Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

2024-25 முதல் 2030-31 வரையிலான சமையல் எண்ணெய் – எண்ணெய் வித்துக்களுக்கான தேசிய இயக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, உள்நாட்டு எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை ஊக்குவிப்பது, சமையல் எண்ணெய் வகைகளில்  தற்சார்பை (தற்சார்பு இந்தியா) அடைவதை நோக்கமாகக் கொண்ட முக்கிய முன்முயற்சியான சமையல் எண்ணெய் – எண்ணெய் வித்துக்களுக்கான தேசிய இயக்கத்திற்கு ஒப்புதல் அளித்தது. இந்த இயக்கம் 2024-25 முதல் 2030-31 வரை ஏழு ஆண்டு காலப்பகுதியில் ரூ .10,103 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

புதிதாக அங்கீகரிக்கப்பட்ட இயக்கம் ,எண்ணெய் வித்துக்களான கடுகு, நிலக்கடலை, சோயாபீன், சூரியகாந்தி, எள் போன்ற முக்கிய முதன்மை எண்ணெய் வித்து பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்தும். அத்துடன் பருத்தி விதை, அரிசித் தவிடு மற்றும் மரம் மூலம் கிடைக்கும்  எண்ணெய் வகைகள் போன்ற இரண்டாம் நிலை ஆதாரங்களிலிருந்து சேகரிப்பு மற்றும் பிரித்தெடுக்கும் திறனை அதிகரிப்பதிலும்  கவனம் செலுத்தும். மேலும் முதன்மை எண்ணெய் வித்து உற்பத்தியை 39 மில்லியன் டன்னிலிருந்து  (2022-23)  2030-31-க்குள் 69.7 மில்லியன் டன்னாக உயர்த்துவதையும், 2030-31 ஆம் ஆண்டுக்குள் உள்நாட்டு சமையல் எண்ணெய் உற்பத்தியை 25.45 மில்லியன் டன்களாக உயர்த்துவதையும்  இந்த இயக்கம் இலக்காகக் கொண்டுள்ளது, இது நமது திட்டமிடப்பட்ட உள்நாட்டு தேவையில் 72% ஐ பூர்த்தி செய்கிறது.

தரமான விதைகள் சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, ‘விதை சரிபார்ப்பு, கண்டுபிடிப்பு மற்றும் முழுமையான சரக்கு (SATHI)’ போர்ட்டல் மூலம் ஆன்லைன் 5 ஆண்டு ரோலிங் விதை திட்டத்தை இயக்கம் அறிமுகப்படுத்தும், இது கூட்டுறவுகள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs) மற்றும் அரசு அல்லது தனியார் விதை நிறுவனங்கள் உள்ளிட்ட விதை உற்பத்தி முகவர்களுடன் முன்கூட்டியே கூட்டணிகளை ஏற்படுத்த மாநிலங்களுக்கு உதவும். விதை உற்பத்தி உள்கட்டமைப்பை மேம்படுத்த பொதுத்துறையில் 65 புதிய விதை மையங்களும், 50 விதை சேமிப்பு அலகுகளும் அமைக்கப்படும்.

ஆண்டுக்கு 10 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகப் பரப்பளவில் 347 தனித்துவமான மாவட்டங்களில் 600-க்கும் அதிகமான மதிப்புத் தொடர் தொகுப்புகள் உருவாக்கப்படும். இந்தத் தொகுப்புகள்வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள், கூட்டுறவு நிறுவனங்கள், பொது அல்லது தனியார் நிறுவனங்கள் போன்ற மதிப்புத் தொடர்  பங்குதாரர்களால் நிர்வகிக்கப்படும். இந்தத் தொகுப்புகளில் உள்ள விவசாயிகளுக்கு உயர்தர விதைகள், நல்ல விவசாய நடைமுறைகள் பற்றிய பயிற்சியும்  வானிலை மற்றும் பூச்சி மேலாண்மை குறித்த ஆலோசனை சேவைகளும் கிடைக்கும்.

***

(Release ID: 2061646)

SMB/RR/KR