Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பழங்குடியினர் கௌரவ தினத்தையொட்டி பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டம் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

பழங்குடியினர் கௌரவ தினத்தையொட்டி பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டம் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்


 பழங்குடியினர் கௌரவ தினத்தை முன்னிட்டு பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, பீகார் மாநிலம் ஜமுயில் இன்று ரூ.6,640 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற பழங்குடியினர் தின நிகழ்ச்சிகளில் பங்கேற்ற  மாநிலங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோரைப் பிரதமர் வரவேற்றார். இந்தியா முழுவதிலும் இருந்து இந்த நிகழ்ச்சியில்  இணைந்த எண்ணற்ற பழங்குடியின சகோதர சகோதரிகளையும் பிரதமர் வரவேற்றார். கார்த்திகை பூர்னிமா, தேவ் தீபாவளி, ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின்  550-வது பிறந்த நாள் ஆகியவை அனுசரிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட திரு மோடி, அதற்காக இந்திய குடிமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாள்  பழங்குடியினர் கௌரவ தினமாகக் கொண்டாடப்படும் நாள் என்பதால்  குடிமக்களுக்கு இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று பிரதமர் கூறினார். இந்தியக் குடிமக்கள், குறிப்பாக பழங்குடியின சகோதர சகோதரிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். இன்றைய பழங்குடியினர் கௌரவ தினத்திற்கு  முன்னோட்டமாக கடந்த 3 நாட்களில் தூய்மை இயக்கம் ஜமுயில் நடைபெற்றது என்று பிரதமர் குறிப்பிட்டார். தூய்மை இயக்கத்திற்காக, ஜமுய் நிர்வாகம், குடிமக்கள், குறிப்பாக பெண்கள் போன்ற பல்வேறு பங்குதாரர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

கடந்த ஆண்டு பழங்குடியினர் கௌரவ தினத்தன்று, பிர்சா முண்டாவின் பிறந்த கிராமமான உலிஹாட்டுவில் தாம் இருந்ததை நினைவுகூர்ந்த திரு மோடி, இந்த ஆண்டு தியாகி தில்கா மஞ்சியின் துணிச்சலைக் கண்ட இடத்தில் தாம் இருந்ததாகக் குறிப்பிட்டார். பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் இன்று தொடங்குவதால் இந்த நிகழ்ச்சி மேலும் சிறப்பானது என்றார். வரும் ஆண்டிலும் கொண்டாட்டங்கள் தொடரும் என்று அவர் மேலும் கூறினார். பீகார் மாநிலம் ஜமுயில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மெய்நிகர் முறையில் பங்கேற்ற பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஒரு கோடி பேருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். பிர்சா முண்டாவின் வழித்தோன்றலும், சித்து கன்ஹுவின் வழித்தோன்றலுமான திரு மண்டல் முர்முவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாக திரு மோடி தெரிவித்தார்.

ரூ.6,640 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்கமும் அடிக்கல் நாட்டும் பணிகளும் இன்று நடைபெற்றதாக பிரதமர் குறிப்பிட்டார். பழங்குடியினருக்கு உறுதியான வீடுகள், பழங்குடி குழந்தைகளின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்காக பள்ளிகள் மற்றும் விடுதிகள், பழங்குடி பெண்களுக்கான சுகாதார வசதிகள், பழங்குடி பகுதிகளை இணைக்கும் சாலை திட்டங்கள், பழங்குடி கலாச்சாரத்தை பாதுகாக்க பழங்குடி அருங்காட்சியகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் ஆகியவற்றிற்கு சுமார் 1.5 லட்சம் ஒப்புதல் கடிதங்கள் இந்தத் திட்டங்களில் அடங்கும் என்று அவர் மேலும் கூறினார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பழங்குடியின மக்களுக்காக 11,000 வீடுகள் புதுமனைப் புகுவிழாவுக்காக  கட்டப்பட்டிருப்பதாக திரு மோடி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் அனைத்து பழங்குடியினருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

பழங்குடியினர் கௌரவ  தினம் மற்றும் பழங்குடியினர் கௌரவ ஆண்டு தொடங்குவது பற்றி குறிப்பிட்ட திரு மோடி, இந்தக் கொண்டாட்டங்கள் ஒரு பெரிய வரலாற்று அநீதியை சரிசெய்யும் நேர்மையான முயற்சியைக் குறிக்கிறது என்றார். சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் பழங்குடியினருக்கு சமூகத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். பழங்குடியின சமூகத்தின் பங்களிப்பை எடுத்துரைத்த பிரதமர், பழங்குடி சமூகம்தான் இளவரசர் ராமரை பகவான் ராமராக மாற்றியது என்றும், இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்க பல நூற்றாண்டுகளாக போராடி வழிநடத்தியது என்றும் கூறினார். எவ்வாறாயினும், சுதந்திரத்திற்குப் பிந்தைய தசாப்தங்களில் சுயநல அரசியலால் தூண்டப்பட்ட பழங்குடி சமூகத்தின் இத்தகைய முக்கியமான பங்களிப்புகளை அழிக்க முயற்சிகள் நடந்தன என்று அவர்  கூறினார். உல்குலன் இயக்கம், கோல் கிளர்ச்சி, சந்தால் கிளர்ச்சி, பில் இயக்கம் போன்ற இந்தியாவின் சுதந்திரத்திற்காக பழங்குடியினரின் பல்வேறு பங்களிப்புகளை பட்டியலிட்ட திரு மோடி, பழங்குடியினரின் பங்களிப்பு மகத்தானது என்றார். அல்லூரி சீதாராம ராஜு, தில்கா மஞ்சி, சித்து கன்ஹு, புது பகத், தெலாங் காரியா, கோவிந்த குரு, தெலுங்கானாவின் ராம்ஜி கோண்ட், மத்தியப் பிரதேசத்தின் பாதல் போய், ராஜா சங்கர் ஷா, குவர் ரகுநாத் ஷா, தந்தியா பில், ஜாத்ரா பகத், லட்சுமண் நாயக், மிசோரமின் ரோபுய்லியானி, ராஜ் மோகினி தேவி, ராணி கைடின்லியு, கலிபாய், கோண்டுவானாவின்  ராணி துர்காவதி தேவி மற்றும் பலர்இவர்களைப்  போன்ற இந்தியா முழுவதிலுமிருந்த  பல்வேறு பழங்குடித் தலைவர்களை ஒருபோதும் மறக்க முடியாது என்று அவர் கூறினார். பிரிட்டிஷார் ஆயிரக்கணக்கான பழங்குடியினரை கொன்று குவித்த மன்கர் படுகொலையை மறக்க முடியாது என்றும் திரு மோடி குறிப்பிட்டார்.

கலாச்சாரத் துறையாக இருந்தாலும், சமூக நீதித் துறையாக இருந்தாலும் தமது அரசின் மனநிலை வேறுபட்டது என்று கூறிய திரு மோடி, திருமதி திரௌபதி முர்முவை இந்தியக் குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுத்தது தங்களது அதிர்ஷ்டம் என்றார். அவர் இந்தியாவின் முதல் ஆதிவாசி குடியரசுத் தலைவர் என்றும், பிரதமர்ஜன்மன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட அனைத்து பணிகளுக்கான பெருமையும் குடியரசுத்தலைவரையே சாரும் என்றும் அவர் கூறினார். குறிப்பாக பாதிக்கக்கூடிய பழங்குடியின குழுக்களுக்கு  அதிகாரம் அளிப்பதற்காக ரூ 24,000 கோடி பிரதமர் ஜன்மன் திட்டம் தொடங்கப்பட்டது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய திரு மோடி, இந்த திட்டத்தின் கீழ், நாட்டின் மிகவும் பின்தங்கிய பழங்குடியினரின் குடியிருப்புகளின் மேம்பாடு உறுதி செய்யப்படுகிறது என்றார். இந்தத் திட்டம் இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளதாகவும், இதன் கீழ் ஆயிரக்கணக்கில் உறுதியான வீடுகள் குறிப்பாக பாதிப்படையக்கூடிய பழங்குடியின மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பல வீடுகளில் வீடுதோறும் குடிநீர் திட்டத்தின் கீழ் குறிப்பாக பாதிப்படையக்கூடிய பழங்குடியின குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கப்படுவதாகவும்  குடிநீர் இணைப்பை உறுதி செய்வதற்காக சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

முற்றிலும் புறக்கணிக்கப்பட்டவர்களைத் தாம் வணங்குவதாகக்  குறிப்பிட்ட திரு மோடி, முந்தைய அரசுகளின் அணுகுமுறை காரணமாக பழங்குடியின சமூகங்கள் பல தசாப்தங்களாக அடிப்படை உள்கட்டமைப்பு இல்லாமல் இருந்தது என்றார். நாட்டில் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் பல பத்து மாவட்டங்கள் வளர்ச்சியின் வேகத்தில் பின்தங்கியுள்ளன என்று அவர் கூறினார். தங்களது அரசு சிந்தனை முறையை மாற்றி, அவற்றைமுன்னேற விரும்பும் மாவட்டங்கள்என்று அறிவித்து, அவற்றின் வளர்ச்சிக்கு  திறமையான அதிகாரிகளை நியமித்துள்ளது என்று திரு மோடி கூறினார். இன்று இதுபோன்ற முன்னேற விரும்பும் மாவட்டங்கள் பல வளர்ந்த மாவட்டங்களைக் காட்டிலும் பல்வேறு வளர்ச்சிக் குறியீடுகளில் சிறப்பாக செயல்பட்டிருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இதன் பலன்கள் பழங்குடியினருக்கு கிடைத்துள்ளன என்றும் அவர் கூறினார்.

பழங்குடியினர் நலனுக்கு எப்போதும் எங்கள் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்று பிரதமர் கூறினார். அடல் அவர்களின் அரசுதான் பழங்குடியினர் நலனுக்கென தனி அமைச்சகத்தை உருவாக்கியது என்றும் அவர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.25,000 கோடியிலிருந்து ரூ.1.25 லட்சம் கோடியாக 5 மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதை திரு மோடி குறிப்பிட்டார். 60,000-க்கும் அதிகமான பழங்குடியின கிராமங்கள் பயனடையும் வகையில் சிறப்புத் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது என்று திரு மோடி கூறினார். பழங்குடியின கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பது ஆகியவற்றை  நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டத்தில் ரூ.80,000 கோடி முதலீடு செய்யப்படுவதாக அவர் மேலும் கூறினார். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக தங்கும் விடுதிகளை உருவாக்க பயிற்சி மற்றும் ஆதரவுடன் பழங்குடியினர் சந்தைப்படுத்தல் மையங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். இது சுற்றுலாவை வலுப்படுத்துவதோடு, பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சுற்றுச்சூழல் சுற்றுலாவை சாத்தியமாக்கும். இது பழங்குடியினர் இடம்பெயர்வதை தடுக்கும் என்றும் அவர் கூறினார்.

பழங்குடியின பாரம்பரியத்தை பாதுகாக்க அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை சுட்டிக்காட்டிய திரு மோடி, பல பழங்குடியின கலைஞர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டதாக கூறினார்.                                                                                                                                                              ராஞ்சியில் பகவான் பிர்சா முண்டாவின் பெயரில் பழங்குடியினர் அருங்காட்சியகம் தொடங்கப்பட்டிருப்பதாகக் கூறிய அவர், பள்ளிக் குழந்தைகள் அனைவரும் இதைப் பார்வையிட்டு படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாராவில் பாதல் போய் பெயரில் பழங்குடி அருங்காட்சியகம், மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் ராஜா சங்கர் ஷா, குவர் ரகுநாத் ஷா ஆகியோரின் பெயரில் பழங்குடி அருங்காட்சியகங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டது  குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். ஸ்ரீநகர் மற்றும் சிக்கீமில் இன்று இரண்டு பழங்குடியினர் ஆராய்ச்சி மையங்கள் தொடங்கி வைக்கப்பட்டதாகவும், பகவான் பிர்சா முண்டாவின் நினைவாக நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலை இன்று வெளியிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த முயற்சிகள் அனைத்தும் பழங்குடியினரின் வீரத்தையும்  மரியாதையையும் இந்திய மக்களுக்கு தொடர்ந்து நினைவூட்டும் என்று திரு மோடி குறிப்பிட்டார்.

இந்தியாவின் பண்டைய மருத்துவ முறைகளில் பழங்குடியின சமூகத்தின் மகத்தான பங்களிப்பை வலியுறுத்திய திரு மோடி, எதிர்கால சந்ததியினருக்கு புதிய பரிமாணங்களை சேர்ப்பதுடன், இந்த பாரம்பரியமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார். லே பகுதியில் சோவாரிக்பாவுக்கான தேசிய நிறுவனத்தை அரசு அமைத்துள்ளதாகவும், அருணாச்சலப் பிரதேசத்தில் ஆயுர்வேதம் மற்றும் நாட்டுப்புற மருத்துவ ஆராய்ச்சிக்கான வடகிழக்கு நிறுவனத்தை மேம்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். உலக சுகாதார அமைப்பின் கீழ் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையத்தை அரசு அமைக்க உள்ளது என்றும், இது உலகம் முழுவதும் பழங்குடியினரின் பாரம்பரிய மருத்துவ முறையை மேலும் பரப்ப உதவும் என்றும் திரு மோடி கூறினார்.

பழங்குடியின சமூகத்தின் கல்வி, வருவாய், மருத்துவம் ஆகியவற்றில் எங்கள் அரசு கவனம் செலுத்துகிறதுஎன்று திரு மோடி கூறினார். மருத்துவம், பொறியியல், ஆயுதப்படை அல்லது விமானப் போக்குவரத்து போன்ற பல்வேறு துறைகளில் சேர பழங்குடியின குழந்தைகள் முன்வருவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். பழங்குடியினர் பகுதிகளில் கடந்த பத்தாண்டுகளில் பள்ளியிலிருந்து உயர்கல்வி வரை சிறந்த வாய்ப்புகளை உருவாக்கியதன் விளைவு இது என்று அவர் கூறினார். நாடு சுதந்திரம் அடைந்த 60 ஆண்டுகளில் பழங்குடியின மத்திய பல்கலைக்கழகம் என்ற நிலையில் கடந்த பத்தாண்டுகளில் 2 புதிய பழங்குடியின பல்கலைக்கழகங்களை தனது அரசு சேர்த்துள்ளது என்பதைப் பிரதமர் சுட்டிக் காட்டினார். கடந்த பத்தாண்டுகளில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பல பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் கல்லூரிகளும், தொழிற்பயிற்சி நிறுவனங்களும் (.டி.) தொடங்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். கடந்த பத்தாண்டுகளில் பழங்குடியினர் பகுதிகளில் 30 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், பீகார் மாநிலம் ஜமுயில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி உட்பட பல புதிய மருத்துவக் கல்லூரிகளில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் திரு மோடி குறிப்பிட்டார். நாடு முழுவதும் 7000 ஏகலைவா பள்ளிகளின் வலுவான வலைப்பின்னல் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மருத்துவம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியில் பழங்குடியின மாணவர்களுக்கு மொழி ஒரு தடையாக உள்ளது என்று குறிப்பிட்ட திரு மோடி, தாய்மொழியில் தேர்வுகளை எழுதுவதற்கான வாய்ப்பை அரசு வழங்கியுள்ளது என்றார். இந்த முடிவுகள் பழங்குடியின மாணவர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

கடந்த பத்தாண்டுகளில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற பழங்குடியின இளைஞர்களின் சாதனைகளை எடுத்துரைத்த திரு மோடி, பழங்குடியினர் பகுதிகளில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த அரசு முயற்சிகளை மேற்கொண்டது என்றார். பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கேலோ இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக நவீன விளையாட்டு மைதானங்கள், விளையாட்டு வளாகங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்தியாவின் முதல் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம் மணிப்பூரில் தொடங்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும் மூங்கில் தொடர்பான சட்டங்கள் மிகவும் கடுமையானதாக இருந்ததாகவும், இது பழங்குடியின சமூகத்திற்கு பெரும் சிரமங்களை ஏற்படுத்தியதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். மூங்கில் விவசாயம் தொடர்பான சட்டங்களை தமது அரசு தளர்த்தியுள்ளது என்றும் அவர் கூறினார். கடந்த காலங்களில் 8-10 வன விளைபொருட்களாக இருந்த நிலையில், தற்போது 90 சதவீத வனப்பொருட்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன என்று திரு மோடி குறிப்பிட்டார். இந்தியாவில் இன்று 4,000-க்கும் மேற்பட்ட வன வள மையங்கள் செயல்பட்டு 12 லட்சம் பழங்குடியின விவசாயிகளுக்கு உதவி வருவதாகவும் அவர் கூறினார்.

 “இதுவரை சுமார் 20 லட்சம் பழங்குடியினப் பெண்கள் லட்சாதிபதி சகோதரியாக மாறியுள்ளனர்என்று திரு மோடி கூறினார். கூடைகள், பொம்மைகள் மற்றும் இதர கைவினைப் பொருட்களுக்காக முக்கிய நகரங்களில் பழங்குடியினர் கண்காட்சித் திடல்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். பழங்குடியினரின் கைவினைப் பொருட்களுக்கு இணையத்தில் உலகளாவிய சந்தை உருவாக்கப்பட்டு வருவதாக திரு மோடி குறிப்பிட்டார். சர்வதேச தலைவர்கள் மற்றும் பிரமுகர்களை சந்தித்தபோது பழங்குடியின பொருட்கள் மற்றும் சோஹ்ராய் ஓவியம், வார்லி ஓவியம், கோண்ட் ஓவியம் போன்ற கலைப்பொருட்களை வழங்குவதை உறுதி செய்ததாக அவர் கூறினார்.

பழங்குடியின சமூகங்களுக்கு அரிவாள் செல் ரத்த சோகை பெரும் சவாலாக உள்ளது என்று குறிப்பிட்ட திரு மோடி, தேசிய அரிவாள் செல் ரத்த சோகை இயக்கத்தை அரசு தொடங்கியுள்ளதாக கூறினார். இந்த இயக்கத்தின் ஓராண்டில், 4.5 கோடி பழங்குடியினர் பரிசோதிக்கப்பட்டனர் என்றும் அவர் கூறினார். பழங்குடியின மக்கள் பரிசோதனை செய்துகொள்வதற்கு அதிக தூரம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாத வகையில் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள் உருவாக்கப்பட்டதாக பிரதமர் கூறினார். எளிதில் சென்றடைய முடியாத பழங்குடியினர் பகுதிகளில் நடமாடும் மருத்துவப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் உலகில் இந்தியாவின் முக்கிய பங்களிப்பை எடுத்துரைத்த திரு மோடி, நமது சிந்தனைகளின் மையமாக உள்ள பழங்குடியின சமூகங்கள் கற்பித்த நன்னெறிகளே இதற்குக் காரணம் என்று கூறினார். பழங்குடியின சமூகங்கள் இயற்கையை போற்றுகின்றன என்று கூறிய திரு மோடி, பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் தொடக்கத்தை அனுசரிக்கும் வகையில், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பிர்சா முண்டா பழங்குடியினர் தோட்டங்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். இந்தத் தோட்டங்களில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாள் பெரிய முடிவுகளை  எடுக்க நமக்கு உத்வேகம் அளிக்கிறது என்று தனது உரையை நிறைவு செய்த திரு மோடி, புதிய இந்தியாவை நிர்மாணிப்பதற்கான அடிப்படையாக பழங்குடியின சிந்தனைகளை உருவாக்கவும், பழங்குடி பாரம்பரியத்தை பாதுகாக்கவும், பல நூற்றாண்டுகளாக பழங்குடி சமூகத்தால் பாதுகாக்கப்பட்டவற்றைக் கற்றுக்கொள்ளவும், வலுவான, வளமான மற்றும் சக்திவாய்ந்த இந்தியாவை உருவாக்குவதை உறுதி செய்யவும் மக்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பீகார் ஆளுநர் திரு ராஜேந்திர அர்லேகர், பீகார் முதலமைச்சர் திரு நிதிஷ் குமார், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு ஜூவல் ஓரம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் திரு ஜிதன் ராம் மஞ்சி, மத்திய ஜவுளித் துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங், மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை அமைச்சர் திரு சிராக் பாஸ்வான், மத்திய பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் திரு துர்கா தாஸ் யுகே உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னணி

பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையிலும் பழங்குடியினர் கவுரவ  தினத்தை நினைவுகூரும் வகையிலும் பிரதமர் திரு. நரேந்திர மோடி பீகார் மாநிலம் ஜமுய் சென்றார். பகவான் பிர்சா முண்டாவின் நினைவாக நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் வெளியிட்டார். பழங்குடியின சமூகங்களை மேம்படுத்தவும், பிராந்தியத்தின் கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் நோக்கமாகக் கொண்ட ரூ.6,640 கோடிக்கும் அதிகமான பல வளர்ச்சித் திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். பல திட்டங்களுக்கு  அடிக்கல் நாட்டினார்.

பிரதமரின் ஜன்மன் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 11,000 வீடுகளின் புதுமனைப் புகுவிழாவில் பிரதமர் பங்கேற்றார். பிரதமரின் ஜன்மன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட 23 நடமாடும் மருத்துவப் பிரிவுகளையும், பழங்குடியினர் பகுதிகளில் சுகாதார அணுகலை மேம்படுத்துவதற்காக கூடுதலாக 30 நடமாடும் மருத்துவப் பிரிவுகளையும் அவர் தொடங்கி வைத்தார்.

பழங்குடியின தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கும், வாழ்வாதார உருவாக்கத்தை ஆதரிப்பதற்கும் 300 வனச் செல்வ மேம்பாட்டு மையங்களையும் , பழங்குடியின மாணவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுமார் 450 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளையும் பிரதமர் திறந்து வைத்தார். பழங்குடி சமூகங்களின் வளமான வரலாறு மற்றும் பாரம்பரியத்தை ஆவணப்படுத்தவும், பாதுகாக்கவும், மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மற்றும் ஜபல்பூரில் இரண்டு பழங்குடியின சுதந்திர போராட்ட வீரர்களின் அருங்காட்சியகங்களையும், ஜம்முகாஷ்மீரின்  ஸ்ரீநகர் மற்றும் சிக்கிமின் காங்டாக் ஆகிய இடங்களில் இரண்டு பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனங்களையும் அவர் திறந்து வைத்தார்.

பழங்குடியினர் பகுதிகளில் இணைப்பை மேம்படுத்த 500 கிலோ மீட்டர் புதிய சாலைகள் மற்றும் பிரதமர் ஜன்மான் திட்டத்தின் கீழ் சமூக மையங்களாக செயல்பட 100 பல்நோக்கு மையங்கள் ஆகியவற்றுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். பழங்குடியின குழந்தைகளுக்கு தரமான கல்வி என்ற உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில், ரூ.1,110 கோடி மதிப்பில் கூடுதலாக 25 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

சுமார் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பிரதமரின் ஜன்மான் திட்டத்தின் கீழ் 25,000 புதிய குடியிருப்புகள் மற்றும் ரூ.1960 கோடிக்கும் அதிக மதிப்புள்ள 1.16 லட்சம் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் பிரதமர் ஒப்புதல் அளித்தார்; பிரதமர் ஜன்மான் திட்டத்தின் கீழ் 66 விடுதிகள், டாஜ்குவாவின் கீழ் 304 விடுதிகள் 50 புதிய பல்நோக்கு மையங்கள், 55 நடமாடும் மருத்துவப் பிரிவுகள், 65 அங்கன்வாடி மையங்கள்; அரிவாள் செல் ரத்த சோகை ஒழிப்புக்கான 6 திறன் மையங்கள், ஆசிரம பள்ளிகள், விடுதிகள், அரசு உறைவிடப் பள்ளிகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதற்கான 330 திட்டங்களும் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளன

******

AD/SMB/KV