எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இது 2023ஆம் ஆண்டின் முதல் மனதின் குரல், மேலும் மனதின் குரல் நிகழ்ச்சியின் 97ஆவது பகுதியும் இதுவாகும். உங்களனைவரோடும் மீண்டும் ஒருமுறை உரையாடுவதில் எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒவ்வொர் ஆண்டும் ஜனவரி மாதத்தில் கணிசமான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த மாதம் சுமார் 14ஆம் தேதி வாக்கில், வடக்கு முதல் தெற்கு வரையும், கிழக்குத் தொடங்கி மேற்கு வரையும், நாடெங்கிலும் பண்டிகைகளின் ஒளி பளிச்சிட்டு வந்தது. இதன் பிறகு தேசம் தனது குடியரசுத் திருநாள் கொண்டாட்டங்களில் திளைத்தது. இந்த முறையும் கூட, குடியரசுத் திருநாள் கொண்டாட்டத்தின் பல பரிமாணங்களுக்குப் பல பாராட்டுக்களும் கிடைத்து வருகின்றன. ஜைஸால்மேரிலிருந்து புல்கித் என்பவர் எழுதியிருக்கிறார், ஜனவரி 26ஆம் தேதியன்று நடந்த அணிவகுப்பின் போது, கர்த்தவ்ய பத்தினை ஏற்படுத்திய தொழிலாளர்களைக் காண்பது தனக்கு மிகவும் பிடித்திருந்ததாக எழுதியிருக்கிறார். அணிவகுப்பில் இடம் பெற்ற காட்சிகளில் பாரதநாட்டுக் கலாச்சாரத்தின் பல்வேறு பரிமாணங்களைப் பார்த்து ஆனந்தப்பட்டதாக கான்பூரைச் சேர்ந்த ஜயா அவர்கள் எழுதியிருக்கிறார். இதே அணிவகுப்பில், முதன்முறையாகக் கலந்து கொண்ட ஒட்டகச்சவாரி செய்யும் வீராங்கனைகள் பிரிவும், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினரின் பெண்கள் பிரிவும் நிறைய பாராட்டுக்களைப் பெற்றன.
நண்பர்களே, தெஹ்ராதூனைச் சேர்ந்த வத்சல் அவர்கள், ஜனவரி 25ஆம் தேதிக்காகத் தான் எப்போதுமே காத்திருப்பதாக எழுதியிருக்கிறார். ஏனென்றால் அந்த நாளன்று தான் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவதாகவும், அதே போல, ஜனவரி 25ஆம் தேதி மாலையே கூட, ஜனவரி 26ஆம் தேதிக்கான உற்சாகத்தை அதிகரித்து விடுவதாகவும் எழுதியிருக்கிறார். கள அளவில் தங்களுடைய அர்ப்பணிப்பு மற்றும் சேவை உணர்வால் சாதனைகளைப் புரிவோருக்கு மக்களின் பத்ம விருதுகள் தொடர்பாக பலர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். இந்த முறை பத்ம விருதால் கௌரவிக்கப்படுவோரில், பழங்குடியினத்தவர்களும், பழங்குடியினத்தவர் வாழ்க்கையோடு தொடர்புடைய நபர்களுக்குமான நல்ல சிறப்பான பிரதிநிதித்துவம் இருக்கிறது. பழங்குடியினத்தோரின் வாழ்க்கை, நகரங்களின் வாழ்க்கையோட்டத்திலிருந்து வேறுபட்டது, அதற்கென சவால்கள் பிரத்யேகமாக இருக்கின்றன. இவற்றைத் தாண்டியும், பழங்குடியினங்கள், தங்கள் பாரம்பரியங்களைப் பாதுகாப்பதில் எப்போதுமே முனைப்பாக இருக்கின்றார்கள். பழங்குடி சமூகங்களோடு இணைந்த விஷயங்களைப் பாதுகாக்கவும், அவற்றின் மீது ஆய்வுகள் மேற்கொள்ளவும் முயற்சிகள மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதைப் போலவே T டோடோ, ஹோ, குயி, குவி, மாண்டா போன்ற பழங்குடி மொழிகளின் மீதான பணிகளில் ஈடுபட்டு வரும் பல பெரியோருக்கு பத்ம விருதுகள் கிடைத்திருக்கின்றன. இது நம்மனைவருக்குமே பெருமையளிக்கும் விஷயம். தானீராம் T டோடோ, ஜானும் சிங் சோய், பீ. ராமகிருஷ்ண ரெட்டி அவர்களின் பெயர், இப்போது நாடு முழுவதும் அறியப்படும் பெயர்களாக கௌரவிக்கப்படும். சித்தி, ஜார்வா, ஓங்கே போன்ற பழங்குடியினத்தவரோடு இணைந்து பணியாற்றியவர்களும் இந்த முறை கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, ஹீராபாயி லோபீ, ரத்தன் சந்த்ர கார், ஈஸ்வர் சந்திர வர்மா அவர்களைப் போல. பழங்குடியினச் சமூகங்கள் நம்முடைய பூமி, நமது மரபுகள் ஆகியவற்றின் பிரிக்கமுடியா அங்கங்களாக இருந்து வந்துள்ளார்கள். தேசம் மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்தில் அவர்களின் பங்களிப்பு மிகவும் மகத்துவம் வாய்ந்தது. அவர்களுக்காக செயலாற்றுவோருக்கு மரியாதை, புதிய தலைமுறைகளை உத்வேகப்படுத்தும். நக்சல்வாதம் பாதித்திருக்கும் பகுதிகளிலும் கூட, இந்த ஆண்டு பத்ம விருதுகளின் எதிரொலி ஓங்கி ஒலிக்கின்றது. தனது முயற்சிகள் வாயிலாக, நக்சல்வாதம் பாதித்த பகுதிகளில் வழிதவறிப் போன இளைஞர்களுக்கு சரியான பாதையைக் காட்டியுதவியவர்களுக்கு பத்ம விருதுகள் அளித்து கௌரவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக காங்கேரில் மரத்தில் வேலைப்பாடு செய்யும் அஜய் குமார் மண்டாவீ, கட்சிரௌலீயின் பிரசித்தமான ஜாடீபட்டீ ரங்கபூமியோடு தொடர்புடைய பரசுராம் கோமாஜீ குணே ஆகியோருக்கும் இந்த கௌரவம் கிடைத்திருக்கிறது. இதைப் போலவே வட கிழக்கில் தங்களுடைய கலாச்சாரத்தைப் பாதுகாப்பதில் இணைந்திருக்கும் ராமகுயிவாங்கபே நிஉமே, விக்ரம் பஹாதுர் ஜமாதியா, கர்மா வாங்சூ ஆகியோரும் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
நண்பர்களே, இந்த முறை பத்ம விருதுகளால் கௌரவிக்கப்படுவோரில் பலர் இடம் பெற்றிருக்கிறார்கள்,; இவர்கள் இசையுலகை நிறைவடையச் செய்திருக்கிறார்கள். யாருக்குத் தான் இசை பிடிக்காது!! அனைவருக்கும் பிடித்தமான இசை வேறுவேறாக இருக்கலாம், ஆனால், சங்கீதம் என்பது அனைவரின் வாழ்க்கையின் அங்கமாகவே இருக்கிறது. இந்த முறை பத்ம விருதுகளைப் பெறுவோரில், சந்தூர், பம்ஹும், த்விதாரா போன்ற நமது பாரம்பரியமான வாத்தியக் கருவிகளின் இசையைப் பொழிவதில் பாண்டித்தியம் பெற்றோரும் உண்டு. குலாம் மொஹம்மத் ஜாஸ், மோஆ சு-போங்க், ரீ-சிம்ஹபோர் குர்கா-லாங்க், முனி-வேங்கடப்பா, மங்கல் K காந்தி ராய் போன்ற பல நபர்களின் பெயர்கள், நாலாபுறங்களிலும் பேசப்பட்டு வருகின்றன.
நண்பர்களே, பத்ம விருதுகளைப் பெறும் அநேகம் நபர்கள், நமக்கு மத்தியிலிருந்து வரும் இந்த நண்பர்கள், எப்போதும் தேசத்தை அனைத்திற்கும் மேலாகக் கருதியவர்கள், தேசமே முதன்மை என்ற கோட்பாட்டிற்காகத் தங்கள் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணம் செய்தவர்கள். அவர்கள் சேவையுணர்வால் தங்கள் பணிகளில் ஈடுபட்டு வந்தார்கள், இதற்காக அவர்கள் என்றுமே விருதுகளை வேண்டவுமில்லை, விரும்பவுமில்லை. யாருக்காக அவர்கள் தங்கள் பணிகளை ஆற்றுகின்றார்களோ, அவர்களின் முகங்களில் இருக்கும் சந்தோஷம் மட்டுமே இவர்களுக்கு மிகப்பெரிய விருதுகள். இப்படிப்பட்ட அர்ப்பணிப்பு கொண்டவர்களை கௌரவப்படுத்துவதில், நாம் நாட்டுமக்களின் கௌரவத்தை அதிகப்படுத்துகிறோம். பத்ம விருதுகளின் வெற்றியாளர்கள் அனைவரின் பெயர்களையும் என்னால் இந்த சந்தர்ப்பத்தில் கூற முடியாமல் இருக்கலாம்; ஆனால் உங்களனைவரிடத்திலும் கேட்டுக் கொள்கிறேன், நீங்கள் பத்ம விருதுகளைப் பெற்ற பெரியோரின் கருத்தூக்கமளிக்கும் வாழ்க்கை தொடர்பான விஷயங்களைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளுங்கள், மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.
நண்பர்களே, இன்று நாம் சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவில் குடியரசுத் திருநாள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், நான் ஒரு சுவாரசியமான புத்தகம் குறித்தும் பேச விரும்புகிறேன். சில வாரங்கள் முன்பாகத் தான் இந்தப் புத்தகம் எனக்குக் கிடைத்தது, இதில் மிகவும் சுவாரசியமான விஷயம் குறித்துப் பேசப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தின் பெயர் India – The Mother of Democracy, இதில் பல சிறப்பான கட்டுரைகள் இருக்கின்றன. பாரதம் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம், பாரத நாட்டவர்களான நாம் அனைவரும் நமது தேசம் ஜனநாயகத்தின் தாய் என்ற இந்த விஷயம் குறித்து மிகவும் பெருமிதமும் கொள்கிறோம். ஜனநாயகம் என்பது நமது நாடிநரம்புகளில் இருக்கிறது, நமது கலாச்சாரத்தில் இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக இது நமது செயல்பாட்டின் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாகவே விளங்கி வருகிறது. இயல்பாகவே நாம் ஒரு ஜனநாயக சமூகம் தான். டாக்டர். அம்பேட்கர் அவர்கள் பௌத்த பிக்ஷு சங்கத்தை, பாரதநாட்டுப் பாராளுமன்றத்தோடு ஒப்பிட்டார்கள். கோரிக்கைகள், தீர்மானங்கள், கோரம் என்ற குறைவெண் வரம்பு, வாக்களித்தல், மேலும் வாக்களிக்கப்பட்ட வாக்குகளை எண்ணுதல் தொடர்பாக பல விதிமுறைகள் அதில் இருக்கின்றன. பகவான் புத்தருக்கு இதற்கான கருத்தூக்கம், அவர் காலத்திய அரசியல் முறைகளிலிருந்து கிடைத்திருக்க வேண்டும் என்று பாபாசாஹேப் கருதினார்.
தமிழ்நாட்டின் ஒரு சிறிய, ஆனால் மிகவும் விவாதிக்கப்படும் கிராமம் உண்டு, உத்திரமேரூர். இங்கே 1100-1200 ஆண்டுகள் பழமையான ஒரு கல்வெட்டு, உலகத்தை மலைக்க வைக்கிறது. இந்தக் கல்வெட்டு ஒரு சிறிய அரசியலமைப்புச் சட்டம் போன்றது. கிராமசபையானது எவ்வாறு அமைக்கப்பட வேண்டும், அதன் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை என்ன என்பன போன்று. நமது தேசத்தின் வரலாற்றில், ஜனநாயக விழுமியங்களின் மேலும் ஒரு எடுத்துக்காட்டு, 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பஸவேஷ்வரரின் அனுபவ மண்டபம். இங்கே சுதந்திரமான விவாதங்கள், கலந்துரையாடல்கள் ஆகியவற்றுக்கு ஊக்கமளிக்கப்பட்டது. இது மேக்னா கார்ட்டாவை விடவும் பழமையானது என்பதையறிந்து உங்களுக்கு ஆச்சரியம் மேலிடும். வாரங்கல்லைச் சேர்ந்த காகதீய வம்சத்து அரசர்களின் ஜனநாயகப் பாரம்பரியங்கள் மிகவும் பிரசித்தமானவை. பக்தி இயக்கமானது, மேற்கு பாரதத்திலே, ஜனநாயகக் கலாச்சாரத்தை முன்னெடுத்துச் சென்றது. இந்தப் புத்தகத்திலே, சீக்கிய சமயத்தின் ஜனநாயக உணர்வு பற்றியும் ஒரு கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. குரு நானக் தேவ் ஜி, அனைவரின் சம்மதத்தோடு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பற்றி நமக்குத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய பாரதத்தின் உராவ், முண்டா பழங்குடியினத்தவர்களின் சமூகத்தால் இயக்கப்படும், ஒருமித்த கருத்தால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் பற்றியும் இந்தப் புத்தகத்தில் நல்லபல தகவல்கள் இருக்கின்றன. நீங்கள் இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு, எப்படி நமது தேசத்தின் ஒவ்வொரு பாகத்திலும், பல நூற்றாண்டுகளாக மக்களாட்சியின் உணர்வுகள், ஒரு பிரவாகம் போல பெருக்கெடுத்து ஓடி வந்திருக்கின்றன என்பதை நன்கு உணர்வீர்கள். ஜனநாயகத்தின் தாய் என்ற முறையிலே, நாம், தொடர்ந்து இந்த விஷயத்தைப் பற்றி ஆழமாகச் சிந்திக்க வேண்டும், விவாதிக்க வேண்டும், உலகத்தின் முன்பாக எடுத்துரைக்க வேண்டும். இதனால் தேசத்தின் ஜனநாயக உணர்வு மேலும் ஆழப்படும்.
எனக்குப் பிடித்தமான நாட்டுமக்களே, யோகக்கலை தினத்திற்கும், நம்முடைய பலவகையான சிறுதானியங்களுக்கும் இடையே பொதுவான விஷயம் என்னவென்று நான் உங்களிடம் கேட்டால், இவற்றுக்கிடையே என்ன ஒப்புமை காண முடியும் என்று நீங்கள் நினைக்கலாம்? இரண்டுக்கும் இடையே கணிசமான பொதுவான கூறுகள் உண்டு என்று நான் கூறுவேன் என்றால் நீங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். உள்ளபடியே ஐக்கிய நாடுகள் சபையானது சர்வதேச யோகக்கலை தினத்தையும், சர்வதேச சிறுதானிய ஆண்டினையும் பற்றிய தீர்மானத்தை, பாரதம் முன்மொழிந்ததை ஒட்டியே மேற்கொண்டது. இரண்டாவதாக, யோகக்கலையும் உடல்நலத்தோடு தொடர்புடையது, சிறுதானியங்களும் உடல்நலத்துக்கு மகத்துவமான பங்களிப்பை அளிப்பது. மூன்றாவதாக, மகத்துவம் வாய்ந்த விஷயம் – இரண்டுமே மக்கள் இயக்கங்களாக மாறி, மக்கள் பங்கெடுப்பின் காரணமாக புரட்சிகரமான முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. எந்த வகையில் மக்கள் பரவலான முறையில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்து, யோகம் மற்றும் உடலுறுதியைத் தங்களுடைய வாழ்க்கையின் அங்கமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்களோ, இதைப் போலவே சிறுதானியங்களையும் கூட மக்கள் பெரிய அளவில் ஏற்றுக் கொண்டு வருகிறார்கள். மக்கள் இப்போது சிறுதானியங்களைத் தங்களுடைய உணவுகளில் அங்கமாக ஆக்கிக் கொண்டு வருகின்றார்கள். இந்த மாற்றத்தின் மிகப்பெரிய தாக்கத்தையும் நம்மால் காண முடிகிறது. இதனால் பாரம்பரியமாகவே சிறுதானியங்களை உற்பத்தி செய்து வந்த சிறு விவசாயிகள் மிகவும் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள். உலகம் இப்போது சிறுதானியங்களின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளத் தொடங்கி இருக்கிறது என்பதில் அவர்களுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. வேறொரு புறத்தில் விவசாயிகள்-உற்பத்தியாளர்கள் சங்கங்களான FPOக்களும், தொழில் முனைவோரும் இப்போது சிறுதானியங்களைச் சந்தைப்படுத்துவது, மக்களுக்குக் கிடைக்கச் செய்வது போன்ற முயற்சிகளைச் செய்யத் தொடங்கி விட்டார்கள்.
ஆந்திரப் பிரதேசத்தின் நாந்தயால் மாவட்டத்தில் வசிக்கும் கே.வி. ராமா சுப்பா ரெட்டி அவர்கள், சிறுதானியங்களை விளைவிக்கும் பொருட்டு, தனது நல்ல சம்பளம் தரும் வேலையைத் துறந்தார். தாயாரின் கையால் உருவாக்கப்பட்ட சிறுதானியத் தின்பண்டங்களின் சுவை அவர் நினைவுகளில் எந்த அளவுக்கு ஊறியிருந்தது என்றால், இவர் தனது கிராமத்தில் கம்பு தானியத்தைப் பதனிடும் அலகைத் தொடங்கினார். சுப்பா ரெட்டி அவர்கள், மக்களுக்குக் கம்பு தானியத்தின் ஆதாயங்களையும் எடுத்துக் கூறுகிறார், இதை எளிதாகக் கிடைக்குமாறும் செய்கிறார். மஹாராஷ்டிரத்தின் அலீபாகுக்கு அருகே கேநாட் கிராமத்தில் வசிக்கும் ஷர்மிளா ஓஸ்வால் அவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக சிறுதானிய விளைச்சலில், தனித்தன்மை வாய்ந்த முறையில் பங்களிப்பு அளித்து வருகிறார். இவர் விவசாயிகளுக்கு ஸ்மார்ட் – திறம்பட்ட விவசாயம் பற்றிய பயிற்சியை அளிக்கிறார். இவருடைய முயற்சிகளின் பலனாக சிறுதானியங்களின் விளைச்சல் மட்டும் அதிகரிக்கவில்லை, மாறாக, விவசாயிகளின் வருவாயும் அதிகரித்திருக்கின்றது.
சத்திஸ்கட்டின் ராய்கட் செல்லக்கூடிய வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால், இங்கே இருக்கும் சிறுதானிய கஃபேயுக்குக் கண்டிப்பாகச் சென்று பாருங்கள். சில மாதங்கள் முன்பாகத் தான் தொடங்கப்பட்ட இந்த சிறுதானிய சிற்றுண்டியகத்தில் அப்பங்கள், தோசை, மோமோஸ், பீட்ஸாக்கள், மஞ்சூரியன் போன்ற தின்பண்டங்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன.
நான் உங்களிடம் மேலும் ஒரு விஷயம் பற்றிச் சொல்லவா? நீங்கள் entrepreneur என்ற சொல் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள், அதாவது தொழில்முனைவோர். ஆனால் நீங்கள் Milletpreneurs பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? ஒடிஷாவில் Milletpreneurகள் எனப்படும் சிறுதானியத் தொழில்முனைவோர் இப்போதெல்லாம் செய்திகளில் அதிகமாகக் காணப்படுகிறார்கள். பழங்குடியினத்தவர் மாவட்டமான சுந்தர்கட்டுக்கு அருகே, 1,500 பெண்களின் சுயவுதவிக் குழுவானது, ஓடிஷா சிறுதானியங்கள் இயக்கத்தோடு இணைந்திருக்கிறது. இங்கே இருக்கும் பெண்கள், சிறுதானியங்களில் குக்கீஸ் தின்பண்டம், ரஸ்குல்லா, குலாப் ஜாமுன், கேக்குகள் போன்றவற்றைத் தயார் செய்கிறார்கள். சந்தையில் இவற்றுக்கான தேவை அதிக அளவில் இருக்கும் காரணத்தால், வருவாயும் அதிகரித்து வருகிறது.
கர்நாடகத்தின் கல்புர்கியில் ஆலந்த் புதாயி சிறுதானிய குடியானவர்கள் உற்பத்தியாளர் கம்பெனியானது கடந்த ஆண்டு சிறுதானிய ஆய்வுக்கான இந்தியக் கழகத்தின் மேற்பார்வையில் தனது பணியைத் தொடக்கியது. இங்கே தயாரிக்கப்படும், காக்ரா, பிஸ்கட்டுகள், லட்டு போன்றவை மக்களின் விருப்பத்தைப் பெற்று வருகின்றன. கர்நாடகத்தின் பீதர் மாவட்டத்தில், ஹுல்சூர் சிறுதானிய உற்பத்தியாளர் கம்பெனியோடு தொடர்புடைய பெண்கள், சிறுதானியங்களைப் பயிர் செய்வதோடு கூடவே, அவற்றை மாவாக அரைத்தும் தயார் செய்து கொடுக்கிறார்கள். இதனால் இவர்களின் வருவாயில் கணிசமான அதிகரிப்பும் இருக்கிறது. இயற்கை விவசாயத்தோடு தொடர்புடைய சத்திஸ்கட்டின் சந்தீப் ஷர்மா அவர்களின் விவசாயிகள் உற்பத்தியாளர் சங்கம் இன்று, 12 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளோடு தொடர்புடையதாக இருக்கிறது. பிலாஸ்புரைச் சேர்ந்த இந்த விவசாயிகள் உற்பத்தியாளர் சங்கம், எட்டு வகையான சிறுதானியங்களின் மாவையும், சுவையான தின்பண்டங்களையும் தயார் செய்து வருகிறது.
நண்பர்களே, இன்று இந்தியாவின் அனைத்து இடங்களிலும் ஜி-20 மாநாடுகள் தொடர்ந்து நடந்தேறி வருகின்றன, தேசத்தின் ஒவ்வொர் இடத்திலும், எங்கெல்லாம் ஜி-20 மாநாடு நடந்து வருகிறதோ, அங்கெல்லாம் சிறுதானியங்களில் தயார் செய்யப்பட்ட ஊட்டச்சத்துமிக்க, சுவையான தின்பண்டங்கள் இடம் பெறுவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இங்கே கம்பினால் தயாரிக்கப்பட்ட கிச்சடி, அவல் தின்பண்டம், பாயசம், ரொட்டியோடு கூடவே ராகியால் தயாரிக்கப்பட்ட பாயசம், பூரி, தோசை போன்ற தின்பண்டங்களும் பரிமாறப்படுகின்றன. ஜி-20க்கான அனைத்து இடங்களிலும் சிறுதானியங்களின் கண்காட்சிகளில், சிறுதானியங்களில் தயாரிக்கப்பட்ட ஆரோக்கிய பானங்கள், கூளவகைகள், நூடுல்ஸ் ஆகியவை காட்சிப்படுத்தப்படும். உலகெங்கும் இருக்கும் இந்திய த்தூதரகங்களிலும் கூட இவற்றின் வெகுஜனவிருப்பத்தை அதிகரிக்க, முழுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசத்தின் இந்த முயற்சியும், உலகிலே அதிகரித்துவரும் சிறுதானியங்களின் தேவையும், நமது சிறுவிவசாயிகளுக்கு எத்தனை பலத்தை அளிக்கவல்லது என்பதை கற்பனை செய்து பாருங்கள். இன்று எத்தனை வகையான புதியபுதிய பொருட்ள்கள், சிறுதானியங்களைக் கொண்டு தயார் செய்யப்படுகின்றனவோ, அவையனைத்தும் இளைய தலைமுறையினருக்கு மிகவும் பிடித்திருக்கின்றன என்பதைக் காணும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டின் இப்படிப்பட்ட அருமையான தொடக்கத்திற்காகவும், இதைத் தொடர்ந்து மேற்கொண்டு சென்றமைக்கும், மனதின் குரலின் நேயர்களுக்கும் நான் என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, யாராவது உங்களிடத்திலே டூரிஸ்ட் ஹப், அதாவது சுற்றுலாப்பயணிகள் மையமான கோவா பற்றிப் பேசினால், உங்கள் உள்ளத்தில் என்ன எழும்? இயல்பாக, கோவாவின் பெயரைக் கேட்டவுடனேயே, முதன்மையாக அங்கே இருக்கும் அழகான கரையோரங்கள், பீச்சுகள், விருப்பமான உணவுகள் மீதே உங்கள் சிந்தனை ஓடும் இல்லையா! ஆனால் கோவாவில் இந்த மாதம் நடந்த விஷயம், செய்திகளில் அதிகம் காணப்பட்டது. இன்று மனதின் குரலில், நான் இதை, உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கோவாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் பெயர் பர்ப்பில் ஃபெஸ்ட். இந்த ஃபெஸ்டானது, ஜனவரி 6 தொடங்கி 8 வரை பணஜியில் நடந்தது. மாற்றுத் திறனாளிகளின் நலனை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த விழா உள்ளபடியே ஒரு அருமையான முயல்வு. 50,000த்திற்கும் மேற்பட்ட நமது சகோதர சகோதரிகள் இதில் பங்கெடுத்துக் கொண்டார்கள் என்பதிலிருந்து, பர்ப்பிள் ஃபெஸ்ட் எத்தனை பெரிய சந்தர்ப்பம் என்பது பற்றிய கற்பனையை இதன் மூலம் நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம். இப்போது மீராமார் பீச்சிலே ஆனந்தமாகச் சுற்றித் திரிய முடிந்தது குறித்து, இங்கே வந்திருந்தவர்கள் புளகாங்கிதம் அடைந்தார்கள். உண்மையில், மீராமார் பீச் என்பது, நமது மாற்றுத் திறன் படைத்த சகோதர சகோதரிகளுக்காக, அணுகல்தன்மை கொண்ட கோவாவின் பீச்சுகளில் ஒன்றாக ஆகியிருக்கிறது. இங்கே கிரிக்கெட் போட்டிகள், டேபிள் டென்னிஸ் போட்டிகள், மாரத்தான் போட்டிகளோடு கூடவே, Deaf Blind Convention 2023 க்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இங்கே, வித்தியாசமான பறவைகளை கவனிக்கும் நிகழ்ச்சியைத் தவிர, ஒரு திரைப்படமும் திரையிடப்பட்டது. நமது மாற்றுத் திறனாளி சகோதர சகோதரிகளும் குழந்தைகளும் இதனை முழுமையாகக் கண்டுகளிக்கும் வகையில், சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பர்ப்பிள் ஃபெஸ்டின் மேலும் ஒரு சிறப்பான விஷயம், இதிலே தேசத்தின் தனியார் துறையும் பங்கெடுத்து வருவது தான். அவர்களின் தரப்பிலிருந்து எப்படிப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன என்றால், அவை மாற்றுத் திறனாளிகளுக்கு நேசமானவையாக இருந்தன. இந்த விழாவில் மாற்றுத் திறனாளிகளின் நலன்களின் பொருட்டு விழிப்புணர்வை அதிகரிக்க நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பர்ப்பில் ஃபெஸ்டை வெற்றிவிழாவாக ஆக்கியமைக்கும், இதோடு தொடர்புடைய அனைவருக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். இதோடு கூடவே, இந்த விழாவை ஏற்பாடு செய்து உதவும் வகையிலே பணியாற்றிய அனைத்துத் தன்னார்வத் தொண்டர்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். Accessible India, அதாவது அணுகல்தன்மை கொண்ட இந்தியா பற்றிய நமது பார்வையை மெய்யாக்க, இந்த வகையான இயக்கங்கள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
என் மனம் நிறை நாடுமக்களே, இப்போது மனதின் குரலில், நான் மேலும் ஒரு விஷயம் குறித்துப் பேசுகிறேன், இது உங்களுக்கு ஆனந்தத்தை அளிக்கும், பெருமிதம் பொங்கும், மனம் சந்தோஷப்படும் – பலே பலே, மனசு நிறைஞ்சு போச்சு!! என்று குதூகலிக்கும். தேசத்தின் மிகப் பழைமையான அறிவியல் நிறுவனங்களில் ஒன்று, பெங்களூரூவைச் சேர்ந்த Indian Institute of Science, IISc, அதாவது இந்திய அறிவியல் நிறுவனம்; இது அருமையான ஒரு விஷயத்தை நமக்கு அளிக்கிறது. அதாவது இந்த நிறுவனம் நிறுவப்பட்டதன் பின்னணியில், பாரதத்தின் இரண்டு மகத்துவம் பொருந்திய ஆளுமைகளான ஜம்ஷேத்ஜி டாடாவும், ஸ்வாமி விவேகானந்தரும் உத்வேகக் காரணிகளாக இருந்தார்கள் என்று மனதின் குரலில் நான் முன்பேயே கூட பேசியிருந்தேன். உங்களுக்கும் எனக்கும் ஆனந்தமும், பெருமிதமும் ஏற்படுத்தக்கூடிய விஷயம் என்னவென்றால், 2022ஆம் ஆண்டிலே இந்த நிறுவனத்தின் பெயரில் மொத்தமாக 145 காப்புரிமைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதே ஆகும். அதாவது, 5 நாட்களுக்கு ஒருமுறை இரண்டு உரிமைக்காப்புகள். இந்தச் சாதனை உள்ளபடியே அற்புதமானது. இந்த வெற்றிக்காக நான் IISc யின் குழுவினருக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர்களே, இன்று உரிமைக்காப்புப் பதிவிலே பாரதத்தின் தரவரிசை, 7ஆம் இடத்திலேயும், வர்த்தகச் சின்னங்களைப் பொறுத்த மட்டிலே 5ஆவது இடத்திலும் இருக்கின்றது. உரிமைக்காப்புகள் விஷயத்தில் மட்டுமே, கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 50 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது. உலகளாவிய கண்டுபிடிப்புக்கள் குறியீட்டிலும் கூட பாரதத்தின் தரவரிசையில், தீவிரமான மேம்பாடு காணப்பட்டிருக்கிறது, இப்போது அது 40ஆம் இடத்திற்கு வந்து விட்டது; ஆனால் 2015ஆம் ஆண்டிலே உலகக் கண்டுபிடிப்புகள் குறியீட்டில் பாரதம் 80ஆம் இடத்தில் இருந்தது. மேலும் ஒரு சுவாரசியமான விஷயத்தைச் சொல்கிறேன் கேளுங்கள். பாரதம் கடந்த 11 ஆண்டுகளில் முதன்முறையாக உள்நாட்டு உரிமைக்காப்புப் பதிவின் எண்ணிக்கை, அயல்நாட்டுப் பதிவை விட அதிகரித்திருக்கிறது. இது பாரதத்தின் அதிகரித்து வரும் விஞ்ஞானத் திறமையையும் காட்டுகிறது.
நண்பர்களே, 21ஆம் நூற்றாண்டின் பொருளாதாரத்தில் அறிவு மிகவும் தலையாயது என்பதை நாமனைவரும் நன்கறிவோம். நமது கண்டுபிடிப்பாளர்களும், அவர்களுடைய காப்புரிமைகளும் பாரதத்தின் டெக்கேட் பற்றிய கனவை கண்டிப்பாக முன்னெடுத்துச் செல்லும், நிறைவேற்றி வைக்கும் என்பது என் நம்பிக்கை. இதன் வாயிலாக நாமனைவரும், நமது நாட்டிலேயே தயார் செய்யப்பட்ட உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தையும் பொருட்களையும் முழுமையாகப் பயன்படுத்தி இலாபமடையலாம்.
எனதருமை நாட்டுமக்களே, நமோ செயலியில், தெலங்கானாவைச் சேர்ந்த ஒரு பொறியாளரான விஜய் அவர்கள் ஒரு பதிவினைத் தரவேற்றி இருந்தார். இதிலே, மின்பொருள்கழிவு பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார். விஜய் அவர்களின் வேண்டுகோள் என்னவென்றால், மனதின் குரலில், இது பற்றி நான் விவாதிக்க வேண்டும் என்பது தான். இந்த நிகழ்ச்சியில் முந்தைய பகுதிகளிலேயே கூட நாம் கழிவிலிருந்து செல்வம் பற்றி பேசியிருக்கிறோம்; ஆனால் வாருங்கள், இன்றும் இதோடு தொடர்புடைய மின்பொருள் கழிவு பற்றிப் பேசுவோம்.
நண்பர்களே, இன்று அனைத்து இல்லங்களிலும் செல்பேசி, லேப்டாப், டேப்லட் போன்ற கருவிகள் சாதாரணமானவையாகி விட்டன. நாடெங்கிலும் இவற்றின் எண்ணிக்கை பில்லியன்கணக்கில் இருக்கின்றன. இன்றைய அண்மையான கருவிகள், எதிர்காலத்தின் மின்பொருள் கழிவாகும். எந்தவொரு புதிய கருவியை வாங்கினாலும், பழைய கருவியை மாற்றினாலும், பழைய பொருளை சரியான முறைப்படி கைவிட வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். மின்பொருள் கழிவு சரியான வகையிலே கைவிடப்படவில்லை என்று சொன்னால், நமது சுற்றுச்சூழலுக்கும் இதனால் தீங்கு ஏற்படும். ஆனால் எச்சரிக்கையோடு இது செய்யப்படும் போது, இது மறுசுழற்சி, மீள்பயன்பாடு என்ற வகையில், Circular Economy எனப்படும் சுற்றுப்பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பலத்தை அளிக்கிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அறிக்கையில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்றால், ஒவ்வோர் ஆண்டும் 50 மில்லியன் டன் அளவு மின்பொருள் கழிவு தூக்கிப் போடப்படுகிறது என்கிறது. இது என்ன அளவு என்பதை உங்களால் கணிக்க முடிகிறதா? மனித வரலாற்றிலே எத்தனை வர்த்தகரீதியான விமானங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றனவோ, அவை அனைத்தின் எடையையும் ஒன்று கூட்டினாலும் கூட, வெளியேற்றப்படும் மின்பொருள் கழிவுகளுக்கு நிகராகவே ஆக முடியாது. இது எப்படி இருக்கிறது என்றால், ஒவ்வொரு நொடியும் 800 லேப்டாப்புகள் வீசியெறியப்படுவது போன்று உள்ளது. பல்வேறு செயல்முறைகள் வாயிலாக இந்த மின்கழிவுப் பொருட்களிலிருந்து 17 வகையான விலைமதிப்பற்ற உலோகங்கள் வெளியெடுக்கப்பட முடியும் என்பது உங்களுக்கு மலைப்பை ஏற்படுத்தலாம். இதிலே தங்கம், வெள்ளி, செம்பு, நிக்கல் ஆகியன அடங்கும். ஆகையால் மின்பொருள் கழிவினை நல்லவகையில் பயன்படுத்துவது என்பது, குப்பையிலிருந்து கோமேதகம் உருவாக்குதற்கு எந்த வகையிலும் குறைவல்ல. இன்று, இந்தத் திசையில் நூதனமான பணிகளை மேற்கொண்டு வரும் ஸ்டார்ட் அப்புகளுக்குக் எந்தக் குறைவும் இல்லை. இன்று சுமார் 500 மின் பொருள் கழிவு மறுசுழற்சியாளர்கள் இந்தத் துறையோடு இணைந்திருக்கிறார்கள், பல புதிய தொழில்முனைவோரும் இதில் தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள். இந்தத் துறையில் ஆயிரக்கணக்கானவர்கள், நேரடியாக வேலைவாய்ப்பையும் அளித்திருக்கிறார்கள். பெங்களூரூவின் ஈ-பரிசாரா, இப்படிப்பட்ட ஒரு முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இது அச்சிடப்பட்ட சர்க்கியூட் பலகைகளில் உள்ள விலைமதிபற்ற உலோகங்களைப் பிரித்தெடுக்க, சுதேசித் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியிருக்கிறது. இதைப் போலவே மும்பையில் பணியாற்றிவரும் ஈகோரெகோவும் கூட மொபைல் செயலி வாயிலாக மின்பொருள் கழிவை சேகரிக்கும் முறையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். உத்தராகண்டின் ருட்கீயின் ஏடேரோ மறுசுழற்சியானது இந்தத் துறையில் உலகெங்கிலும் பல காப்புரிமைகளைப் பெற்றிருக்கிறது. இதுவும் கூட மின்பொருள் கழிவுத் தொழில்நுட்பத்தைத் தயாரித்து, கணிசமாகப் பெயர் ஈட்டியிருக்கிறது. போபாலில், மொபைல் செயலி மற்றும் இணையதளத்தில் கபாடீவாலா வாயிலாக டன் கணக்கான மின்பொருள் கழிவு ஒன்று திரட்டப்பட்டு வருகிறது. இதைப் போலவே, பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. இவையனைத்தும் பாரதத்தை உலக அளவிலான மறுசுழற்சி மையமாக மாற்ற உதவிகரமாக இருக்கின்றன என்றாலும், இப்படிப்பட்ட முன்னெடுப்புக்களின் வெற்றிக்கான முக்கியமான நிபந்தனை – மின் பொருள் கழிவுகளைச் சரியான முறையிலே சமாளிப்பதன் மூலம், பாதுகாப்பான வழிமுறைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வர வேண்டும் என்பது தான். தற்போது ஒவ்வொர் ஆண்டும் 15 முதல் 17 சதவீதம் வரையிலான மின்பொருள் கழிவுகளை மட்டுமே நம்மால் மறுசுழற்சி செய்ய முடிவதாக, மின்பொருள் கழிவுத் துறையில் ஈடுபட்டு வருவோர் தெரிவிக்கின்றார்கள்.
என் அன்பான நாட்டுமக்களே, இன்று உலகெங்கும் சூழல் மாற்றம் மற்றும் உயிரினப் பன்முகத்தன்மையின் பாதுகாப்பு குறித்து அதிகம் பேசப்படுகிறது. இந்தத் திசையில் பாரதத்தின் சிறப்பான முயற்சிகள் குறித்து நாம் தொடர்ந்து பேசி வருகிறோம். பாரதம் தனது சதுப்பு நிலங்களின் பொருட்டு ஆற்றியிருக்கும் பணிகளை நீங்கள் தெரிந்து கொள்ளுதல் நலமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். ஈரநிலங்கள், சதுப்புநிலங்கள் என்றால் என்ன என்று சிலல நேயர்கள் நினைக்கலாம். ஈரநிலப் பகுதிகள், அதாவது எங்கே சகதியைப் போன்ற நிலம் இருக்கிறதோ, எங்கே ஆண்டுமுழுக்க நீர் நிரம்பி இருக்கிறதோ, அது தான் ஈரநிலமாகும். சில தினங்கள் கழித்து, ஃபெப்ருவரி மாதம் 2ஆம் தேதியன்று உலக சதுப்புநில நாள் வரவிருக்கிறது. நமது பூமியின் இருப்பிற்காக சதுப்புநிலங்கள் மிகவும் அவசியமானவை, ஏனென்றால், இவற்றைச் சார்ந்த பல பறவைகளும், உயிரினங்களும் இருக்கின்றன. இவை உயிரினப் பன்முகத்தன்மையை நிறைவு செய்வதோடு, வெள்ளக் கட்டுப்படுத்தலையும், நிலத்தடி நீரை மீள்நிரப்புவதையும் உறுதி செய்கின்றன. Ramsar Sites, ராம்சர் இடங்கள் போன்ற சதுப்புநிலப் பகுதிகள், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம். ஈரநிலங்கள் அல்லது சதுப்புநிலங்கள், எந்தவொரு தேசத்திலும் இருக்கலாம் ஆனால், இவை பல அளவீடுகளை எல்லாம் கடந்த பிறகு தான், Ramsar Sites என்று அறிவிக்கப்படுகின்றன. அங்கே 20,000 அல்லது அதைவிடவும் அதிகமான நீர்ப் பறவைகள் இருக்க வேண்டும். வட்டார மீன் இனங்கள் பெரிய எண்ணிக்கையில் அங்கே இருத்தல் அவசியம். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கழித்து, அமுதப் பெருவிழாவின் போது ராம்சர் அங்கீகாரம் பெற்ற இடங்களோடு தொடர்புடைய மேலும் ஒரு நல்ல தகவலை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நமது தேசத்தில் இப்போது ராம்ஸர் இடங்களின் மொத்த எண்ணிக்கை 75 ஆகியிருக்கிறது, ஆனால் 2014ற்கு முன்பாக தேசத்தில் வெறும் 26 ராம்ஸர் இடங்கள் மட்டுமே இருந்தன. இதற்காக வட்டார சமுதாயங்கள் பாராட்டுக்கு உரியவர்கள்; இவர்கள் தாம் இந்த உயிரினப் பன்முகத்தன்மையைப் பாதுகாத்தளித்திருக்கிறார்கள். இது இயற்கையோடு கூட நல்லிணக்கத்தோடு வாழும் நமது பலநூற்றாண்டுக்கால பழைமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துக்குக் கிடைத்த ஒரு மரியாதை ஆகும். பாரதத்தின் இந்த சதுப்பு நிலங்கள் நமது இயற்கைத் திறன்களுக்கான எடுத்துக்காட்டுகள். ஓடிஷாவின் சில்கா ஏரி, 40க்கும் அதிகமான நீர்ப் பறவை இனங்களுக்கு புகலிடமாக விளங்குகிறது. கயிபுல்-லம்ஜாஊ, கோக்டாக்கை, சதுப்புநில மானின் ஒரே இயற்கை வாழ்விடமாகக் கருதப்படுகிறது. தமிழ்நாட்டின் வேடந்தாங்கல், 2022ஆம் ஆண்டிலே ராம்ஸர் சைட் என்று அறிவிக்கப்பட்டது. இங்கே பறவைகளின் எண்ணிக்கையைப் பாதுகாக்கும் மொத்தப் பாராட்டும் அக்கம்பக்கத்தில் இருக்கும் விவசாயிகளையே சாரும். கஷ்மீரத்தில் பஞ்ஜாத் நாக் சமுதாயத்தினரின் வருடாந்திர fruit blossom எனப்படும் பழங்களின் மலர்ச்சித் திருவிழாவில், விசேஷமான வகையிலே கிராமத்தின் நீர்நிலைகளின் தூய்மைப்படுத்தலுக்காக ஒரு நாளை ஒதுக்குகிறார்கள். உலகின் ராம்ஸர் இடங்களிலே அதிகபட்ச தனித்தன்மை வாய்ந்த கலாச்சார மரபும் இருக்கிறது. மணிப்பூரின் லோக்டாக் மற்றும் புனிதமான நீர்நிலையான ரேணுகாவோடு, அந்தப் பகுதியின் கலாச்ச்சாரத்தின் ஆழமான பந்தம் உள்ளது. இதைப் போலவே சாம்பரின் தொடர்பு அன்னை துர்க்கா தேவியின் அவதாரமான சாகம்பரி தேவியோடும் இருக்கிறது. பாரதத்திலே ஈரநிலங்களின் இந்த பரவலாக்கம், ராம்ஸர் பகுதிகளுக்கு அருகிலே வசிப்போரின் காரணமாகவும் அமைந்திருக்கிறது. நான் இந்த மக்கள் அனைவருக்கும் பலப்பல பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன், மனதின் குரல் நேயர்களின் தரப்பிலிருந்து உங்களுக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, இந்த முறை நமது தேசத்தில், குறிப்பாக வட பாரதத்தில், தீவிரமான குளிர் பரவியிருக்கிறது. இந்தக் குளிர்காலத்தில் மக்கள் மலைகளில் பனிப்பொழிவின் ஆனந்தத்தையும் நன்கு அனுபவித்தார்கள். ஜம்மு கஷ்மீரத்திலிருந்து வந்திருக்கும் சில காட்சிகள், மனதைக் கொள்ளை கொண்டு விட்டன. சமூக ஊடகத்தில் கேட்கவே வேண்டாம், உலகம் முழுவதும் அதிகம் விரும்பப்படுபவையாக இந்தப் படங்கள் ஆகி இருக்கின்றன. பனிப்பொழிவு காரணமாக நமது கஷ்மீரப் பள்ளத்தாக்கு ஒவ்வொர் ஆண்டினைப் போலவும் இந்த முறையும் மிக ரம்மியமானதாக ஆகி விட்டிருந்தது. பனிஹால் முதல் பட்காம் வரை செல்லும் ரயிலின் வீடியோவையும் கூட மக்கள் குறிப்பாக விரும்பியிருக்கிறார்கள். அழகான பனிப்பொழிவு, நாலாபுறங்களிலும் வெள்ளைப் போர்வையாகப் பனி, ஆஹா. இந்தக் காட்சி, தேவதைகளின் கதைகளில் வருவதைப் போல இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள். பலர் மேலும் என்ன கூறுகிறார்கள் என்றால், இது ஏதோ ஒரு அயல்நாட்டின் படமல்ல, நமது நாட்டின் கஷ்மீர் பற்றிய படங்கள் என்கிறார்கள்.
ஒரு சமூகவலைத்தள பயன்பாட்டாளர் எழுதுகிறார் – இதைவிட அதிக அழகாகவா சுவர்க்கம் இருக்கும்? இது மிகவும் சரி தான். அதனால் தானே கஷ்மீரத்தை, பூமியின் சுவர்க்கம் என்கிறார்கள். நீங்களும் இந்தப் படங்களைக் கண்டு கஷ்மீரத்திற்குச் சுற்றுலா மேற்கொள்ள நினைப்பீர்கள் என்று நான் நன்கறிவேன். நீங்களும் செல்லுங்கள், உங்கள் நண்பர்களையும் இட்டுச் செல்லுங்கள் என்று நான் கூறுவேன். கஷ்மீரத்தில் பனிமூடிய மலைகள், இயற்கை அழகு இவற்றோடு கூடவே, மேலும் அதிகமாகக் காண வேண்டியவை, தெரிந்து கொள்ள வேண்டியவை பற்பல இருக்கின்றன. கஷ்மீரின் சையதாபாதில் பனிக்கால விளையாட்டுக்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த விளையாட்டுக்களின் கருப்பொருள் – ஸ்நோ கிரிக்கெட். என்ன, பனி கிரிக்கெட் அத்தனை சுவாரசியமாகவா இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். கஷ்மீரத்து இளைஞர்கள் பனியிலே கிரிக்கெட்டை மேலும் அற்புதமானதாக மாற்றியிருக்கிறார்கள். இதன் வாயிலாக, வருங்காலத்தில் இந்திய அணியில் விளையாடக்கூடிய வகையில் கஷ்மீரத்தில் இளைய விளையாட்டு வீரர்களின் தேடல் நடைபெறுகிறது. இதுவும் ஒரு வகையான விளையாடு இந்தியா இயக்கத்தின் விரிவாக்கம் தான். கஷ்மீரத்தில், இளைஞர்களில், விளையாட்டுக்கள் தொடர்பாக உற்சாகம் அதிக அளவில் பெருகி வருகிறது. இனிவரும் காலத்தில் இவர்களில் பலர், தேசத்திற்காக பதக்கங்களை வென்றெடுப்பார்கள், மூவண்ணத்தைப் பறக்க விடுவார்கள். உங்களிடத்தில் என்னுடைய ஆலோசனை என்னவென்றால், நீங்கள் கண்டிப்பாக கஷ்மீருக்கு ஒரு பயணத்தைத் திட்டமிடுங்கள், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளைக் காணவும் சற்று நேரம் ஒதுக்குங்கள். இந்த அனுபவம் உங்களுடைய பயணத்தை மேலும் நினைவில் கொள்ளத்தக்கதாக ஆக்கும்.
எனதருமை நாட்டுமக்களே, குடியரசினை மேலும் பலமுடையதாக ஆக்கும் முயற்சிகளில் தொடர்ந்து நாம் ஈடுபட்டுவர வேண்டும். மக்களின் பங்களிப்பால், அனைவரின் முயற்சியால், தேசத்தின் பொருட்டு அவரவர் தங்களுடைய கடமைகளை செவ்வனே ஆற்றும் போது மட்டுமே குடியரசு பலமாக இருக்க முடியும். நமது மனதின் குரல் இப்படிப்பட்ட கடமையுணர்வு மிக்க போராளிகளின் பலமான பெருங்குரல் என்பது, எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. அடுத்த முறை மீண்டும் சந்திப்போம், கடமையுணர்வு கொண்டவர்களின் சுவாரசியமான, உத்வேகம் அளிக்கும் கதைகளோடு. பலப்பல நன்றிகள்.
*****
DL
Sharing the first #MannKiBaat of 2023. Do tune in! https://t.co/Bhoc7DDTsT
— Narendra Modi (@narendramodi) January 29, 2023
People from across the country have shared their thoughts with PM @narendramodi about Republic Day celebrations held at Kartavya Path. #MannKiBaat pic.twitter.com/k6gwaLgaqg
— PMO India (@PMOIndia) January 29, 2023
Request everyone to know in detail about the inspirational life of the Padma awardees and share with others as well: PM @narendramodi during #MannKiBaat pic.twitter.com/6LOtr0QbBi
— PMO India (@PMOIndia) January 29, 2023
India is the Mother of Democracy. #MannKiBaat pic.twitter.com/S0hGQAOT7i
— PMO India (@PMOIndia) January 29, 2023
Just as people have made yoga and fitness a part of their lives, they are increasingly making millets a part of their diet. #MannKiBaat pic.twitter.com/tD71i5Q4Nz
— PMO India (@PMOIndia) January 29, 2023
A unique 'Purple Fest' was organised in Goa recently for the divyangjan. #MannKiBaat pic.twitter.com/7GqEaCzQMz
— PMO India (@PMOIndia) January 29, 2023
Proper disposal of e-waste can become a great force to build a circular economy. #MannKiBaat pic.twitter.com/2xUfo3TySg
— PMO India (@PMOIndia) January 29, 2023
India has been taking concrete efforts towards conservation of biodiversity. #MannKiBaat pic.twitter.com/l9cxoxZxqH
— PMO India (@PMOIndia) January 29, 2023
There is a lot of enthusiasm among the youth of Jammu and Kashmir regarding sports. This was seen during the recently organised Winter Games. #MannKiBaat pic.twitter.com/VZCzh4JCkB
— PMO India (@PMOIndia) January 29, 2023
Began today's #MannKiBaat with a topic that has caught the imagination of lakhs of Indians - the #PeoplesPadma and the inspiring life journeys of the awardees. pic.twitter.com/dBwSnwUVDe
— Narendra Modi (@narendramodi) January 29, 2023
Talked about an interesting book I received, which highlighted why India is truly the Mother of Democracy. #MannKiBaat pic.twitter.com/0qUuw8Q26e
— Narendra Modi (@narendramodi) January 29, 2023
2023 has begun on a ‘Millet-full’ note and I hope this trend continues as the year progresses. #MannKiBaat pic.twitter.com/U0lNQ9CbBa
— Narendra Modi (@narendramodi) January 29, 2023
You will be happy to know about Purple Fest- an interesting effort in Goa aimed at furthering accessibility and inclusivity for persons with disabilities. #MannKiBaat pic.twitter.com/ESwnMk32UY
— Narendra Modi (@narendramodi) January 29, 2023
Referring to a recent accomplishment of @iiscbangalore, highlighted how India’s innovation eco-system is rapidly growing and how filing of patents is a lot easier now. #MannKiBaat pic.twitter.com/faIhRRlJRN
— Narendra Modi (@narendramodi) January 29, 2023
Talked about the emerging sector of electronic waste during #MannKiBaat. pic.twitter.com/7LybKNN5mn
— Narendra Modi (@narendramodi) January 29, 2023
Home to 75 Ramsar sites, India’s wetlands are testimony to our ethos of living in harmony with nature and also give an important message of sustainable development. #MannKiBaat pic.twitter.com/CT9EcMD8Mg
— Narendra Modi (@narendramodi) January 29, 2023
Snow sports and more…news from Jammu and Kashmir which will bring a smile on your face. #MannKiBaat pic.twitter.com/1K8dPbT7lK
— Narendra Modi (@narendramodi) January 29, 2023