Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத் மாநிலம் சபர்மதியில் கோச்ராப் ஆசிரமத்தை பிரதமர் திறந்து வைத்தார்

குஜராத் மாநிலம் சபர்மதியில் கோச்ராப் ஆசிரமத்தை பிரதமர் திறந்து வைத்தார்


சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை தந்த பிரதமர் திரு நரேந்திர மோடி, கோச்ராப் ஆசிரமத்தை திறந்து வைத்து, காந்தி ஆசிரம நினைவிடத்தின் பெருந்திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்திய பிரதமர், ஹ்ரிதய் குஞ்ச் என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி மற்றும் கஸ்தூரிபாய் காந்தி இல்லத்தையும் பார்வையிட்டார். மேலும் கண்காட்சியை பார்வையிட்டு மரக்கன்று நட்டார்.

 

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சபர்மதி ஆசிரமம் எப்போதும் ஒப்பிடமுடியாத சக்தியின் துடிப்பான மையமாக திகழ்கிறது என்றும், அண்ணலின் உத்வேகத்தை நம்முள் உணர்கிறோம் என்றும் கூறினார். “சபர்மதி ஆசிரமம் அண்ணலின் உண்மை மற்றும் அகிம்சை, தேசிய சேவை, ஒடுக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் கடவுளின் சேவையை உணர்தல் ஆகிய மதிப்புகளை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது” என்று அவர் மேலும் கூறினார். சபர்மதி ஆசிரமத்திற்கு வருவதற்கு முன்பு காந்திஜி தங்கியிருந்த கோச்ராப் ஆசிரமத்தில் காந்திஜி வாழ்ந்த காலங்களை பிரதமர் நினைவு கூர்ந்தார். மறுசீரமைப்பு செய்யப்பட்ட கோச்ராப் ஆசிரமம் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர், இன்றைய குறிப்பிடத்தக்க மற்றும் ஊக்கமளிக்கும் திட்டங்களுக்காக மக்களை வாழ்த்தினார்.

 

பூஜ்ய பாபு தண்டி யாத்திரையை தொடங்கி வைத்து, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் இந்த நாளை பொன்னெழுத்துக்களால் வடிவமைத்த மார்ச் 12-ம் தேதியை சுட்டிக்காட்டிய பிரதமர், சுதந்திர இந்தியாவில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கப்பட்டதற்கு இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் சாட்சியாகும் என்று கூறினார். மார்ச் 12-ம் தேதி சபர்மதி ஆசிரமத்திலிருந்து சுதந்திர தின அமிர்த பெருவிழாவை தேசம் தொடங்கியதை சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி, இந்த தேசத்தின் தியாகங்களை நினைவில் கொள்வதில் இந்த நிகழ்வு முக்கிய பங்கு வகித்தது என்று கூறினார். அமிர்த பெருவிழா அமிர்த காலத்திற்குள் இந்தியா நுழைவதற்கான நுழைவாயிலை உருவாக்கியுள்ளது என்று கூறிய பிரதமர், இந்தியா சுதந்திரம் அடைந்தபோது கண்டதைப் போன்ற ஒற்றுமை சூழலை மக்களிடையே இது உருவாக்கியது என்றார். மகாத்மா காந்தியின் சிந்தனைகள் மற்றும் நம்பிக்கைகளின் தாக்கம் மற்றும் அமிர்த காலத்தின் நோக்கம் ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார். சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா கால நிகழ்ச்சியில் 3 கோடிக்கும் அதிகமானோர் பஞ்ச பிராண உறுதிமொழி ஏற்றனர். 2 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டன. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட அமிர்தத் தோட்டங்களின் மேம்பாடு, நீர் சேமிப்புக்காக 70,000-க்கும் மேற்பட்ட அமிர்த நீர் நிலைகள் உருவாக்கப்பட்டது. தேசப் பற்றின் வெளிப்பாடாக மாறிய ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி  இயக்கம், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மக்கள் அஞ்சலி செலுத்திய என் மண் என் தேசம் பிரச்சாரம் ஆகியவை குறித்தும் அவர் தெரிவித்தார். வளர்ச்சியடைந்த பாரதத்தின் தீர்மானங்களின் புனித யாத்திரையாக சபர்மதி ஆசிரமத்தை மாற்றி, அமிர்த காலத்தின் போது 2 லட்சத்துக்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதையும் பிரதமர் குறிப்பிட்டார்.

 

“தனது பாரம்பரியத்தை பாதுகாக்க முடியாத நாடு தனது எதிர்காலத்தையும் இழக்கிறது. அண்ணலின் சபர்மதி ஆசிரமம் நாட்டின் பாரம்பரியம் மட்டுமல்ல, மனித குலத்தின் பாரம்பரியம். இந்த விலைமதிப்பற்ற பாரம்பரியம் நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டு வருவதை நினைவுகூர்ந்த பிரதமர், ஆசிரமத்தின் பரப்பளவு 120 ஏக்கரில் இருந்து 5 ஏக்கராக சுருங்கியதை சுட்டிக்காட்டினார். மொத்தமுள்ள 63 கட்டிடங்களில் 36 கட்டிடங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன என்றும், 3 கட்டிடங்கள் மட்டுமே பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார். சுதந்திரப் போராட்டத்தில் ஆசிரமத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு ஆசிரமத்தை பாதுகாக்க வேண்டியது 140 கோடி இந்தியர்களின் பொறுப்பு என்று அவர் வலியுறுத்தினார்.

 

ஆசிரமத்திற்கு சொந்தமான 55 ஏக்கர் நிலத்தை திரும்பப் பெறுவதில் ஆசிரமவாசிகள் அளித்த ஒத்துழைப்பைப் பற்றி பிரதமர் குறிப்பிட்டார். ஆசிரமத்தின் எல்லாக் கட்டிடங்களையும் அவற்றின் அசல் வடிவத்தில் பாதுகாக்கும் நோக்கத்தையும் அவர் கூறினார்.

 

இதுபோன்ற நினைவுச் சின்னங்கள் நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டதற்கு போதுமான உறுதியான மனப்பான்மை இல்லாமை, காலனிய மனப்பான்மை ஆகியவற்றைக் குற்றம் சாட்டிய பிரதமர், காசி விஸ்வநாதர் கோயிலின் மறுவடிவமைப்புக்குப் பிறகு 12 கோடி யாத்ரீகர்கள் வந்ததன் விளைவாக பக்தர்களுக்கான வசதிகளை உருவாக்குவதற்காக காசி விஸ்வநாதர் கோயிலில் விரிவாக்கப் பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்ததன் உதாரணத்தை அவர் எடுத்துக்காட்டினார். இதேபோல், அயோத்தியில் ஸ்ரீ ராம பூமியின் விரிவாக்கத்திற்காக 200 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டது. அங்கும் கடந்த 50 நாட்களில் மட்டும் 1 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை தந்துள்ளனர்.

 

ஒட்டுமொத்த தேசத்தின் பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான வழியை குஜராத் காட்டியது என்று பிரதமர் மோடி கூறினார். சர்தார் பட்டேல் தலைமையில் சோம்நாத் புத்துயிரூட்டப்பட்டதை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்று அவர் குறிப்பிட்டார். சம்பானேர் மற்றும் தோலாவிரா, லோத்தல், கிர்னார், பாவகாத், மோதேரா மற்றும் அம்பாஜி ஆகியவற்றுடன் அகமதாபாத் நகரமும் உலக பாரம்பரிய நகரமாக பாதுகாக்கப்பட்ட பிற எடுத்துக்காட்டுகள் என்று அவர் கூறினார்.

 

இந்திய சுதந்திரப் போராட்டம் தொடர்பான பாரம்பரியத்தை மீட்டெடுப்பதற்கான வளர்ச்சி இயக்கம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், கடமைப் பாதை வடிவில் ராஜபாதையை மறுசீரமைப்பு செய்தல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலையை நிறுவுதல், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் விடுதலைப் போராட்டம்  தொடர்பான இடங்களின் மேம்பாடு, பி.ஆர்.அம்பேத்கர் தொடர்புடைய இடங்களை ‘பஞ்ச தீர்த்தம்’ வடிவில் மேம்படுத்துதல் ஆகியவற்றைப் பற்றி குறிப்பிட்டார். ஒற்றுமையின் சிலை திறப்பு மற்றும் மறு சீரமைப்புச் செய்யப்பட்ட தண்டி, சபர்மதி ஆசிரமத்தை மீட்டெடுப்பது இந்த திசையில் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும் என்று பிரதமர் மோடி கூறினார்.

 

“எதிர்கால தலைமுறையினரும், சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை தருபவர்களும் ராட்டையின் சக்தி மற்றும் ஒரு புரட்சியை உருவாக்கும் திறனிலிருந்து உத்வேகம் பெறுவார்கள்.” பல நூற்றாண்டுகளாக அடிமைத்தனத்தால் விரக்தியில் சிக்கித் தவிக்கும் ஒரு தேசத்தின் மீது மகாத்மா காந்தி, நம்பிக்கையை நிரப்பினார் என்று அவர் கூறினார். இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கான தெளிவான திசையை மகாத்மாவின் தொலைநோக்குப் பார்வை காட்டுகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், கிராமப்புற ஏழைகளின் நலனுக்கு அரசு முன்னுரிமை அளித்து வருவதாகவும், மகாத்மா காந்தி வழங்கிய தற்சார்பு இந்தியா மற்றும் சுதேசி கொள்கைகளைப் பின்பற்றி தற்சார்பு இந்தியா இயக்கத்தை நடத்தி வருவதாகவும் கூறினார். குஜராத்தில் 9 லட்சம் விவசாயக் குடும்பங்கள் இயற்கை விவசாயத்தை பின்பற்றியுள்ளதாகவும், இதன் காரணமாக 3 லட்சம் மெட்ரிக் டன் யூரியா பயன்பாடு குறைந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். நவீன வடிவத்தில் முன்னோர்கள் விட்டுச் சென்ற லட்சியங்களின்படி வாழ்வதை வலியுறுத்திய பிரதமர், கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்க காதி பயன்பாட்டை ஊக்குவித்தல் மற்றும் தற்சார்பு இயக்கம் ஆகியவற்றைப் பற்றி கூறினார்.

 

கிராமங்களுக்கு அதிகாரமளித்தல் பற்றி குறிப்பிட்ட பிரதமர், கிராம சுயராஜ்யம் குறித்த மகாத்மா காந்தியின் தொலைநோக்கு நனவாகி வருகிறது என்றார். பெண்களின் வளர்ந்து வரும் பங்களிப்பைப் பற்றி குறிப்பிட்ட அவர், “சுய உதவிக் குழுக்களாக இருக்கட்டும், 1 கோடிக்கும் அதிகமான லட்சாதிபதி சகோதரிகளாகட்டும், ட்ரோன் விமானிகளாக மாற தயாராகும் பெண்களாக இருக்கட்டும், இந்த மாற்றம் ஒரு வலுவான இந்தியாவுக்கு ஒரு எடுத்துக்காட்டு மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய இந்தியாவின் காட்சி என்று கூறினார்.

 

அரசின் முயற்சிகள் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். விண்வெளித் துறையில் இந்தியாவின் சமீபத்திய சாதனைகள் குறித்தும் அவர் பேசினார். “இன்று, இந்தியா வளர்ச்சியின் உறுதியுடன் முன்னேறி வரும் போது, மகாத்மா காந்தியின் இந்த ஆலயம் நம் அனைவருக்கும் ஒரு பெரிய உத்வேகத்தை அளிக்கிறது. எனவே, சபர்மதி ஆசிரமம் மற்றும் கோச்ராப் ஆசிரமத்தின் வளர்ச்சி என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் வளர்ச்சி மட்டுமல்ல. வளர்ச்சியடைந்த பாரதத்தின் உறுதிப்பாடு மற்றும் உத்வேகத்தின் மீதான நமது நம்பிக்கையை இது வலுப்படுத்துகிறது” என்று பிரதமர் கூறியுள்ளார். மகாத்மா காந்தியின் சிந்தனைகளும், அவருடன் தொடர்புடைய உத்வேகம் அளிக்கும் இடங்களும் தேச நிர்மாணப் பயணத்தில் தொடர்ந்து நமக்கு வழிகாட்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

அகமதாபாத் ஒரு பாரம்பரிய நகரம் என்பதால் குஜராத் அரசும், அகமதாபாத் மாநகராட்சியும் வழிகாட்டிகளுக்கான போட்டியை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர், ஒவ்வொரு நாளும் குறைந்தது 1000 குழந்தைகளை சபர்மதி ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று அங்கு நேரத்தை செலவிடுமாறு பள்ளி நிர்வாகங்களை வலியுறுத்தினார். இதற்காக கூடுதல் செலவின்றி, தருணங்களை புதுப்பிக்க அனுமதிக்கும். உரையை நிறைவு செய்த பிரதமர், புதிய கண்ணோட்டத்தை அளிப்பது நாட்டின் வளர்ச்சிப் பயணத்திற்கு வலு சேர்க்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 

குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்ரத், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

பின்னணி

மறுசீரமைப்புச் செய்யப்பட்ட கோச்ராப் ஆசிரமத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். 1915 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்த பின்னர் மகாத்மா காந்தியால் நிறுவப்பட்ட முதல் ஆசிரமம் இதுவாகும். இது இன்றும் குஜராத் வித்யாபீடத்தால் நினைவுச்சின்னமாகவும், சுற்றுலா தலமாகவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. காந்தி ஆசிரம நினைவிடத்தின் பெருந்திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

 

மகாத்மா காந்தியின் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கவும், போற்றவும், அவரது கொள்கைகளை வெளிப்படுத்தவும், அவரை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு வரவும் பிரதமர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த முயற்சியின் மற்றொரு முன்னெடுப்பாக, காந்தி ஆசிரம நினைவுத் திட்டம், மகாத்மா காந்தியின் போதனைகள் மற்றும் தத்துவங்களை தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக புத்துயிர் பெற உதவும். இந்த பெருந்திட்டத்தின் கீழ், ஆசிரமத்தின் தற்போதுள்ள ஐந்து ஏக்கர் பரப்பளவு 55 ஏக்கராக விரிவுபடுத்தப்படும். தற்போதுள்ள 36 கட்டிடங்கள் மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்படும், அவற்றில், காந்தியின் இல்லமாக செயல்பட்ட ‘ஹ்ரிதேய் குஞ்ச்’ உட்பட 20 கட்டிடங்கள் பாதுகாக்கப்படும், 13 மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்படும், 3  கட்டிடங்கள் மீட்டுருவாக்கம் செய்யப்படும்.

 

பெருந்திட்டத்தில் புதிய கட்டிடங்கள் முதல் நிர்வாக வசதிகள், நோக்குநிலை மையம் போன்ற பார்வையாளர் வசதிகள், ராட்டை நூற்பு பற்றிய பயிற்சிப் பட்டறைகள், கையால் செய்யப்பட்ட காகிதம், பருத்தி நெசவு மற்றும் தோல் வேலைகள் மற்றும் பொது பயன்பாடுகள் ஆகியவை அடங்கும். இந்த கட்டிடங்கள் காந்திஜியின் வாழ்க்கையின் அம்சங்களையும் ஆசிரமத்தின் பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தும் கண்காட்சிகள் மற்றும் செயல்பாடுகளைக் கொண்டிருக்கும். காந்திஜியின் கருத்துக்களைப் பாதுகாக்கவும், பரப்பவும் ஒரு நூலகம் மற்றும் ஆவணக் கட்டிடத்தை உருவாக்கவும் இந்த பெருந்திட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. வருகை தரும் அறிஞர்கள் ஆசிரமத்தின் நூலகம் மற்றும் ஆவணக் காப்பகங்களைப் பயன்படுத்துவதற்கான வசதிகளையும் இது உருவாக்கும். வெவ்வேறு எதிர்பார்ப்புகளுடன், பல மொழிகளில் பார்வையாளர்களுக்கு வழிகாட்டக்கூடிய ஒரு விளக்க மையத்தை உருவாக்கவும், கலாச்சார ரீதியாகவும் அறிவுசார் ரீதியாகவும் அவர்களின் அனுபவத்தை தூண்டுவதாகவும், வளப்படுத்தவும் இந்த திட்டம் உதவும். இந்த நினைவகம் எதிர்கால சந்ததியினருக்கு உத்வேகம் அளிப்பதாகவும், காந்திய சிந்தனைகளை வளர்ப்பதாகவும், காந்திய விழுமியங்களின் சாரத்தை உயிர்ப்பிப்பதாகவும் அமையும்.

 

அண்ணலின் கொள்கைகள்தான் நமக்கு வழிகாட்டும் ஒளிவிளக்குகள். புதுப்பிக்கப்பட்ட கோச்ராப் ஆசிரமத்தின் தொடக்கம் மற்றும் காந்தி ஆசிரம நினைவு பெருந்திட்டம் தொடங்கப்படுவது அவரது பார்வையை மேலும் மேம்படுத்தும் மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் வரவிருக்கும் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும்.

 

***

(Release ID: 2013657) 

AD/BS/RS/KRS