பிரதமர் திரு நரேந்திர மோடி, 2024 ஆகஸ்ட் 30 அன்று, மகாராஷ்டிராவில் மும்பை மற்றும் பால்கரில் பயணம் மேற்கொள்கிறார். காலை 11 மணியளவில், மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் உலகளாவிய ஃபின்டெக் 2024 விழாவில் பிரதமர் உரையாற்றுவார். அதன்பிறகு, பிற்பகல் 1.30 மணியளவில், பால்கரில் உள்ள சிட்கோ மைதானத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.
பால்கரில் பிரதமர்
2024 ஆகஸ்ட் 30 அன்று, வாத்வான் துறைமுகத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.76,000 கோடியாகும். பெரிய கப்பல்களுக்கு இடம் அளிப்பதன் மூலம், நாட்டின் வர்த்தக மற்றும் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். உலகத் தரம் வாய்ந்த கடல்சார் நுழைவாயிலை நிறுவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
பால்கர் மாவட்டத்தில் தஹானு நகருக்கு அருகில் அமைந்துள்ள வாத்வான் துறைமுகம், இந்தியாவின் மிகப்பெரிய ஆழ்கடல் துறைமுகங்களில் ஒன்றாக திகழும். மேலும், சர்வதேச கப்பல் வழித்தடங்களுக்கு நேரடி இணைப்பை வழங்குவதோடு, போக்குவரத்து நேரங்களையும், செலவுகளையும் குறைக்கும். அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட இந்த துறைமுகம், ஆழமான நிறுத்துமிடங்கள், திறமையான சரக்கு கையாளும் வசதிகள் மற்றும் நவீன துறைமுக மேலாண்மை அமைப்புகளைக் கொண்டிருக்கும். இந்த துறைமுகம் குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகளை உருவாக்கும். உள்ளூர் வணிகங்களை ஊக்குவிக்கும் மற்றும் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாத்வான் துறைமுக திட்டம் சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைப்பது மற்றும் கடுமையான சுற்றுச்சூழல் தரங்களை கடைபிடிப்பதில் கவனம் செலுத்துவதன் மூலம் நிலையான வளர்ச்சி நடைமுறைகளை உள்ளடக்கியது. இந்த துறைமுகம் செயல்பாட்டுக்கு வந்தவுடன், இந்தியாவின் கடல்சார் போக்குவரத்தை மேம்படுத்துவதோடு, உலகளாவிய வர்த்தக மையமாக அதன் நிலையை மேலும் வலுப்படுத்தும்.
நாடு முழுவதும் இந்தத் துறையின் உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சுமார் ரூ .1,560 கோடி மதிப்புள்ள, 218 மீன்வளத் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். இந்த முன்முயற்சிகள் மீன்வளத் துறையில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் ரூ.360 கோடி செலவில் தேசிய கப்பல் தகவல் தொடர்பு மற்றும் ஆதரவு அமைப்பை பிரதமர் தொடங்கி வைப்பார். இத்திட்டத்தின் கீழ், 13 கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இயந்திரம் பொருத்தப்பட்ட மீன்பிடி படகுகளில் படிப்படியாக 1லட்சம் டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்படும். கப்பல் தகவல் தொடர்பு மற்றும் ஆதரவு அமைப்பு என்பது இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட உள்நாட்டு தொழில்நுட்பமாகும். இது மீனவர்கள் கடலில் இருக்கும்போது இருவழி தகவல்தொடர்பை ஏற்படுத்தவும், மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதோடு, நமது மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உதவும்.
மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் ஒருங்கிணைந்த நீர்வாழ் பூங்காக்களை மேம்படுத்துதல், மறுசுழற்சி நீர்வாழ் உயிரி வளர்ப்பு முறை போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வது ஆகியவற்றை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டங்கள் பல மாநிலங்களில் செயல்படுத்தப்படும். மீன் உற்பத்தியை மேம்படுத்துவதற்கும், மீன்வளத் துறையில் ஈடுபட்டுள்ள மில்லியன் கணக்கானவர்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கும் முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் உயர்தர உள்ளீடுகளை வழங்கும்.
மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்கு தளங்கள், மீன் சந்தைகள் கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய மீன்வள உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.
மும்பையில் பிரதமர்
உலகளாவிய ஃபின்டெக் விழா 2024-ன் சிறப்பு அமர்வில் பிரதமர் உரையாற்றுவார். பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா, நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் ஃபின்டெக் கன்வர்ஜென்ஸ் கவுன்சில் ஆகியவை இணைந்து இதற்கு ஏற்பாடு செய்கின்றன. இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கொள்கை வகுப்பாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள், உயர் வங்கியாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் உட்பட சுமார் 800 பேச்சாளர்கள் மாநாட்டில் 350 க்கும் மேற்பட்ட அமர்வுகளில் உரையாற்ற உள்ளனர். ஃபின்டெக் சூழலில் சமீபத்திய கண்டுபிடிப்புகளையும் இது காட்சிப்படுத்தும். 20 க்கும் மேற்பட்ட சிந்தனை அறிக்கைகள் மற்றும் வெள்ளை ஆவணங்கள் வெளியிடப்படும். இது நுண்ணறிவு மிக்க, ஆழமான தொழில்துறை தகவல்களை வழங்குகிறது.
***
IR/RS/KR/DL