உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு டி.ஒய்.சந்திரசூட் அவர்களே, மத்திய சட்ட அமைச்சரும் எனது சகாவுமான திரு அர்ஜூன் ராம் மேக்வால் அவர்களே, இங்கிலாந்து சான்சலர் திரு. அலெக்ஸ் சாக் அவர்களே, அட்டர்னி ஜெனரல், சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் அனைத்து மதிப்பிற்குரிய நீதிபதிகள், பார் கவுன்சிலின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள், மாநிலங்களின் பிரதிநிதிகள் மற்றும் மதிப்பிற்குரிய பெண்கள் மற்றும் பெருமக்களே!
உலகெங்கிலும் உள்ள சட்டத்துறையைச் சேர்ந்த புகழ்பெற்ற சகோதரர்களைச் சந்திப்பதும், அவர்கள் முன்னிலையில் இருக்கும் வாய்ப்பைப் பெறுவதும் எனக்கு ஒரு மகிழ்ச்சியான அனுபவம். பாரதத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்கள் இன்று இங்கு கூடியுள்ளனர். இந்த மாநாட்டிற்கு இங்கிலாந்து லார்ட் சான்சலரும், இங்கிலாந்து பார் அசோசியேஷன் பிரதிநிதிகளும் நம்மிடையே உள்ளனர். காமன்வெல்த் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். ஒருவகையில் இந்த சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு பாரதத்தின் ‘வசுதைவ குடும்பகம்‘ (உலகம் ஒரே குடும்பம்) என்ற உணர்வின் அடையாளமாக மாறியுள்ளது. பாரதத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்துள்ள அனைத்து சர்வதேச விருந்தினர்களையும் அன்புடன் வரவேற்கிறேன். இந்த நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பை முழு மனதுடன் நிறைவேற்றி வரும் இந்திய பார் கவுன்சிலுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
எந்தவொரு நாடாக இருந்தாலும், அதன் வளர்ச்சியில் சட்டத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில், பல ஆண்டுகளாக, நீதித்துறையும், பார் அமைப்பும் நாட்டின் சட்ட அமைப்பின் பாதுகாவலர்களாக இருந்து வருகின்றன. நான் இன்று நமது வெளிநாட்டு விருந்தினர்களுக்கு ஒரு சிறப்பைத் தெரிவிக்க விரும்புகிறேன். அண்மையில், இந்தியா தனது 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடியது, மேலும் இந்தச் சுதந்திர போராட்டத்தில் சட்ட வல்லுநர்கள் முக்கிய பங்கு வகித்தனர். சுதந்திரப் போராட்டத்தில், பல வழக்கறிஞர்கள் தங்கள் தொழிலை விட்டுவிட்டு தேசிய இயக்கத்தில் இணைந்தனர். நமது மதிப்பிற்குரிய தேசப்பிதா மகாத்மா காந்தி, நமது அரசியலமைப்பின் தலைமை சிற்பி பாபாசாகேப் அம்பேத்கர், நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு, நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் மற்றும் சுதந்திரத்தின் போது பல பெரிய ஆளுமைகள் லோக்மான்ய திலகராக இருந்தாலும் சரி, வீர் சாவர்க்கராக இருந்தாலும் சரி, வழக்கறிஞர்களாக இருந்தனர். அதாவது சட்ட வல்லுநர்களின் அனுபவம் சுதந்திர இந்தியாவின் அடித்தளத்தை வலுப்படுத்தியது. இன்று, பாரதத்தின் மீதான உலகின் நம்பிக்கை தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், பாரதத்தின் பாரபட்சமற்ற மற்றும் சுதந்திரமான நீதித்துறை அமைப்பும் அந்த நம்பிக்கையில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.
பாரதம் பல வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளைக் கண்டுள்ள நிலையில், இன்று இந்த மாநாடு நடைபெறுகிறது. மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் (மாநில சட்டமன்றங்கள்) பெண்களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்கும் சட்டத்தை ஒரு நாள் முன்பு நாட்டின் நாடாளுமன்றம் நிறைவேற்றியது. நாரி சக்தி வந்தன் அதினியம் ஒரு புதிய திசையை வகுக்கும். பாரதத்தில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு புதிய ஆற்றலைக் கொண்டுவரும்.
சில நாட்களுக்கு முன்பு, வரலாற்று சிறப்புமிக்க ஜி 20 உச்சிமாநாட்டின் போது நமது ஜனநாயகம், மக்கள்தொகை மற்றும் நமது ராஜதந்திரத்தின் காட்சிகளை உலகம் கண்டது. ஒரு மாதத்திற்கு முன்பு, இதே நாளில், சந்திரனின் தென் துருவத்தை அடைந்த உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இந்த சாதனைகளால் நம்பிக்கை அடைந்துள்ள பாரதம், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடு என்ற இலக்கை நோக்கி விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருகிறது. இந்த இலக்கை அடைய, இந்தியாவுக்கு ஒரு வலுவான, பக்கச்சார்பற்ற மற்றும் சுதந்திரமான நீதி அமைப்பு அதன் அடித்தளமாக தேவை என்பதில் சந்தேகமில்லை. சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு இந்த திசையில் இந்தியாவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த மாநாட்டின் போது அனைத்து நாடுகளும் ஒருவருக்கொருவர் சிறந்த நடைமுறைகளிலிருந்து கற்றுக்கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
21 ஆம் நூற்றாண்டில், நாம் ஆழமாக இணைக்கப்பட்ட உலகில் வாழ்கிறோம். ஒவ்வொரு சட்ட மன்றமும் அல்லது நிறுவனமும் அதன் அதிகார வரம்பு குறித்து மிகவும் விழிப்புடன் உள்ளன. இருப்பினும், எல்லைகள் அல்லது அதிகார வரம்புகளைப் பற்றி கவலைப்படாத பல சக்திகளுக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். அச்சுறுத்தல்கள் உலகளாவியதாக இருக்கும்போது, அவற்றைக் கையாள்வதற்கான அணுகுமுறையும் உலகளாவியதாக இருக்க வேண்டும். சைபர் பயங்கரவாதம், பணமோசடி, செயற்கை நுண்ணறிவு அல்லது அதனைத் தவறாகப் பயன்படுத்துதல் என எதுவாக இருந்தாலும், ஒத்துழைப்புக்கு உலகளாவிய கட்டமைப்பு தேவைப்படும் பல சிக்கல்கள் உள்ளன. இது எந்த ஒரு அரசுக்கோ அல்லது நிர்வாகத்துக்கோ மட்டுமல்ல. இந்த சவால்களை எதிர்கொள்ள, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டுக்கு நாம் ஒத்துழைப்பது போல, பல்வேறு நாடுகளின் சட்ட கட்டமைப்புகள் ஒன்றிணைய வேண்டும். ‘உன் சட்டங்கள் உன்னுடையவை, என் சட்டங்கள் என்னுடையவை, எனக்குக் கவலையில்லை‘ என்று எவரும் சொல்வதில்லை. அப்படியானால் எந்த விமானமும் எங்கும் தரையிறங்காது. எல்லோரும் பொதுவான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள், நெறிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். இதேபோல், பல்வேறு களங்களில் உலகளாவிய கட்டமைப்பை நாம் நிறுவ வேண்டும். சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு சந்தேகத்திற்கு இடமின்றி இந்த திசையை ஆராய்ந்து, உலகிற்கு ஒரு புதிய திசையை வழங்க வேண்டும்.
நண்பர்களே,
துஷார் அவர்கள் விளக்கியுள்ளபடி, இந்த மாநாட்டில் ஒரு முக்கியமான விவாதப் பொருள் மாற்று தகராறு தீர்வு (ஏ.டி.ஆர்) ஆகும் . அதிகரித்து வரும் வணிக பரிவர்த்தனைகளுடன், ஏ.டி.ஆர் உலகளவில் வேகமெடுத்து வருகிறது. இந்த மாநாடு இந்த விஷயத்தை விரிவாக உள்ளடக்கும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதத்தில், பஞ்சாயத்துகள் மூலம் தகராறுகளைத் தீர்க்கும் பாரம்பரியம் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது; அது நம் கலாச்சாரத்தில் வேரூன்றியுள்ளது. இந்த முறைசாரா நடைமுறையை முறைப்படுத்த எங்கள் அரசு மத்தியஸ்த சட்டத்தை இயற்றியுள்ளது. கூடுதலாக, இந்தியாவில் லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றங்கள்) அமைப்பு சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க வழிமுறையாகும். குஜராத்தில் நான் முதலமைச்சராக இருந்தபோது, நீதி கிடைக்கும் வரை ஒரு சராசரி வழக்கைத் தீர்ப்பதற்கு 35 பைசா மட்டுமே செலவானது என்பதை நான் நினைவில் கொள்கிறேன். இந்த முறை நம் நாட்டில் நடைமுறையில் உள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் லோக் அதாலத்தில் சுமார் 7 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
நண்பர்களே,
நீதி வழங்கலின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம், பெரும்பாலும் போதுமான அளவு விவாதிக்கப்படவில்லை, மொழி மற்றும் சட்டத்தின் எளிமை. இப்போது, சட்டத்தை இரண்டு வழிகளில் முன்வைக்கவும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம்: ஒன்று நீங்கள் அனைவரும் அறிந்த மொழியில், மற்றொன்று நம் நாட்டைச் சேர்ந்த ஒரு சாதாரண நபர் புரிந்து கொள்ளக்கூடிய மொழியில். ஒரு சாதாரண மனிதனும் சட்டத்தைத் தன் சொந்தமாகக் கருத வேண்டும். நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம், நானும் இந்த மாற்றத்தைக் கொண்டு வர முயற்சிக்கிறேன். இந்த அமைப்பு ஒரே கட்டமைப்பில் வேரூன்றியிருந்தாலும், அதை சீர்திருத்த சிறிது நேரம் ஆகலாம். ஆனால், எனக்கு நேரம் இருக்கிறது, நான் தொடர்ந்து வேலை செய்வேன். சட்டங்கள் எழுதப்படும் மொழியும், நீதிமன்ற நடவடிக்கைகள் நடைபெறும் மொழியும் நீதியை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடந்த காலங்களில், எந்தவொரு சட்டத்தையும் உருவாக்குவது மிகவும் சிக்கலானதாக இருந்தது. இருப்பினும், ஒரு அரசாங்கம் என்ற முறையில், நான் முன்பே கூறியது போல, அதை முடிந்தவரை எளிமைப்படுத்தவும், எங்களால் முடிந்தவரை நாட்டின் பல மொழிகளில் கிடைக்கவும் நாங்கள் முயற்சிக்கிறோம். அந்த திசையில் நாங்கள் நேர்மையாக பணியாற்றி வருகிறோம்.
நீங்கள் தரவு பாதுகாப்பு சட்டத்தைப் பார்த்திருக்க வேண்டும். அதை எளிமையாக்கும் செயல்முறையையும் நாங்கள் தொடங்கியுள்ளோம், அந்த வரையறைகளுடன் சாமானிய மக்களுக்கு இது வசதியாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இதை நாட்டின் நீதித்துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் என்று நான் நம்புகிறேன். நீதிபதி சந்திரசூட் அவர்களை நான் ஒரு முறை பகிரங்கமாகப் பாராட்டினேன், ஏனென்றால் இனிமேல், நீதிமன்றத் தீர்ப்பின் செயல்பாட்டு பகுதி மனுதாரரின் மொழியில் கிடைக்கும் என்று அவர் கூறினார். பாருங்கள், இந்த சிறிய நடவடிக்கைக்கு கூட 75 ஆண்டுகள் ஆனது, நானும் அதில் தலையிட வேண்டியிருந்தது. இந்திய உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்புகளை பல உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்த்ததற்காக நான் பாராட்ட விரும்புகிறேன். இது நாட்டின் சாமானிய மக்களுக்கு பெரிதும் உதவும். ஒரு மருத்துவர் தனது நோயாளியிடம் அவரது மொழியில் பேசினால் பாதி நோய் குணமாகும். இங்கும், இதேபோன்ற முன்னேற்றம் உள்ளது.
நண்பர்களே,
தொழில்நுட்பம், சீர்திருத்தங்கள் மற்றும் புதிய நீதித்துறை நடைமுறைகள் மூலம் சட்ட நடைமுறைகளை மேம்படுத்த நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நீதித்துறைக்கு குறிப்பிடத்தக்க வழிகளை உருவாக்கியுள்ளன. உண்மையில், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நமது வர்த்தகம், முதலீடு மற்றும் வர்த்தகத் துறைகளுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்துள்ளன. எனவே, சட்டத் தொழிலுடன் தொடர்புடைய நபர்களும் இந்த தொழில்நுட்ப சீர்திருத்தங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். உலகளாவிய சட்ட அமைப்புகளின் நம்பிக்கையை அதிகரிப்பதில் சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு முக்கிய பங்கு வகிக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த வெற்றிகரமான திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் நன்றி.
பொறுப்பு துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. இந்தியில் மூல உரை நிகழ்த்தப்பட்டது.
***
ANU/SM/PKV/DL
(Release ID: 1959849)
Addressing the International Lawyers' Conference 2023. https://t.co/2QfSQodarD
— Narendra Modi (@narendramodi) September 23, 2023
भारत में वर्षों से Judiciary और Bar भारत की न्याय व्यवस्था के संरक्षक रहे हैं। pic.twitter.com/FfNi0nd221
— PMO India (@PMOIndia) September 23, 2023
Legal Professionals के अनुभव ने आजाद भारत की नींव को मजबूत करने का काम किया। pic.twitter.com/uKILNrw8vG
— PMO India (@PMOIndia) September 23, 2023
नारीशक्ति वंदन कानून भारत में Women Led Development को नई दिशा देगा, नई ऊर्जा देगा। pic.twitter.com/fQVBL1XMnI
— PMO India (@PMOIndia) September 23, 2023
जब खतरे ग्लोबल हैं, तो उनसे निपटने का तरीका भी ग्लोबल होना चाहिए। pic.twitter.com/iWQiEREtPN
— PMO India (@PMOIndia) September 23, 2023