Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஊழல் மற்றும் கருப்புப் பணத்துக்கு முடிவு கட்டுவதற்கான பிரதமரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு; இன்று நள்ளிரவில் இருந்து ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது


ஊழல், கருப்புப் பணம், சட்டவிரோதமாக சம்பாதித்தல், தீவிரவாதம் மற்றும் தீவிரவாதிகளுக்கு நிதி அளிப்பது போன்ற செயல்களுக்கும், கள்ளநோட்டுகளுக்கும் எதிரான போருக்கு வலு சேர்க்கும் வகையில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயலாக, 8 நவம்பர் 2016 நள்ளிரவில் இருந்து ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சட்டபூர்வமாக மாற்றத் தக்கவையாக இருக்காது, (அதாவது, அவை செல்லாது) என்று இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அளித்த பரிந்துரைகளை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. புதிய ஐநூறு ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் விடப்படும்.

நூறு, ஐம்பது, இருபது, பத்து, ஐந்து, இரண்டு மற்றும் ஒரு ரூபாய் நோட்டுகள் சட்டபூர்வமாக மாற்றத்தக்கவையாக இருக்கும். இன்றைய முடிவால் அவற்றுக்கு பாதிப்பு இருக்காது.

8 நவம்பர் 2016 செவ்வாய்க்கிழமை மாலையில் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்த முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார். இந்தியாவில் உள்ள நேர்மையானவர்கள் மற்றும் கடினமாக உழைக்கும் குடிமக்களின் நலன்களை இந்த முடிவுகள் முழுமையாகப் பாதுகாக்கும் என்று அவர் கூறினார். தேச விரோத மற்றும் சமூக விரோத சக்திகள் பதுக்கி வைத்துள்ள ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இனிமேல் வெறும் காகிதத் துண்டுகளாகிப் போகும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், ஊழல், கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளுக்கு எதிரான போரில், சாமானிய குடிமக்களின் கரங்களை வலுப்படுத்தும் என்று பிரதமர் கூறினார்.

வரும் நாட்களில் சாமானிய குடிமக்கள் எதிர்கொள்ள நேரிடும் சிரமங்களை முற்றிலும் அறிந்துள்ளதால், அத்தகைய பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு உதவக் கூடிய சில நடவடிக்கைகளையும் பிரதமர் அறிவித்துள்ளார்.

பழைய ஐநூறு அல்லது ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பவர்கள் நவம்பர் 10 ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 30 ஆம் தேதி வரையில் அவற்றை வங்கி அல்லது தபால் நிலையங்களில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்று பிரதமர் அறிவித்தார். மிக குறுகிய காலத்துக்கு ஏ.டி.எம்.கள் மற்றும் வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கு சில வரம்புகள் விதிக்கப்படுகின்றன.

மனிதாபிமான அடிப்படையில் ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்கள் (டாக்டரின் பரிந்துரை சீட்டுடன் இருந்தால்), ரயில் டிக்கெட்டுக்கான புக்கிங் நிலையங்கள், அரசுப் பேருந்துகள், விமான டிக்கெட் கவுண்ட்டர்கள், பொதுத் துறை நிறுவனங்களின் (PSU) பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு நிலையங்கள், மாநில அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் கூட்டுறவு ஸ்டோர்கள், மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பால் பூத்கள், சவக்கிடங்குகள், மயானங்கள் ஆகிய இடங்களில் ஏற்றுக் கொள்ளப்படும் என்று பிரதமர் திரு மோடி கூறினார்.

காசோலைகள், டிமாண்ட் டிராப்ட்கள், டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் மற்றும் மின்னணு பண டிரான்ஸ்பர் போன்ற பணமாக அல்லாத எந்த வகையான பரிமாற்றங்களுக்கும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று மோடி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

புழக்கத்தில் இருக்கும் பணத்தின் அளவு எந்த வகையில் பணவீக்கத்துடன் தொடர்பு கொண்டிருக்கிறது, ஊழல் முறைகளில் புழக்கத்தில் உள்ள பணத்தால் பணவீக்க நிலை எந்தளவுக்கு மோசமாகியுள்ளது என்ற விவரங்களை பிரதமர் தனது உரையின் போது பகிர்ந்து கொண்டார். இவை ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தில் அடியெடுத்து வைத்துள்ள மக்களையும் மோசமாக பாதிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். நேர்மையான குடிமக்கள் வீடுகள் வாங்கும்போது எந்த அளவுக்கு பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை அவர் உதாரணமாகக் கூறினார்.

கருப்புப் பணத்தை ஒழிப்பதில் காலம் காலமான உறுதிப்பாடு

கருப்புப் பண பிரச்சினையை வெற்றி கொண்டாக வேண்டும் என்பதை உறுதி செய்வதில், அரசு உறுதியாக உள்ளது என்று பிரதமர் தொடர்ந்து கூறி வந்தார். கடந்த இரண்டரை ஆண்டு கால தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அரசில், அதன்படி நடந்து காட்டினார், முன்னுதாரணமாக நடத்திச் சென்றார்.

கருப்புப் பணம் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைத்ததுதான், பிரதமரால் தலைமையேற்று நடத்தப்படும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதலாவது முடிவாக இருந்தது.

வெளிநாட்டு வங்கிக் கணக்குகளின் விவரங்களை அறிவிப்பது குறித்து 2015-ல் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. பினாமி பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்துவதற்கு 2016 ஆகஸ்ட் மாதத்தில் கடுமையான விதிகள் அமல் செய்யப்பட்டன. கருப்புப் பணத்தை அறிவிப்பதற்கான ஒரு திட்டமும் அதே காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
அந்த முயற்சிகளுக்குப் பலன் கிடைத்தது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் ரூ.1.25 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட கருப்புப் பணம் கணக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது.
கருப்புப் பண பிரச்சினை குறித்து உலக அரங்கில் எழுப்பியது

பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது, உலக அமைப்புகளில், கருப்புப் பண பிரச்சினையை எழுப்பி வந்தார். முக்கியமான பல தரப்பு மாநாடுகள் மற்றும் இரு தரப்புக் கூட்டங்களில் தலைவர்களுடன் இதை எழுப்பியதும் இதில் அடங்கும்.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் வரலாறு காணாத வளர்ச்சி

அரசின் முயற்சிகள் காரணமாக உலக பொருளாதாரத்தில் இந்தியா வளர்ந்து பிரகாசமான இடத்தைப் பெற முடிந்தது என்று பிரதமர் கூறினார். முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா உள்ளது. எளிதாக தொழில் செய்வதற்கு உகந்த இடமாக இந்தியா உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி குறித்து, முன்னணி நிதி ஏஜென்சிகளும் பரந்த மனப்பான்மையை பகிர்ந்து கொண்டுள்ளன.

இத்துடன் சேர்த்து, இந்தியாவில் தொழில்முனைவு ஊக்கம், புதுமை சிந்தனை மற்றும் ஆராய்ச்சியைக் கொண்டாடும் முயற்சிகளான `இந்தியாவில் தயாரியுங்கள்,’ `ஸ்டார்ட் அப் இந்தியா’ மற்றும் `ஸ்டாண்ட் அப் இந்தியா’ போன்ற முயற்சிகளால், இந்திய தொழில்முனைவு ஊக்கம் மற்றும் புதுமை சிந்தனை எழுச்சி பெற்றுள்ளது.
பிரதமரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகள், ஏற்கெனவே மத்திய அரசு மேற்கொண்டுள்ள ஆக்கபூர்வ முயற்சிகளுக்கு மேலும் மதிப்பைக் கூட்டுவதாக இருக்கும்.