Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வேலைவாய்ப்பு திருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

வேலைவாய்ப்பு திருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்


வேலைவாய்ப்புத் திருவிழாவில் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை காணொலிக் காட்சி மூலம் இன்று வழங்கினார். வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் பிரதமரின் உறுதிப்பாட்டை வேலைவாய்ப்புத் திருவிழா எடுத்துரைக்கிறது. நாட்டை கட்டமைப்பதில் பங்களிக்க உரிய வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இளைஞர்களுக்கு இது அதிகாரம் அளிக்கும்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், தந்தேராஸ் பண்டிகையை முன்னிட்டு தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், 500 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தியில் உள்ள தனது அற்புதமான கோவிலில் ஸ்ரீ ராமர் அமர்ந்த பின்னர் இது முதல் தீபாவளி என்று கூறினார். பல தலைமுறையினர் இந்த தீபாவளிக்காக காத்திருப்பதாகவும், பலர் அதற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர் அல்லது துன்பங்களை எதிர்கொண்டுள்ளனர். தற்போதைய தலைமுறையினர் இத்தகைய கொண்டாட்டங்களைக் காண்பதற்கும், அதில் பங்கேற்பதற்கும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று பிரதமர்  குறிப்பிட்டார். பண்டிகை காலத்தில், 51,000 இளைஞர்களுக்கு அரசு பணிக்கான பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்படுவதாக பிரதமர் கூறினார். புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நிரந்தர அரசுப் பணிகள் வழங்குவது என்பது பாரம்பரியமாக உள்ளதாகவும், அது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். பிஜேபி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கூட லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிதாக அமைக்கப்பட்ட அரசின் மூலம் 26,000 இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ள ஹரியானாவில் கொண்டாட்டமான சூழல் நிலவுகிறது என்று திரு மோடி கூறினார். எந்தச் செலவோ அல்லது சிபாரிசோ இல்லாமல் வேலை வழங்குவதில் ஹரியானாவில் உள்ள தங்கள் அரசு தனக்கான அடையாளத்தை உருவாக்கி உள்ளது என்று திரு மோடி கூறினார். இன்றைய வேலைவாய்ப்பு திருவிழாவில் 51,000 பணி நியமன ஆணைகள் தவிர, ஹரியானாவின் 26,000 இளைஞர்களுக்கு இன்று பணி ஆணைகள் வழங்கப்பட உள்ளன என்று அவர் பாராட்டினார்.

நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அதிகபட்ச வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். அரசின் கொள்கைகளும், முடிவுகளும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று குறிப்பிட்ட பிரதமர், விரைவுச் சாலைகள், நெடுஞ்சாலைகள், சாலைகள், ரயில், துறைமுகங்கள், விமான நிலையங்கள், கண்ணாடி இழை கேபிள்கள் பதித்தல், மொபைல் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் புதிய தொழிற்சாலைகளின் விரிவாக்கம் ஆகியவற்றை எடுத்துரைத்தார். குடிநீர் மற்றும் எரிவாயு குழாய்களை அமைத்தல், புதிய பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை நிறுவுதல் மற்றும் உள்கட்டமைப்புக்காக செலவிடுவதன் மூலம் போக்குவரத்து செலவுகளைக் குறைத்தல் ஆகியவற்றைக் குறிப்பிட்ட திரு. மோடி, இது குடிமக்களுக்கு பயனளிப்பது மட்டுமின்றி, புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்குகிறது என்றார்.

குஜராத் மாநிலம் வதோதராவுக்கு நேற்று தாம் சென்றதை நினைவு கூர்ந்த பிரதமர், பாதுகாப்புத் துறைக்கான விமான உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கி வைத்தது பற்றியும் குறிப்பிட்டார். ஆயிரக்கணக்கான குடிமக்கள் நேரடி வேலைவாய்ப்பைப் பெறுவார்கள் என்றும், உதிரி பாகங்கள் மற்றும் பிற உபகரணங்களை உற்பத்தி செய்வதன் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் பெருமளவில் பயனடையும் என்றும் இது விநியோகச் சங்கிலித் தொடர்களின் மிகப்பெரிய வலைப்பின்னலை உருவாக்கும் என்றும் அவர் கூறினார். ஒரு விமானத்திற்கு 15,000 முதல் 25,000 உதிரி பாகங்கள் உள்ளன என்று குறிப்பிட்ட திரு மோடி, ஒரு மாபெரும் தொழிற்சாலையின் தேவைகளை நிறைவேற்றுவதில் ஆயிரக்கணக்கான சிறிய தொழிற்சாலைகள் முக்கிய பங்காற்றும் என்றும் அதன் மூலம் இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பயனடையும் என்றும் தெரிவித்தார்.

எப்போதெல்லாம் ஒரு திட்டம் தொடங்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் அது குடிமக்களுக்கு கிடைக்கும் உடனடிப் பயன்களில் மட்டும் கவனம் செலுத்துவதில்லை. மாறாக விரிவான நோக்கத்துடன் சிந்தித்து வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான ஒட்டுமொத்த சூழலை ஒரு தளமாகப் பயன்படுத்தி மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். பிரதமரின் சூரிய சக்தி வீடுகள் திட்டத்தின் உதாரணத்தை மேற்கோள் காட்டிய அவர்கடந்த 6 மாதங்களில், சுமார் 2 கோடி வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ளனர் என்றும், 9,000-க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் இந்த திட்டத்தில் இணைந்துள்ளனர் என்றும் கூறினார். ஏற்கனவே 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் சூரிய தகடுகள் நிறுவப்பட்டுள்ளன. எதிர்காலத்தில், இந்த திட்டத்தின் கீழ் 800 சூரிய கிராமங்களை உருவாக்கும் திட்டம் உள்ளது. 30,000 பேர் இதனை அமைப்பதற்கான பயிற்சியையும் பெற்றுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே, பிரதமரின் சூரிய சக்தி வீடுகள் திட்டம் நாடு முழுவதும் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், கட்டமைப்பவர்கள் மற்றும் பழுதுபார்ப்பவர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று அவர் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில் அரசின் கொள்கைகளால் நாட்டின் காதித் தொழில் மாற்றமடைந்து கிராம மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், காதி கிராம வர்த்தகம் தற்போது ரூ.1.5 லட்சம் கோடியை கடந்துள்ளது என்று தெரிவித்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களை தற்போது ஒப்பிட்ட பிரதமர், கதர் விற்பனை 400 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என்றும், இதன் மூலம் கலைஞர்கள், நெசவாளர்கள் மற்றும் வணிகர்கள் பயனடைந்துள்ளனர் என்றும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார். கிராமப்புற பெண்களுக்கு புதிய வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலை வாய்ப்புகளை வழங்கும் லட்சாதிபதி சகோதரிகள் திட்டம் குறித்தும் திரு மோடி பேசினார். “கடந்த பத்தாண்டுகளில் 10 கோடிக்கும் அதிகமான பெண்கள் சுய உதவிக் குழுக்களில் இணைந்துள்ளனர்” என்று குறிப்பிட்ட அவர், தற்போது 10 கோடி பெண்கள் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார். ஒவ்வொரு பகுதியிலும், அரசு அளித்து வரும் ஆதரவை பாராட்டிய பிரதமர், 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். “1.25 கோடிக்கும் அதிகமான பெண்கள் ஏற்கனவே லட்சாதிபதி சகோதரிகளாக மாறியுள்ளனர், அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மேல் உள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதை நோக்கி நாடு முன்னேறிச் செல்கிறது என்று பிரதமர் கூறினார். நாட்டின் முன்னேற்றம் குறித்து பேசிய பிரதமர், இந்த விரைவை நாடு ஏன் இதற்கு முன்பு அடையவில்லை என்று அடிக்கடி கேட்கும் இந்திய இளைஞர்களின் கேள்வியை இங்கு குறிப்பிட்டார். முந்தைய அரசுகளுக்கு தெளிவான கொள்கைகளும், நோக்கமும் இல்லாததே இதற்கான விடை என்று சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தியா பல்வேறு துறைகளில், குறிப்பாக தொழில்நுட்பத்தில் பின்தங்கியிருந்ததை சுட்டிக்காட்டினார். உலகம் முழுவதிலுமிருந்து புதிய தொழில்நுட்பங்களுக்காக இந்தியா காத்துக் கொண்டிருந்ததை நினைவுகூர்ந்த பிரதமர், மேற்கத்திய நாடுகளில் காலாவதியானதாகக் கருதப்படுபவை இறுதியில் நம் நாட்டை வந்தடைந்தன என்று கூறினார். நவீன தொழில்நுட்பத்தை இந்தியாவில் உருவாக்க முடியாது என்ற நீண்டகால நம்பிக்கை இந்தியாவை வளர்ச்சியில் பின்னோக்கி தள்ளியது மட்டுமல்லாமல், நாட்டின் முக்கியமான வேலை வாய்ப்புகளையும் பறித்தது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த பழைய சிந்தனையிலிருந்து நாட்டை விடுவிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை எடுத்துரைத்த பிரதமர், இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தை ஊக்குவிப்பதன் மூலம் விண்வெளி, குறைக்கடத்திகள், மின்னணு மற்றும் மின்சார வாகனங்கள் போன்ற துறைகளில் இந்தப் பழைய மனநிலையிலிருந்து விடுபட முயற்சிகள் தொடங்கப்பட்டன என்றார். தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் முதலீட்டின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், புதிய தொழில்நுட்பம் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீட்டை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. இது இந்தியாவில் உற்பத்தி செய்வோம், முன்முயற்சியுடன் இணைந்ததால் வேலை உருவாக்கத்தை துரிதப்படுத்தியுள்ளது. அனைத்து துறையும் தற்போது ஊக்கம் பெற்று பல்வேறு துறைகளில் உள்ள இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார். “தற்போது, இந்தியா மிகப்பெரிய முதலீடுகளைக் காண்கிறது, சாதனை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன” என்று கூறிய அவர், கடந்த எட்டு ஆண்டுகளில், 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இது இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய புத்தொழில் சூழல் அமைப்பாக மாற்றியுள்ளது. இந்தத் துறைகள் நமது இளைஞர்கள் வளரவும், வேலைவாய்ப்பைப் பெறவும் வாய்ப்பளிக்கின்றன என்று அவர் மேலும் கூறினார்.

இந்திய இளைஞர்களின் திறனை அதிகரிக்க தற்போது திறன் மேம்பாட்டில் அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் தெரிவித்தார். எனவே, திறன் இந்தியா போன்ற இயக்கங்களை அரசு தொடங்கியதாகவும், பல்திறன் மேம்பாட்டு மையங்களில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். இந்திய இளைஞர்கள் அனுபவம் மற்றும் வாய்ப்புகளை தேட வேண்டியதில்லை என்பதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திரு மோடி குறிப்பிட்டார். பிரதமரின் உள்ளகப் பயிற்சித் திட்டத்தை மேற்கோள் காட்டிய திரு மோடி, இந்தியாவின் 500  முன்னணி நிறுவனங்களில் ஊதியத்துடன் கூடிய உள்ளகப் பயிற்சி வசதி ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும், ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் ஒரு ஆண்டிற்கு மாதத்திற்கு ரூ.5,000 வழங்கப்படும் என்றும் கூறினார். அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு உள்ளகப் பயிற்சி  வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் இலக்கு  என்றும் அவர் கூறினார். இது இளைஞர்களுக்கு பல்வேறு துறைகளில் இயல்பான வணிகச் சூழலுடன் இணைவதற்கான வாய்ப்பை வழங்கும் மற்றும் அவர்களின் வாழ்க்கைக்கு பயனுள்ள அனுபவத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

இந்திய இளைஞர்கள் வெளிநாடுகளில் வேலை பெறுவதை எளிதாக்க மத்திய அரசு புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். அண்மையில் வெளியிடப்பட்ட இந்தியாவுக்கான ஜெர்மனியின்  திறன் தொழிலாளர் திட்டத்தை மேற்கோள் காட்டிய திரு மோடி, திறன் பெற்ற இந்திய இளைஞர்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை ஜெர்மனி ஆண்டுதோறும் 20 ஆயிரத்திலிருந்து 90 ஆயிரமாக உயர்த்தியுள்ளது என்று தெரிவித்தார். இதன் மூலம் இந்திய இளைஞர்கள் பெரிதும் பயனடைவார்கள் என்றும் அவர் கூறினார். வளைகுடா நாடுகளைத் தவிர, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, மொரீஷியஸ், இஸ்ரேல், இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகள் உட்பட 21 நாடுகளுடன் குடிபெயர்வு மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான ஒப்பந்தங்களில் இந்தியா சமீபத்திய ஆண்டுகளில் கையெழுத்திட்டுள்ளதாகவும் திரு மோடி குறிப்பிட்டார். ஆண்டுதோறும் 3 ஆயிரம் இந்தியர்கள் இங்கிலாந்தில் வேலை செய்யவும், கல்விகற்கவும் 2 ஆண்டு விசாவைப் பெறுகிறார்கள் என்றும், 3 ஆயிரம் இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் கல்விகற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். “இந்தியாவின் திறமை இந்தியாவின் முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல, உலகின் முன்னேற்றத்திற்கும் வழிகாட்டியாக இருக்கும்” என்று திரு மோடி கூறினார். அந்தத் திசையில் இந்தியா முன்னேறி செல்வதாகவும் அவர் கூறினார்.

ஒவ்வொரு இளைஞருக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையிலும், அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றக் கூடிய வகையிலும் நவீன முறையை உருவாக்குவதே அரசின் இன்றைய பங்காகும் என்று திரு மோடி தெரிவித்தார். எனவே, பல்வேறு பணிகளில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இளைஞர்கள், நாட்டின் இளைஞர்கள் மற்றும் மக்களுக்கு அதிகபட்ச வசதிகளை வழங்குவதே அவர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அரசு பணிகளைப் பெறுவதில் வரி செலுத்துவோர் மற்றும் மக்களின் முக்கிய பங்கை வலியுறுத்திய பிரதமர், மக்களுக்காகவே அரசு உள்ளது என்றும், அவர்களுக்கு சேவை செய்வதற்காக அது நியமிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். அஞ்சலக ஊழியராக இருந்தாலும் சரி, பேராசிரியராக இருந்தாலும் சரி, நாட்டுக்கு சேவை செய்வதே முதன்மையான கடமை என்று அவர் வலியுறுத்தினார். நாடு வளர்ச்சியடைந்த நாடாக மாற உறுதி பூண்டுள்ள நேரத்தில் புதிதாகச் சேர்ந்தவர்கள் அரசில் இணைந்துள்ளனர் என்பதை திரு மோடி சுட்டிக்காட்டினார். எனவே, இந்த இலக்கை அடைய, நாம் அனைத்து துறையிலும் சிறந்து விளங்க வேண்டும் மற்றும் முழுமையாக பங்களிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.புதிதாகச் சேருபவர்கள் சிறப்பாக செயல்படுவது மட்டுமின்றி, சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்த பாடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். நம் நாட்டில் உள்ள அரசு ஊழியர்கள் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அவர்களிடமிருந்து நாடு அதிக எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இந்த எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.

நியமனம் பெறுபவர்கள் தங்கள் வேலைவாய்ப்புகளுடன் தொடங்கியுள்ள புதிய பயணம் குறித்து குறிப்பிட்ட பிரதமர், அவர்கள் எப்போதும் பணிவுடன் இருக்க வேண்டும் என்றும், பயணம் முழுவதும் கற்றுக்கொள்ளும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஐஜிஓடி கர்மயோகி தளத்தில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு படிப்புகள் கிடைப்பதை எடுத்துரைத்த அவர், இந்த டிஜிட்டல் பயிற்சித் தொகுதியை தங்கள் வசதிக்கேற்ப பயன்படுத்துமாறு ஊக்குவித்தார். “இன்று நியமன ஆணைகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார்.

பின்னணி

வருவாய்த் துறை, உயர்கல்வித் துறை, உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் போன்ற பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் மத்திய அரசில் புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களுடன் நாடு முழுவதும் 40 இடங்களில் வேலைவாய்ப்பு திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்படுபவர்களுக்கு ஐஜிஓடி கர்மயோகி தளத்தில் கிடைக்கும் ஆன்லைன் தொகுதியான கர்மயோகி பிரரம்ப்மூலம் அடிப்படைப் பயிற்சியை மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். 1400 க்கும் மேற்பட்ட இணைவழிகற்றல் படிப்புகள் உள்ளன. அவை பணியமர்த்தப்பட்டவர்கள் தங்கள் பணிகளில் திறம்பட பணியாற்றுவதற்கும், வளர்ச்சியடைந்த  பாரதத்தை உருவாக்குவதற்கும் அத்தியாவசிய திறன்களை பெறச்செய்யும்.

***

(Release ID: 2069104)

TS/IR/AG/KR