மேதகு தலைவர்களே,
வணக்கம்.
யாகி புயலால் உயிரிழந்தோர்க்கு முதலில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சவாலான நேரத்தில், ஆபரேஷன் சத்பவ் மூலம் மனிதாபிமான உதவிகளை நாங்கள் வழங்கியுள்ளோம்.
நண்பர்களே,
ஆசியானின் ஒற்றுமையையும் மையத்தன்மையையும் இந்தியா தொடர்ந்து ஆதரித்து வருகிறது. இந்தியாவின் இந்தோ-பசிஃபிக் கண்ணோட்டத்திற்கும் குவாட் ஒத்துழைப்புக்கும் ஆசியான் முக்கியமானது. இந்தியாவின் “இந்தோ-பசிஃபிக் பெருங்கடல் முன்முயற்சி”, “இந்தோ-பசிஃபிக் மீதான ஆசியான் கண்ணோட்டம்” ஆகியவற்றுக்கிடையே முக்கியமான ஒற்றுமைகள் உள்ளன. சுதந்திரமான, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய, வளமான மற்றும் விதிகள் அடிப்படையிலான இந்தோ-பசிஃபிக் என்பது ஒட்டுமொத்த பிராந்தியத்தின் அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கியமானது.
தென் சீனக் கடலில் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை ஆகியவை ஒட்டுமொத்த இந்தோ-பசிஃபிக் பிராந்தியத்தின் நலனுக்கானது.
கடல்சார் செயல்பாடுகள் கடல் சட்டம் குறித்த ஐநா விதிமுறைகளுக்கு இணங்க இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். சுதந்திரமான கடல்வழி போக்குவரத்தையும் வான்வெளியையும் உறுதி செய்வது அவசியம். இதற்கு வலுவான, பயனுள்ள நடத்தை விதிகள் உருவாக்கப்பட வேண்டும். மேலும், பிராந்திய நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகளில் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது.
நமது அணுகுமுறை வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும், விரிவாக்கவாதத்தில் அல்ல.
நண்பர்களே,
மியான்மர் நிலவரம் குறித்த ஆசியானின் அணுகுமுறையை நாங்கள் ஆதரிப்பதுடன், ஐந்து அம்ச கருத்தொற்றுமையையும் ஆதரிக்கிறோம். மேலும், மனிதாபிமான உதவிகளை நிலைநிறுத்துவதும், ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை செயல்படுத்துவதும் முக்கியம் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த நடைமுறையில் மியான்மரைத் தனிமைப்படுத்துவதற்கு பதிலாக ஈடுபடுத்த வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
அண்டை நாடு என்ற முறையில், இந்தியா தனது பொறுப்புகளைத் தொடர்ந்து வலியுறுத்தும்.
நண்பர்களே,
உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் மோதல்களால், மிகவும் எதிர்மறையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் உலகளாவிய தெற்கைச் சேர்ந்தவை. யூரேசியா, மத்திய கிழக்கு போன்ற பிராந்தியங்களில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் மீட்டெடுக்க வேண்டும் என்ற விருப்பம் அனைவருக்கும் உள்ளது.
நான் புத்தரின் பூமியிலிருந்து வருகிறேன். இது யுத்த யுகம் அல்ல என்று நான் திரும்பத் திரும்பக் கூறியுள்ளேன். பிரச்சினைகளுக்கு போர்க்களத்தில் தீர்வு காண முடியாது.
இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு, சர்வதேச சட்டங்கள் ஆகியவற்றை மதிப்பது அவசியம். மனிதாபிமான கண்ணோட்டத்துடன், பேச்சுவார்த்தை மற்றும் ராஜீய நடைமுறைக்கு நாம் வலுவான முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
விஸ்வபந்து என்ற முறையில் தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதில், இந்தத் திசையில் பங்களிக்க இந்தியா அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்ளும்.
உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பயங்கரவாதம் பெரும் சவாலாக உள்ளது. அதை எதிர்த்துப் போராட, மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
சைபர், கடல்வழி, விண்வெளி ஆகிய துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை நாம் வலுப்படுத்த வேண்டும்.
நண்பர்களே,
நாளந்தாவின் மறுமலர்ச்சி என்பது கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் நாங்கள் அளித்த உறுதிமொழியாகும். இந்த ஜூன் மாதம், நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை திறந்து வைத்து அந்த வாக்குறுதியை நிறைவேற்றினோம். நாளந்தாவில் நடைபெறவுள்ள உயர்கல்வித் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு இங்கு கூடியுள்ள அனைத்து நாடுகளுக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன்.
நண்பர்களே,
கிழக்கு ஆசிய உச்சி மாநாடு இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் முக்கிய தூணாகும்.
இன்றைய உச்சிமாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக பிரதமர் சோனெக்சே சிபந்தோனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்த தலைமைப் பொறுப்பை ஏற்கும் மலேசியாவுக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், வெற்றிகரமான தலைமைப் பொறுப்புக்கு இந்தியாவின் முழு ஆதரவையும் அவர்களுக்கு உறுதியளிக்கிறேன்.
மிக்க நன்றி.
***
SMB/DL
Took part in the 19th East Asia Summit being held in Vientiane, Lao PDR. India attaches great importance to friendly relations with ASEAN. We are committed to adding even more momentum to this relation in the times to come. Our Act East Policy has led to substantial gains and… pic.twitter.com/3DS7fjqfdI
— Narendra Modi (@narendramodi) October 11, 2024