Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய மாணவர் படையினர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களிடையே பிரதமர் உரையாற்றினார்

தேசிய மாணவர் படையினர்  மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களிடையே பிரதமர் உரையாற்றினார்


பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தேசிய மாணவர் படையினர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களிடையே உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ராணி லட்சுமி பாயின் வாழ்க்கையை சித்தரிக்கும் கலாச்சார நிகழ்ச்சி குறித்து பெருமிதம் தெரிவித்ததுடன், இது இந்தியாவின் வரலாற்றை உயிர்ப்புடன் கொண்டு வந்துள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியில் ஈடுபட்டுள்ள குழுவினரின் முயற்சிகளைப் பாராட்டிய அவர், அவர்கள் இப்போது குடியரசு தின அணிவகுப்பின் ஒரு பகுதியாக உள்ளனர் என்று கூறினார். இந்த நிகழ்ச்சி, 75வது குடியரசு தின கொண்டாட்டங்கள் மற்றும் இந்தியாவின் மகளிர் சக்திக்கு அதிகாரம் அளித்தல் ஆகிய இரண்டு காரணங்களுக்காக சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது என்று பிரதமர் கூறினார். இந்தியா முழுவதிலும் இருந்து வந்துள்ள பெண் பங்கேற்பாளர்களைப் பற்றிக் குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, அவர்கள் இங்கு தனியாக வரவில்லை என்றும், தங்களது மாநிலங்களின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் அவர்களின் சமூகங்களின் தொலைநோக்கு சிந்தனை ஆகியவற்றைக் கொண்டு வந்துள்ளனர் என்றும் கூறினார். இன்றைய மற்றொரு சிறப்பான தருணத்தை குறிப்பிட்ட பிரதமர், தேசிய பெண் குழந்தைகள் தினம் அவர்களின் தைரியம், உறுதிப்பாடு மற்றும் சாதனைகளை கொண்டாடும் நாள் என்று குறிப்பிட்டார். இந்திய மகள்கள் சமுதாயத்தை நன்மைக்காக சீர்திருத்தும் திறனைக் கொண்டுள்ளனர் என்று கூறிய பிரதமர், பல்வேறு வரலாற்றுக் காலகட்டங்களில் சமூகத்தின் அடித்தளத்தை அமைப்பதில் பெண்களின் பங்களிப்பை எடுத்துரைத்தார், இந்த நம்பிக்கையை இன்றைய கலாச்சார நிகழ்ச்சிகளில் காண முடிந்தது என்று அவர் கூறினார்.

ஜன் நாயக் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்க அரசு முடிவு செய்திருப்பதை குறிப்பிட்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, இது அரசின் அதிர்ஷ்டம் என்றும், இன்றைய இளைய தலைமுறையினர் அந்த மாமனிதரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் எனறும் கூறினார். வறுமை மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு இடையிலும், தான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகும், எப்போதும் அவர் பணிவைக் கடைப்பிடித்ததையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். அவரது வாழ்க்கை முழுவதும் சமூக நீதிக்காகவும், ஒடுக்கப்பட்ட பிரிவினரின் மேம்பாட்டிற்காகவும் அர்ப்பணிக்கப்பட்டது என்று பிரதமர் தெரிவித்தார். ஏழைகள் மீது கவனம் செலுத்துதல், கடைசி பயனாளியையும் சென்றடைய வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயணம் போன்ற அரசின் முன்முயற்சிகள் கர்பூர் தாக்கூரின் நடவடிக்கைகளைப் பிரதிபலிப்பதாக பிரதமர் கூறினார்.

பலர் முதல் முறையாக தில்லிக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், குடியரசு தின கொண்டாட்டங்களுக்கான உற்சாகத்தையும் பகிர்ந்து கொண்டார். தில்லியில் நிலவும்  குளிரைக் குறிப்பிட்ட பிரதமர், பங்கேற்பாளர்களில் பலர் முதன்முறையாக இதுபோன்ற வானிலையை அனுபவித்திருப்பார்கள் என்று கூறினார். பல்வேறு பகுதிகளில் இந்தியாவின் மாறுபட்ட வானிலை நிலைமைகளையும் எடுத்துரைத்தார். இதுபோன்ற கடுமையான வானிலையில் ஒத்திகை பார்ப்பதில் அவர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய அவர், அவர்களின் செயல்திறனைப் பாராட்டினார். அவர்கள் தங்கள் மாநிலங்களுக்கு திரும்பும்போது குடியரசு தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியை தங்களுடன் எடுத்துச் செல்வார்கள் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். இது இந்தியாவின் சிறப்பு என்று கூறிய பிரதமர், ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு பயணம் செய்வது ஒவ்வொரு குடிமகனுக்கும் புதிய அனுபவங்களை உருவாக்குகிறது என்று கூறினார்.

தற்போதைய தலைமுறையினர் ஜென் இசட் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டாலும், தாம் அவர்களை அமிர்த தலைமுறை என்று அழைக்க விரும்புவதாக பிரதமர் கூறினார். தற்போதைய தலைமுறையின் சக்திதான் அமிர்த காலத்தில் நாட்டின் முன்னேற்றத்திற்கு உத்வேகம் அளிக்கும் என்று அவர் தெரிவித்தார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்திய பிரதமர், இந்தியா மற்றும் தற்போதைய தலைமுறையினரின் எதிர்காலத்திற்கு அடுத்த 25 ஆண்டுகளின் முக்கியத்துவம் வாய்ந்த என்றார். அமிர்த தலைமுறையினரின் அனைத்து கனவுகளையும் நிறைவேற்றுவது, எண்ணற்ற வாய்ப்புகளை உருவாக்குவது, அவர்களின் முன்னேற்றப் பாதையில் உள்ள அனைத்து தடைகளையும் அகற்றுவது ஆகியவை அரசின் உறுதிப்பாடாகும் என்று பிரதமர் கூறினார். இன்றைய நிகழ்ச்சியில் காணப்பட்ட ஒழுக்கம், கவனம் செலுத்தும் மனநிலை மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவையும் அமிர்த காலக் கனவுகளை நனவாக்குவதற்கான அடிப்படையாகும் என்று அவர் கூறினார்.

மிர்த தலைமுறையினரின் வழிகாட்டும் கொள்கையாக ‘தேசத்தை முதன்மையாகக் கொள்ளுதல் என்ற சிந்தனை இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். இளைஞர்களிடையே, ஒருபோதும் விரக்தியை ஏற்படுத்தக் கூடாது என்று பிரதமர் கூறினார். அனைவரின் சிறிய பங்களிப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திய பிரதமர், இது சரியான தருணம், ஆகச்சிறந்த தருணம்” என்று குறிப்பிட்டார். தற்போதைய தருணத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை அடைவதற்கான உறுதிப்பாட்டிற்கு இளைஞர்கள் வலுசேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்திய மேதைகள் உலகிற்கு புதிய வழிகாட்டுதலை வழங்கவும், அதன் மூலம் உலகின் பிரச்சினைகளை இந்தியா தீர்க்கவும் அறிவின் எல்லையை விரிவுபடுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.  இளைஞர்கள் தங்களது முழுத்திறனை உணர புதிய வழிகளை உருவாக்குவதற்கான அரசின் நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்த அவர், புதிதாக உருவாகியுள்ள துறைகளில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துவது குறித்தும் குறிப்பிட்டார். விண்வெளித் துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்குதல், எளிதாக வர்த்தகம் செய்வதை நோக்கி செயல்படுதல், பாதுகாப்புத் துறையில் தனியார் துறையை ஊக்குவித்தல், தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவுதல் மற்றும் 21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ப நவீன கல்வி வசதிகளை உருவாக்குதல் ஆகியவற்றை திரு நரேந்திர மோடி உதாரணங்களாக எடுத்துரைத்தார். ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் இளைஞர்களை ஈடுபட ஊக்குவித்த பிரதமர், படைப்பாற்றல் மற்றும் புதுமையை ஊக்குவிக்கும் அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் பற்றியும் குறிப்பிட்டார். ராணுவத்தில் சேர்வதன் மூலம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விரும்பும் பெண்களுக்கு அரசு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். இப்போது மாணவிகளும் பல்வேறு சைனிக் பள்ளிகளில் சேரலாம் என்று கூறிய பிரதமர், அவர்கள் முழு நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார். உங்கள் முயற்சிகள், உங்கள் தொலைநோக்கு, உங்கள் திறன் ஆகியவை இந்தியாவை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லும் என்று அவர் மேலும் கூறினார்.

அனைத்து தன்னார்வலர்களும் தங்களது ஆற்றலை சரியான முறையில் பயன்படுத்துவது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். ஒழுக்க உணர்வைக் கொண்ட, நிறைய பயணம் செய்த, வெவ்வேறு மொழிகளைப் பேசும் பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த நண்பர்களைக் கொண்ட ஒருவருக்கு ஆளுமை வளர்ச்சி இயல்பாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார். இது ஒருவரின் முழு வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதியாகும் என்பதை அவர் வலியுறுத்தினார். உடற்தகுதியை தங்கள் முதல் முன்னுரிமையாக மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். உடற்தகுதியை பராமரிப்பதில் ஒழுக்கத்தின் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார். ஊக்குவித்தல் சில நேரங்களில் குறையலாம் என்றும் ஆனால் ஒழுக்கம்தான் உங்களை சரியான பாதையில் வைத்திருக்கிறது என்று குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, ஒழுக்கம் உந்துதலாக மாறினால், ஒவ்வொரு துறையிலும் வெற்றி உறுதி என்பதை சுட்டிக்காட்டினார்.

தேசிய மாணவர் படையுடன் தமக்கு உள்ள தொடர்புகளை எடுத்துரைத்த பிரதமர், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்ட முகாம்கள் அல்லது கலாச்சார முகாம்கள் போன்ற நிறுவனங்கள் இளைஞர்களுக்கு சமூகக் கடமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன என்றார். ‘மை பாரத்’ என்ற மற்றொரு அமைப்பின் உருவாக்கம் குறித்து தெரிவித்த அவர், இளைஞர்கள் ‘மை பாரத்’ தன்னார்வலர்களாக பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த குடியரசு தின கொண்டாட்டத்தின் போது, பல்வேறு நிகழ்ச்சிகளைக் காணவும், பல்வேறு வரலாற்று இடங்களுக்குச் செல்லவும், நிபுணர்களைச் சந்திக்கவும் மாணவர்களுக்குக் கிடைத்த பல்வேறு வாய்ப்புகளை பிரதமர் எடுத்துரைத்தார். இது உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் நினைவில் வைத்திருக்கும் ஒரு அனுபவமாக இருக்கும் என்றும் ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் குடியரசு தின அணிவகுப்பைப் பார்க்கும் போதெல்லாம், இந்த நாட்கள் உங்களுக்கு நினைவிருக்கும் என்றும் கூறினார். குடியரசு தினக் கொண்டாட்டங்களில் இருந்து தங்கள் அனுபவங்களையும் கற்றல்களையும் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அவற்றை நமோ செயலியில் எழுத்து மூலமாகவோ அல்லது வீடியோ பதிவு மூலமாகவோ தம்முடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றார். இன்றைய இளைய தலைமுறையினர் நமோ செயலி மூலம் தொடர்ந்து தம்முடன் இணைந்திருக்க முடியும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.

இளைஞர்களின் வலிமையில் தமக்கு நம்பிக்கை இருப்பதாக பிரதமர் கூறினார். இளைஞர்கள் மனசாட்சியுள்ள குடிமகனாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தீயப்பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் குறித்து பெருமிதம் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி, பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

——-

ANU/AD/PLM/KPG/KRS