Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தில்லியில் எக்கனாமிக் டைம்ஸ் உலக வர்த்தக உச்சி மாநாட்டில் பிரதமர் உரை

தில்லியில் எக்கனாமிக் டைம்ஸ் உலக வர்த்தக  உச்சி மாநாட்டில் பிரதமர் உரை


தில்லியில் உள்ள ஹோட்டல் தாஜ் பேலஸில் நடைபெற்ற எக்கனாமிக் டைம்ஸ் உலக வர்த்தக மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.

 

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எக்கனாமிக் டைம்ஸ் உலக வர்த்தக உச்சி மாநாட்டில் கலந்து கொண்டதையும் பின்னர் ஏற்பட்ட மாற்றங்களையும் குறிப்பிட்டார். கடந்த உச்சி மாநாடு நடைபெற்ற மூன்று நாட்களுக்குப் பிறகு, உலக சுகாதார அமைப்பு கோவிட்-டை ஒரு பெருந்தொற்று நோயாக அறிவித்ததையும் அதனால், உலக அளவிலும் இந்தியாவிலும் ஏற்பட்ட விரைவான மாற்றங்களையும் அவர் நினைவு கூர்ந்தார்.

 

இந்தச் சூழல் ‘ஆண்டிஃபிராஜில்’ என்ற எதிர்ப்புகளை முறியடித்தல் என்ற கருத்தாக்கத்தின் மீதான விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது என்று அவர் கூறினார், அதாவது சிக்கல்களை எதிர்கொள்வது மட்டுமல்லாமல், அந்த சிக்கல்களை வாய்ப்புகளாக மாற்றிப் பயன்படுத்தி வலுவடைவதே இதன் பொருள் என்று அவர் குறிப்பிட்டார். 140 கோடி இந்தியர்களின் கூட்டு மன உறுதியே இந்தக் கருத்து என அவர் தெரிவித்தார். இந்த மூன்றாண்டு காலப் போர் மற்றும் இயற்கைப் பேரிடரின் போது, ​​இந்தியாவும் இந்தியர்களும் மகத்தான உறுதியை வெளிப்படுத்தியுள்ளனர் என்று பிரதமர் கூறினார். எதிர்ப்புகளை உடைப்பது என்றால் என்ன என்பதை இந்தியா உலகுக்குக் காட்டியுள்ளது என அவர் தெரிவித்தார். பேரிடர்களை எப்படி வாய்ப்புகளாக மாற்றுவது என்பதை இந்தியா உலகுக்குக் காட்டியிருக்கிறது என அவர் கூறினார். 100 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய நெருக்கடியின் போது இந்தியா காட்டிய திறனை அறிந்து கொள்வதன் மூலம் 100 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதகுலம் பெருமைப்படும் என்று பிரதமர் மேலும் கூறினார்.

 

நலத்திட்டங்களின் மறுவடிவமைப்பு குறித்தும், வங்கிக் கணக்குகள், கடன்கள், வீட்டுவசதி, சொத்துரிமை, கழிப்பறைகள், மின்சாரம், தூய எரிபொருள் வழங்குவது போன்றவை குறித்தும் பிரதமர் விரிவாகப் பேசினார். நேரடிப் பரிமாற்றம் குறித்துப் பேசிய பிரதமர், ஒரு ரூபாயில் 15 பைசா மட்டுமே பயனாளிகளுக்குச் சென்றடைவதாக முன்பு ஒரு முறை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கூறிய கருத்தை நினைவு கூர்ந்தார். ஆனால் தற்போதைய அரசு இதுவரை 28 லட்சம் கோடி ரூபாயை பல்வேறு திட்டங்களின் கீழ் நேரடிப் பரிமாற்றம் மூலம் பயனாளிகளுக்கு முழுமையாக கொடுத்துள்ளது என திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.

 

2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு 10 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என்றும் திரு நரேந்திர மோடி கூறினார். 2014 ஆம் ஆண்டில் 100 க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மிகவும் பின்தங்கியிருந்தன என்றும் பிரதமர் கூறினார். இந்தப் பின்தங்கிய நிலை பற்றிய கருத்தை மறுவடிவமைத்து, இந்த மாவட்டங்கள் ஆர்வமுள்ள மாவட்டங்கள் என மாற்றப்பட்டு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்றும் பிரதமர் கூறினார்.  2014-ல் 3 கோடி குடிநீர்க் குழாய் இணைப்புகள் மட்டுமே இருந்தன என்றும், கடந்த மூன்றரை ஆண்டுகளில் புதிதாக 8 கோடி புதிய குடிநீர்க் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் பிரதமர் கூறினார்.

 

முன்பு உள்கட்டமைப்பில், நாட்டின் தேவைகளை விட அரசியல் நோக்கங்களுக்கு மட்டுமே அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டது என்றும் பிரதமர் கூறினார். இந்த அரசு உள்கட்டமைப்பை ஒரு பெரிய உத்தியாக மறுவடிவமைத்து பல திட்டங்களை செயல்படுத்துவதாக அவர் தெரிவித்தார். இன்று, இந்தியாவில் ஒரு நாளைக்கு 38 கிலோ மீட்டர் என்ற அளவில் நெடுஞ்சாலைகள் போடப்பட்டு வருகின்றன என அவர் தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு நாளும் 5 கிலோ மீட்டருக்கு மேல் ரயில் பாதைகள் போடப்படுகின்றன என அவர் கூறினார். வரும் 2 ஆண்டுகளில் நமது துறைமுகத் திறன் ஆண்டுக்கு 3000 மில்லியன் டன்னை எட்டும் என அவர் தெரிவித்தார். 2014ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், செயல்பாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை 74-லிருந்து தற்போது 147 என இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். இந்த 9 ஆண்டுகளில் சுமார் 3.5 லட்சம் கிலோமீட்டர் கிராமப்புற சாலைகளும், 80 ஆயிரம் கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன என அவர் கூறினார். இந்த 9 ஆண்டுகளில் 3 கோடி ஏழைகளுக்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

1984 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் மெட்ரோ நிபுணத்துவம் உள்ளது என்று அவர் கூறினார். ஆனால், 2014 வரை ஒவ்வொரு மாதமும் அரை கிலோமீட்டர் மெட்ரோ பாதைகள் மட்டுமே அமைக்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார். 2014-க்குப் பிறகு அது மாதத்திற்கு 6 கிலோ மீட்டர் என்று அதிகரிக்கப்பட்டதாக அவர் கூறினார். இன்று இந்தியா, மெட்ரோ ரயில் பாதைகளின்  நீளத்தின் அடிப்படையில் உலகில் 5-வது இடத்தில் உள்ளது எனவும் விரைவில் இந்தியா 3 வது இடத்தைப் பிடிக்கும் என்றும் அவர் கூறினார்.

 

பிரதமரின் விரைவுசக்தி தேசியப் பெருந்திட்டத்தில், உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு மட்டுமின்றி, பகுதி மேம்பாடு மற்றும் மக்கள் மேம்பாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என அவர் தெரிவித்தார். கடந்த 9 ஆண்டுகளில் டிஜிட்டல் கட்டமைப்புக் அதிகரிக்கப்பட்டுள்ளது குறித்தும் அவர் எடுத்துரைத்தார். நாட்டில் 6 லட்சம் கிலோமீட்டருக்கும் அதிகமாக கண்ணாடி இழைக் கேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மொபைல் ஃபோன் தயாரிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். நாட்டில் இணையதள பயன்பாட்டு விகிதம் பெரிதும் அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

 

அரசுக்கு முக்கியத்துவம் என்பது 2014-க்குப் பிறகு, மக்களுக்கு முக்கியத்துவம் என்ற அணுகுமுறையாக மறுவடிவமைக்கப்பட்டதாகவும், தற்போதைய அரசு தமது மக்களை நம்பும் கொள்கையின் கீழ் செயல்படுவதாகவும் பிரதமர் கூறினார். சுய சான்றொப்பம், குறைந்த நிலைப் பணிகளுக்கு நேர்காணல்களை ரத்து செய்தல், சிறிய பொருளாதார குற்றங்களை நீக்குதல், ஜன் விஸ்வாஸ் மசோதா, அடமானம் இல்லாத முத்ரா கடன்கள், மற்றும் குறு சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிப்பது போன்றவற்றை பிரதமர் எடுத்துரைத்தார். ஒவ்வொரு திட்டத்திலும் கொள்கையிலும் மக்களை நம்புவதே இந்த அரசின் தாரக மந்திரமாக உள்ளது என்று பிரதமர் கூறினார்.

 

2013-14ல் நாட்டின் மொத்த வரி வருவாய் தோராயமாக 11 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது எனவும் ஆனால் 2023-24-ல் இது 33 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 9 ஆண்டுகளில், மொத்த வரி வருவாய் 3 மடங்கு அதிகரித்துள்ளது எனவும் வரி விகிதங்களைக் குறைத்ததால் இது சாத்தியமானது என்றும் அவர் தெரிவித்தார். மக்களால் செலுத்தப்படும் வரி பயனுள்ள மற்றும் திறமையான முறையில் செலவிடப்படுகிறது என்பதை அறியும் போது வரி செலுத்துவோர் ஊக்கமடைகிறார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

 

முன்பு வருமான வரிக் கணக்குகள் சராசரியாக 90 நாட்களில் செயலாக்கம் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்ட பிரதமர், இந்த ஆண்டு வருமான வரித் துறை 6.5 கோடிக்கும் அதிகமான வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் அதில் 3 கோடி கணக்குகள் 24 மணி நேரத்திற்குள் செயலாக்கம் செய்யப்பட்டு சில நாட்களுக்குள்ளேயே உரிய பணம் திருப்பி வழங்கப்பட்டது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

 

இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தில் ஒரு உலகம், ஒரு குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கருப்பொருள் உலகின் பல சவால்களுக்கான தீர்வுகளைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.  இந்தப் பத்தாண்டுகளும் அடுத்த 25 ஆண்டுகளும் இந்தியாவில் மிகப் பெரிய நம்பிக்கையை உருவாக்கி உள்ளதாக அவர் தெரிவித்தார். ‘சப்கா பிரயாஸ்’ (அனைவரின் முயற்சிகள்) மூலம் மட்டுமே இந்தியாவின் இலக்குகளை விரைவாக அடைய முடியும் என்று கூறிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்து தமது உரையை நிறைவு செய்தார்.

***

AP  / PLM  / DL