Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி: இந்தியாவின் ஜி20 தலைமைத்துவமும் பன்முகத்தன்மையின் புதிய விடியலும்


ஜி-20 கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை இந்தியா ஏற்று இன்றுடன் 365 நாட்கள், அதாவது ஓராண்டு நிறைவடைகிறது. வசுதைவ குடும்பகம் எனப்படும் ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற  உணர்வைப் புத்துயிர் பெறச் செய்ய வேண்டிய தருணம் இதுவாகும்.

கடந்த ஆண்டு தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றபோது, உலக அளவில் பல்வேறு சவால்கள் தீவிரமாக இருந்தன.  கொவிட் – 19 பாதிப்பில் இருந்து மீள வேண்டியது தொடர்பான கவலைகள், பருவ நிலை மாற்ற அச்சுறுத்தல்கள், உலக அளவில் நிலையில்லாத நிதித்தன்மை, வளரும் நாடுகளில் கடன் நெருக்கடி போன்றவற்றின் தீவிரத் தன்மை அப்போது அதிகமாக இருந்தது.  முரண்பாடுகள் மற்றும் போட்டிகளுக்கு மத்தியில், வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு இல்லாமல் இருந்தது. இது முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாக இருந்தது.

இந்தச் சவாலான சூழலில் ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்ற இந்தியா,  மொத்த உள்நாட்டு உற்பத்தியை மையமாகக் கொண்ட  வளர்ச்சி என்ற தன்மையில் இருந்து மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சி என்ற தத்துவத்திற்கு மாறுவதற்கான ஒரு மாற்று உத்தியை வழங்க முயன்றுள்ளது. நம்மைப் பிரிக்கும் அம்சங்களை விட, நம்மை இணைக்கும் அம்சங்களை உலகுக்கு நினைவூட்டுவதை நோக்கமாகக் கொண்டு இந்தியா செயல்பட்டு வருகிறது. முக்கியமாக, உலகளாவிய பேச்சுவார்த்தைகளும், ஆலோசனைகளும் அதிகரிக்க வேண்டும். ஒரு சிலரின் நலன்களைவிட பலரது தேவைகள் முக்கியமானவை. அதற்கு அந்த சிலர் வழிவிட வேண்டும். இதற்குப் பன்முகத்தன்மையில் அடிப்படை சீர்திருத்தம் தேவை என்பதை நாம் அறிந்து செயல்படுகிறோம்.

அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, லட்சியத்துடன் கூடிய செயல்பாடுகள், செயல் திட்டம் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் தீர்க்கமான நடைமுறைகள் என்ற  நான்கு அம்சங்கள் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவ அணுகுமுறையை வரையறுக்கும் முக்கிய அம்சங்களாகத் திகழ்ந்தன.  ஜி20 கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பு நாடுகளாலும் ஜி20 தலைவர்களின் புதுதில்லி தீர்மானம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது நமது அணுகுமுறைகள் மற்றும் கொள்கைகளை நிறைவேற்றுவதற்கான உறுதிப்பாட்டிற்குச் சான்றாக அமைந்துள்ளது.

அனைவரையும் உள்ளடக்கிய தன்மை என்பது இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் மையக் கருப்பொருளாக இருந்து வருகிறது. 55 ஆப்பிரிக்க நாடுகளின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பான ஆப்பிரிக்க ஒன்றியம், ஜி20 அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜி20, உலகின் 80 சதவீத மக்கள் தொகையை உள்ளடக்கிய நாடுகளின் அமைப்பாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.  இந்தியாவின் இந்த ஆக்கப்பூர்வமான நிலைப்பாடு, உலகளாவிய சவால்களை எதிர்கொள்வது மற்றும் வாய்ப்புகளை அதிகரிப்பது குறித்த விரிவான கலந்துரையாடலை ஊக்குவித்துள்ளது.

உலகளாவிய தெற்கு நாடுகள் எனப்படும் வளரும் நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக, ‘உலகளாவிய தெற்கு நாடுகளின் குரல்’ என்ற  உச்சிமாநாட்டை இந்தியா இரண்டு கட்டங்களாக நடத்தியது. இது பன்முகத்தன்மைக்கு புதிய விடியலாக அமைந்தது. வளரும் நாடுகளின் கவலைகள் இந்த மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்பட்டன. இது வளரும் நாடுகள் தொடர்பான உலகளாவிய கருத்தியலை வடிவமைப்பதில் அவற்றுக்கு சரியான இடத்தைப் பெற்றுத் தந்துள்ளன.

அனைவரையும் உள்ளடக்கிய தன்மை என்பது, ஜி20 தொடர்பான  இந்தியாவின் உள்நாட்டு அணுகுமுறைகளிலும் எதிரொலித்தது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்குப்  பொருத்தமான வகையில் மக்களின் தலைமைத்துவமாக அது அமைந்தது. மக்கள் பங்கேற்பு நடவடிக்கைகளின் மூலம் ஜி20 நிகழ்வுகள் நாட்டின் 140 கோடி மக்களையும் சென்றடைந்தன. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் ஜி20 தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஜி20 தத்துவத்திற்கேற்ப முக்கியமான அம்சங்களில்  விரிவான வளர்ச்சி இலக்குகளின் மீது சர்வதேச கவனம் அமைவதை இந்தியா உறுதிசெய்தது.

2030-ம் ஆண்டினை மையமாகக் கொண்ட முக்கியமான ஜி20 2030-ம் ஆண்டு  செயல்திட்டத்தை இந்தியா வகுத்து அளித்துள்ளது. இதில் சுகாதாரம், கல்வி, பாலின சமத்துவம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை உள்ளிட்ட, ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய  சிக்கல்களுக்கு செயல் சார்ந்த அணுகுமுறையை இந்தியா எடுத்துரைத்துள்ளது. இதன் மூலம்  நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கான ஜி20  செயல் திட்டத்தை இந்தியா வழங்கியுள்ளது.

இந்த முன்னேற்றங்களுக்கான ஒரு முக்கிய சக்தியாக, வலுவான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு உள்ளது. ஆதார், யுபிஐ, டிஜிலாக்கர் போன்ற புரட்சிகரமான டிஜிட்டல் நடைமுறைகளின் பலன்களை இந்தியா  நேரடியாகக்  கண்டுள்ளது.  இதனை அடிப்படையாகக் கொண்டு இந்தியா தீர்க்கமான பரிந்துரைகளை வழங்கியுள்ளது. ஜி20 மூலம், உலகளாவிய தொழில்நுட்ப ஒத்துழைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில்,  டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு களஞ்சியப் பணிகளை இந்தியா வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. 16 நாடுகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகளைக் கொண்ட இந்தக் களஞ்சியம், உலகளாவிய தெற்கு நாடுகளுக்குப் பெரிதும் உதவும். இந்த நாடுகளில்  அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்தவும், அந்நாடுகள் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உருவாக்கி, ஏற்று செயல்படவும் இது வகை செய்யும்.

நமது பூமியைப் பொறுத்தவரை, அவசரமான, நிலையான மற்றும் சமமான மாற்றத்தை உருவாக்க,  லட்சியத்துடன் கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய  நோக்கங்களை நாம் அறிமுகப்படுத்தினோம். ஜி20 பிரகடனத்தின் ‘பசுமை மேம்பாட்டு ஒப்பந்தம்’ பசியை எதிர்த்துப் போராடுவதிலும், பூமியைப் பாதுகாப்பதிலும் உள்ள சவால்களை எதிர்கொள்ள வழிகாட்டுகிறது. அது வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் தன்மைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, சூழலுக்கேற்ற உற்பத்தி நடைமுறைகளை  விரிவாக எடுத்துரைக்கிறது.  2030-ம் ஆண்டுக்குள் உலக அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை மும்மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று ஜி20 பிரகடனம் அழைப்பு விடுத்துள்ளது. உலகளாவிய உயிரி எரிபொருள்  கூட்டமைப்பை நிறுவுதல் மற்றும் பசுமை ஹைட்ரஜனுக்கான ஒருங்கிணைந்த செயல்திட்டம் ஆகியவற்றுடன், தூய்மையான, பசுமையான உலகை உருவாக்குவதற்கான ஜி20-ன் லட்சியங்கள்  மிக உறுதியானவையாக அமைந்துள்ளன. இது எப்போதுமே இந்தியாவின் நெறிமுறையாக உள்ளது. மேலும் சுற்றுச் சூழலுக்கேற்ற நிலையான வாழ்க்கை முறை இயக்கம் (லைஃப்-LiFE) மூலம், நமது பழமையான  மற்றும் நிலையான பாரம்பரியங்களிலிருந்து ஒட்டுமொத்த உலகமும் பயனடைய முடியும்.

இந்தப் பிரகடனம் பருவநிலை நீதி மற்றும் சமத்துவத்திற்கான நமது உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.  பருவநிலை மாற்றம் தொடர்பான சிக்கலில், உலகளாவிய வடக்கு நாடுகள் எனப்படும் வளர்ந்த நாடுகளிடமிருந்து கணிசமான நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு தேவை என இந்தத் தீர்மானம் வலியுறுத்துகிறது. முதல் முறையாக, பில்லியன் டாலர்கள் என்ற அளவில் இருந்து டிரில்லியன் டாலர்கள் என்ற அளவுக்கு வளர்ச்சி நிதியின் உயர்வுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. வளரும் நாடுகள் 2030-ம் ஆண்டிற்குள் தங்களது தேசிய ரீதியான பங்களிப்புகளை நிறைவேற்ற 5.9 டிரில்லியன் டாலர் தேவை என்ற கோரிக்கையை ஜி20 ஏற்றுக்கொண்டது.

வளங்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, சிறந்த, பெரிய மற்றும் மிகவும் பயனுள்ள பலதரப்பு வளர்ச்சி வங்கிகளின் முக்கியத்துவத்தை ஜி20 வலியுறுத்துகிறது. அதே நேரத்தில், ஐநா சீர்திருத்தங்களில், குறிப்பாக ஐநா பாதுகாப்புக் கவுன்சில் போன்ற முக்கிய அமைப்புகளை மறுசீரமைப்பதில் இந்தியா ஒரு முன்னணிப்  பங்கை வகித்து வருகிறது. இது மிகவும் சமத்துவமான, உலகளாவிய ஒழுங்கை உறுதி செய்யும்.

இந்தியா தலைமையில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டுப் பிரகடனத்தில் பாலின சமத்துவம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த ஆண்டு, மகளிருக்கு அதிகாரமளித்தல் குறித்த ஒரு சிறப்புப் பணிக்குழுவை உருவாக்குவது என  முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில், நாடாளுமன்றத்திலும்  சட்டமன்றங்களிலும், மூன்றில் ஒரு பங்கு இடங்களை மகளிருக்கு ஒதுக்கும், மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா-2023, நிறைவேற்றப்பட்டிருப்பது மகளிர் தலைமையிலான வளர்ச்சிக்கான அரசின் உறுதிப்பாட்டைக் குறிக்கிறது.

 இணக்கமான கொள்கை, நம்பகமான வர்த்தகம், இலக்கை நோக்கிய பருவநிலை செயல்திட்ட நடவடிக்கைகள்  ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்கான முக்கிய அம்சங்களில் ஒத்துழைப்பை அதிகரிப்பதை ஜி20 புதுதில்லி பிரகடனம் உள்ளடக்கியுள்ளது. இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் போது 87 முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் 118 ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.  கடந்த கால எண்ணிக்கைகளை விட இது அதிகம் என்பது பெருமைக்குரிய அம்சமாகும்.

ஜி20 தலைமைத்துவத்தின் போது, புவிசார் அரசியல் பிரச்சனைகள், பொருளாதார மேம்பாடு, வளர்ச்சி ஆகியவை குறித்த விவாதங்களை இந்தியா நடத்தியது. பயங்கரவாதமும், அப்பாவிப் பொதுமக்களின் உயிரிழப்பும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும். சமரசமற்ற கொள்கையுடன் பயங்கரவாதத்தை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தியது. பகைமையை  வளர்ப்பதைத் தவிர்த்து மனிதாபிமானத்தை உள்வாங்கி  செயல்படவேண்டும் எனவும், இது போருக்கான காலம் அல்ல என்பதையும் இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

 ஜி20 தலைமைத்துவத்தின் போது இந்தியா அசாதாரணமான சாதனைகளை நிகழ்த்தியதில் நான்  மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். பன்முகத்தன்மைக்கு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளதுடன், உலகளாவிய தெற்கு நாடுகளின் குரல் வலுப்படுத்தப்பட்டுள்ளது. வளர்ச்சியை ஆதரிக்கும் செயல்பாடுகளுடன் மகளிருக்கு அதிகாரமளித்தலுக்காக எல்லா நிலைகளிலும் இந்தியா குரல் கொடுத்துள்ளது.

 மக்களையும், பூமியையும் மையமாகக் கொண்ட, அமைதி மற்றும் வளத்திற்கான கூட்டு நடவடிக்கைகள் வரும் ஆண்டுகளிலும் தொடரும் என்ற நம்பிக்கையுடன் ஜி20 தலைமைத்துவத்தை பிரேசிலிடம் இந்தியா ஒப்படைக்கிறது.

————–

 (Release ID: 1980993)

SMB/PLM/RR