Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் குழுவுடன் பிரதமர் கலந்துரையாடல்

ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் குழுவுடன் பிரதமர் கலந்துரையாடல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று காலை, எண் 7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள அவரது இல்லத்தில் ஜம்மு-காஷ்மீர் மாணவர்கள் குழுவுடன் கலந்துரையாடினார். ஜம்மு காஷ்மீரின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 250 மாணவர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

மத்திய அரசின் ‘நாட்டை அறிந்து கொள்ளுங்கள் – இளைஞர் பரிமாற்ற திட்டம் 2023’ இன் கீழ் ஜெய்ப்பூர், அஜ்மீர் மற்றும் புது தில்லிக்கு மாணவர்கள் பயணம் மேற்கொண்டனர்.

ஒரே இந்தியா சிறப்பான இந்தியா என்ற உணர்வில், நாட்டின் கலாச்சார மற்றும் சமூக பன்முகத்தன்மையை ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு காண்பிப்பதை இந்த பயணம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 

கலந்துரையாடலின் போது, மாணவர்களின் பயண அனுபவம் மற்றும் அவர்கள் பார்வையிட்ட புகழ்பெற்ற இடங்கள் குறித்து பிரதமர் கேட்டறிந்தார்.

ஜம்மு-காஷ்மீரின் வளமான விளையாட்டு கலாச்சாரம் குறித்து பிரதமர் விவாதித்தார். கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளில் மாணவர்கள் பங்கேற்பது குறித்து கேட்டறிந்தார்.

ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மூன்று பதக்கங்களை வென்ற ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த இளம் வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவியை பிரதமர் உதாரணம் காட்டினார். ஜம்மு-காஷ்மீரின் இளைஞர்களின் திறமையைப் பாராட்டிய பிரதமர், அவர்கள் எந்தத் துறையிலும் சிறந்து விளங்கும் ஆற்றலைக் கொண்டுள்ளனர் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

வளர்ச்சியடைந்த இந்தியா @2047 கனவை நனவாக்கவும், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் மாணவர்கள் பாடுபட வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.

 

ஜம்மு-காஷ்மீரில் உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் கட்டப்படுவது குறித்து பேசிய பிரதமர், இது பிராந்தியத்தில் இணைப்பை மேம்படுத்தும் என்றார்.

சந்திரயான் -3 மற்றும் ஆதித்யா -எல் 1 திட்டத்தின் வெற்றி  குறித்து மாணவர்களுடன் பிரதமர் விவாதித்தார், இந்த அறிவியல் சாதனைகள் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தியுள்ளன என்றார்.

இந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தது குறித்து பேசிய பிரதமர், ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாத் துறையில்  ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்றார். யோகாவின் நன்மைகள் குறித்து பேசிய பிரதமர், மாணவர்கள் தினமும் யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். காஷ்மீரில் ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது குறித்தும், நாட்டை தூய்மையாக மாற்றுவதற்கான முயற்சிகள் குறித்தும் அவர் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

*******

ANU/AD/BS/DL