பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ‘சங்கல்ப் சப்தாஹ்‘ என்ற பெயரில் நாட்டில் உள்ள ஆர்வமுள்ள வட்டாரங்களுக்கான ஒரு வார கால தனித்துவமான திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். மேலும், ஆர்முள்ள வட்டாரங்கள் திட்ட இணையதளத்தை திறந்து வைத்த அவர், கண்காட்சியையும் திறந்து வைத்தார். அத்துடன் வட்டார அளவிலான 3 அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
உத்தரப்பிரதேசத்தின் பரேலியில் உள்ள பஹேரியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை திருமதி ரஞ்சனா அகர்வாலுடன் உரையாடிய பிரதமர், தமது வட்டாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிந்தனை முகாம் மூலமான மிகவும் பயனுள்ள தகவல்கள் குறித்து கேட்டார். திருமதி ரஞ்சனா அகர்வால், வட்டாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சித் திட்டத்தைக் குறிப்பிட்டார். மேலும் அரசாங்கத் திட்டங்களை ஒரு பொது மக்கள் இயக்கமாக மாற்ற அனைத்து தரப்பினரும் ஒரே தளத்தில் இணைவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். பள்ளிகளின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் மாற்றங்கள் குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார். பாரம்பரிய கற்பித்தல் முறைகளுக்குப் பதிலாக செயல்பாட்டு அடிப்படையிலான கற்றலைத் தேர்ந்தெடுப்பதைக் குறிப்பிட்ட திருமதி அகர்வால், பால சபாக்கள், இசை பாடங்கள், விளையாட்டு மற்றும் உடல் பயிற்சி போன்றவற்றை ஏற்பாடு செய்வது தொடர்பான நடவடிக்கைகளை எடுத்துக்காட்டுகளாக வழங்கினார். ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்தும் அவர் குறிப்பிட்டார். தமது மாவட்டத்தில் உள்ள 2,500 பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் இருப்பது குறித்து அவர் தெரிவித்தார். வளர்ந்த இந்தியாவின் முதன்மை அம்சங்களில் ஒன்று குழந்தைகளின் தரமானக் கல்வி என பிரதமர் கூறினார். ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாட்டைக் கண்டு தாம் மகிழ்ச்சியடைவதாக பிரதமர் கூறினார். இதுதான் அர்ப்பணிப்பின் மூலம் சாதித்தல் என்ற வழி என்று அவர் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச், மன்கோட்டைச் சேர்ந்த கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சஜித் அகமது, புலம்பெயர்ந்த பழங்குடி கால்நடை வளர்ப்பின் சிக்கல்கள் மற்றும் இடப்பெயர்வின் போது ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் சேதங்களைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விளக்கினார். பிரதமரிடம் தமது தனிப்பட்ட அனுபவங்களை கூறினார். வகுப்பறை அறிவுக்கும் கள அனுபவத்திற்கும் உள்ள வித்தியாசம் குறித்து பிரதமர் கேட்டறிந்தார். வகுப்பறையில் கூறப்படாத உள்ளூர் இனங்களைப் பற்றி மருத்துவர் கூறினார். அப்போது கோமாரி நோய்க்கான தடுப்பூசி இயக்கம் குறித்து பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும் இப்பகுதியில் தடுப்பூசி பெருமளவில் எடுத்துக் கொள்ளப்படுவது குறித்து அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இப்பகுதியின் குர்ஜார் மக்களுடன் தமக்கு இருந்த நெருக்கத்தை பிரதமர் விவரித்தார். ஏனெனில் அவர்கள் எப்போதும் கட்ச் பகுதி மக்களை நினைவூட்டும் வகையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேகாலயாவின் என்.ஜி.எச் (காரோ பிராந்தியம்) ரேசுபெல்பாராவைச் சேர்ந்த இளநிலை ஊரக வளர்ச்சி அதிகாரி திரு. மைக்கென்சார்ட் சி.எச் மோமினுடன் உரையாடிய பிரதமர், அப்பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக எதிர்கொள்ளும் சிரமங்களுக்கான தீர்வுகள் குறித்து கேட்டறிந்தார். அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைப்பதற்கான பூர்வாங்க உத்தரவுகளை வெளியிடுவதாகவும், முன்னேற்றத்தைக் கண்காணிக்க ஒரு குழுவை உருவாக்குவதாகவும் திரு மோமின் குறிப்பிட்டார். பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தில் பிராந்திய வடிவமைப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் உற்பத்தியின் தரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த பிரதமரின் கேள்விக்கு, திரு மோமின் பதிலளித்தார். இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் முந்திரி உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து பிரதமர் கேட்டபோது, இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் முந்திரி, நாட்டில் உயர்தரமானது என்று கூறிய திரு மோமின், அதன் உற்பத்தியை ஊக்குவிக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் சுய உதவிக் குழுவினர் பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டார். இப்பகுதியில் மேலும் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும் என்றும் திரு மோமின் பிரதமரை வலியுறுத்தினார். இப்பகுதியில் இசையின் பிரபலம் குறித்தும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். ஆர்வமுள்ள வட்டார மற்றும் மாவட்டத் திட்டத்தில் கிராமப் பஞ்சாயத்தின் முக்கியப் பங்கை பிரதமர் சுட்டிக் காட்டினார்.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், பாரத் மண்டபத்திலும் தொலைதூரப் பகுதிகளில் வளர்ச்சியில் அக்கறை கொண்ட மக்கள் உள்ளதாகக் குறிப்பிட்டார். ஒரு மாதத்திற்கு முன்பு உலக விவகாரங்களைத் தீர்மானிக்க கூடிய ஜி 20 உச்சிமாநாடு நடைபெற்ற இடத்தில் இதுபோன்ற கூட்டம் நடைபெறுவது அரசின் வளர்ச்சியை நோக்கிய சிந்தனையின் அறிகுறியாகும் என்று அவர் கூறினார். அடிமட்டத்தில் மாற்றத்தை உருவாக்குபவர்களை பிரதமர் பாராட்டினார். தம்மைப் பொறுத்தவரை, இந்த கூட்டம் ஜி 20 க்கு சற்றும் சளைத்ததல்ல என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சி இந்திய மக்களின் கூட்டு மனப்பான்மைக்கான வெற்றி என்றும் அனைவரின் முயற்சி என்ற உணர்வின் அடையாளமாகும் என்றும் அவர் கூறினார். இந்த திட்டம் இந்தியாவின் எதிர்காலத்திற்கு முக்கியமானது எனவும் அர்ப்பணிப்பின் மூலம் வெற்றியடைதல் என்ற தத்துவம் இதில் உள்ளார்ந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
சுதந்திர இந்தியாவின் சிறந்த 10 திட்டங்களின் பட்டியலில், ஆர்வமுள்ள மாவட்டத் திட்டம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்று பிரதமர் கூறினார். 112 மாவட்டங்களில் உள்ள சுமார் 25 கோடி மக்களின் வாழ்க்கையை முன்னேற விரும்பும் லட்சிய மாவட்டத் திட்டம் மாற்றியுள்ளது என்றார் அவர். இந்த திட்டத்தின் வெற்றி, ஆர்முள்ள வட்டாரத் திட்டத்தின் அடிப்படையாக அமைந்தது என்று கூறிய அவர், இந்த திட்டத்திற்குக் கிடைத்த உலகளாவிய பாராட்டுகளைக் குறிப்பிட்டார். இத்திட்டம் முன்னெப்போதும் இல்லாத வகையில் இருப்பதாலும், அதில் செயலாற்றும் மக்கள் மகத்தானவர்கள் என்பதாலும் இத்திட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று பிரதமர் கூறினார்.
சிறிது நேரத்திற்கு முன்பு 3 வட்டார அளவிலான அதிகாரிகளுடன் உரையாடியதைக் குறிப்பிட்ட பிரதமர், அடிமட்டத்தில் பணியாற்றுபவர்களின் மன உறுதியைப் பார்த்த பிறகு தமது தன்னம்பிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது என்று எடுத்துரைத்தார். தங்கள் குழுவில் ஒரு உறுப்பினராக கள அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகக் கூறிய திரு நரேந்திர மோடி, திட்டத்தின் குறிக்கோள்கள் குறித்த காலத்திற்கு முன்பே அடையப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அவர்களின் திறமைகளை சோதிப்பதாக அல்லாமல் அடிமட்டத்தில் கிடைக்கும் வெற்றிகள் அவர்களுக்கு அயராது உழைக்க அதிக ஆற்றலையும் உற்சாகத்தையும் கொடுப்பதால் இந்த திட்டம் தன்னால் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். முன்னேற விரும்பும் லட்சிய மாவட்டத் திட்டத்தின் முன்னேற்றத் தகவல்கள் தமக்கு ஒரு உத்வேகமாக மாறியது என்று அவர் மேலும் கூறினார்.
முன்னேற விரும்பும் லட்சிய மாவட்டத் திட்டம் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதைக் குறிப்பிட்ட பிரதமர், இத்திட்டத்தின் மூன்றாம் தரப்பு மதிப்பீடு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். திட்டத்தின் எளிய உத்தியைக் குறிப்பிட்ட பிரதமர், நிர்வாகத்தின் சவாலான பணிகளைச் சந்திப்பதற்கான படிப்பினைகள் இவை என்று கூறினார். முழுமையான வளர்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், நாட்டின் அனைத்துப் பகுதிகளும் கவனிக்கப்பட வேண்டும் என்றார். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது இல்லாவிட்டால் எண்களின் மூலமாக மட்டுமே வளர்ச்சியைக் காட்ட முடியும் என்று அவர் கூறினார். அதில் அடிப்படை வளர்ச்சி நடைபெறாது என்றும் அதனால் ஒவ்வொரு அடிமட்ட அம்சத்தையும் உள்ளடக்கிய வகையில் நாம் பயணிக்க வேண்டியது முக்கியம் என்றும் பிரதமர் கூறினார்.
ஒவ்வொரு மாநிலத்தின் விரைவான வளர்ச்சியையும் அங்குள்ள பின்தங்கிய மாவட்டங்களையும் கணக்கில் கொண்டு இரண்டு புதிய கோணங்களில் பணியாற்றுமாறு இந்த நிகழ்வில் கலந்து கொண்ட துறைகளின் செயலாளர்களை பிரதமர் கேட்டுக்கொண்டார். நாட்டில் அந்தந்த துறைகளில் பின்தங்கியுள்ள 100 வட்டாரங்களை கண்டறிந்து நிலைமையை மேம்படுத்த பாடுபடுமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார். அடையாளம் காணப்பட்ட 100 வட்டாரங்கள் நாட்டின் சராசரியை விட அதிகமான வளர்ச்சியை எட்டும்போது அனைத்து அளவுருக்களும் மாறும் என்று அவர் கூறினார். மத்திய அரசின் அனைத்து துறைகளும் மேம்பாட்டிற்கு இடமளிக்கும் வட்டாரங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். மாநில அரசுகளின் பங்கை எடுத்துரைத்த பிரதமர், மிகவும் பின்தங்கிய 100 கிராமங்களை அடையாளம் கண்டு அவற்றை மேம்படுத்துவதற்கான மாதிரியை உருவாக்குமாறு பரிந்துரைத்தார்.
2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கைக் குறிப்பிட்ட பிரதமர், நகரங்கள் வளர்ச்சி அடைந்தவை என்றும் கிராமங்கள் பின்தங்கிய என்றும் அர்த்தமல்ல என்றார். அரசு 140 கோடி மக்களுடன் இணைந்து செல்ல விரும்புவதாக அவர் கூறினார். ஆர்வமுள்ள மாவட்டங்கள் திட்டத்தின் போது மாவட்டங்களுக்கு இடையிலான ஆரோக்கியமான போட்டியைக் குறிப்பிட்ட அவர், குஜராத்தின் கட்ச் மாவட்டத்தை எடுத்துக்காட்டாகக் கூறினார். இது ஒரு காலத்தில் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்குவதற்கான பணி மாற்ற இடமாகக் கருதப்பட்டது என்று அவர் கூறினார். ஆனால் பூகம்பத்திற்குப் பிறகு அங்கு பணியமர்த்தப்பட்ட அதிகாரிகளின் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியால் இப்போது மிகவும் மரியாதைக்குரிய இடமாக அது மாறியுள்ளது என அவர் கூறினார். நாட்டின் ஆர்வமுள்ள மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றப் பணிகளுக்காக இளம் அதிகாரிகளை அவர் பாராட்டினார். முன்னேற விரும்பும் ஆர்முள்ள வட்டாரங்கள் திட்டத்திற்காக, வட்டார அளவில் சிறப்பாக செயல்படுபவர்களை ஊக்குவித்து அதன் மூலம் இளம் அதிகாரிகளை மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.
அரசின் வரவுசெலவுத் திட்டத்தைப் பொறுத்தவரை உற்பத்தி நோக்குநிலையில் இருந்து விளைவுக்கு மாறுவது குறித்தும் பிரதமர் பேசினார். இது ஒரு தரமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது என்று அவர் கூறினார். தமது பரந்த நிர்வாக அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு பேசிய பிரதமர், பட்ஜெட் மட்டுமே மாற்றத்திற்கான காரணி அல்ல என்று கூறினார். வளர்ச்சிக்கு வளங்களை உகந்த முறையில் பயன்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைத்தல் ஆகியவை முக்கியம் என்று அவர் எடுத்துரைத்தார். திட்டங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் உரிய முறையில் செயல்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
சிறப்பான செயல்பாட்டு அம்சங்கள் குறித்தும் பிரதமர் பேசினார். வளங்களை மிகுதியாகப் பயன்படுத்துவது அவற்றை வீணாவதற்கு வழிவகுக்கிறது என்று அவர் கூறினார். அதே நேரத்தில் அதை தேவைப்படும் பகுதிகளுக்கு வழங்கினால், பயன்பாடு மிகவும் சிறந்தததாக மாறும் என அவர் தெரிவித்தார். தேவைப்படும் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி வளங்கள் சமமாக விநியோகிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
அரசாங்கத்தை நம்பும் மனநிலையிலிருந்து வெளியே வர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர் மோடி, மகத்தானப் பணிகளை நிறைவேற்றுவதில் சமூகத்தின் வலிமையை எடுத்துரைத்தார். மக்கள் பங்களிப்பின் அவசியம் குறித்து பேசிய பிரதமர், ஒவ்வொரு துறைக்கும் ஒரு தலைமை தேவை என்பதை சுட்டிக் காட்டினார். ‘சங்கல்ப் சப்தா‘ திட்டத்தில் குழு மனப்பான்மையின் அம்சம் புகுத்தப்படுவதை அவர் எடுத்துரைத்தார். இது தலைவர்களின் தோற்றத்திற்கும் மக்கள் பங்களிப்பின் மூலமான புதிய யோசனைகளுக்கும் வழிவகுக்கும் என அவர் தெரிவித்தார். இயற்கைப் பேரிடரின்போது சமூகம் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருப்பதை அவர் எடுத்துக்காட்டினார். மக்களின் பங்கேற்பு உணர்வைத் தூண்டுவதற்காக வட்டார அளவில் கூட்டாகச் செயல்படுவது குறித்தும் அவர் எடுத்துரைத்தார். ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்குவது தொடர்பான விழாக்கள் நடத்தப்படுவது போன்றவற்றை அவர் எடுத்துக்காட்டுகளாகக் கூறினார். பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் மக்களின் பங்கேற்பு மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
அதேபோன்று, அரசாங்கத்தின் ராஜதந்திர முயற்சிகளுக்கு மக்களின் செயல்பாடுகள் ஆதரவாக உள்ளது எனவும் சமூக பங்கேற்பு சக்தி வாய்ந்தது என்றும் பிரதமர் விளக்கினார். சங்கல்ப் சப்தாவை அதிகபட்சம் பயன்படுத்திக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்டவர்களைப் பிரதமர் கேட்டுக் கொண்டார். வளங்களைத் திரட்டி, அதிகபட்ச தாக்கத்திற்கான முயற்சிகளில் கவனம் செலுத்துமாறு அவர் கூறினார். இதன் மூலம் சிக்கல்கள் நீங்கி, அரசின் சிறந்த அணுகுமுறை முழுவதையும் புகுத்த முடியும் என அவர் தெரிவித்தார். தகவல் பரிமாற்றத்தில் தொழில்நுட்பத்தின் பங்கை எடுத்துரைத்த பிரதமர், சில இடங்களில் நேரடியாக நாம் பங்கேற்பது சிறப்பானது என்று கூறினார். ‘சங்கல்ப் சப்தா‘வின் போது சக ஊழியர்களுடன் ஒரு வாரம் செயல்படுவது குழு உணர்வை மேம்படுத்தும் என்று அவர் கூறினார்.
இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், 5 அளவுகோல்களில் கவனம் செலுத்தி நல்ல விளைவுகளைப் பெற வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். இது அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார். பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வு காண்பதன் மூலம், அந்த வட்டாரம் மற்றவர்களின் எதிர்பார்ப்புக்கான ஆதாரமாக மாறும் என்று அவர் கூறினார். முன்னேற விரும்பும் ஆர்முள்ள மாவட்டங்களாக இருந்த 112 மாவட்டங்கள் இப்போது ஊக்கமளிக்கும் மாவட்டங்களாக மாறியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். ஒரு வருடத்திற்குள் குறைந்தது 100 ஆர்வமுள்ள வட்டாரங்கள் ஊக்கமளிக்கும் வட்டாரங்களாக மாறும் என்று நம்புவதாகக் கூறி தமது உரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் சுமன் பேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னணி
‘சங்கல்ப் சப்தாஹ்‘ என்பது முன்னேற விரும்பும் ஆர்வமுள்ள வட்டாரங்கள் திட்டத்தை (ஏபிபி) திறம்பட செயல்படுத்துவதோடு இணைந்த ஒரு நடவடிக்கையாகும். 2023 ஜனவரி 7 அன்று நாடு தழுவிய இந்தத் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக வட்டார அளவில் நிர்வாகத்தை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் 329 மாவட்டங்களில் உள்ள 500 ஆர்முள்ள வட்டாரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முன்னேற விரும்பும் ஆர்வமுள்ள வட்டாரத் திட்டத்தைச் செயல்படுத்தவும், பயனுள்ள வட்டார மேம்பாட்டு உத்தியைத் தயாரிக்கவும் நாடு முழுவதும் கிராமம் மற்றும் வட்டார அளவில் சிந்தனை முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. ‘சங்கல்ப் சப்தாஹ்‘ என்பது இந்த சிந்தனை முகாம்களின் உச்ச செயல்பாடு ஆகும்.
500 வட்டாரங்களிலும் ‘சங்கல்ப் சப்தாஹ்‘ செயல்படுத்தப்படும். 2023 அக்டோபர் 3 முதல் 9 அக்டோபர் 2023 வரை ‘சங்கல்ப் சப்தாஹ்‘வில் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி கருப்பொருளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. முதல் ஆறு நாட்களுக்கான கருப்பொருள்களில் முழு ஆரோக்கியம், ஊட்டச்சத்து, தூய்மை, விவசாயம், கல்வி, மற்றும் வளம் ஆகியவை அடங்கும். வாரத்தின் கடைசி நாளான 2023 அக்டோபர் 9 அன்று, உறுதி மொழி எடுத்தல் – ஒருங்கிணைத்தல் விழா என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெறும். இதில் வாரம் முழுவதும் பணிகளின் கொண்டாட்டமாக இது அமையும்.
பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 3,000 பஞ்சாயத்து மற்றும் வட்டார அளவிலான மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும், வட்டார, ஊராட்சி அளவிலான அலுவலர்கள், விவசாயிகள், பிற துறைகளைச் சேர்ந்தவர்கள் என, இரண்டு லட்சம் பேர் காணொலி மூலம் இணைந்தனர்.
***
ANU/AP/PLM/DL
Aspirational Blocks Programme strives to enhance citizens' quality of life at the block level. Addressing the #SankalpSaptah. https://t.co/fpBLp3c4tY
— Narendra Modi (@narendramodi) September 30, 2023
मुझे पूरा विश्वास है कि टीम वर्क की ताकत से Aspirational District Programme की तरह ही Aspirational Block Programme भी कामयाबी का परचम लहराने वाला है। pic.twitter.com/pID6OTkdcI
— Narendra Modi (@narendramodi) September 30, 2023
आकांक्षी जिला कार्यक्रम से यह बात सिद्ध हो गई है कि अगर हम गुड गवर्नेंस की बेसिक चीजों पर फोकस करें तो कोई भी चुनौतीपूर्ण लक्ष्य आसानी से हासिल कर सकते हैं। pic.twitter.com/Mu4oqGpmwH
— Narendra Modi (@narendramodi) September 30, 2023
आकांक्षी जिलों को विकास की मुख्यधारा से जोड़ने में युवा अफसरों के जोश और जज्बे की महत्वपूर्ण भूमिका रही है। ब्लॉक स्तर पर भी बेहतरीन परिणाम के लिए ये जरूरी है। pic.twitter.com/NWbcmMbxCK
— Narendra Modi (@narendramodi) September 30, 2023
2014 के बाद हमने सरकार के बजट के साथ आउटकम रिपोर्ट भी देनी शुरू की, जिससे देश में बहुत सारे Qualitative Changes आए हैं। ब्लॉक स्तर पर भी यह तरीका बहुत फायदेमंद हो सकता है। pic.twitter.com/xo2gJyqjHZ
— Narendra Modi (@narendramodi) September 30, 2023
बीते नौ वर्षों में हमने देखा है कि समस्याओं के समाधान में जनभागीदारी ने कितनी बड़ी भूमिका निभाई है। pic.twitter.com/Yl1Otz9y8a
— Narendra Modi (@narendramodi) September 30, 2023