Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நைஜீரியாவில் இந்தியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

நைஜீரியாவில் இந்தியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின்  தமிழாக்கம்


வணக்கம்!

எனக்கு அளிக்கப்பட்ட உற்சாகமான வரவேற்புக்காக அதிபர் டினுபுவுக்கும், நைஜீரிய மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சற்று நேரத்திற்கு முன்பு, அதிபர் டினுபு நைஜீரியாவின் தேசிய விருதை எனக்கு வழங்கி கௌரவித்தார். இந்த கௌரவம் மோடிக்கு மட்டுமல்ல; இது கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும், இங்குள்ள இந்திய சமூகத்தினரான உங்கள் அனைவருக்கும் சொந்தமானது. இந்த கவுரவத்தை உங்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கிறேன்.

நண்பர்களே,

அதிபர் டினுபுவுடனான எனது கலந்துரையாடலின் போது, நைஜீரியாவின் முன்னேற்றத்திற்கு நீங்கள் அளித்த பங்களிப்பை அவர் தொடர்ந்து பாராட்டினார். இந்திய சமூகம் எப்போதும் நைஜீரியாவுக்கு ஆதரவாக நின்று, அதன் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளது. இப்போது நாற்பது அல்லது அறுபது வயதைக் கடந்த பல நைஜீரியர்கள் இந்திய ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டதை நினைவு கூர்வார்கள். இந்திய மருத்துவர்கள் இங்குள்ள மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்து வருகின்றனர். இன்று பல்வேறு இந்திய நிறுவனங்கள் நைஜீரியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி வருகின்றன.  நைஜீரியாவின் முன்னேற்றத்திற்காக இந்திய சமூகத்தினர் உள்ளூர் மக்களுடன் கைகோர்த்து ஒத்துழைத்து வருகின்றனர். இந்த ஒற்றுமையும், பகிரப்பட்ட நோக்கமும் மதிப்புகள் என்ற இந்திய மக்களின் மிகப்பெரிய வலிமையை பிரதிபலிக்கின்றன. நாம் எங்கு சென்றாலும், நமது மதிப்புகளை உயர்த்திப் பிடிக்கிறோம், அனைவரின் நலனுக்காகவும் பாடுபடுகிறோம். பல நூற்றாண்டுகளாக நமது நரம்புகளில் பதிந்துள்ள இந்த மதிப்புகள், முழு உலகத்தையும் ஒரே குடும்பமாகக் கருத நமக்குக் கற்பிக்கின்றன. நம்மைப் பொறுத்தவரை இந்த உலகம் முழுவதும் ஒரே குடும்பம்தான்.

நண்பர்களே,

ஜனநாயகத்தின் தாயான பாரதமும், ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நைஜீரியாவும் ஜனநாயகம், பன்முகத்தன்மை மற்றும் மக்கள்தொகை ஆற்றலின் உணர்வைப் பகிர்ந்து கொள்கின்றன. இரு நாடுகளும் எண்ணற்ற மொழிகளையும் பலதரப்பட்ட பழக்க வழக்கங்களையும் கொண்டவை. இங்கே நைஜீரியாவில், லாகோஸின் ஜெகந்நாதர், வெங்கடேஸ்வரர், கணபதி தாதா மற்றும் கார்த்திகேயா போன்ற கோயில்கள் கலாச்சார பன்முகத்தன்மைக்கு மரியாதை அளிக்கும் அடையாளங்களாக நிற்கின்றன.

கடந்த தசாப்தத்தில் மட்டும், பாரதம் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2 ட்ரில்லியன் டாலர்களைச் சேர்த்துள்ளது. வெறும் பத்தே ஆண்டுகளில், நமது பொருளாதார அளவு இரட்டிப்பாகியுள்ளது. இன்று பாரதம் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக நிற்கிறது. பாரதம், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறி, உலகின் மூன்றாவது பெரிய நாடாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.

நேற்று நான் வந்ததிலிருந்து, நீங்கள் எனக்கு அளித்த அரவணைப்பு, உற்சாகம் மற்றும் அன்பு மிகப்பெரியது. உங்களை சந்தித்தது, எனக்குக் கிடைத்த பாக்கியம், உங்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

மிக்க நன்றி!

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2074128

***

TS/BR/KR/DL