ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் ரூ.7,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி முடிவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மெஹ்சானா – பதிண்டா – குர்தாஸ்பூர் எரிவாயு குழாய், அபு சாலையில் உள்ள எச்பிசிஎல் எல்பிஜி ஆலை, ரயில்வே மற்றும் சாலை திட்டங்கள், நாத்வாராவில் சுற்றுலா வசதிகள் மற்றும் கோட்டாவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிரந்தர வளாகம் ஆகியவை இந்த திட்டங்களில் அடங்கும்.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாளை நினைவுகூர்ந்தார். அக்டோபர் 1 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற தூய்மை இயக்கம் பற்றி எடுத்துரைத்த அவர், அதை ஒரு வெகுஜன இயக்கமாக மாற்றியதற்காக குடிமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
தூய்மை, தற்சார்பு மற்றும் வளர்ச்சியில் போட்டி குறித்த மகாத்மா காந்தியின் கொள்கைகளை எடுத்துரைத்த பிரதமர், கடந்த 9 ஆண்டுகளில் அவர் வகுத்த இந்தக் கொள்கைகளை விரிவுபடுத்துவதற்காக தேசம் பாடுபட்டுள்ளதையும், ரூ .7000 கோடிக்கும் அதிகமான இன்றைய வளர்ச்சித் திட்டங்களில் அதன் பிரதிபலிப்பையும் எடுத்துரைத்தார்.
எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக, முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடு முழுவதும் எரிவாயுக் குழாய்கள் பதிக்கும் இயக்கம் நடந்து வருவதாகப் பிரதமர் கூறினார். மெஹ்சானா – பதிண்டா – குர்தாஸ்பூர் எரிவாயு திட்டத்தின் பாலி-ஹனுமன்கர் பிரிவு இன்று அர்ப்பணிக்கப்பட்டது. இது ராஜஸ்தானில் தொழில் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும். இது சமையலறைகளில் குழாய்மூலம் எரிவாயு வழங்குவதற்கான இயக்கத்திற்கு உத்வேகம் அளிக்கும் என்று அவர் கூறினார்.
இன்றைய ரயில்வே மற்றும் சாலை தொடர்பான திட்டங்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், அவை மேவார் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என்றும், இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் கூறினார். ஐ.டி வளாக வளர்ச்சியின் மூலம், கல்வி மையமாக கோட்டாவின் அடையாளம் வலுப்படுத்தப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
கடந்த காலத்தின் பாரம்பரியம், நிகழ்காலத்தின் வலிமை, எதிர்காலத்தின் சாத்தியக்கூறுகள் ஆகியவற்றைக் கொண்ட மாநிலம் ராஜஸ்தான் என்று பிரதமர் மோடி கூறினார். நாத்வாரா சுற்றுலா மற்றும் கலாச்சார மையத்தைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இது ஜெய்ப்பூரின் கோவிந்த் தேவ் ஜி கோயில், சிகாரின் கட்டு ஷியாம் மந்திர், ராஜ்சமந்தில் உள்ள நாத்வாரா ஆகியவற்றை உள்ளடக்கிய சுற்றுலா வட்டத்தின் ஒரு பகுதியாகும் என்றார். இது ராஜஸ்தானின் பெருமையை உயர்த்துவதோடு, சுற்றுலாத் துறைக்கும் பயனளிக்கும்.
“பகவான் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட சித்தோர்கருக்கு அருகிலுள்ள சவாரியா சேத் கோயில் ஆன்மீகத்தின் மையமாகும்” என்று குறிப்பிட்ட பிரதமர், ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் சவாரியா சேத்தை வணங்க வருகை தருகிறார்கள் என்றார். வணிக உரிமையாளர்கள் சமூகத்தில் அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், சுதேச தரிசனத் திட்டத்தின் கீழ் கோயிலில் நவீன வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன என்று தெரிவித்ததோடு, நீர்-லேசர் காட்சி, சுற்றுலா வசதி மையம், ஆம்பி தியேட்டர், சிற்றுண்டிச்சாலை ஆகியவற்றையும் எடுத்துக்காட்டினார். இந்த முன்னேற்றங்கள் யாத்ரீகர்களுக்குக் கூடுதல் வசதியைத் தரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ராஜஸ்தானின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது என்று கூறிய பிரதமர் ராஜஸ்தானில் அதிவேக நெடுஞ்சாலைகள், ரயில்வே போன்ற நவீன உள்கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட்டார். தில்லி-மும்பை விரைவுச் சாலையாக இருந்தாலும், அமிர்தசரஸ்-ஜாம்நகர் விரைவுச்சாலையாக இருந்தாலும் ராஜஸ்தானின் தளவாடத் துறைக்கு இவை புதிய வலிமையை அளிக்கும் என்றார். சமீபத்தில் கொடியசைத்துத் தொடங்கப்பட்ட உதய்பூர்-ஜெய்ப்பூர் வந்தே பாரத் ரயில் பற்றியும் அவர் குறிப்பிட்டார். பாரத்மாலா திட்டத்தின் மிகப்பெரிய பயனாளிகளில் ராஜஸ்தானும் ஒன்றாகும் என்று அவர் மேலும் கூறினார்.
“வீரம், பெருமை மற்றும் வளர்ச்சியுடன் நாம் முன்னேற வேண்டும் என்பதை ராஜஸ்தான் வரலாறு நமக்குக் கற்பிக்கிறது” என்ற பிரதமர், “இன்றைய இந்தியாவும் அதையே செய்கிறது. அனைவரின் முயற்சியாலும், வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கடந்த காலங்களில் பின்தங்கிய பகுதிகள் மற்றும் வர்க்கங்களின் வளர்ச்சியே இன்று நாட்டின் முன்னுரிமையாகும்” என்றார். கடந்த 5 ஆண்டுகளாக நாட்டில் வெற்றிகரமாக இயங்கி வரும் லட்சிய மாவட்டத் திட்டம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இந்த இயக்கத்தின் கீழ் மேவார் மற்றும் ராஜஸ்தானின் பல மாவட்டங்களும் மேம்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இன்னும் ஒரு படி மேலே சென்று, முன்னேற விருப்பமுள்ள தொகுதிகளை அடையாளம் காண்பதிலும், அவற்றின் விரைவான வளர்ச்சியிலும் மத்திய அரசு இப்போது கவனம் செலுத்துகிறது என்று அவர் தெரிவித்தார். வரும் காலங்களில், ராஜஸ்தானின் பல தொகுதிகளும் இந்த இயக்கத்தின் கீழ் மேம்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
நலிந்த மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், துடிப்பான கிராமத் திட்டத்தையும் மத்திய அரசு தொடங்கியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். “கடைசியாக கருதப்பட்ட எல்லைக் கிராமங்களை, இப்போது முதல் கிராமங்களாகக் கருதி மேம்படுத்தி வருகிறோம். இதன் மூலம் ராஜஸ்தானின் எல்லை கிராமங்கள் பெரிதும் பயனடையும்” என்று திரு மோடி கூறினார்.
பின்னணி
எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான மற்றொரு நடவடிக்கையாக, ரூ.4500 கோடி செலவிலான மெஹ்சானா – பதிண்டா – குர்தாஸ்பூர் எரிவாயுக் குழாய் திட்டம் பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அபு சாலையில் உள்ள ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் எல்பிஜி ஆலையையும் பிரதமர் அர்ப்பணித்தார். இந்த ஆலை ஆண்டுக்கு 86 லட்சம் சிலிண்டர்களில் எரிவாயுவை அடைத்து விநியோகிக்கும்.
1480 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் கட்டப்பட்டுள்ள தாரா-ஜாலாவர்-தீந்தர் பிரிவில் தேசிய நெடுஞ்சாலை -12 (புதிய என்.எச் -52) -ல் 4 வழிச்சாலையை பிரதமர் அர்ப்பணித்தார். இந்த திட்டம் கோட்டா மற்றும் ஜலாவர் மாவட்டங்களில் இருந்து சுரங்கங்களின் விளைபொருட்களை கொண்டு செல்வதை எளிதாக்க உதவும்.
பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களில், சித்தோர்கர் – நீமுச் ரயில் பாதை மற்றும் கோட்டா – சித்தோர்கர் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையை இரட்டிப்பாக்குவது தொடர்பான திட்டங்களும் அடங்கும். ரூ.650 கோடிக்கும் அதிகமான செலவில் இந்த திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன,
சுதேச தரிசனத் திட்டத்தின் கீழ் நாத் த்வாராவில் உருவாக்கப்பட்ட சுற்றுலா வசதிகளை பிரதமர் அர்ப்பணித்தார். மேலும், கோட்டாவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிரந்தர வளாகத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
***
ANU/AD/SMB/DL
Projects being launched from Chittorgarh will have a transformative impact on infrastructure, connectivity and education in Rajasthan and further 'Ease of Living.' https://t.co/jKmDRgwuwA
— Narendra Modi (@narendramodi) October 2, 2023