மதிப்பிற்குரிய தலைவர்களே,
இன்று நாம் நடத்திய நேர்மறையான விவாதங்களுக்கும், நீங்கள் வழங்கிய மதிப்புமிக்க ஆலோசனைகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய உச்சிமாநாட்டை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ததற்காக லாவோஸ் பிரதமர் சோனெக்சே சிபந்தோனுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டிஜிட்டல் மாற்றத்தை வலுப்படுத்த நாம் ஏற்றுக்கொண்ட இரண்டு கூட்டு அறிக்கைகளும் எங்கள் விரிவான உத்திசார் கூட்டு செயல்பாடும் எதிர்காலத்தில் எங்கள் ஒத்துழைப்புக்கான அடித்தளத்தை அமைக்கும். இந்த சாதனைக்காக அனைவரையும் பாராட்டுகிறேன்.
கடந்த மூன்று ஆண்டுகளாக ஆசியான் அமைப்பில் இந்திய ஒருங்கிணைப்பாளராக நேர்மறையான பங்களிப்பை வழங்கியதற்காக சிங்கப்பூருக்கு எனது நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி. இந்தியா-ஆசியான் உறவுகளில் நாம் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றத்தை அடைந்துள்ளோம். புதிய ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றுள்ள பிலிப்பைன்ஸையும் நான் வரவேற்று வாழ்த்துகிறேன்.
200 கோடி மக்களின் பிரகாசமான எதிர்காலத்திற்காகவும், பிராந்திய அமைதி, நிலைத்தன்மை, வளத்திற்காகவும் நாம் தொடர்ந்து ஒத்துழைப்போம் என்று நான் நம்புகிறேன்.
ஆசியான் அமைப்பின் சிறப்பான தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள லாவோஸ் பிரதமர் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்த தலைமைப் பொறுப்பை மலேசியா ஏற்கும் வேளையில், 140 கோடி இந்தியர்களின் சார்பில் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் தலைமைப் பொறுப்பின் வெற்றிக்கு இந்தியாவின் அசைக்க முடியாத ஆதரவு உண்டு.
மிக்க நன்றி.
பொறுப்புத் துறப்பு – இது பிரதமரின் கருத்துக்களின் தோராயமான மொழிபெயர்ப்பு ஆகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கி இருந்தார்.
***
PLM/KV