Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜம்மு காஷ்மீரில் சோன்மார்க் சுரங்கப்பாதை திறப்பு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம் 

ஜம்மு காஷ்மீரில் சோன்மார்க் சுரங்கப்பாதை திறப்பு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம் 


துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா அவர்களே, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு உமர் அப்துல்லா அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களான திரு நிதின் கட்கரி அவர்களே, திரு ஜிதேந்திர சிங் அவர்களே, அஜய் தம்தா அவர்களே, துணை முதலமைச்சர் சுரேந்தர் குமார் சவுத்ரி அவர்களே, எதிர்க்கட்சித் தலைவர் சுனில் சர்மா அவர்களே, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த எனதருமை சகோதர, சகோதரிகளே.
முதலில், நாட்டின், ஜம்மு-காஷ்மீரின் முன்னேற்றத்திற்காக மிகவும் கடினமான சூழ்நிலைகளில், தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிய தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நமது ஏழு தொழிலாளர் நண்பர்கள் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் இது எங்கள் உறுதியிலிருந்து எங்களைத் தடுக்கவில்லை. எங்களின் தொழிலாளர் நண்பர்களும் மனம் தளரவில்லை. எந்தத் தொழிலாளியும் வீடு திரும்பவில்லை. எனது தொழிலாளர் சகோதரர்கள் அனைத்து சவால்களையும் சமாளித்து இந்த வேலையை முடித்துள்ளனர். இன்று, நாம் இழந்த ஏழு தொழிலாளர்களுக்கு முதலில் அஞ்சலி செலுத்துகிறேன்.
நண்பர்களே,
இந்த வானிலை, இந்த அழகான பனி மூடிய மலைகள், இவை அனைத்தும் இதயத்தை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்கின்றன. இரண்டு நாட்களுக்கு முன், இந்த இடத்தின் சில படங்களை முதலமைச்சர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். இந்த புகைப்படங்களைப் பார்த்த பின், இங்கு வருவதற்கான எனது ஆர்வம் அதிகரித்தது. உங்களுடன் நீண்ட காலமாக நான் தொடர்பில் இருக்கிறேன் என்று முதலமைச்சர் இப்போது கூறியிருப்பதால், நான் இங்கு வரும்போது, பல ஆண்டுகளுக்கு முந்தைய நாட்களை நினைவுகூரத் தொடங்கினேன். நான் பாரதிய ஜனதா கட்சியின் ஊழியராக பணியாற்றிய போது, நான் அடிக்கடி இங்கு வருவேன். சோனாமார்க், குல்மார்க், கந்தர்பால், பாரமுல்லா என எல்லா இடங்களிலும் மணிக்கணக்கில், பல கிலோமீட்டர் தூரம் நடந்தே பயணம் செய்துள்ளேன். அப்போதும் கூட பனிப்பொழிவு மிகவும் அதிகமாக இருக்கும். ஆனால் ஜம்மு காஷ்மீர் மக்களின் அரவணைப்பு காரணமாக, நாங்கள் குளிரை உணரவில்லை.
நண்பர்களே,
இன்று மிகவும் விசேஷமான நாள். நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு பண்டிகைச் சூழல் நிலவுகிறது. பிரயாக்ராஜில் இன்று முதல் மகா கும்பமேளா தொடங்குகிறது. கோடிக்கணக்கான மக்கள் புனித நீராட அங்கு செல்கின்றனர். இன்று, பஞ்சாப் உட்பட வட இந்தியா முழுவதும் லோஹ்ரியின் உற்சாகத்தால் நிரம்பியுள்ளது. இது உத்தராயணம், மகர சங்கராந்தி, பொங்கல் போன்ற பல பண்டிகைகளின் காலமாகும். நாட்டிலும், உலகிலும் இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போதுள்ள வானிலை சோனாமார்க் போன்ற சுற்றுலா தலங்களுக்கு புதிய வாய்ப்புகளை கொண்டு வருகிறது. நாடு முழுவதிலுமிருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். காஷ்மீர் பள்ளத்தாக்குகளுக்கு வந்திருப்பதன் மூலம் அவர்கள் உங்களின் விருந்தோம்பலை முழுமையாக அனுபவித்து வருகிறார்கள்.
நண்பர்களே,
இன்று நான் உங்களுக்கான ஒரு பெரிய பரிசுடன் இங்கு வந்துள்ளேன். முதலமைச்சர் கூறியது போல், 15 நாட்களுக்கு முன், ஜம்முவில் உங்கள் சொந்த ரயில்வே கோட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இது உங்களின் மிகப் பழைய கோரிக்கை. இன்று சோனாமார்க் சுரங்கப்பாதையை நாட்டுக்கு, அர்ப்பணிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. அதாவது, ஜம்மு காஷ்மீரின் மற்றொரு மிகப் பழைய கோரிக்கை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. 
நண்பர்களே,
சோனாமார்க் சுரங்கப்பாதை  கார்கில் மற்றும் லே மக்களின், வாழ்க்கையை எளிதாக்கும். பனிப்பொழிவின் போது ஏற்படும் பனிச்சரிவு அல்லது மழைக்காலங்களில் ஏற்படும் நிலச்சரிவு காரணமாக சாலைகள் அடைபடும் பிரச்சனை இப்போது குறையும். சாலைகள் மூடப்படும்போது, இங்கிருந்து பெரிய மருத்துவமனைக்குச் செல்வது கடினமாகும். இதன் காரணமாக, அத்தியாவசிய பொருட்களைப் பெறுவதில் சிரமங்கள் இருந்தன. இப்போது சோனமார்க் சுரங்கப்பாதை கட்டுமானத்தின் மூலம், இந்த சிக்கல்கள் குறையும்.
நண்பர்களே,
சோனமார்க் சுரங்கப்பாதையின் உண்மையான கட்டுமானம் 2015-ம் ஆண்டில் மத்தியில் எங்கள் அரசு அமைந்த பின்னரே தொடங்கியது, முதலமைச்சரும் அந்தக் காலகட்டத்தை மிகவும் நல்ல வார்த்தைகளில் விவரித்தார். எங்கள் ஆட்சியில் இந்த சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்துள்ளது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். 
நண்பர்களே,
வரும் நாட்களில், ஜம்மு காஷ்மீரில் சாலை மற்றும் ரயில் இணைப்புக்கான பல திட்டங்கள் நிறைவடையும். அருகிலுள்ள மற்றொரு பெரிய இணைப்பு திட்டத்திற்கான பணிகளும் நடந்து வருகின்றன. இப்போது காஷ்மீர் பள்ளத்தாக்கும் ரயில் மூலம் இணைக்கப்பட உள்ளது. இது குறித்து மிகுந்த மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவுவதை நான் காண்கிறேன். 
நண்பர்களே,
இன்று, இந்தியா வளர்ச்சியின் புதிய உச்சங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதில் அனைத்து குடிமக்களும் ஈடுபட்டு வருகின்றனர். நமது நாட்டின் எந்தப் பகுதியும், எந்தவொரு குடும்பமும் முன்னேற்றத்திலும், வளர்ச்சியிலும் பின்தங்காமல் இருக்கும்போது மட்டுமே இது சாத்தியமாகும். இதற்காக, எங்கள் அரசு “அனைவரும் இணைவோம்-அனைவரும் உயர்வோம்” என்ற உணர்வுடன், முழு அர்ப்பணிப்புடன் இரவு பகலாக உழைத்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், ஜம்மு-காஷ்மீர் உட்பட நாடு முழுவதும் 4 கோடிக்கும் அதிகமான ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கிடைத்துள்ளன. வரும் காலத்தில், மேலும் மூன்று கோடி புதிய வீடுகள் ஏழைகளுக்கு வழங்கப்பட உள்ளன. இன்று, இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் இலவச மருத்துவ சிகிச்சையைப் பெறுகிறார்கள். இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மக்களும் பெரிதும் பயனடைந்துள்ளனர். இளைஞர்களின் கல்விக்காக நாடு முழுவதும் புதிய ஐஐடிகள், புதிய ஐஐஎம்கள், புதிய எய்ம்ஸ், புதிய மருத்துவக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள், பாலிடெக்னிக்கல் கல்லூரிகள் தொடர்ந்து கட்டப்பட்டு வருகின்றன. ஜம்மு-காஷ்மீரிலும், கடந்த 10 ஆண்டுகளில் பல கல்வி நிறுவனங்கள் கட்டப்பட்டுள்ளன. இவை இங்குள்ள இளைஞர்களுக்கு பெரிதும் பயனளித்துள்ளன.
நண்பர்களே,
ஜம்மு-காஷ்மீரின் கடந்த காலம் தற்போது வளர்ச்சியின் நிகழ்காலமாக மாறியுள்ளது. காஷ்மீர் நாட்டின் கிரீடம், இந்தியாவின் கிரீடம். அதனால்தான் இந்த கிரீடம் மிகவும் அழகாக இருக்க வேண்டும். இந்த கிரீடம் மிகவும் செழிப்பாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்தப் பணியில் இங்குள்ள இளைஞர்கள், பெரியவர்கள், மகன்கள் மற்றும் மகள்களின் தொடர்ச்சியான ஆதரவு எனக்கு கிடைப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் கனவுகளை நனவாக்க, ஜம்மு-காஷ்மீரின் முன்னேற்றத்திற்காக, இந்தியாவின் முன்னேற்றத்திற்காக நீங்கள் கடுமையாக உழைத்து வருகிறீர்கள். உங்கள் கனவுகளின் வழியில் வரும் ஒவ்வொரு தடையையும் மோடி நீக்குவார் என்று மீண்டும் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
நண்பர்களே,
இன்றைய வளர்ச்சித் திட்டங்களுக்காக ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மீண்டும் ஒருமுறை எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது சகாவான நிதின் அவர்களும், மனோஜ் சின்ஹா அவர்களும், முதலமைச்சரும் முன்னேற்றத்தின் வேகம், வளர்ச்சியின் வேகம், தொடங்கப்படவுள்ள புதிய திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கியிருக்கிறார்கள். அதனால், நான் அதை மீண்டும் கூறவில்லை. நாம் ஒன்றாக கனவுகளை போற்றுவோம். தீர்மானங்களை எடுப்போம், வெற்றியை அடைவோம் என்பதை மட்டும் உங்களுக்குச் சொல்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்.
மிக்க நன்றி.

***********

TS/SMB/AG/KV