சன்சத் கேல் மகாகும்ப் 2022-23 என்னும் நாடாளுமன்ற விளையாட்டு விழாவின் 2-ம் கட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் தொடங்கிவைத்தார். இந்த விழா பஸ்தி மாவட்டத்தி்ல் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஹரீஸ் திவிவேதி என்பவரால் 2021-ம் ஆண்டு முதல் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விளையாட்டு விழாவில் உள்விளையாட்டு மற்றும் வெளிவிளையாட்டுப் போட்டிகள் இடம் பெற்றுள்ளன. மல்யுத்தம்,கபடி,கோ-கோ, கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, வாலிபால், கைப்பந்து, சதுரங்கம், கேரம், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுக்கள் இடம் பெற்றுள்ளன. இவை தவிர கட்டுரை எழுதுதல், ஓவியம் தீட்டுதல், ரங்கோலி போன்ற போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், மகரிஷி வசிஷ்டரின் ஆன்மீக பூமியான பஸ்தியில் தியானம், தவம் ஆகியவை நிறைந்த புண்ணியபூமி என்று கூறினார். “வெற்றிகரமான விளையாட்டு வீரர்கள் தங்களது இலக்குகளில் கவனம் செலுத்துவதுடன் தங்கள் பாதையில் உள்ள ஒவ்வொரு தடையையும் வெற்றி கொள்வார்கள்” என்று அவர் கூறினார்.
இந்த விளையாட்டு விழா நிகழ்ச்சிகளால் இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டு நிபுணத்துவத்துக்கு புதிய அங்கீகாரம் கிடைக்கும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். சுமார் 200 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் இதுபோன்ற விளையாட்டு விழாக்களுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். காசியின் நாடாளுமன்ற உறுப்பினரான திரு மோடி, வாரணாசியிலும் இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். விளையாட்டு மகாகும்ப விழாவைப் போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய தலைமுறையின் எதிர்காலத்தை வடிவமைத்து வருகின்றனர் என்று அவர் கூறினார்.
இந்த விளையாட்டுப் போட்டிகள் மூலம், தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய தடகளவீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய விளையாட்டு ஆணையத்தின் கீழ் பயிற்சி பெற்று வருவதாக பிரதமர் தெரிவித்தார். சுமார் 40,000 தடகள வீரர்கள், கடந்த ஆண்டை விட 3 மடங்கு அதிகமாக இந்த விழாவில் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியை அளிப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
கோ-கோ விளையாட்டை பார்வையிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரதமர், நமது நாட்டின் புதல்விகள் இந்த விளையாட்டை மிகுந்த திறமையுடனும், சாமர்த்தியத்துடனும், அணி எழுச்சியுடனும் விளையாடியதாக பெருமிதம் தெரிவித்தார். இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த பிரதமர், வருங்காலத்தில் சிறந்து விளங்க வாழ்த்தினார்.
இந்த விளையாட்டு விழாவில் பெண்களின் பங்களிப்பு முக்கிய அம்சம் என்று குறிப்பிட்ட பிரதமர், பஸ்தி, உத்தரப்பிரதேசத்தின் பூர்வாஞ்சல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண் மக்கள் இந்தியா முழுவதும் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவார்கள் என்றும் உலக அரங்கிலும் அவர்கள் உயர்வார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான மகளிர் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து நினைவுகூர்ந்த பிரதமர், இந்திய அணியின் கேப்டன் ஷெஃபாலி வர்மாவின் அருமையான சாதனை போற்றுதலுக்குரியது என்று தெரிவித்தார். ஷெஃபாலி வர்மா தொடர்ந்து 5 பவுண்டரிகளையும், கடைசிப் பந்தில் ஒரு சிக்சரையும் அடித்து ஒரு ஓவரில் 26 ரன் குவித்ததை அவர் நினைவு கூர்ந்தார். நாட்டின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் இத்தகைய திறமை ஒளிந்திருப்பதாக அவர் தெரிவித்தார். இத்தகைய விளையாட்டுகளையும், வீரர்களையும் நாடாளுமன்ற விளையாட்டு விழா ஒருங்கிணைப்பதாக அவர் தெரிவித்தார்.
விளையாட்டை, பாடத்திற்கு அப்பாற்பட்ட கூடுதல் தகுதியாக கருதப்பட்டதை நினைவுகூர்ந்த பிரதமர், அதிக மதிப்பு இல்லாத ஒரு பொழுதுபோக்காக மட்டும் கருதப்பட்டதாகவும், இத்தகைய மனப்போக்கு நாட்டுக்கு மிக மோசமான தீங்கை விளைவித்தது என்றும் கூறினார். இதன் காரணமாக நல்ல திறமைவாய்ந்த விளையாட்டு வீரர்கள் பலர் ஆற்றல் இருந்தும் எதையும் சாதிக்க முடியவில்லை என்று கூறிய பிரதமர், கடந்த 8, 9 ஆண்டுகளில் நாடு இந்த குறைபாட்டைப் போக்க பல முன்முயற்சிகளை எடுத்துள்ளதாகவும், விளையாட்டுக்கு என மிகச்சிறந்த சூழலை உருவாக்கியிருப்பதாகவும் தெரிவித்தார். இதன் காரணமாக மேலும் பல இளைஞர்கள் விளையாட்டுக்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். மக்களுக்கு இடையிலும், உடல்தகுதி, ஆரோக்கியம், அணியுடன் பிணைப்பு, பதற்றத்தில் இருந்து நிம்மதி, தொழில் ரீதியிலான வெற்றி, தனிப்பட்ட முன்னேற்றம் ஆகியவை ஏற்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
விளையாட்டுக்கள் குறித்து மக்களிடையே சிந்தனை உருவாகியிருப்பதாக கூறிய பிரதமர், இந்த மாற்றம் காரணமாக நாட்டில் விளையாட்டு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஒலிம்பிக் போட்டிகள், பாராலிம்பிக்ஸ் போன்ற போட்டிகளில் நாடு வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்திறனை வெளிப்படுத்தியிருப்பதை பிரதமர் எடுத்துக்காட்டினார். பல்வேறு விளையாட்டுகளில் இந்தியாவின் திறமை உலகில் தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். சமூகத்திலும் விளையாட்டுக்கு உரிய மரியாதை கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இவற்றின் காரணமாக ஒலிம்பிக், பாராலிம்பிக் மற்றும் இதர விளையாட்டுப் போட்டிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு திறமைகள் வெளிப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
இது தொடக்கம் மட்டுமே, நாம் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது என்று கூறிய பிரதமர், விளையாட்டு என்பது திறன் மற்றும் சிறந்த பண்பு என்பதுடன், அறிவாற்றல் மற்றும் தீர்வாகவும் அமைந்துள்ளது என்றார். விளையாட்டில் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்த பிரதமர், அவர்களது பயிற்சியை சோதிக்கும் வகையில், விளையாட்டுப் போட்டிகளை தொடர்ந்து நடத்தி அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று கூறினார். பல்வேறு நிலைகள் மற்றும் மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள், விளையாட்டு வீரர்களின் திறன்களை அவர்களுக்கு உணர்த்தி, விளையாட்டு நுட்பங்களை தாங்களாகவே மேம்படுத்திக் கொள்ள உதவும். அத்துடன், பயிற்சியாளர்களும், விளையாட்டு வீரர்களின் குறைபாடுகளை உணர்ந்து, அவர்களது மேம்பாட்டிற்கு மேற்கொள்ள வேண்டிய முடிவுகளை எடுக்க உதவும். இளையோர் பல்கலைக்கழகம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள், வீரர்களின் திறன்களை மேம்படுத்திக் கொள்ள அதிக அளவிலான வாய்ப்புகளை வழங்குகின்றன. கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி மூலம் 2,500 விளையாட்டு வீரர்களுக்கு மாதந்தோறும் ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒலிம்பிக் பதக்க இலக்கு திட்டத்தின் கீழ், 500 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு சர்வதேச தரத்திலான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில வீரர்கள் ரூ.2.5 கோடி முதல் ரூ.7 கோடி வரை உதவியைப் பெற்றுள்ளனர்.
விளையாட்டுத்துறை எதிர்கொண்டுள்ள சவால்களை சந்தித்து அவற்றில் வெற்றி பெற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் மத்திய அரசின் பங்களிப்பை எடுத்துரைத்த பிரதமர், கூடுதல் வளங்களை உறுதி செய்தல், பயிற்சி, தொழில்நுட்ப அறிவு, சர்வதேச நடைமுறைகள், வீரர்கள் தேர்வில் வெளிப்படைத்தன்மை உள்ளிட்டவை சிறப்பு நடைமுறைகளின் மூலம் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார். இந்தப் பகுதியில், ஏற்படுத்தப்பட்டுள்ள விளையாட்டு கட்டமைப்பு மேம்பாடுகளை குறிப்பிட்ட பிரதமர், பஸ்தி மற்றும் இதுபோன்ற பிற மாவட்டங்களில் விளையாட்டு மைதானங்கள் கட்டப்பட்டு வருவதுடன் சிறந்த பயிற்சியாளர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். கேலோ இந்தியா மாவட்ட விளையாட்டு மையங்கள் 1,000 இடங்களில் அமைக்கப்படுவதாகக் கூறிய பிரதமர், அவற்றில் 750 மையங்களுக்கான பணிகள் ஏற்கனவே முடிவடைந்துள்ளன என்று கூறினார். ஜியோ டேகிங் எனப்படும் புவிக்குறியீட்டு நடைமுறை நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு மையங்களிலும் செயல்படுத்தப்பட்டுள்ளதால், விளையாட்டு வீரர்கள் தங்களது பயிற்சியில் எந்தவித பிரச்சினைகளையும் எதிர்கொள்ள மாட்டார்கள் என்றார் அவர். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இளைஞர்களுக்கான விளையாட்டுப் பல்கலைக்கழகத்தையும், உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், மற்றொரு விளையாட்டுப் பல்கலைக்கழகத்தையும் அரசு உருவாக்கி வருவதாக பிரதமர் தெரிவித்தார். மாநில அரசின் முயற்சிகள் குறித்து எடுத்துரைத்த பிரதமர், உத்தரப்பிரதேசத்தில் பல மாவட்டங்களில் விளையாட்டுக்களை மேம்படுத்த விடுதிகள் உள்ளதாகத் தெரிவித்தார். தேசிய அளவிலான சிறந்தவசதிகளை உள்ளூர் அளவில் வழங்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.
உடற்தகுதி இந்தியா இயக்கத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்த பிரதமர், ஒவ்வொரு விளையாட்டு வீரரும் உடற்தகுதியின் அவசியத்தை உணர்ந்திருப்பதாகக் கூறினார். யோகாவை தினசரி வாழ்வில் அவர்கள் மேற்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்திய அவர், யோகாவால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதுடன் மனமும் எப்போதும் தெளிவுடன் இருக்கும் என்றார். இதன் மூலம் விளையாட்டு வீரர்கள் அதிக பலன்களைப் பெறமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். 2023-ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதைக் குறிப்பிட்ட அவர், விளையாட்டு வீரர்களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குவதில், சிறுதானியங்கள் மிகப் பெரிய பங்காற்றும் என்று கூறினார். நமது இளைஞர்கள் விளையாட்டிலிருந்து பலவற்றைக் கற்றுக் கொண்டு நமது நாட்டுக்கு புதிய சக்தியை வழங்கவேண்டும் என்று கூறிய பிரதமர் தமது உரையை நிறைவுசெய்தார்.
இந்நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஹரீஷ் திவிவேதி, உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
பின்னணி
முதற்கட்ட சன்சத் கேல் மஹாகும்ப் விளையாட்டு விழா கடந்த மாதம் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.
இந்த விளையாட்டு விழாவில் மல்யுத்தம், கபடி, கோ-கோ, கூடைப்பந்து, ஹாக்கி, கைப்பந்து, செஸ், கேரம், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படும். இதைத்தவிர கட்டுரை எழுதுதல், ஓவியம் தீட்டுதல், ரங்கோலி போட்டிகளும் கேல் மஹாகும்ப்-ல் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக பஸ்தி மாவட்டம் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களின் விளையாட்டுத் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக இந்த போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்டு உழைப்பு, ஒழுக்கத்தின் உன்னதம், ஆரோக்கியமான போட்டி, தன்னம்பிக்கை, தேசப்பற்று ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து இளைஞர்களுக்கு எடுத்துரைப்பதும் இந்த பெருவிழாவின் முக்கிய அம்சமாக உள்ளது.
***
Second phase of Saansad Khel Mahakumbh begins today in Basti, UP. It is unique celebration of sports and sportsmanship. https://t.co/stCUJ8eoHw
— Narendra Modi (@narendramodi) January 18, 2023
बीते 8-9 वर्षों में स्पोर्ट्स के लिए एक बेहतर वातावरण बनाने का काम किया है। pic.twitter.com/DOhUEaOIIB
— PMO India (@PMOIndia) January 18, 2023
Team bonding से लेकर तनाव मुक्ति के साधन तक, sports के अलग-अलग फायदे लोगों को नजर आने लगे हैं। pic.twitter.com/oxcPhhTWUt
— PMO India (@PMOIndia) January 18, 2023
आज का नया भारत, स्पोर्ट्स सेक्टर के सामने मौजूद हर चुनौती के समाधान का भी प्रयास कर रहा है। pic.twitter.com/1tiXb9ydmR
— PMO India (@PMOIndia) January 18, 2023