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. வீடு வாங்குபவர்களைப் பாதிக்கும் குறிப்பிடத்தக்க மோசடிகள் இருந்தன. இதனால் பாதுகாப்பு வழங்குவது அவசியமானது. இந்த நாடாளுமன்றத்தில் ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டம் இயற்றப்பட்டது நடுத்தர வர்க்கத்தினரின் வீட்டு உரிமை கனவுக்கான தடைகளைத் தாண்டுவதில் ஒரு முக்கியமான கருவியாக மாறியுள்ளது.

மாண்புமிகு அவை தலைவர் அவர்களே,

உலக அளவில் புத்தொழில் புரட்சி அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்த புத்தொழில்கள் முதன்மையாக நடுத்தர வர்க்க இளைஞர்களால் இயக்கப்படுகின்றன. குறிப்பாக நாடு முழுவதும் 50-60 இடங்களில் நடைபெற்ற ஜி20 கூட்டங்கள் காரணமாக, உலகம் இந்தியாவை நோக்கி அதிகளவில் ஈர்க்கப்பட்டது. தில்லி, மும்பை, பெங்களூருவைத் தாண்டி இந்தியாவின் பரந்த தன்மையை இது வெளிப்படுத்தியுள்ளது. இந்திய சுற்றுலாவில் வளர்ந்து வரும் உலகளாவிய ஆர்வம் ஏராளமான வணிக வாய்ப்புகளைத் தருகிறது. பல்வேறு வருமான ஆதாரங்களை வழங்குவதன் மூலம் நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரிதும் பயனளிக்கிறது.

மாண்புமிகு அவை தலைவர் அவர்களே,

வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். தற்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் வளர்ந்த நாட்டின் முதன்மை பயனாளிகளாக இருப்பார்கள். இளைஞர் யுகத்தில், நாட்டின் வளர்ச்சிப் பயணம் முன்னேறும். அது வளர்ந்த இந்தியாவிற்கு ஒரு குறிப்பிடத்தக்க அடித்தளமாக மாறும். கடந்த பத்தாண்டுகளில், பள்ளிகள், கல்லூரிகளில் இளைஞர் தளத்தை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 30 ஆண்டுகளாக, 21 ஆம் நூற்றாண்டின் கல்வி குறித்து சிறிதளவு சிந்தனையும் இல்லை. முந்தைய அணுகுமுறை விஷயங்கள் அப்படியே தொடர அனுமதிப்பதாக இருந்தது. புதிய தேசிய கல்விக் கொள்கை பல ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்டது.

மாண்புமிகு அவை தலைவர் அவர்களே,

இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க பல தசாப்தங்கள் ஆகும். இந்தக் கொள்கையின் கீழ் பல்வேறு முயற்சிகள், பிரதமரின் ஸ்ரீ பள்ளிகளை நிறுவுதல் உட்பட, கல்வியில் புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. சுமார் 10,000 முதல் 12,000 பிஎம் ஸ்ரீ பள்ளிகள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இன்னும் பலவற்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒருவரின் தாய்மொழியில் கல்வி அவசியம். அனைத்துப் பின்னணியிலிருந்தும் வரும் குழந்தைகள் மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் கனவு காண முடியும் என்பதை உறுதி செய்வதற்காக  சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

மாண்புமிகு அவை தலைவர் அவர்களே,

சைனிக் பள்ளிகளில் முக்கிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பெண்கள் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான பெண்கள் தற்போது இந்த தேசபக்தி சூழலில் படிக்கின்றனர். இது இயற்கையாகவே நாட்டின் மீது பக்தி உணர்வை வளர்க்கிறது.

மாண்புமிகு அவை தலைவர் அவர்களே,

வழக்கமான பணிகளைத் தாண்டி, புதிதாக ஒன்றைச் சாதிக்க நாட்டின் இளைஞர்களிடம் உற்சாகமும் ஆர்வமும் உள்ளது. பல நகரங்களில் உள்ள இளைஞர் குழுக்கள் தங்கள் சுய உந்துதலுடன் தூய்மை இயக்கத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கின்றனர். 

மாண்புமிகு அவை தலைவர் அவர்களே,

 விளையாட்டு பரவலாக இருக்கும் ஒரு நாட்டின் உணர்வு செழிக்கிறது. விளையாட்டுத் திறமைகளை ஆதரிக்க ஏராளமான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் முன்னெப்போதும் இல்லாத நிதி உதவி, உள்கட்டமைப்பு மேம்பாடு அடங்கும்.  இந்திய விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். இளம் பெண்கள் உட்பட இந்தியாவின் இளைஞர்கள் உலக அரங்கில் நாட்டின் வலிமையை நிரூபித்துள்ளனர்.

மாண்புமிகு அவை தலைவர் அவர்களே,

 ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு நலத்திட்டங்களும் உள்கட்டமைப்பும் மிக முக்கியமானவை. மேலும் உள்கட்டமைப்பு திட்டங்களை சரியான நேரத்தில் முடிக்க வேண்டியது அவசியம். தாமதங்கள் வரி செலுத்துவோரின் பணத்தை வீணடிப்பதற்கும், நாட்டின் நன்மைகளை இழப்பதற்கும் வழிவகுக்கும். சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நேரடி தொடர்பு உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டங்களை விரிவாகக் கண்காணிப்பதற்கான பிரகதி தளம் நிறுவப்பட்டுள்ளது. மாநில, மத்திய அரசுகள் அல்லது வெவ்வேறு துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு சிக்கல்கள் காரணமாக சுமார் ரூ.19 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்கள் முன்பு முடங்கின. பிரகதியைப் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வு பாராட்டியுள்ளது. பிற வளரும் நாடுகள் இதன் அனுபவங்களிலிருந்து பயனடையலாம். 

மாண்புமிகு அவை தலைவர் அவர்களே,

கடந்த பத்தாண்டுகளில் பாதுகாப்பு தயாரிப்பு ஏற்றுமதி பத்து மடங்கு அதிகரித்துள்ளது. சூரிய சக்தி உற்பத்தியில் பத்து மடங்கு அதிகரிப்பும் உள்ளது. இந்தியா இப்போது உலகின் இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தியாளராக உள்ளது. இயந்திரங்கள், மின்னணு ஏற்றுமதிகள் கடந்த பத்தாண்டுகளில் விரைவான வளர்ச்சியைக் கண்டுள்ளன. பொம்மை ஏற்றுமதி மூன்று மடங்கிற்கும் அதிகமாகி, வேளாண் வேதியியல் ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளது. கொவிட்-19 தொற்றுநோய் காலத்தில், இந்தியா 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகள், மருந்துகளை வழங்கியது. ஆயுஷ், மூலிகைப் பொருட்களின் ஏற்றுமதியில் விரைவான வளர்ச்சி உள்ளது.

மாண்புமிகு அவை தலைவர் அவர்களே,

கதர், கிராமத் தொழில்களின் வருவாய் முதல் முறையாக ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் உற்பத்தி நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. இது குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் தொழில் துறைக்கு குறிப்பிடத்தக்க அளவில் பயனளிக்கிறது. இது நாடு முழுவதும் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.

மாண்புமிகு அவை தலைவர் அவர்களே,

வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை எட்டுவது அனைத்து இந்தியர்களின் கூட்டுப் பொறுப்பு. இது ஒரு அரசின் அல்லது ஒரு தனிநபரின் உறுதிப்பாடு மட்டுமல்ல. 140 கோடி குடிமக்களின் அர்ப்பணிப்பு. 
நாட்டின் முன்னேற்றத்தில் ஒவ்வொருவரின் பங்கும் முக்கியம்.  எதிர்ப்பு என்பது ஒரு ஜனநாயகத்தில் இயற்கையானது, அவசியமானது.  இருப்பினும், தீவிர எதிர்மறைவாதம், ஒருவரின் சொந்த பங்களிப்புகளை அதிகரிப்பதற்குப் பதிலாக மற்றவர்களைக் குறைக்க முயற்சிப்பது ஆகியவை இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கக்கூடும் என்று எச்சரித்தார். அத்தகைய எதிர்மறையிலிருந்து நம்மை விடுவித்து, தொடர்ச்சியான் சுயபரிசோதனையில் ஈடுபட வேண்டியது அவசியம். அவையில் நடைபெறும் விவாதங்கள் முன்னோக்கி எடுத்துச் செல்லப்படும். மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கும். குடியரசுத் தலைவர் உரையிலிருந்து தொடர்ச்சியான உத்வேகம் கிடைக்கும். குடியரசுத்தலைவருக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

மிக்க நன்றி!

பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் உத்தேசமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

******  

PLM/KV