பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தவும், அதன் செயல்பாடுகளை அடிமட்டநிலை வரை ஆழப்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமையின் கீழும், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் திறமை மிக்க வழிகாட்டுதலின் கீழும் செயல்படும் கூட்டுறவு அமைச்சகம் இதுவரை சேவைகள் இல்லாத கிராமப்புற பகுதிகளில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை அமைக்க திட்டத்தை வகுத்துள்ளது.
இதுவரை சங்கங்கள் இல்லாத ஊராட்சிகளில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள், கடலோரக் கிராமங்களில் மீனவக் கூட்டுறவு சங்கங்களை அமைக்கவும், தற்போதுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், பால் கூட்டுறவு சங்கங்கள், மீனவ சங்கங்கள் ஆகியவற்றை வலுப்படுத்தவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தொடக்கக் கட்டமாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2 லட்சம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களும், பால் கூட்டுறவு சங்கங்களும் , மீனவக் கூட்டுறவு சங்கங்களும் அமைக்கப்படும். இதை அமல்படுத்துவதற்கான திட்டம் நபார்டு வங்கி தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் மற்றும் தேசிய மீன்வள வாரியத்தால் வகுக்கப்படும்.
தற்போதைய செயல் திட்டத்தில் ஒருங்கிணைப்புக்காக கீழ்கண்ட திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அ) கால்நடை மற்றும் பால்வளத்துறை
1) பால்வள மேம்பாட்டுக்கான தேசிய திட்டம்
2) பால் பொருட்கள் பதப்படுத்துதல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம்
ஆ) மீன் வளத்துறை
1) பிரதமரின் மத்சய சம்படா யோஜனா
2) மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாடு
இவை நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகள் மற்றும் மீனவர்கள் தங்களது பொருட்களை சந்தைப்படுத்தி அதிக வருவாயைப்பெறவும், கிராமப்புற நிலையிலேயே எளிதில் கடன் வசதிகள் மற்றும் பிற சேவைகளை பெறவும் வழிவகுக்கும்.
புதிதாக தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள், பால்வள மற்றும் கூட்டுறவு சங்கங்கள் அமைப்பதன் மூலம் கிராமப்புற பகுதிகளில் வேலைவாய்ப்புகளை அதிகரித்து, கிராம பொருளாதாரத்தை பெருமளவு உயர்த்த முடியும்.
இது தொடர்பாக கூட்டுறவு மற்றும் உள்துறை அமைச்சர் தலைமையில் உயர்மட்ட அமைச்சகங்களுக்கு இடையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு இந்த செயல் திட்டத்தை சுமுகமாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மாதிரி துணை விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த சங்கங்கள் பால்வளம், மீன்வளம், உணவு தானியங்கள் உள்ளிட்ட 25 வகையான வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். மாதிரி துணை விதிகள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 5 ஜனவரி 2023 அன்று அனுப்பப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள 98,955 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் 13 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். 199182 தொடக்க பால்வள கூட்டுறவு சங்கங்களில் 1.5 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். 25,297 தொடக்க மீன்வளக் கூட்டுறவு சங்கங்களில் 38 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.
எனினும் தற்போது வரை 1,60,000 ஊராட்சிகளில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களும், 2,00,000 ஊராட்சிகளில் பால்வளக் கூட்டுறவு சங்கங்களும் இல்லை. கிராமப்புற பொருளாதாரத்தில் கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்காற்றுவதை கருத்தில் கொண்டு அவற்றை வலுப்படுத்தும் நோக்கில் அனைத்து பஞ்சாயத்துகள் மற்றும் கிராமங்களில் கூட்டுறவு சங்கங்களை நிறுவ அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1899444
***
AP/PLM/AG/PK
The Cabinet decision on cooperatives will transform the sector. It will enable grassroots level strengthening, creation of new dairy and fishery cooperatives. It will also focus on building synergy between schemes to ensure better outcomes. https://t.co/I00VIA7wyz
— Narendra Modi (@narendramodi) February 15, 2023