தில்லி தேசிய தலைநகரப் பகுதியில் காற்று மாசு குறித்து இன்று நடைபெற்ற உயர்மட்ட பணிக்குழு கூட்டத்திற்கு பிரதமரின் முதன்மை செயலாளர் டாக்டர் பி.கே.மிஷ்ரா தலைமை வகித்தார். குளிர்காலம் நெருங்குவதால் தில்லியில் காற்றின் தரம் குறித்த பிரச்சினையை சமாளிப்பது மற்றும் பல்வேறு தரப்பினரின் தயார்நிலையை ஆய்வு செய்வதற்காக இந்த கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தொழிற்சாலை மாசு, வாகன மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. உரிய திட்டங்களை செயல்படுத்துவது அவற்றின் கண்காணிப்பு மற்றும் கள அளவில் அதன் அமலாக்கத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமரின் முதன்மை செயலாளர் ஆலோசனை நடத்தினார். காற்றின் தரம் மோசமடைவதைத் தடுக்க சம்பந்தப்பட்ட அனைவரும் உரிய விதிமுறைகளை பின்பற்றுவது முக்கியமானது என்று அவர் கூறினார்.
பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதைக் குறைக்க வேண்டும் என்றும் அதற்கான விதிமுறைகளை மூன்று மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் அதற்கான உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்..
இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் கலந்து கொண்டனர். சுற்றுச்சூழல், வேளாண்மை, மின்சாரம், பெட்ரோலியம், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் ஆகிய அமைச்சகங்களின் செயலாளர்கள், தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள காற்று தர மேலாண்மை ஆணையங்கள், பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தில்லியின் தலைமைச் செயலாளர்கள், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் அந்தந்த மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.
***
(Release Id: 1967479)
ANU/SM/PLM/KPG/KRS