தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்களே, தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களே, பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு மு.செல்வம் அவர்களே, எனது இளம் நண்பர்களே, ஆசிரியர்களே, பல்கலைக்கழக ஊழியர்களே,
வணக்கம்!
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பது எனக்கு சிறப்புக்குரியது. இது 2024-ம் ஆண்டில் எனது முதல் பொது உரையாடல் ஆகும். அழகான மாநிலமான தமிழ்நாட்டில் , இளைஞர்கள் மத்தியில் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இங்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவுக்கு வரும் வாய்ப்பு பெற்ற முதல் பிரதமர் நான்தான் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். இந்த முக்கியமான தருணத்தில் பட்டம் பெறும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெரும்பாலும், ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்குவது ஒரு சட்டமன்ற செயல்முறையாகும். ஒரு சட்டம் இயற்றப்பட்டு ஒரு பல்கலைக்கழகம் உருவாகிறது. பின்னர், அதன் கீழ் கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன. பின்னர் பல்கலைக்கழகம் வளர்ந்து சிறந்த மையமாக முதிர்ச்சியடைகிறது. ஆனால், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நிலைமை சற்று வித்தியாசமானது. இது 1982ல் உருவாக்கப்பட்டபோது, ஏற்கனவே இருந்த, சிறப்புமிக்க பல கல்லூரிகள் உங்கள் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. இவற்றில் சில கல்லூரிகள் ஏற்கனவே சிறந்த மனிதர்களை உருவாக்கிய வரலாற்றைக் கொண்டிருந்தன. எனவே, பாரதிதாசன் பல்கலைக்கழகம் வலுவான, முதிர்ச்சியான அடித்தளத்தில் தொடங்கப்பட்டது. இந்த முதிர்ச்சி உங்கள் பல்கலைக்கழகத்தை பல களங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அது மனிதநேயம், மொழிகள், அறிவியல் அல்லது செயற்கைக்கோள்கள் எதுவாக இருந்தாலும், உங்கள் பல்கலைக்கழகம் ஒரு தனித்துவமான முத்திரையை உருவாக்குகிறது!
நமது தேசமும், நாகரிகமும் எப்போதுமே அறிவை மையப்படுத்தியே இருந்து வருகிறது. நாளந்தா, விக்கிரமசிலா போன்ற பழங்காலப் பல்கலைக் கழகங்கள் நன்கு அறியப்பட்டவை. அதேபோல், காஞ்சிபுரம், கங்கை கொண்ட சோழபுரம், மதுரை போன்ற இடங்களில் சிறந்த பல்கலைக் கழகங்கள் இருந்ததற்கான குறிப்புகள் உள்ளன. உலகம் முழுவதிலுமிருந்து மாணவர்கள் இந்த இடங்களுக்கு வருவது வழக்கம். இதேபோல், பட்டமளிப்பு விழா என்ற கருத்தும் மிகவும் தொன்மையானது என்பது நமக்கு நன்கு தெரியும். உதாரணமாக, கவிஞர்கள், அறிவாளர்களின் பழந்தமிழ்ச் சங்கக் கூட்டத்தை எடுத்துக் கொள்வோம். சங்கங்களில் கவிதைகளும், இலக்கியங்களும் பகுப்பாய்வு செய்வதற்காக வழங்கப்பட்டன.
பகுப்பாய்வுக்குப் பிறகு, கவிஞரும், அவர்களின் படைப்புகளும் பெரிய சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டனர். கல்வியிலும், உயர்கல்வியிலும் இன்றும் பயன்படுத்தப்படும் அதே தர்க்கம் இது! எனவே, என் இளம் நண்பர்களே, நீங்கள் ஒரு பெரிய வரலாற்று அறிவு மரபின் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள். எந்தவொரு நாட்டிற்கும் வழிகாட்டுவதில் பல்கலைக்கழகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நமது பல்கலைக்கழகங்கள் துடிப்புடன் இருந்தபோது, நமது நாடும், நாகரிகமும் துடிப்புடன் இருந்தன. நமது நாடு தாக்கப்பட்டபோது, நமது அறிவுசார் அமைப்புகள் உடனடியாக குறிவைக்கப்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மகாத்மா காந்தி, பண்டிட் மதன் மோகன் மாளவியா, சர் அண்ணாமலை செட்டியார் போன்றவர்கள் பல்கலைக்கழகங்களைத் தொடங்கினர். இவை சுதந்திரப் போராட்டத்தின் போது அறிவு மற்றும் தேசியவாதத்தின் மையங்களாக இருந்தன.
அதுபோல, இன்று இந்தியாவின் எழுச்சிக்கு ஒரு காரணம், நமது பல்கலைக்கழகங்களின் எழுச்சி. இந்தியா பொருளாதார வளர்ச்சியில் மிக விரைவாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக சாதனை படைத்து வருகிறது. அதே நேரத்தில், நமது பல்கலைக்கழகங்களும் உலக தரவரிசையில் சாதனை எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளன. இன்று உங்களில் பலருக்கும் பட்டங்களை வழங்கியுள்ளது. உங்கள் ஆசிரியர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், எல்லோரும் உங்களுக்காக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். உண்மையில், நீங்கள் உங்கள் பட்டப்படிப்பு அங்கி அணிந்து வெளியே காணப்பட்டால், மக்கள் உங்களைத் தெரியாவிட்டாலும் உங்களை வாழ்த்துவார்கள். இது கல்வியின் நோக்கமாகும். சமூகம் உங்களை நம்பிக்கையுடன் எவ்வாறு காண்கிறது என்பதைப் பற்றி ஆழமாக சிந்திக்க வைக்க வேண்டும்.
குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் கூறுகையில், உயர்ந்த கல்வி நமக்கு வெறும் தகவல்களை மட்டும் தருவதில்லை. ஆனால், அது எல்லா உயிர்களுடனும் இணக்கமாக வாழ நமக்கு உதவுகிறது. இந்த முக்கியமான நாளுக்கு உங்களைக் கொண்டு வந்ததில் மிகவும் ஏழ்மையானவர்கள் உட்பட ஒட்டுமொத்த சமூகமும் ஒரு பங்கைக் கொண்டிருந்தது. எனவே, அவர்களுக்கு திருப்பிக் கொடுத்து, சிறந்த சமூகத்தையும், நாட்டையும் உருவாக்குவதே கல்வியின் உண்மையான நோக்கமாகும். நீங்கள் கற்றுக்கொண்ட அறிவியல் உங்கள் கிராமத்தில் உள்ள ஒரு விவசாயிக்கு உதவும். நீங்கள் கற்றுக்கொண்ட தொழில்நுட்பம் சிக்கல்களைத் தீர்க்க உதவும். நீங்கள் கற்றுக்கொண்ட வணிக மேலாண்மை வணிகங்களை நடத்தவும், மற்றவர்களுக்கு வருமான வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் உதவும். நீங்கள் கற்றுக்கொண்ட பொருளாதாரம் வறுமையைக் குறைக்க உதவும். நீங்கள் கற்றுக்கொண்ட மொழிகள், வரலாறு கலாச்சாரத்தை வலுப்படுத்த உதவும். ஒருவகையில், 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க இங்குள்ள ஒவ்வொரு பட்டதாரியும் பங்களிக்க முடியும்!
2047-ம் ஆண்டு வரையிலான ஆண்டுகளை நமது வரலாற்றில் மிக முக்கியமானதாக மாற்றும் இளைஞர்களின் திறமையில் எனக்கு நம்பிக்கை உள்ளது. இதுவும் உங்கள் பல்கலைக்கழகத்தின் தாரக மந்திரம். இதன் பொருள் துணிச்சலான புதிய உலகை உருவாக்குவோம் என்பதாகும். இந்திய இளைஞர்கள் ஏற்கனவே அத்தகைய உலகை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். கோவிட் -19ன் போது உலகிற்கு தடுப்பூசிகளை அனுப்ப இளம் விஞ்ஞானிகள் நமக்கு உதவினர். சந்திரயான் போன்ற பயணங்கள் மூலம் இந்திய அறிவியல் உலக வரைபடத்தில் இடம் பிடித்துள்ளது. நமது கண்டுபிடிப்பாளர்கள் 2014ல் 4,000-ஆக இருந்த காப்புரிமைகளின் எண்ணிக்கையை இப்போது சுமார் 50,000-ஆக உயர்த்தியுள்ளனர்! நமது மானுடவியல் அறிஞர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியக் கதையை உலகுக்குக் காண்பித்து வருகின்றனர். நமது இசைக்கலைஞர்களும், கலைஞர்களும் தொடர்ந்து சர்வதேச விருதுகளை நம்நாட்டிற்குக் கொண்டு வருகின்றனர். ஆசிய விளையாட்டு, ஆசிய பாரா விளையாட்டு மற்றும் பிற போட்டிகளில் நமது வீரர்கள் அதிக பதக்கங்களை வென்றுள்ளனர். அனைவரும் ஒவ்வொரு துறையிலும் உங்களை புதிய நம்பிக்கையுடன் பார்க்கும் இந்த நேரத்தில், நீங்கள் இந்த உலகில் அடியெடுத்து வைக்கிறீர்கள். இளமை என்றால் வேகம், திறமை, அதிக அளவு ஆகியவற்றுடன் வேலை செய்யும் திறனாகும். கடந்த சில ஆண்டுகளில், நாங்கள் உங்களுக்கான வேகம், அளவுக்கேற்ப பணியாற்றியுள்ளோம். இதனால் நாங்கள் உங்களுக்குப் பயனளிக்க முடியும்.
கடந்த 10 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 74-ல் இருந்து 150-ஆக இரு மடங்காக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மிகச் சிறந்த கடற்கரை உள்ளது. எனவே, இந்தியாவில் உள்ள முக்கிய துறைமுகங்களின் மொத்த சரக்கு கையாளும் திறன் 2014 முதல் இரட்டிப்பாகியுள்ளது என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். கடந்த 10 ஆண்டுகளில், நாட்டில் சாலை, நெடுஞ்சாலை கட்டுமானத்தின் வேகம் சுமார் இரட்டிப்பாகியுள்ளது. நாட்டில் பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை சுமார் 1 லட்சமாக அதிகரித்துள்ளது. இது, 2014ல், 100-க்கும் குறைவாக இருந்தது. முக்கிய பொருளாதார நாடுகளுடன் இந்தியா பல வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் நமது பொருட்கள், சேவைகளுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை அளிக்கும். அவை நமது இளைஞர்களுக்கு எண்ணற்ற புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன. ஜி 20 போன்ற அமைப்புகளை வலுப்படுத்துவது, பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது அல்லது உலகளாவிய விநியோக அமைப்பில் ஒரு பெரிய பங்களிப்பாளராக திகழ்வது என, ஒவ்வொரு உலகளாவிய தீர்வின் ஒரு பகுதியாக இந்தியா வரவேற்கப்படுகிறது. பல வழிகளில், உள்ளூர், உலகளாவிய காரணிகள் காரணமாக, இது ஒரு இளம் இந்தியராக இருக்க சிறந்த நேரம். இந்த நேரத்தைப் பயன்படுத்தி, நம் நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லுங்கள்.
உங்களில் சிலர் இன்று பல்கலைக்கழக வாழ்க்கையின் முடிவு இது என்று நினைக்கலாம். அது உண்மையாக இருக்கலாம், ஆனால், அது கற்றலின் முடிவல்ல. இனி உங்கள் பேராசிரியர்களால் உங்களுக்கு கற்பிக்கப்படாது, ஆனால், வாழ்க்கை உங்கள் ஆசிரியராக மாறும். தொடர்ச்சியான கற்றல் உணர்வில், கற்றல், மறுதிறன், திறன் மேம்பாடு ஆகியவற்றில் முனைப்புடன் செயல்படுவது முக்கியம். ஏனென்றால், விரைவாக மாறிவரும் உலகில், நீங்கள் மாற்றத்தை இயக்குகிறீர்கள் அல்லது மாற்றம் உங்களை இயக்குகிறது. இன்று இங்கு பட்டம் பெறும் இளைஞர்களுக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்!
***
ANU/PKV/IR/RS/KV
Delighted to address the Convocation ceremony at Bharathidasan University in Tiruchirappalli. https://t.co/ssUOpv9Mrm
— Narendra Modi (@narendramodi) January 2, 2024
Bharathidasan University started on a strong and mature foundation: PM @narendramodi pic.twitter.com/WavwOjIVuS
— PMO India (@PMOIndia) January 2, 2024
Universities play a crucial role in giving direction to any nation: PM @narendramodi pic.twitter.com/Evqkohj4zL
— PMO India (@PMOIndia) January 2, 2024
I am confident in the ability of young people to make the years till 2047 the most important in our history: PM @narendramodi pic.twitter.com/0KAHZPlis8
— PMO India (@PMOIndia) January 2, 2024
Youth means energy. It means the ability to work with speed, skill and scale: PM @narendramodi pic.twitter.com/he1A83dFsM
— PMO India (@PMOIndia) January 2, 2024
India is being welcomed as a part of every global solution: PM @narendramodi pic.twitter.com/qWsyq4uPMX
— PMO India (@PMOIndia) January 2, 2024
Our civilisation has always celebrated knowledge, learning and innovation. pic.twitter.com/ZB2Gzm5tBe
— Narendra Modi (@narendramodi) January 2, 2024
The world is looking at India’s Yuva Shakti with great hope. pic.twitter.com/P0C9mMgvvP
— Narendra Modi (@narendramodi) January 2, 2024