எனதருமை நாட்டுமக்களே வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களனைவரையும் வரவேற்கிறேன். பொதுவாக மனதின் குரல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் தான் இடம் பெறும், ஆனால், இந்த முறை ஒரு வாரம் முன்னதாகவே நடைபெறுகிறது. அடுத்த வாரம் நான் அமெரிக்காவில் இருப்பேன், அங்கே ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் பணி இருக்கும் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள்; இதைக் கருத்தில் கொண்டு, அங்கே செல்லும் முன்பாகவே ஏன் உங்களிடத்திலே உரையாடக் கூடாது, இதை விடச் சிறப்பாக வேறு என்ன இருக்க முடியும் என்று நான் கருதினேன். மக்களின் நல்லாசிகள், நீங்கள் அளிக்கும் உத்வேகம் ஆகியன என்னுடைய சக்தியை மேலும் அதிகரிக்கின்றன.
நண்பர்களே, பிரதமர் என்ற முறையிலே நான் இந்த நல்ல பணியைச் செய்திருக்கிறேன், அந்த பெரிய வேலையை முடித்திருக்கிறேன் என்று பலர் என்னிடத்திலே கூறுகிறார்கள். மனதின் குரலிலேயே கூட எத்தனையோ நேயர்கள், தங்களுடைய கடிதங்களில் பலவாறாகப் பாராட்டியிருக்கிறார்கள். பற்பல செயல்களைக் குறிப்பிட்டு விவரமாக அவற்றைப் பாராட்டியிருக்கிறீர்கள், ஆனால், பாரதத்தின் சாமான்ய மனிதர்களின் முயற்சி, அவர்களுடைய உழைப்பு, அவர்களுடைய பேரார்வம் ஆகியவற்றை நான் காணும் வேளையில், அது என்னுள்ளே கூட ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. எத்தனை பெரிய இலக்காக இருந்தாலும் சரி, எத்தனை கடினமான சவாலாக இருந்தாலும் சரி, பாரத நாட்டவரின் சமூக பலம், சமூக சக்தி, ஒவ்வொரு சவாலுக்குமான தீர்வினை ஏற்படுத்தித் தருகிறது. தேசத்தின் மேற்குக் கரையோரப் பகுதியில் எத்தனை பெரிய சூறாவளி வீசியது என்பதை நாம் 2-3 நாட்கள் முன்பாகத் தான் பார்த்தோம். வேகமாக வீசும் காற்று, கடுமையான மழை. சூறாவளி பிபர்ஜாயானது, கட்ச் பகுதியில் பெருநாசத்தை ஏற்படுத்தி விட்டது என்றாலும், கட்ச்வாசிகள், மிகுந்த உளவுறுதியோடும், தயார்நிலையோடும் இத்தனை பயங்கரமான சூறாவளியை எதிர்கொண்டார்கள் என்பதைப் பார்க்கும் போது இது பெருவியப்பு ஏற்படுத்துகிறது. இரண்டு நாட்கள் கழித்து, கட்ச்பகுதி மக்கள், ஆஷாடீ பீஜ் என்ற தங்களுடைய புத்தாண்டினைக் கொண்டாடவிருக்கிறார்கள். ஆஷாடீ பீஜ், கட்சிலே மழையின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது என்பது என்னவோ தற்செயல் நிகழ்வு தான். நான் பல ஆண்டுகளாகவே கட்சிற்குச் சென்று வந்திருக்கிறேன், அங்கே இருப்பவர்களுக்குச் சேவைபுரியும் நற்பேறு எனக்குக் கிடைத்திருக்கிறது; அந்த வகையிலே அங்கிருப்போரின் தளராத நம்பிக்கையையும், அவர்களின் நெஞ்சுறுதியையும் பற்றி நான் நன்கறிவேன். 20 ஆண்டுகளுக்கு முன்பாக, பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்திற்குப் பிறகு, இதிலிருந்து மீளவே முடியாது என்று எந்தக் கட்ச் பகுதி குறித்துக் கூறப்பட்டதோ, இன்று அதே மாவட்டம், தேசத்தின் விரைவாக முன்னேற்றம் அடைந்துவரும் மாவட்டங்களில் ஒன்று. இந்தச் சூறாவளியான பிபர்ஜாய் ஏற்படுத்தியிருக்கும் நாசத்தாண்டவத்திலிருந்து கட்ச் பகுதி மக்கள் விரைவிலேயே மீண்டெழுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.
நண்பர்களே, இயற்கைப் பேரிடர்களின் மீது யாருக்கும், எந்தவிதமான கட்டுப்பாடும் கிடையாது என்றாலும், கடந்த ஆண்டுகளில் பாரதத்திலே பேரிடர் மேலாண்மை தொடர்பான சக்தி மேம்பாடு அடைந்து வருகிறது, இது ஒரு எடுத்துக்காட்டாய் ஆகியும் வருகிறது. இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள மிகப்பெரிய வழிமுறை என்றால் அது இயற்கையைப் பேணுதல். இப்போதெல்லாம் பருவமழைக்காலத்தில், இந்தத் திசையில் நமது பொறுப்புகள் மேலும் அதிகரித்திருக்கின்றன. ஆகையால் தான், இன்று தேசத்திலே Catch the Rain, அதாவது மழைநீரைச் சேகரிப்போம் என்பது தொடர்பான இயக்கங்கள் வாயிலாக சமூக ரீதியிலான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த மாதங்களில் மனதின் குரலில் நாம் மழைநீர் சேகரிப்புடன் தொடர்புடைய ஸ்டார்ட் அப்புகள் பற்றிப் பேசியிருந்தோம். இந்த முறையும் கூட, ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிப்பதில் தங்களின் முழுச்சக்தியையும் செலவழித்து வரும் சிலரைப் பற்றி கடிதங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட சேவையில் ஈடுபட்டிருக்கும் ஒரு நண்பர் தான், யுபி மாநிலத்தின் பாந்தா மாவட்டத்தைச் சேர்ந்த துளசிராம் யாதவ் அவர்கள். துளசிராம் யாதவ் அவர்கள் லுக்தரா கிராமப் பஞ்சாயத்தின் தலைவர். பாந்தாவாகட்டும், புந்தேல்கண்ட் பகுதியே கூட தண்ணீருக்காக எத்தனை சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது என்பது உங்களுக்கே தெரியும். இந்தச் சூழலைச் சமாளிக்க, துளசிராம் அவர்கள் தனது கிராமத்து மக்களோடு இணைந்து அந்தப் பகுதியில் 40க்கும் மேற்பட்ட குளங்களை வெட்டினார். துளசிராம் அவர்கள் தன்னுடைய இந்த முயற்சிக்கு ஆதாரமாகக் கொண்டது – வயலின் நீர் வயலுக்கு, கிராமத்தின் நீர் கிராமத்துக்கு என்பது தான். இன்று இவருடைய கடின உழைப்பின் விளைவாக, இவருடைய கிராமத்தின் நிலத்தடி நீரின் நிலை மேம்பாடு அடைந்திருக்கிறது. இதே போன்று, யுபி மாநிலத்தின் ஹாபுட் மாவட்டத்தின் மக்கள் அனைவரும் இணைந்து, வறண்டுபோன ஒரு நதிக்குப் புத்துயிர் அளித்திருக்கிறார்கள். இங்கே பலகாலத்திற்கு முன்பாக நீம் என்ற பெயருடைய ஒரு நதி இருந்து வந்தது. காலப்போக்கில் இது வறண்டு போய் விட்டது என்றாலும், அந்தப்பகுதியின் வட்டாரக் கதைகள், மூத்தோர் கூறக் கேட்டவை எல்லாம் அவருக்கு நினைவில் வந்து கொண்டே இருந்தன. கடைசியில், மக்கள் தங்களுடைய இந்த இயற்கை மரபினை, மீண்டும் உயிர்ப்பிக்க முடிவு செய்தார்கள். மக்களின் சமூக அளவிலான முயற்சியால் இப்போது நீம் நதியானது, மீண்டும் உயிர் பெற்றுப் பெருகுகிறது. நதி தோன்றும் இடம் அமிர்த நீர்நிலை என்ற வகையில் மேம்பாடும் செய்யப்பட்டிருக்கிறது.
நண்பர்களே, நதி, ஓடை, கால்வாய்கள், ஏரிகள் ஆகியன வெறும் நீர்நிலைகள் மட்டுமே அல்ல; மாறாக, இவற்றில் வாழ்க்கையின் வண்ணங்களும், உணர்வுகளும் கலந்திருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு காட்சியை, சில நாட்கள் முன்பாக மஹாராஷ்டிரத்தில் காண முடிந்தது. இந்தப் பகுதி பெரும்பாலும் வறட்சியில் வாடும் ஒரு பகுதி. 50 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு இங்கே நில்வண்டே அணையினுடைய கால்வாய்ப் பணி நிறைவடைய இருக்கிறது. சில நாட்கள் முன்பாகத் தான், சோதனை செய்யும் பொருட்டு, கால்வாயிலே நீர் திறந்து விடப்பட்டது. அப்போது காணக் கிடைத்த காட்சிகள், இவை உண்மையிலேயே மிகவும் உணர்ச்சிகரமானவையாக இருந்தன. கிராமத்தின் மக்கள், ஏதோ ஹோலி-தீபாவளிப் பண்டிகையின் போது கொண்டாடுவது போல ஆடிப்பாடிக் களித்தார்கள்.
நண்பர்களே, மேலாண்மை பற்றிப் பேச்சு எழும் போது, இன்று நான் சத்ரபதி சிவாஜி மஹாராஜை நினைவு கூர இருக்கிறேன். சத்ரபதி சிவாஜி மஹாராஜின் வீரத்தோடு கூடவே அவருடைய மேலாண்மையும், அவருடைய நிர்வாகத் திறனும் மிகவும் கற்றலை அளிக்கின்றன. குறிப்பாக, நீர் மேலாண்மை, கடற்படை போன்றவற்றில், சத்ரபதி சிவாஜி மஹாராஜா ஆற்றியிருக்கும் பணிகள், இன்றும் கூட பாரத நாட்டு வரலாற்றின் பெருமைக்குப் பெருமை சேர்த்து வருகின்றன. அவரால் உருவாக்கப்பட்ட கடற்கோட்டை, இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் கூட, கடலுக்கு நடுவே இன்றும் கூட, பெருமையோடு காட்சியளிக்கிறது. இந்த மாதத் தொடக்கத்தில் தான் சத்ரபதி சிவாஜி மஹாராஜாவின் ராஜ்யாபிஷேகத்தின் 350 ஆண்டுகள் நிறைவடைந்தன. இந்தச் சந்தர்ப்பம் ஒரு பெரிய மங்கல நிகழ்வாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வேளையில் மஹாராஷ்டிரத்தின் ராய்கட் மாவட்டத்தில், இதோடு தொடர்புடைய மாபெரும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. சில ஆண்டுகள் முன்பாக 2014ஆம் ஆண்டிலே, ராய்கடிற்குச் சென்று, அந்தப் பவித்திரமான பூமியை விழுந்து வணங்கும் பெரும்பேறு எனக்கு வாய்த்தது என்பது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. இந்த வேளையில் நாம் சத்ரபதி சிவாஜி மஹாராஜாவின் நிர்வாகத் திறமைகளை அறிந்து கொள்வதும், அவரிடமிருந்து கற்பதும் நம்மனைவரின் கடமையாகும்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நீங்கள் இராமாயணத்தின் இனிமை நிறைந்த அணிலைப் பற்றிக் கண்டிப்பாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள்; இது ராமசேதுவை அமைக்க உதவிபுரிய முன்வந்தது. அதாவது, நோக்கம் நேரியதாக இருந்தால், முயற்சிகள் நாணயமானவையாக இருந்தால், இலக்கு எதுவாக இருந்தாலும், அது கடினமானதாக இராது. பாரதமும் கூட, இன்று, இதே நேர்மையான நோக்கத்தோடு, ஒரு மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு வருகிறது. டிபி என்று அழைக்கப்படும் காசநோய் தான் அந்தச் சவால். 2025ஆம் ஆண்டிற்குள்ளாக, நம்மனைவரின் உறுதிப்பாடான, காசநோயிலிருந்து விடுபட்ட பாரதத்தை உருவாக்குவோம் என்ற இலக்கு மிகமிக முக்கியமானது, அவசியமானது. ஒரு காலத்தில், காசநோய் பீடித்திருக்கிறது என்று அறிந்தவுடனேயே குடும்பத்தினர் விலகிச் செல்ல ஆரம்பித்தார்கள்; ஆனால் இன்றைய காலகட்டத்தில், காசநோயால் பாதிக்கப்பட்டவர்களை, குடும்ப உறுப்பினர்களாக ஆக்கி, அவர்களுக்கு உதவிகள் புரியப்பட்டு வருகின்றன. இந்தக் காசநோயை வேரடி மண்ணாகக் கெல்லி எறிய, சில நிக்ஷய் நண்பர்கள் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். தேசத்தில் மிகப்பெரிய எண்ணிக்கையில், பல்வேறு சமூக அமைப்புகள் காசநோய்க்கு எதிராகத் திரண்டிருக்கிறார்கள். கிராமங்களிலும் ஊரகப்பகுதிகளும், பஞ்சாயத்துக்களிலும் ஆயிரக்கணக்கானவர்கள், தாங்களே முன்வந்து காசநோயால் பீடித்தவர்களை தத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எத்தனையோ பிள்ளைகள், காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவ முன்வந்திருக்கிறார்கள். மக்கள் பங்களிப்பின் துணையோடு இந்த இயக்கம் மிகப்பெரிய பலமாக உருவெடுத்திருக்கிறது. இந்தப் பங்களிப்பு காரணமாக இன்று தேசத்தில் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட காசநோய் பீடித்தவர்கள் தத்தெடுக்கப்பட்டு விட்டார்கள். இந்தப் புண்ணியச் செயலை, காசநோய்க்கெதிரான 85,000 நிக்ஷய் நண்பர்கள் செய்திருக்கிறார்கள். தேசத்தின் பல பஞ்சாயத்துத் தலைவர்களும் இந்தச் சவாலை எதிர்கொண்டிருக்கிறார்கள், தங்களுடைய கிராமம் காசநோயிலிருந்து விடுபட்ட கிராமமாக இருக்க வேண்டும் என்பதில் குறிப்பாக இருக்கிறார்கள்.
நைநிதாலின் ஒரு கிராமத்தில் நிக்ஷய் நண்பர்களான தீகர் சிங் மேவாடி அவர்கள், காசநோயால் பாதிக்கப்பட்ட அறுவரைத் தத்தெடுத்துக் கொண்டிருக்கிறார். இதைப் போலவே கின்னௌரின் ஒரு கிராமப் பஞ்சாயத்தின் தலைவரான நிக்ஷய் நண்பர் ஞான் சிங் அவர்களும், தனது வட்டத்தில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் அனைத்து அத்தியாவசிய உதவிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் ஈடுபட்டிருக்கிறார். பாரதத்தைக் காசநோயிலிருந்து விடுபட்ட தேசமாக ஆக்கும் இலக்கைப் பொறுத்தமட்டில் நமது சிறுவர்களும், இளைஞர்களும் சளைத்தவர்கள் அல்லர். ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஊனாவிலே, ஏழு ஆண்டுகளேயான சிறுமியான நளினி சிங் அற்புதமான ஒரு செயலைச் செய்திருக்கிறாள். இந்தச் சிறுமியான நளினி, செலவுக்குத் தனக்குக் கொடுக்கப்பட்ட தொகை, பாக்கெட் மணி மூலமாக, காசநோயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்திருக்கிறாள். சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க பன்றிக்குட்டி வடிவிலே ஒரு பெட்டகம், Piggy Bank என்று ஆங்கிலத்திலே கூறுவார்கள், இது குழந்தைகளுக்கு எத்தனை விருப்பமானது என்பதை நீங்களே அறிவீர்கள். ஆனால் மத்திய பிரதேசத்தின் கட்னியைச் சேர்ந்த 13 வயதே ஆன மீனாக்ஷியும், மேற்கு வங்கத்தின் டைமண்ட் ஹார்பரின் 11 வயதே ஆன பஷ்வர் முகர்ஜியும் மிக வித்தியாசமான குழந்தைகள். இவர்கள் இருவரும் பிக்கி பேங்கில் சிறுகச் சிறுக சேமித்த தங்களுடைய பணத்தையுமே கூட காசநோயிலிருந்து பாரதம் விடுதலை பெற வேண்டும் என்ற இயக்கத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த உதாரணங்கள் அனைத்தும் உணர்ச்சிகரமானவை, உணர்வுப்பூர்வமானவை, உத்வேகம் அளிப்பவை. வயது குறைவாகவே இருந்தாலும், எண்ணங்கள் பெரியவையாகக் கொண்ட இந்தக் குழந்தைகளை நான் இருதயபூர்வமாகப் பாராட்டுகிறேன்.
என் கனிவான நாட்டுமக்களே, பாரதநாட்டவரான நம்முடைய இயல்பு எப்படிப்பட்டதென்றால், நாம் எப்போதும் புதிய கருத்துக்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கக் காத்திருப்பவர்களாக இருப்போம். நாம் நமது பொருட்களின் மீது பிரியத்தோடு இருப்போம், புதிய பொருட்களையும் அதே பிரியத்தோடு வரவேற்போம். இதற்கான ஒரு உதாரணம் – ஜப்பானின் உத்தியான மியாவாகி, அதாவது ஏதாவது ஓரிடத்தின் மண் மலடாக இருந்தால், இந்த மியாவாகி உத்தி மூலமாக, அந்தப் பகுதியில், மீண்டும் பசுமையை மலரச் செய்ய ஒரு அருமையான உத்தியாகும். மியாவாகிக் காடுகள் வேகமாகப் பரவுகின்றன, 20-30 ஆண்டுகளிலே உயிரி பன்முகத்தன்மையின் மையமாக ஆகிவிடுகின்றன. இப்போது இதன் பரவலாக்கம், பாரதத்தின் பல்வேறு பாகங்களிலும் நடந்தேறி வருகிறது. நம் நாட்டிலே, கேரளத்தின் ஒரு ஆசிரியரான ராஃபீ இராமநாதன் அவர்கள், இந்த உத்தியின் மூலமாக ஒரு பகுதியின் வரைபடத்தையே மாற்றி விட்டார். உண்மையில், இராமநாதன் அவர்கள், தன்னுடைய மாணவர்களிடத்திலே, இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் குறித்து ஆழமாகப் புரியவைக்க விரும்பினார். இதன் பொருட்டு இவர் ஒரு மூலிகைத் தோட்டத்தை உருவாக்கினார். அவருடைய இந்தத் தோட்டம் இப்போது ஒரு உயிரி பன்முகப் பகுதியாக ஆகி விட்டது. அவருடைய இந்த வெற்றியானது அவருக்கு இன்னும் கூட உத்வேகம் அளித்தது. இதன் பின்னர் ராஃபி அவர்கள், மியாவாகி உத்தி மூலம் ஒரு சின்ன வனத்தை உருவாக்கி, அதற்கு வித்யாவனம் என்ற பெயரும் இட்டார். இத்தனை அழகான பெயரை ஒரு ஆசிரியரால் மட்டுமே சூட்ட முடியும் – வித்யாவனம். இராமநாதன் அவர்களுடைய இந்த வித்யாவனத்திலே, சின்ன இடத்திலேயே கூட 115 வகைப்பட்ட தாவர இனங்களைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட செடிகள் இருக்கின்றன. இவருடைய மாணவர்களும் கூட, இந்தச் செடிகளைப் பராமரிப்பதில் உதவியாக இருக்கின்றார்கள். இந்த அழகான இடத்தைப் பார்க்க, அக்கம்பக்கத்திலிருக்கும் பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் என, பெரும் திரளான மக்கள் வருகிறார்கள். மியாவாகி வனங்களை எந்த ஒரு இடத்திலும், ஏன் நகரங்களிலும் கூட எளிதாக வளர்க்க முடியும். சில காலம் முன்பாக, குஜராத்தின் கேவடியாவின் ஏக்தா நகரிலே மியாவாகி வனத்தை நான் திறந்து வைத்தேன். கட்சிலும் கூட 2001ஆம் ஆண்டு நடந்த நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் நினைவாக மியாவாகி வழிமுறையில் நினைவிடம் அமைக்கப்பட்டிருக்கிறது. கட்ச் போன்ற இடத்தில் இதன் வெற்றியைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், கடினத்திலும் கடினமான இயற்கைச் சூழல் நிறைந்த இடத்திலும் கூட இந்த உத்தி எத்தனை வெற்றிகரமாக இருக்கிறது என்பதை பறை சாற்றுகிறது. இதைப் போலவே, அம்பாஜி மற்றும் பாவாகடிலும் கூட மியாவாகி வழிமுறை மூலமாக மரங்கள் நடப்பட்டிருக்கின்றன. லக்னௌவின் அலீகஞ்ஜ் பகுதியிலும் கூட ஒரு மியாவாகி வனம் தயார் செய்யப்பட்டு வருகிறது என்று நான் அறிகிறேன். கடந்த நான்கு ஆண்டுகளில் மும்பையிலும், அதன் அருகிலே இருக்கும் பகுதிகளிலும், இப்படிப்பட்ட 60க்கும் மேற்பட்ட வனங்கள் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இப்போது இந்த உத்தியானது, உலகம் நெடுக விரும்பப்பட்டு வருகிறது. சிங்கப்பூர், பாரீஸ், ஆஸ்ட்ரேலியா, மலேஷியா போன்ற பல நாடுகளிலும் இது பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நான் நாட்டுமக்களிடத்திலே, குறிப்பாக, நகரங்களில் வசிப்போரிடத்திலே வேண்டிக் கொள்வதெல்லாம், அவர்கள் மியாவாகி வழிமுறை பற்றிக் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள முயல வேண்டும் என்பதே. இதன் மூலமாக நீங்கள் உங்களின் பூமி மற்றும் இயற்கையை பசுமையாகவும், தூய்மையாகவும் ஆக்க, ஈடற்ற பங்களிப்பை அளிக்க முடியும்.
எனதருமை நாட்டுமக்களே, இப்போது நமது தேசத்தின் ஜம்மு கஷ்மீரம் பற்றி நன்கு பேசப்படுகிறது. பெருகிவரும் சுற்றுலா பற்றியும், ஜி 20 மாநாடு தொடர்பான அருமையான ஏற்பாடுகள் குறித்தும் என பல காரணங்களுக்காகப் பேசுபொருளாக இருக்கிறது. சில நாட்கள் முன்பாக, மனதின் குரலில் நான் உங்களிடத்திலே கூறியிருந்தேன், எப்படி கஷ்மீரத்தின் நாதரூவானது தேசத்திற்கு வெளியேயும் கூட விருப்பப்பொருளாக ஆகிவருகிறது என்பது. இப்போது ஜம்மு கஷ்மீரத்தின் பாராமூலா மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் ஒரு அற்புதத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். பாராமூலாவிலே விவசாயம் நெடுங்காலமாகவே நடந்து வருகிறது என்றாலும் இங்கே பாலுக்கான தட்டுப்பாடு இருந்து கொண்டே இருந்தது. பாராமூலாவின் மக்கள் இந்தச் சவாலை ஒரு சந்தர்ப்பமாக மாற்றிக் கொண்டார்கள். இங்கே பெரிய எண்ணிக்கையில் மக்கள் பால் பண்ணைத் தொழிலைச் செய்யத் தொடங்கினார்கள். இந்தப் பணியைச் செய்ய முதலில் முன்வந்தவர்கள் என்றால் அவர்கள் பெண்கள் தாம். அப்படிப்பட்ட ஒரு பெண்மணியின் பெயர் இஷ்ரத் நபி. இஷ்ரத் ஒரு பட்டதாரிப் பெண், இவர் மீர் சிஸ்டர்ஸ் டைரி ஃபார்ம் என்ற பெயரிலான பால் பண்ணையை ஆரம்பித்தார். இவருடைய பால் பண்ணையில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 150 லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதைப் போலவே, சோபோரைச் சேர்ந்த ஒரு நண்பரான வசீம் அநாயத். வசீமிடத்திலே இரண்டு டஜனுக்கு மேற்பட்ட பசுக்கள் இருந்தன; இவர் ஒவ்வொரு நாளும் 200 லிட்டருக்கும் அதிகமான பாலை விற்பனை செய்கிறார். இவருடைய வேலையும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இப்படிப்பட்டவர்களின் கடின உழைப்புக் காரணமாகவே, இன்று பாராமூலாவில் ஒவ்வொரு நாளும் 5½ இலட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பாராமூலா முழுவதுமே இப்போது ஒரு புதிய வெண்மைப் புரட்சியின் அடையாளமாக மாறி வருகிறது. கடந்த 2½ – 3 ஆண்டுகளாகவே இங்கே 500க்கும் மேற்பட்ட பால்பண்ணை அலகுகள் அமைக்கப்பட்டு வந்தன. நமது தேசத்தின் ஒவ்வொரு பகுதியிலும், எத்தனை சாத்தியக்கூறுகள் நிறைந்திருக்கின்றன என்பதற்கு பாராமூலாவின் பால்பண்ணைத் தொழிலே சாட்சி. எந்த ஒரு பகுதியைச் சேர்ந்த மக்களின் சமூகப் பேராவலானது, எந்த ஒரு இலக்கையும் அடைய வல்லது.
என் உளம்நிறை நாட்டுமக்களே, இந்த மாதம், விளையாட்டு உலகமானது பாரதத்திற்கு பல நற்செய்திகளைக் கொண்டு சேர்த்திருக்கிறது. பாரத அணியானது, முதன்முறையாக ஹாக்கிப் போட்டியில் பெண்களுக்கான இளநிலை ஆசியக் கோப்பையை வென்று, மூவண்ணத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள். இதே மாதத்தில், நம்முடைய ஆடவருக்கான ஹாக்கி அணியும் கூட இளநிலை ஆசியக் கோப்பையை வென்றிருக்கிறது. இதோடு கூடவே நாம் இந்தப் பந்தயத்தின் வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையில் வெற்றிகளைப் பெற்றிருக்கும் அணி என்ற வகையிலும் பதிவினை ஏற்படுத்தியிருக்கிறோம். இளநிலை துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பையிலும் கூட நமது இளநிலை அணியினர் அபாரமாகச் செயல்பட்டிருக்கிறார்கள். இந்திய அணியானது இந்தப் பந்தயத்தில் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது. இந்தப் பந்தயத்தில் வெல்லப்பட மொத்தம் எத்தனை தங்கப் பதக்கங்கள் இருந்தனவோ, அவற்றில் 20 சதவீதத்தை பாரதம் மட்டுமே வென்றிருக்கிறது. இதே ஜூன் மாதத்தில் 20 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய தடகளப் போட்டிகளும் நடந்தன. இதிலும் பாரதம் பதக்கப் பட்டியலில், 45 நாடுகள் வரிசையில் முன்னணி மூன்று நாடுகளில் இடம் பிடித்தது.
நண்பர்களே, முன்பெல்லாம் சர்வதேசப் போட்டிகளைப் பற்றி நமக்குத் தெரிய மட்டும் வரும்; ஆனால் அவற்றில் பெரும்பாலும் பாரதத்தின் பெயர் இராது. ஆனால் இன்றோ, அதுவும் கடந்த சில வாரங்களின் வெற்றிகளை மட்டுமே நான் பட்டியலிடுகிறேன் எனும் போதே கூட பட்டியல் இத்தனை நீளமானதாக இருக்கிறது. இது தான் நமது இளைஞர்களின் மெய்யான பலம், சக்தி. இப்படி எத்தனையோ விளையாட்டுக்கள்-போட்டிகள், இவற்றில் இன்று பாரதம் முதன்முறையாகத் தனது இருப்பைப் பதிவு செய்து வருகிறது. எடுத்துக்காட்டாக நீளம் தாண்டுதல் போட்டியில் ஸ்ரீஷங்கர் முரளி, பாரீஸ் டயமண்ட் லீக் போன்ற மிகப் பிரபலமான போட்டியில், தேசத்திற்கு வெண்கலப் பதக்கத்தை வென்றளித்திருக்கிறார். இது இந்தப் போட்டிகளில் பாரத நாட்டின் முதல் பதக்கம் ஆகும். இதே போன்று, மேலும் ஒரு வெற்றி நமது 17 வயதுக்குட்பட்ட பெண்கள் மல்யுத்தப் போட்டிக் குழு தொடர்பானது; இந்தக் குழு, கிர்கிஸ்தானில் வெற்றி பெற்றது. தேசத்தின் இந்த அனைத்துத் தடகள வீரர்கள், அவர்களுடைய பெற்றோர், பயிற்றுநர்கள் என அனைவருக்கும் அவர்களின் முயற்சிகளுக்காக நான் பலப்பல பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, சர்வதேசப் போட்டிகளில், தேசத்திற்கு இத்தனை பெரிய வெற்றி கிடைத்திருப்பதன் பின்னணியில், தேசிய அளவில் நமது விளையாட்டு வீரர்களின் கடினமான உழைப்பு இருக்கிறது. இன்று, தேசத்தின் பல்வேறு மாநிலங்களில் ஒரு புதிய உற்சாகத்துடன் விளையாட்டுக்களின் ஏற்பாடு நடக்கிறது. இவற்றில் பங்கெடுக்கும் வீரர்களுக்கு, விளையாடுதல், வெற்றி பெறுதல், தோற்றல் ஆகியவற்றிலிருந்து கற்றுக் கொள்ளும் வாய்ப்பு அமைகிறது. எடுத்துக்காட்டாக, இப்போது உத்திரப் பிரதேசத்தில் நடக்கும் கேலோ இண்டியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதிலே இளைஞர்கள் மிகுந்த உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் பங்கெடுத்ததைக் காண முடிந்தது. இந்த விளையாட்டுக்களில் நமது இளைஞர்கள் 11 சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். இந்த விளையாட்டுக்களில் பஞ்சாப் பல்கலைக்கழகம், அமிர்தசரசின் குரு நானக்தேவ் பல்கலைக்கழகம், கர்நாடகத்தின் ஜெயின் பல்கலைக்கழகம் ஆகியன பதக்கப் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தன.
நண்பர்களே, இப்படிப்பட்ட போட்டிகளின் ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், இவற்றில் இளம் விளையாட்டு வீரர்களின் பல கருத்தூக்கம் அளிக்கும் கதைகளை நம்மால் பார்க்க இயலும். கேலோ இண்டியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் துடுப்புப் படகுப் போட்டியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த காட்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அந்யதம் ராஜ்குமார், இதில் பங்கெடுத்த முதல் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர் ஆனார். பரக்கத்துல்லா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிதி பவைய்யாவுக்கு முட்டியில் கடுமையான காயம் ஏற்பட்டிருந்ததைத் தாண்டி, இரும்புக் குண்டை எறியும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். சாவித்திரிபாய் பூலே புணே பல்கலைக்கழகத்தின் சுபம் பண்டாரேவுக்குக் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் கடந்த ஆண்டு பெங்களூரூவில் நடந்த போட்டியில் ஏமாற்றமே மிஞ்சியது என்றாலும் இந்த முறை இவர் தடைகளைத் தாண்டும் பந்தயமான ஸ்டீப்பிள்சேஸ் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றார். பர்த்வான் பல்கலைக்கழகத்தின் சரஸ்வதி குண்டூ, கபடிக் குழுவின் தலைவி. இவர் பல இடர்களைத் தாண்டி இந்த நிலைக்கு முன்னேறியிருக்கிறார். மிகச் சிறப்பாகச் செயல்படக்கூடிய பல தடகள வீரர்களுக்கு, TOPS திட்டத்தினால் மிகுந்த உதவிகள் கிடைத்திருக்கின்றன. நமது விளையாட்டு வீரர்கள் எந்த அளவுக்கு விளையாடுகிறார்களோ, அந்த அளவுக்கு வெல்வார்கள்.
என் அன்புநிறை நாட்டுமக்களே, ஜூன் மாதம் 21ஆம் தேதி இப்போது வரவிருக்கிறது. இந்த முறையும் கூட, உலகத்தின் அனைத்து இடங்களிலும் மக்கள் சர்வதேச யோகக்கலை தினத்தை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்கக் காத்திருக்கிறார்கள். இந்த ஆண்டு யோகக்கலை தினத்தின் மையக்கரு, வசுதைவ குடும்பகத்திற்கு யோகக்கலை, அதாவது யாதும் ஊரே யாவரும் கேளிருக்கு யோகக்கலை என்பதே இதன் பொருள். அனைவரையும் இணைக்கக்கூடிய, அரவணைத்துச் செல்லக்கூடிய யோகக் கலையின் சிறப்பை இந்த உணர்வு வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு முறையைப் போலவும், இந்த முறையும் தேசத்தின் அனைத்து இடங்களிலும், யோகக்கலையோடு தொடர்புடைய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
நண்பர்களே, இந்த முறை ந்யூ யார்க்கின் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையிடத்தில் நடைபெறவுள்ள யோகக்கலை தின நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்திருக்கிறது. சமூக ஊடகங்களிலே, யோகக்கலை தினம் தொடர்பாக அபரிமிதமான உற்சாகம் கொப்பளிப்பதை என்னால் காண முடிகிறது.
நண்பர்களே, நீங்கள், யோகக்கலையை உங்கள் வாழ்க்கையில் கண்டிப்பாகக் கடைப்பிடியுங்கள், இதை உங்கள் அன்றாட செயல்பாட்டின் அங்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்பதே நான் உங்களிடத்தில் வைக்கும் வேண்டுகோள். இதுவரை நீங்கள் யோகக்கலையோடு இணையவில்லை என்றால், வரவிருக்கும் ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று, நீங்கள் தீர்மானம் மேற்கொள்ள இது மிகவும் அருமையானதொரு சந்தர்ப்பம். யோகக்கலையைப் பயில பெரிய படாடோபம் ஏதும் தேவையில்லை. நீங்கள் யோகக்கலையோடு இணையும் போது உங்கள் வாழ்க்கையில் எத்தனை மாற்றங்கள் ஏற்படும் என்பதை நீங்களே அனுபவித்து உணருங்கள்.
எனதருமை நாட்டுமக்களே, ஜூன் மாதம் 20ஆம் தேதியன்று வரலாற்றுச் சிறப்புமிக்க ரதயாத்திரை தினமாகும். ரதயாத்திரைக்கு என உலகம் முழுவதிலும் ஒரு தனித்துவமான அடையாளம் இருக்கிறது. தேசத்தின் பல்வேறு மாநிலங்களில் மிகுந்த கோலாகலத்தோடு பகவான் ஜகன்நாதரின் ரதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. ஒடிஷாவின் புரியில் நடைபெறும் ரதயாத்திரையோ மிகவும் அற்புதமானதாக இருக்கும். நான் குஜராத்தில் இருந்த போது, அஹமதாபாதிலே நடக்கும் பிரும்மாண்டமான ரதயாத்திரையில் பங்கெடுக்கும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. இந்த ரதயாத்திரைகளில் எப்படி நாடெங்கிலும் இருந்தும், அனைத்துச் சமூகங்களையும், பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் பிரவாகமாக வருகிறார்கள் என்பதைக் காணும் வேளையில் இது உள்ளபடியே உயர்வானது, பின்பற்றக் கூடியது. இது நம்பிக்கையோடு கூடவே, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதையும் பிரதிபலிக்கிறது. இந்தப் புனிதமான வேளையிலே உங்கள் அனைவருக்கும் என் தரப்பிலிருந்து பலப்பல நல்வாழ்த்துக்கள். பகவான் ஜகன்நாதர் நாட்டுமக்கள் அனைவருக்கும் ஆரோக்கியம், சுகம், வளம் ஆகிய நல்லாசிகளை அளிக்கட்டும் என்பதே என் வேண்டுதல்.
நண்பர்களே, பாரதநாட்டுப் பாரம்பரியம், கலாச்சாரத்தோடு தொடர்புடைய உற்சவங்கள் குறித்த பேச்சுக்களில் ஈடுபடும் வேளையில், நான் தேசத்தின் ஆளுநர் மாளிகைகளில் நடைபெற்ற சுவாரசியமான ஏற்பாடுகளைப் பற்றியும் கண்டிப்பாகக் குறிப்பிடுவேன். இப்போது தேசத்தின் ஆளுநர் மாளிகைகளின் அடையாளம் என்றால், சமூக மற்றும் வளர்ச்சிப் பணிகளோடு தொடர்புடையது என்றாகிவிட்டது. இன்று நமது ஆளுநர் மாளிகைகளில், காசநோயிலிருந்து விடுபட்ட பாரதம் இயக்கம், இயற்கை விவசாயத்தோடு தொடர்புடைய இயக்கம் போன்றவை முன்னணி நட்சத்திரங்களாக ஒளி வீசுகின்றன. கடந்த காலத்திலே குஜராத், கோவா, தெலங்கானா, மஹாராஷ்டிரம், சிக்கிம் ஆகிய இடங்களில், இந்த மாநிலங்களின் நிறுவன நாளை, பல்வேறு ஆளுநர் மாளிகைகளும் எத்தனை உற்சாகத்தோடு கொண்டாடின என்பதே கூட ஒரு எடுத்துக்காட்டான விஷயம். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வுக்கு வலுசேர்க்கும் வகையிலான ஒரு முன்னெடுப்பு இது.
நண்பர்களே, பாரத நாடு மக்களாட்சியின் தாய். நாம் நமது மக்களாட்சி முறையின் ஆதர்சங்களை தலையாயவையாகக் கருதுகிறோம், நமது அரசியல் சட்டத்தை தலையாயது என்று கருதுகிறோம் என்பதால், நாம் ஜூன் மாதம் 25ஆம் தேதியையும் மறந்து விடக் கூடாது. இந்த நாளன்று தான் நமது தேசத்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. இது பாரத நாட்டு வரலாற்றிலே ஒரு கருப்பு அத்தியாயம். இலட்சக்கணக்கானோர் இந்த அவசரநிலையைத் தங்கள் முழுச்சக்தியோடு எதிர்த்தார்கள். மக்களாட்சியின் ஆதரவாளர்களின் மீது இந்தக் காலகட்டத்தில் எந்த அளவுக்குக் கொடுமைகளும், அநீதிகளும், சித்திரவதைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன, எத்தனை துன்பங்களுக்கு அவர்கள் ஆளானார்கள் என்பதை நினைக்கும் போது இன்றும் கூட மனம் கொந்தளிக்கிறது. இந்தக் கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் மீது பல புத்தகங்கள் எழுதப்பட்டுவிட்டன. சங்கர்ஷ் மேன் குஜராத், அதாவது போராட்டத்தில் குஜராத் என்ற புத்தகத்தை எழுதக்கூடிய வாய்ப்பு அந்தக் காலத்தில் கிடைத்தது. சில நாட்கள் முன்னர் தான் அவசர நிலை மீது எழுதப்பட்ட மேலும் ஒரு புத்தகம் என் பார்வையில் பட்டது. இதன் தலைப்பு, Torture of Political Prisoners in India, அதாவது இந்தியாவில் அரசியல் கைதிகளின் சித்திரவதை. அவசரநிலையின் போது வெளிவந்த இந்தப் புத்தகத்திலே, எப்படி, அந்தக் காலத்தைய அரசு, ஜனநாயகக் காப்பாளர்களிடத்திலே எத்தனை கொடூரமாக நடந்து கொண்டது என்பது விபரமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்திலே ஏராளமான விஷய ஆய்வுகளும், நிறைய படங்களும் இருக்கின்றன. இன்று நாம் சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த வேளையில், தேசத்தின் சுதந்திரத்தையே ஆபத்துக்குள்ளாக்கிய இத்தகைய குற்றங்கள் குறித்து ஒரு மீள்பார்வை பார்க்க வேண்டும். இதன் மூலம், இன்றைய இளைய தலைமுறையினரால் ஜனநாயகத்தின் மகத்துவத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரல் பல வண்ணங்கள் நிறைந்த முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு மாலை; இதன் ஒவ்வொரு முத்துமே தனித்துவம் வாய்ந்தது, மதிப்புமிக்கது. இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு பகுதியும் மிகவும் உயிர்ப்புடையது. நாம், சமூக உணர்வோடு கூடவே, சமூகத்தின் பால் கடமை உணர்வு மற்றும் சேவை உணர்வையும் வெளிப்படுத்த வேண்டும். அதிகம் கேள்விப்படாத – நமது காதுகளை வந்தடையாத அப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றி மட்டுமே நாம் இங்கே விவாதிக்கிறோம். பல வேளைகளில், மனதின் குரலில் நாம் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிய பிறகு, நாட்டுமக்கள் பலருக்கும் இது ஒரு உத்வேக காரணியாக அமைந்து விடுகிறது. தற்போது தான் தேசத்தின் பிரசித்தமான பாரதநாட்டுப் பாரம்பரிய நர்த்தகியான ஆனந்தா ஷங்கர் ஜயந்த் அவர்கள் எழுதிய ஒரு கடிதம் கிடைத்தது. தனது கடிதத்தில் அவர், மனதின் குரலின் ஒரு பகுதியைப் பற்றி எழுதியிருக்கிறார். இதிலே நாம் கதை சொல்லுதல், ஸ்டோரி டெல்லிங் பற்றி விவாதித்திருந்தோம். அந்த நிகழ்ச்சியில் நாம் இந்தத் துறையோடு தொடர்புடைய மனிதர்களின் திறமைக்கு அங்கீகாரம் அளித்திருந்தோம். மனதின் குரலின் அந்த நிகழ்ச்சியால் கருத்தூக்கம் அடைந்த ஆனந்தா ஷங்கர் ஜயந்த் அவர்கள், குட்டி கஹானியை தயாரித்திருக்கிறார். இது குழந்தைகளுக்காக, பல்வேறு மொழிகளின் கதைகளின் ஒரு மிகச் சிறப்பான தொகுப்பு. இந்த முயற்சி மேலும் ஒரு விஷயத்திற்காகவும் சிறப்பானது ஏனென்றால், இதிலே நமது கலாச்சாரம் மீது நமது குழந்தைகளுக்கு பிடிப்பும், ஆழமும் அதிகப்படும். இந்தக் கதைகளின் சில சுவாரசியமான காணொளிகளையும் தனது யூட்யூப் சேனலிலும் இவர் தரவேற்றம் செய்திருக்கிறார். நாட்டுமக்களின் நல்ல பணிகள், மற்றவர்களுக்கும் உத்வேகம் அளிக்கிறது என்பதாலேயே இதை இங்கே தெரிவிக்க வேண்டும் என்று எனக்குப் பட்டதால், நான் ஆனந்தா ஷங்கர் ஜயந்த் அவர்களின் இந்த முயற்சி குறித்துக் குறிப்பாக விவாதித்தேன். இதிலிருந்து கற்றுக் கொண்டு அவரும் கூட தனது திறமையால், தேசம் மற்றும் சமூகத்திற்கு சிறப்பான வகையில் பங்களிப்பு நல்க முயற்சி செய்திருக்கிறார். இது தான் பாரதநாட்டவரான நம்மனைவரின் கூட்டுசக்தி. இதுவே தேசத்தின் முன்னேற்றத்திற்குப் புதிய சக்தியை அளிக்கிறது.
எனதருமை நாட்டுமக்களே, இந்த முறை மனதின் குரலில் இம்மட்டே. அடுத்த முறை, புதிய விஷயங்களோடு, உங்களை மீண்டும் வந்து சந்திக்கிறேன். மழைக்காலம் இது என்பதால், உங்கள் ஆரோக்கியத்தின் மீது நன்கு கவனம் செலுத்துங்கள். மிதமாக உண்ணுங்கள், ஆரோக்கியமாக இருங்கள். ஆம், யோகம் பயிலுங்கள். இப்போது பல பள்ளிகளில் கோடை விடுமுறை முடிவுக்கு வரவிருக்கின்றது. வீட்டுப்பாடத்தைக் கடைசி தினம் வரை நிலுவையில் வைத்திருக்க வேண்டாம் என்று நான் குழந்தைகளிடத்திலே வேண்டிக் கொள்கிறேன். நேரத்தில் வேலையை நிறைவு செய்யுங்கள், கவலைப்படாமல் இருங்கள். பலப்பல நன்றிகள்.
***
AD/DL
Sharing this month's #MannKiBaat. Do listen! https://t.co/oHgArTmYKr
— Narendra Modi (@narendramodi) June 18, 2023
Be it the loftiest goal, be it the toughest challenge, the collective power of the people of India, provides a solution to every challenge. #MannKiBaat pic.twitter.com/dRmDi5Z5mM
— PMO India (@PMOIndia) June 18, 2023
Praiseworthy efforts towards conserving water. #MannKiBaat pic.twitter.com/7vBYvoueFO
— PMO India (@PMOIndia) June 18, 2023
Along with the bravery of Chhatrapati Shivaji Maharaj, there is a lot to learn from his governance and management skills. #MannKiBaat pic.twitter.com/3j3W8OzbUr
— PMO India (@PMOIndia) June 18, 2023
To eliminate tuberculosis from the root, Ni-kshay Mitras have taken the lead. #MannKiBaat pic.twitter.com/kRUGhgVJCJ
— PMO India (@PMOIndia) June 18, 2023
Commendable effort by a teacher from Kerala who has set up a herbal garden and a Miyawaki forest with over 450 trees on his school campus. #MannKiBaat pic.twitter.com/043JcDT1kv
— PMO India (@PMOIndia) June 18, 2023
Jammu and Kashmir's Baramulla is turning into symbol of a new white revolution. #MannKiBaat pic.twitter.com/Ko16aFbWqf
— PMO India (@PMOIndia) June 18, 2023
This month has been very special for our sportspersons. #MannKiBaat pic.twitter.com/qPLFqr9TvD
— PMO India (@PMOIndia) June 18, 2023
Today, sports are organised with a new enthusiasm in different states of the country. They give players a chance to play, win and to learn from defeat. #MannKiBaat pic.twitter.com/Jwzsp4Wm8v
— PMO India (@PMOIndia) June 18, 2023
Urge everyone to make Yoga a part of daily routine: PM @narendramodi #MannKiBaat pic.twitter.com/8Q2zPdPnNb
— PMO India (@PMOIndia) June 18, 2023
The way people from all over the country take part in the Rath Yatras is exemplary. Along with inner faith, it is also a reflection of the spirit of 'Ek Bharat- Shreshtha Bharat.' #MannKiBaat pic.twitter.com/HwX9gVXRIW
— PMO India (@PMOIndia) June 18, 2023
India is the mother of democracy. We consider our democratic ideals as paramount; we consider our Constitution as Supreme. #MannKiBaat pic.twitter.com/9Wxtij0leX
— PMO India (@PMOIndia) June 18, 2023
Every episode of #MannKiBaat is full of life. Along with the feeling of collectivity, it fills us with a sense of duty and service towards the society. pic.twitter.com/tjnss0u8Fs
— PMO India (@PMOIndia) June 18, 2023
I salute the people of Kutch for their resilience. #MannKiBaat pic.twitter.com/WNgjKEBtBE
— Narendra Modi (@narendramodi) June 18, 2023
Ni-kshay Mitras are making the fight against TB stronger. Enthusiastic participation of the youth is even more gladdening. #MannKiBaat pic.twitter.com/QvafZvzxVE
— Narendra Modi (@narendramodi) June 18, 2023
India is fast embracing the Miyawaki method, indicating our commitment to sustainable growth. Highlighted examples from Kerala, Gujarat, Maharashtra and Uttar Pradesh where this method is finding popularity. #MannKiBaat pic.twitter.com/MN99R5FcZd
— Narendra Modi (@narendramodi) June 18, 2023
The life journeys of our young sportspersons continues to inspire… #MannKiBaat pic.twitter.com/T2U0eQUlp1
— Narendra Modi (@narendramodi) June 18, 2023
I urge you all to mark Yoga Day and make Yoga a part of your daily lives. #MannKiBaat pic.twitter.com/OG8NZEBtau
— Narendra Modi (@narendramodi) June 18, 2023
During #MannKiBaat, highlighted innovative efforts towards water conservation across India, particularly making ‘Catch the Rain’ movement more popular. pic.twitter.com/ABulfvGqVG
— Narendra Modi (@narendramodi) June 18, 2023
जम्मू-कश्मीर का बारामूला श्वेत क्रांति का नया केंद्र बन रहा है। हाल के समय में यहां हमारे कुछ भाई-बहनों ने डेयरी के क्षेत्र में जो अद्भुत काम किया है, वो हर किसी के लिए एक मिसाल है। #MannKiBaat pic.twitter.com/ajFWQM1vAt
— Narendra Modi (@narendramodi) June 18, 2023
यूपी के हापुड़ में लोगों ने विलुप्त हो चुकी नीम नदी को पुनर्जीवित करने का सराहनीय प्रयास किया है। यह देश में जल संरक्षण के साथ ही नदी संस्कृति को विकसित करने की दिशा में एक बेहतरीन पहल है। #MannKiBaat pic.twitter.com/35tcQYcaog
— Narendra Modi (@narendramodi) June 18, 2023
#MannKiBaat କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ‘ରଥଯାତ୍ରା’ର ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇଲି । ଭଗବାନ ଶ୍ରୀଜଗନ୍ନାଥଙ୍କ ଆଶୀର୍ବାଦ ଆମ ସମସ୍ତଙ୍କ ଉପରେ ରହିଥାଉ । pic.twitter.com/4RD74bQDGH
— Narendra Modi (@narendramodi) June 18, 2023
During #MannKiBaat, conveyed Rath Yatra greetings. May Bhagwan Jagannath keep showering blessings upon us. pic.twitter.com/5MXzjXpjc8
— Narendra Modi (@narendramodi) June 18, 2023
छत्रपती शिवाजी महाराज यांच्या जीवकार्यातून शिकण्यासारख्या अनेक गोष्टी आहेत, त्यापैकी एक महत्वाची आणि प्रमुख गोष्ट म्हणजे, सुप्रशासन, जल संवर्धन आणि मजबूत आरमार उभारण्यावर त्यांनी दिलेला भर. #MannKiBaat pic.twitter.com/9J6eopWS42
— Narendra Modi (@narendramodi) June 18, 2023
There are innumerable lessons from the life of Chhatrapati Shivaji Maharaj and prime among them are his emphasis on good governance, water conservation and building a strong navy. #MannKiBaat pic.twitter.com/UQPKJhpfbG
— Narendra Modi (@narendramodi) June 18, 2023