இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் முதலாவது கூட்டத்தில் காணொளி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தமது செய்தியை பகிர்ந்து கொண்டார்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் உரையாற்றுகையில், இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் அமைச்சகங்கள் அளவில் நடைபெறும் முதல் கூட்டம் இது என்றும், ஆக்கபூர்வமானதாக இந்நிகழ்ச்சி அமைய தமது நல்வாழ்த்துகளையும் பிரதமர் தெரிவித்துக் கொண்டார். இன்று உலகளவில் எதிர்கொள்ளப்படும் சவால்களை சுட்டிக் காட்டிய அவர், மோசமான பொருளாதார சூழல்களை உலகம் சந்தித்து வரும் வேளையில் உலகளாவிய நிதி மற்றும் பொருளாதார தலைமைத்துவத்தின் பிரதிநிதியாக கூட்டத்தின் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டிருப்பதாகக் கூறினார். கொவிட் பெருந்தொற்று மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தில் அதன் தாக்கங்கள், அதிகரித்து வரும் புவி- அரசியல் நிகழ்வுகள், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் இடையூறுகள், விலையேற்றம், உணவு மற்றும் எரிசக்திப் பாதுகாப்பு, ஏராளமான நாடுகளைப் பாதிக்கும் வகையில் நிலையற்ற கடன்கள், விரைவான சீர்திருத்தம் மேற்கொள்ள இயலாத காரணத்தால் சர்வதேச நிதி நிறுவனங்கள் மீதான நம்பிக்கை குறைந்து வருவது முதலியவற்றை பிரதமர் உதாரணமாகக் குறிப்பிட்டார். சர்வதேச பொருளாதாரத்தில் நிலைத்தன்மை, நம்பிக்கை மற்றும் வளர்ச்சியை மீண்டும் கொண்டு வருவது, உலகின் முன்னணி பொருளாதாரங்கள் மற்றும் நிதி அமைப்புமுறைகளின் பாதுகாவலர்களை சார்ந்துள்ளது என்றும் திரு மோடி கூறினார்.
துடிப்பான இந்தியப் பொருளாதாரம் மீது அதிகரித்துள்ள கவனத்தை சுட்டிக் காட்டிய பிரதமர், நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து இந்திய நுகர்வோர் மற்றும் தயாரிப்பாளர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், இதே நேர்மறை உணர்வை சர்வதேச அளவில் வெளிப்படுத்தி உறுப்பினர்கள் எழுச்சி பெறுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். உலகளவில் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகக் கூடிய மக்கள் குறித்து விவாதங்களில் கவனம் செலுத்துமாறு உறுப்பினர்களை அவர் கேட்டுக்கொண்டதோடு, உள்ளடக்கிய திட்டத்தை உருவாக்குவதன் வாயிலாக மட்டுமே உலகின் நம்பிக்கையை சர்வதேச பொருளாதார தலைமைத்துவம் மீண்டும் கொண்டு வர இயலும் என்று வலியுறுத்தினார். “ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் என்ற உள்ளடக்கிய தொலைநோக்குப் பார்வையை எங்களது ஜி20 தலைமைத்துவத்தின் கருப்பொருள் ஊக்குவிக்கிறது”, என்று பிரதமர் குறிப்பிட்டார்.
உலக மக்கள் தொகை 8 பில்லியனைக் கடந்துள்ள போதும், நிலையான வளர்ச்சி இலக்குகளின் முன்னேற்றம், தொய்வடைவதை பிரதமர் கோடிட்டுக் காட்டினார். பருவநிலை மாற்றம் மற்றும் அதிகக் கடன் நிலைகள் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கு பலதரப்பு வளர்ச்சி வங்கிகளை வலுப்படுத்துவதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார்.
நிதித் துறையில் அதிகரித்து வரும் தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்தை சுட்டிக் காட்டிய பிரதமர், பெருந்தொற்று காலத்தில் தொடர்பு அல்லாத மற்றும் சீரான பரிவர்த்தனைகளை டிஜிட்டல் கட்டணமுறைகள் வழங்கியதை நினைவுகூர்ந்தார். டிஜிட்டல் நிதியில் ஸ்திரமின்மை மற்றும் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயத்தை கட்டுப்படுத்த தர நிலைகளை உருவாக்கும் அதே வேளையில், தொழில்நுட்பத்தின் ஆற்றலை ஆராய்ந்து பயன்படுத்துமாறு உறுப்பினர்களை அவர் கேட்டுக் கொண்டார். கடந்த சில ஆண்டுகளில் தனது டிஜிட்டல் கட்டண சூழலியலில் மிகுந்த பாதுகாப்பான, நம்பகத்தன்மை வாய்ந்த மற்றும் அதீத செயல்திறன் கொண்ட பொது டிஜிட்டல் உள்கட்டமைப்பை இந்தியா உருவாக்கியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். “எங்களது டிஜிட்டல் கட்டணச் சூழலியல் விலையில்லா பொது நல சொத்தாக உருவாக்கப்பட்டுள்ளது”, என்று கூறிய பிரதமர், நாட்டில் ஆளுகை, நிதி உள்ளடக்கம் மற்றும் எளிதான வாழ்க்கைமுறையை இது பெருவாரியாக மாற்றி அமைத்துள்ளது என்று தெரிவித்தார். இந்தியாவின் தொழில்நுட்பத் தலைநகரான பெங்களூருவில் இந்தக் கூட்டம் நடைபெறுவதைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், டிஜிட்டல் கட்டண முறைகளை இந்திய நுகர்வோர் எவ்வாறு வரவேற்றுள்ளனர் என்பதை கூட்டத்தின் பங்கேற்பாளர்கள் நேரடியாக இங்கு காணலாம் என்று தெரிவித்தார். இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் போது உருவாக்கப்பட்டுள்ள புதிய அமைப்புமுறை பற்றி பேசிய அவர், யு.பி.ஐ என்ற இந்தியாவின் தலைசிறந்த டிஜிட்டல் கட்டணத் தளத்தை ஜி20 விருந்தினர்கள் பயன்படுத்த இது வழிவகை செய்வதாகக் குறிப்பிட்டார். “யு.பி.ஐ போன்ற உதாரணங்கள் ஏராளமான இதர நாடுகளுக்கும் மாதிரியாக செயல்படலாம். எங்களது அனுபவங்களை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைவதோடு, இதன் உந்துசக்தியாக ஜி20 செயல்படக்கூடும்”, என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
****
(Release ID: 1901891)
AP/RB/RR/KRS
Sharing my remarks at the G20 Finance Ministers' and Central Bank Governors' Meeting. https://t.co/dD8Frp3QRh
— Narendra Modi (@narendramodi) February 24, 2023