Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஒடிசாவில் ரூ.8,000 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நாட்டிற்கு அர்ப்பணித்தார்

ஒடிசாவில் ரூ.8,000 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நாட்டிற்கு அர்ப்பணித்தார்


ஒடிசாவில் ரூ.8,000 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி, நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

பூரி ஹௌரா இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தல், பூரி கட்டாக் ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டல், ஒடிசாவில் 100% மின்மயமாக்கப்பட்ட ரயில் கட்டமைப்பை அர்ப்பணித்தல், சம்பல்பூர் – டிட்லாகர் இடையே இரட்டை ரயில் பாதை, அங்குல் – சுகிந்தா இடையே புதிய அகல ரயில் பாதை; மனோகர்பூர் – ரூர்கேலா –ஜார்சுகுடா – ஜாங்கா  ஆகிய பகுதிகளை இணைக்கும் மூன்றாவது வழித்தடம், பிச்சிபுலி – ஜார்டர்பா  இடையே அகல ரயில் பாதை வழித்தடம் ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும். 

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநில மக்களுக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று பரிசளிக்கப்படுவது நவீன மற்றும் முன்னோடி இந்தியாவின் அடையாளம் என்று கூறினார். ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வந்தே பாரத் ரயில்கள் ஓடும் போதெல்லாம் இந்தியாவின் வேகம் மற்றும் வளர்ச்சியை காணமுடியும் என்று அவர் தெரிவித்தார். இதனை ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் தற்போது காண முடியும் என்று அவர் குறிப்பிட்டார். இது வளர்ச்சியின் அர்த்தத்தை முற்றிலுமாக மாற்றியுள்ளதோடு பயணிகளின் அனுபவத்தையும் மாற்றியுள்ளதாக அவர் தெரிவித்தார். கொல்கத்தாவிலிருந்து பூரிக்கு தரிசனத்திற்காக அல்லது மற்ற நோக்கங்களுக்காக செல்லும்போது தற்போது பயண தூரம் 6 மணி 30 நிமிடங்களாக குறைந்து நேரம் சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது இளைஞர்களுக்கு வர்த்தக வாய்ப்புகளை அதிகரித்து புதிய வாய்ப்புகளை அளிப்பதாகவும் அவர் கூறினார்.

எந்தவொரு குடிமகனும் ரயில் பயணத்தைத்தான் முதல் விருப்பமாக தேர்ந்தெடுக்கிறார் என்றும், பூரி, கட்டாக் ரயில் நிலையங்களை நவீனப்படுத்துதல், மறுசீரமைப்பு உள்ளிட்டவற்றிற்கு அடிக்கல் நாட்டப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார். அத்துடன் இப்பகுதியில் இரட்டை வழிப்பாதை மற்றும் ஒடிசாவில் 100 சதவீத மின்மயமாக்கப்பட்ட ரயில் வழித்தடம் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

விடுதலைப் பெருவிழாவின் அமிர்த காலம் குறித்து குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார். நாடு முழுமையாக ஒருங்கிணைந்து இருந்தால் நாட்டின் கூட்டுத் திறன்களை அதிகரிக்க செய்ய முடியும் என்று அவர் கூறினார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நம்பிக்கையின் பிரதிபலிப்பு என்று கூறிய அவர், ஒரே இந்தியா உன்னத இந்தியா என்ற உத்வேகத்தை முன்னெடுத்துச் செல்லும்போது நாட்டிற்கான வளர்ச்சியின் எந்திரமாக இது திகழ்கிறது என்று தெரிவித்தார். இந்திய ரயில்வே அனைவரையும் ஒரே நூலில் கோர்த்து இணைப்பதாகவும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலும் அதே எண்ணம் மற்றும் சிந்தனையுடன் முன்னோக்கிச் செல்வதாக பிரதமர் கூறினார்.  இந்த ரயில் பூரி-ஹவுரா இடையே ஆன்மீகம் மற்றும் கலாச்சார இணைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். நாட்டில் பல்வேறு மாநிலங்களில் ஏற்கனவே 15 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவதாகவும் அது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிப்பதாகவும் அவர் கூறினார்.

சர்வதேச அளவில் நிலவும் அதிக பாதகமான சூழ்நிலைகளுக்கு இடையே இந்தியா அண்மையில் தனது வளர்ச்சியின் வேகத்தை பராமரிக்கிறது என்று பிரதமர் கூறினார். இப்பயணத்தில் அனைத்து மாநிலமும் பங்கேற்பதாக பாராட்டினார். அனைத்து மாநிலத்தையும் முன்னேற்றுவதன் மூலம் நாடு முன்னேறிச் செல்வதாக அவர் தெரிவித்தார். கடந்த காலத்தை போல் இல்லாமல் புதிய இந்தியா உள்நாட்டிலேயே தொழில்நுட்பத்தை உருவாக்கி நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் அதை எடுத்துச் செல்வதாக அவர் கூறினார். உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசிகள், 5ஜி அலைக்கற்றை போன்ற தொழில்நுட்பங்களை இந்தியா வடிவமைத்ததாக தெரிவித்தார். இந்த புதுமைக் கண்டுபிடிப்புகள் ஒரு மாநிலம் அல்லது  நகரம் என்ற அளவில் ஒரு போதும் இருந்துவிடாமல் நாடு முழுவதும் சமமான அளவில் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறினார். அதே போல் வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் செல்வதாக அவர் தெரிவித்தார்.

அனைவருக்கும் அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கொள்கை மூலம் வளர்ச்சியில் பின் தங்கிய மாநிலங்கள் பயனடைந்து வருவதாக அவர் கூறினார். ஒடிசாவின் ரயில்வே திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு பெருமளவில் அதிகரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு மாநிலத்தில் ஆண்டுக்கு 20 கிலோ மீட்டர் தொலைவிற்கு மட்டும் ரயில்வே தடங்கள் அமைக்கப்பட்டதாகவும், 2022 -23 ஆம் ஆண்டில் 120 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரயில்வே தடங்கள் அமைக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த குர்தா போலேன்கெர் வழித்தடம், ஹரிதாஸ்பூர் – பாரதீப் வழித்தடம் திட்டங்கள் நிறைவாக முடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் 100% மின்மயமாக்கப்பட்ட ரயில் தடங்களை கொண்டுள்ள மாநிலங்களில் ஒடிசாவும் ஒன்றாகும் என்ற நிலை எட்டப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். இதே போல் மேற்கு வங்கத்திலும் இதற்கானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக கூறினார். இதன் மூலம் ரயில்களின் வேகம் ஒட்டுமொத்தமாக அதிகரித்து சரக்கு ரயில்களுக்கான நேரம் சேமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த மின்மயமாக்கப்பட்ட ரயில் வழித்தடங்கள் மூலம் கனிம வளம் கொண்ட ஒடிசா மாநிலம் பெரும் பயனடையும் என்றும், டீசல் என்ஜீன்கள் மூலம் உருவாகும் மாசு குறையும் என்றும் இது மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு உதவும் என்றும் அவர் கூறினார்.

அதிகளவில் பேசப்படாத உள்கட்டமைப்பை  நிர்மாணிக்கும் மற்றொரு அம்சம் குறித்தும் பிரதமர் குறிப்பிட்டார். உள்கட்டமைப்புகள் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவது மட்டுமல்லாமல், சமுதாயத்தை அதிகாரப்படுத்துகிறது என்று அவர் கூறினார். உள்கட்டமைப்பில் குறைபாடு இருக்கும் போது, மக்களின் முன்னேற்றத்திலும் குறைபாடு இருக்கும். உள்கட்டமைப்பு மேம்படும்போது, ஒரே சமயத்தில் மக்களின் அபரிமித முன்னேற்றமும் ஏற்படும் என்று அவர் தெரிவித்தார். மேம்பாட்டு முன் முயற்சிகள் குறித்து எடுத்துரைத்தப் பிரதமரின் சௌபாக்கியாத் திட்டத்தின் உதாரணத்தைத் தெரிவித்தார். ஒடிசா மாநிலத்தில் 25 லட்சம் வீடுகள் உட்பட 2.5 கோடி வீடுகளுக்கும், மேற்கு வங்கத்தில் 7.25 லட்சம் வீடுகளுக்கும், இலவச மின்சார இணைப்புகளை இத்திட்டத்தின் கீழ் அரசு வழங்கியிருப்பதை சுட்டிக்காட்டினார்.

நாட்டின் விமான நிலையங்கள் 75-லிருந்து 150-ஆக இப்போது அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியப் பிரதமர், சாதாரண மக்களும் தங்களது விமானப் பயண அனுபவத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்வதை சுட்டிக்காட்டினார்.

 உள்கட்டமைப்புத் துறையில் இந்தியா அடைந்துள்ள சாதனைகளை விளக்கியப் பிரதமர், உள்கட்டமைப்புக்காக ரூ. 10 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் ஏற்படும் என்றும், எளிதாக பயணம் செய்யும் வகையில், ரயில் மற்றும் நெடுஞ்சாலை இணைப்புகள் உருவாகும் என்றும் கூறினார். இது விவசாயிகளுக்கு புதிய சந்தைகளையும், சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய இடங்களையும், மாணவர்களுக்கு விரும்பும் கல்லூரிகளையும் இணைக்கும் என்று அவர் தெரிவித்தார்.

மக்களின் சேவை, மகேசனின் சேவை என்ற உணர்வுடன் நாடு, முன்னேறி வருவதாகப் பிரதமர் தெரிவித்தார். ஜகநாதர் ஆலயம் போன்ற கோயில்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, ஆயிரக்கணக்கான ஏழைமக்களுக்கு உணவளிக்கும். பூரி போன்ற புனித யாத்திரைத் தளங்களையும் அவர் எடுத்துக்காட்டினார். பிரதமரின் ஏழைகள் நலவாழ்வுத் திட்டத்தில் 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டதும், ஆயுஷ்மான் அட்டை, உஜ்வாலா, ஜல்ஜீவன் இயக்கம், பிரதமரின் வீட்டு வசதித்திட்டம் போன்ற திட்டங்களும் இதற்கு எடுத்துக்காட்டுகள் என அவர் கூறினார். பல ஆண்டுகளாக காத்திருந்த ஏழைகளுக்கு இன்று இந்த அனைத்து அடிப்படை  வசதிகளும் கிட்டியுள்ளதாக அவர் கூறினார்.

மாநிலங்களின் சமன்பாடான மேம்பாடு, இந்தியாவின் விரைவான வளர்ச்சிக்கு சம அளவில் முக்கியமாகும்.  ஆதாரங்கள் இல்லாததால் எந்த மாநிலமும் முன்னேற்றம் குறித்த பந்தயத்தில் பின் தங்கக்கூடாது என்பதே நாட்டின் முன்னுரிமையாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். ஒடிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களுக்கு  மிக அதிகளவில்  பட்ஜெட் ஒதுக்கீடு செய்யுமாறு 15-வது நிதி ஆணையம் பரிந்துரைத்திருப்பதை  அவர் குறிப்பிட்டார்.  ஒடிசா, ஏராளமான இயற்கை வளத்துடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தப் பிரதமர், தவறான கொள்கைகள் காரணமாக மாநிலம்  பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அனைத்து மாநிலங்களுக்கும் வருவாயை அதிகரிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, அரசு கனிமக் கொள்கையை சீர்திருத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். ஜிஎஸ்டி அறிமுகப்பட்டதற்கு பின்னர், வரி வருவாயும் உயர்ந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். கிராமங்களில் உள்ள ஏழை மக்களின் நலனுக்கு மாநிலத்தின் வளங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.  இயற்கை பேரிடர்களை வெற்றிகரமாக ஒடிசா மாநிலம் சமாளிப்பதை உறுதிப்படுத்த மத்திய அரசு முழுக் கவனம் செலுத்தி வருவதாகக் கூறிய பிரதமர், பேரிடர் மேலாண்மை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படைக்கு  அரசு 8,000 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

ஒடிசா, மேற்கு வங்கம் ஆகியவற்றின் மேம்பாட்டின் வேகம் குறித்து நம்பிக்கைத் தெரிவித்தப் பிரதமர், நாடு முழுவதும் ஊக்கம் பெறும் என்றும் புதிய வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான இலக்கை நாடு எட்டும் என்றும் கூறி தமது உரையை நிறைவு செய்தார்.

ஒடிசா மாநில ஆளுநர் திரு  கணேஷி லால், முதலமைச்சர் திரு நவீன் பட்நாயக், ரயில்வே அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ், மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் ஆகியோர்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னணி

பூரிக்கும் ஹவுராவுக்கும் இடையே வந்தே பாரத்  விரைவு ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த ரயில் ஒடிசாவின், கோர்தா, கட்டக், ஜெய்ப்பூர், பத்ராக், பாலசோர் ஆகிய மாவட்டங்கள், மேற்கு வங்கத்தில் கிழக்கு மிதுனாப்பூர், மேற்கு மிதுனாப்பூர் மாவட்டங்கள் வழியாக செல்லும். அனைத்து ரயில் பயன்பாட்டாளர்களுக்கும், விரைவான, வசதியான, பயண அனுபவத்தை இந்த ரயில் அளிக்கும். இதன் மூலம் சுற்றுலா மேம்பட்டு பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.

பூரி, கட்டாக் ரயில் நிலையங்களில் மறு சீரமைப்புக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். ரயில் பயணிகளுக்கு இவை உலக தரமான அனுபவத்தை வழங்கும்.

ஒடிசாவில், நூறு சதவீதம் மின்மயமாக்கப்பட்ட ரயில் கட்டமைப்பை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது இயக்கம் மற்றும் பராமரிப்பு செலவை குறைப்பதுடன், இறக்குமதி கச்சா எண்ணெயை சார்ந்திருப்பதையும் குறைக்கும். சம்பல்பூர்- திட்லகார் இரட்டை ரயில்பாதை, அங்குல்-சுகின்டா இடையே புதிய அகல ரயில்பாதையை மனோகர்பூர் – ரூர்கேலா – ஜார்சுகுடா- ஜம்கா இடையே புதிய இரட்டைப்பாதை அமைத்தல் ஆகியவற்றை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

 

******

AP/PKV/IR/RS/MA/KRS