Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நவீன இந்தியா ஹேக்கத்தான் 2024 பங்கேற்பாளர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடினார்

நவீன இந்தியா ஹேக்கத்தான் 2024 பங்கேற்பாளர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடினார்


நவீன இந்தியா ஹேக்கத்தான் 2024-இன் பிரமாண்ட நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இளம் கண்டுபிடிப்பாளர்களுடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், செங்கோட்டையில் இருந்து ஆற்றிய உரைகளில் ‘அனைவரும் இணைவோம்’ என்ற நடைமுறையை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியதை நினைவுபடுத்தினார். “நவீன  இந்தியா ஹேக்கத்தானின் மாபெரும் இறுதிப் போட்டிக்காக நான் ஆவலுடன் காத்திருந்தேன்” என்று கூறிய பிரதமர், இளம் கண்டுபிடிப்பாளர்கள் மத்தியில் தான் இருக்கும்போது, புதியவற்றைக் கற்றுக்கொள்ளவும், புரிந்து கொள்ளவும் தனக்கு வாய்ப்பு கிடைக்கிறது என்று குறிப்பிட்டார். இளம் கண்டுபிடிப்பாளர்களிடம் இருந்து தாம் அதிகம் எதிர்பார்ப்பதாக தெரிவித்த பிரதமர், 21-ஆம் நூற்றாண்டின் இந்தியாவை வித்தியாசமாகப் பார்க்கும் தொலைநோக்குப் பார்வையை அவர்கள் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். எனவே, உங்கள் தீர்வுகளும் வேறுபட்டவை, ஒரு புதிய சவால் வரும்போது, நீங்கள் புதிய மற்றும் தனித்துவமான தீர்வுகளைக் கொண்டு வருகிறீர்கள் என்று திரு மோடி கூறினார். கடந்த காலத்தில் ஹேக்கத்தான் போட்டிகளில் பங்கேற்றதை நினைவுகூர்ந்த பிரதமர், ஹேக்கத்தான் போட்டிகளின் வெளியீடு குறித்து தான் ஒருபோதும் ஏமாற்றம் அடைந்ததில்லை என்றார். “நீங்கள் எனது நம்பிக்கையை நீங்கள் வலுப்படுத்தியுள்ளீர்கள்” என்று கூறிய அவர், கடந்த காலங்களில் வழங்கப்பட்ட தீர்வுகள் பல்வேறு அமைச்சகங்களில் பயன்படுத்தப்படுகின்றன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

இந்த ஹேக்கத்தானின் சிறப்பை எடுத்துரைத்த பிரதமர், இதன் செயல்முறை மற்றும் தயாரிப்பு முக்கியமானது என்றார். நாட்டின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதாக அரசு மட்டுமே கூறிக்கொண்டிருந்த ஒரு காலம் இருந்தது என்று கூறிய திரு மோடி, இருப்பினும் இன்று, இதுபோன்ற ஹேக்கத்தான்கள் மூலம், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டிகளும் சேர்ந்து தீர்வுகளை கண்டடைகிறார்கள் என்றார். இது இந்தியாவின் புதிய நிர்வாக மாதிரி என்றும், ‘அனைவரின் முயற்சி’ இந்த மாதிரியின் உயிர் சக்தி என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாட்டின் அடுத்த 25 ஆண்டுகளுக்கான தலைமுறை இந்தியாவின் அமிர்த தலைமுறையாகும் என்று வலியுறுத்திய பிரதமர், வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் பொறுப்பு இளைஞர்களுக்கு உள்ளது என்று குறிப்பிட்டு, தேவையான அனைத்து வளங்களையும் சரியான நேரத்தில் வழங்க அரசு உறுதிபூண்டுள்ளது என்றார். பல்வேறு வயதுப் பிரிவுகளில் பல்வேறு  நிலைகளில் அரசு பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்காக புதிய தேசிய கல்விக் கொள்கையை அரசு அமல்படுத்தியிருப்பதாகவும், நாட்டின் அடுத்த தலைமுறையினர் பள்ளிகளில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆதாரங்களைப் பெறுவதை உறுதி செய்வதற்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடல் டிங்கரிங் சோதனைக் கூடங்களைத் திறந்துள்ளதாகவும் கூறினார். இந்த ஆய்வகங்கள் தற்போது புதிய சோதனைகளின் மையமாக மாறி வருவதை எடுத்துரைத்த அவர், ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகளால் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருவதாக கூறினார். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதமரின் ஸ்ரீ பள்ளிகள் 21-ஆம் நூற்றாண்டின் திறன்களில் செயல்பட்டு வருவதாகவும், மாணவர்களின் புதுமையான சிந்தனையை மேலும் மேம்படுத்த கல்லூரி அளவில்  பாதுகாப்பு மையங்களை அரசு நிறுவியுள்ளதாகவும் அவர் கூறினார். மேம்பட்ட ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் செயல்முறை கற்றலுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்ட திரு மோடி, இளைஞர்களின் கேள்விகளுக்கு தீர்வு காண ஜிக்யாசா தளம் உருவாக்கப்பட்டதாகவும், அங்கு அவர்கள் விஞ்ஞானிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும் பேசவும் வாய்ப்பு கிடைத்தது என்றும் கூறினார்.

இன்று இளைஞர்களுக்கு பயிற்சி மட்டுமின்றி, ஸ்டார்ட்அப் இந்தியா இயக்கத்தின் மூலம் நிதி உதவியும் அளிக்கப்படுவதாகவும், அவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதாகவும் பிரதமர்  குறிப்பிட்டார். தொழில் தொடங்க ரூ.20 லட்சம் வரை முத்ரா கடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். புதிய நிறுவனங்களுக்காக நாடு முழுவதும் தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் புதிய தகவல் தொழில்நுட்ப மையங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், அரசு ரூ .1 லட்சம் கோடி ஆராய்ச்சி நிதியை உருவாக்கியுள்ளதாகவும் திரு மோடி தெரிவித்தார். இளைஞர்களின் தேவைகளுக்கு ஏற்ப பணியாற்றும் அதே வேளையில், அவர்களின் தொழில் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும்  அரசு அவர்களுடன்  துணை நிற்கிறது என்று அவர் மேலும் கூறினார். ஹேக்கத்தான்கள் வெறும் சம்பிரதாய நிகழ்வு மட்டுமல்ல, நமது இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குகின்றன என்று வலியுறுத்தினார்.

இந்தியாவை பொருளாதார வல்லரசாக நிலைநிறுத்த வளர்ந்து வரும் துறைகளில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதமர்  அடிகோடிட்டுக் காட்டினார் . பத்தாண்டுகளுக்கு முன்பு நன்கு வளர்ச்சியடையாத டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கம் மற்றும் கேமிங் போன்ற துறைகள் இப்போது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகின்றன என்று அவர் எடுத்துரைத்தார். இந்தத் துறைகள் புதிய தொழில்  பாதைகளுக்கு வித்திடுகின்றன மற்றும் இளைஞர்களுக்கு  ஆய்வு மேற்கொள்ள வாய்ப்புகளை வழங்குகின்றன. சீர்திருத்தங்கள் மூலம் தடைகளை நீக்குவதன் மூலம் இளைஞர்களின் ஆர்வம் மற்றும் நம்பிக்கைக்கு அரசு தீவிரமாக ஆதரவளித்து வருகிறது. உள்ளடக்க படைப்பாளர்களின் முயற்சிகள் மற்றும் படைப்பாற்றலை அங்கீகரிக்கும் நோக்கில் சமீபத்தில் வழங்கப்பட்ட தேசிய படைப்பாளிகள் விருதையும் அவர் குறிப்பிட்டார். கேலோ இந்தியா மற்றும் டாப்ஸ் திட்டம் போன்ற முயற்சிகளுடன் விளையாட்டை ஒரு சாத்தியமான  தொழில்சார் தேர்வாக ஊக்குவிப்பதற்கான  அரசின் முயற்சிகளை பிரதமர் சுட்டிக்காட்டினார், இது கிராம அளவிலான போட்டிகள் முதல் ஒலிம்பிக் போட்டிகள் வரை முக்கிய போட்டிகளுக்கு விளையாட்டு வீரர்களைத் தயார்படுத்த உதவுகிறது.

ஒரே நாடு-ஒரே சந்தா திட்டத்தை தொடங்க அரசு சமீபத்தில் எடுத்த முடிவை பிரதமர் சுட்டிக்காட்டினார், இது உலகளவில் பாராட்டைப் பெற்றுள்ளது. இந்த முயற்சி இந்தியாவின் இளைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கு சர்வதேச  சஞ்சிகைகளுக்கான அணுகலை வழங்குகிறது, எந்தவொரு இளைஞரும் மதிப்புமிக்க தகவல்களை இழக்கக்கூடாது என்பதை உறுதி செய்கிறது. இந்த திட்டத்தின் கீழ்,  அரசு மதிப்புமிக்க சஞ்சிகைகளுக்கு சந்தா செலுத்துகிறது, இது அறிவை பரவலாக அணுக உதவுகிறது.

அரசியலில் குடும்ப உறுப்பினர்களின்  வரலாறு இல்லாத ஒரு லட்சம் இளைஞர்களை நாட்டின் அரசியலில் கொண்டு வருவதற்கான தனது அறிவிப்பை மீண்டும் வலியுறுத்திய திரு மோடி, இது இந்தியாவின் எதிர்காலத்திற்கு இன்றியமையாதது என்று கூறியதுடன், இந்த திசையில் வெவ்வேறு வழிகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். 2025 ஜனவரியில் “வளர்ந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல்” நிகழ்ச்சி நடைபெறும் என்றும், இதில் நாடு முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்று வளர்ந்த இந்தியாவுக்கான தங்கள் யோசனைகளை வழங்குவார்கள் என்றும் திரு மோடி அறிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2083386

***

(Release ID: 2083386)
TS/BR/KR