Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய-ஆஸ்திரேலிய 2-வது வருடாந்திர உச்சிமாநாடு

இந்திய-ஆஸ்திரேலிய 2-வது வருடாந்திர உச்சிமாநாடு


இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் மாண்புமிகு திரு அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் நவம்பர் 19, 2024 அன்று ரியோ டி ஜெனிரோவில் ஜி20 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்திய-ஆஸ்திரேலிய இரண்டாவது வருடாந்திர உச்சிமாநாட்டை நடத்தினர்.

2025-ஆம் ஆண்டில் இந்திய-ஆஸ்திரேலிய விரிவான உத்திசார் கூட்டாண்மையின் ஐந்தாவது ஆண்டு நிறைவுக்கு முன்னதாகவே பருவநிலை மாற்றம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, கல்வி மற்றும் ஆராய்ச்சி, திறன்கள், போக்குவரத்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பிராந்திய மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பு, சமூகம் மற்றும் கலாச்சார இணைப்புகள் மற்றும் மக்களுக்கிடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இரு பிரதமர்களும் குறிப்பிட்டனர்.

நெருக்கமான இருதரப்பு ஒத்துழைப்பு, இரு நாடுகளுக்கு மட்டுமல்லாமல்  பரந்த பிராந்தியத்திற்கும் பயனளித்துள்ளது என்று தலைவர்கள் திருப்தி தெரிவித்தனர். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான நீடித்த உயர்மட்ட தொடர்பு மற்றும் அமைச்சர்கள் அளவிலான ஈடுபாட்டை அவர்கள் வரவேற்றனர். வரும்காலத்தில், ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர்கள், பரஸ்பர ஆதாயத்துக்கான முயற்சிகளில் கவனம் செலுத்தவும், முயற்சிகளை விரைவுபடுத்தவும், அத்துடன் நமது பகிரப்பட்ட பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளத்தை மேம்படுத்தவும் முன்முயற்சிகளை அறிவித்தனர்.

 

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய-ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் சாத்தியமான சரக்குகள் மற்றும் சேவைகளுக்கான இருவழி வர்த்தகம், வர்த்தக ஈடுபாடுகள் மற்றும் சந்தை அணுகல் ஆகியவை குறித்து பிரதமர்கள் திருப்தி தெரிவித்தனர். இருதரப்பு பொருளாதார உறவின் முழுத் திறனையும் உணர லட்சியமான, சமச்சீரான மற்றும் பரஸ்பரம் பயனளிக்கும் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை (சி.இ.சி.ஏ) உருவாக்குவதற்கான பணிகளை அவர்கள் வரவேற்றனர்.

இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பருவநிலை மாற்றம் குறித்த செயல்பாட்டில் வேகமாக முன்னேறுவதற்கும், இணைந்து பணியாற்றுவதற்கும் திறன்களைப் பயன்படுத்துவதற்கும் தேவையான லட்சியத்தைப் பகிர்ந்து கொண்டன. சூரியசக்தி பி.வி, பசுமை ஹைட்ரஜன், எரிசக்தி சேமிப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் மற்றும் அது தொடர்பான பகுதிகளில் இருவழி முதலீடு போன்ற முன்னுரிமைத் துறைகளில் நடைமுறை ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை வழங்கும் இந்திய-ஆஸ்திரேலிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கூட்டாண்மை தொடங்கப்பட்டதை பிரதமர்கள் வரவேற்றனர்.

விரிவான பாதுகாப்பு கூட்டாண்மையின் பாதுகாப்பு தூணின் கீழ் நீடித்த முன்னேற்றத்தை பிரதமர்கள் வரவேற்றனர். 2025-ஆம் ஆண்டில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த கூட்டுப் பிரகடனத்தைப் புதுப்பித்து வலுப்படுத்தும் நோக்கத்தை அவர்கள் வெளிப்படுத்தினர். கூட்டு வலிமையை அதிகரிக்கவும், இரு நாடுகளின் பாதுகாப்புக்கு பங்களிக்கவும், பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்புக்கு முக்கிய பங்களிப்பை வழங்கவும் இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு குறித்த நீண்டகால தொலைநோக்கு பற்றிய தங்களது எதிர்பார்ப்பை  பிரதமர்கள் வெளிப்படுத்தினர்.

நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, விரிவான பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கிய அம்சம் என்பதை மீண்டும் வலியுறுத்திய பிரதமர்கள், தொடர்ந்து பரிமாற்றங்களை எதிர்நோக்கி இருப்பதாதத் தெரிவித்தனர்.

நமது இருதரப்பு உறவுகளை தொடர்ந்து வளப்படுத்தும் வகையில் வளர்ந்து வரும் மக்களுக்கு இடையேயான தொடர்புகளின் வலிமையை அங்கீகரித்த இரு தலைவர்களும், இந்திய பாரம்பரியத்தில் ஆஸ்திரேலியர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வரவேற்றதுடன், இதை மேலும் வலுப்படுத்தவும் ஒப்புக் கொண்டனர்.

பெங்களூருவில் ஆஸ்திரேலிய புதிய துணைத் தூதரகம் திறக்கப்பட்டதையும், பிரிஸ்பேனில் புதிய இந்தியத் துணைத் தூதரகம் திறக்கப்பட்டதையும் பிரதமர்கள் வரவேற்றனர். இவை வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் கலாச்சார தொடர்புகளை ஆழப்படுத்தும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

தடையற்ற, உள்ளடக்கிய, நிலையான, அமைதியான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பகுதிக்கு ஆதரவு அளிப்பது என்ற தங்களது உறுதிப்பாட்டை பிரதமர்கள் மீண்டும் வலியுறுத்தினர். அனைத்துக் கடல்களிலும், பெருங்கடல்களிலும் சர்வதேச சட்டங்களுக்கு, குறிப்பாக சுதந்திரமான கடல்வழி போக்குவரத்து மற்றும் வான்வழிப் போக்குவரத்து உள்ளிட்ட கடல் சட்டம் தொடர்பான ஐ.நா மாநாட்டுக்கு உட்பட்டு உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை பயன்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர்கள் அடிக்கோடிட்டுக் காட்டினர்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கு உண்மையான, நேர்மறையான மற்றும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் உலகளாவிய நன்மைக்கான சக்தியாக குவாட் அமைப்பின் மூலம் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை பிரதமர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.

இருதரப்பு செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த நேர்மறையான மதிப்பீடுகளைப் பகிர்ந்து கொண்ட பிரதமர்கள், பரஸ்பர நலனுக்காகவும், பிராந்தியத்தின் நலனுக்காகவும் உறவுகளை மேலும் ஆழப்படுத்த உறுதிபூண்டுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2074823

***

TS/BR/RR